Published:Updated:

வயல்வெளியே பல்கலைக்கழகம்!

கழனிக் கல்வி
பிரீமியம் ஸ்டோரி
News
கழனிக் கல்வி

இது ஒரு கழனிக் கல்வி!

அனுபவம் - வாசகர்கள்

விவசாயிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

காலிஃபிளவர் கற்றுக்கொடுத்த பாடம்!

மூன்று மாதங்களுக்கு முன்னர், ஒட்டன்சத்திரத்துக்குச் சென்று 10 நாள்கள் ஆன காலிஃபிளவர் நாற்றுகள் (1,000) வாங்கி வந்து நடவு செய்தேன். காய்கறிகளிலேயே அதிகம் பூச்சிக்கொல்லி மருந்தடிப்பது காலிஃபிளவருக்குத்தான்.

அதுவும் பூவின் மேலேயே அடிக்கப்படும். ஆனால், நான் மருந்து வாடைகூடப் படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். நடவு செய்த 1,000 நாற்றுகள், வளரும்போது 500 ஆகக் குறைந்தன. பிறகு, 400 ஆகக் குறைந்தன. ஆனால், நான் மருந்து அடிக்கவில்லை. யோசித்தேன். வேப்பெண்ணெய் 200 மி.லி., கல் உப்பு இரண்டு கிலோ ஆகியவற்றை மூன்று குடம் தண்ணீரில் கலந்து ஒவ்வொரு செடியாகத் தெளித்தேன். மறுநாளே ஒரு வண்டைக்கூடக் காணவில்லை. இன்று 80-வது நாள். இதுவரை ஒரு வண்டு, புழுகூட இல்லை. இதுவரை உள்ளூரில் 20 பூக்கள் கொடுத்திருப்பேன். அனைவரும் சொன்னது ‘பூவில் ஒரு புழுகூட இல்லை’ என்பதுதான்.

நேற்று புளியம்பட்டிச் சந்தையில் காலிஃபிளவரை விற்றுவிட்டேன். வியாபாரிகள் சொன்னது... `பூ மஞ்சளா இருக்கு. வெள்ளை நிறமாக இருந்தால்தான் வாங்குவாங்க...’ நானும் சில காலம் வரை `வெள்ளையாக இருப்பது மட்டும்தான் நல்ல பூ’ என்று நினைத்திருந்தேன். வெயில் அதிகமாக இருந்தால் மஞ்சள் நிறம் வரும். தண்ணீர்ப் பற்றாக்குறை எனில் இளஞ்சிவப்பு நிறம் வரும். நான் முதலில் காலிஃபிளவர் பயிர் செய்யக் காரணம், `அதிகம் மருந்தடிக்கும் செடியை நம்மால் இயற்கை முறையில் விளைவிக்க முடியுமா...’ என்று அறிந்துகொள்வதற்காகத்தான். என்னால் அதை இயற்கை முறையில் விளைவிக்க முடிந்திருக்கிறது.

-சிவராஜ் பழனிச்சாமி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கழனிக் கல்வி
கழனிக் கல்வி

தண்ணீர் கலந்த எண்ணெய்!

`இளநீர் போட்டு எண்ணெய் ஆட்டி கொடுங்க’, `மினரல் வாட்டர்லதானே எண்ணெய் எடுக்குறீங்க’, `நல்லெண்ணெய்க்கு பனைவெல்லம் போட்டு ஆட்டுறீங்களா இல்லை மண்டை வெல்லம் போட்டு ஆட்டுறீங்களா...’

இப்படிப் பல அடுக்கடுக்கான கேள்விக்கணைகள் என் மரச்செக்கு எண்ணெய் தயாரித்தல் பற்றி எழுகின்றன. அவற்றுக்கான என் அனுபவம் இது. நிலக்கடலையை அப்படியே போட்டு செக்கு ஆட்டினோமென்றால் மாவாகுமே தவிர, எவ்வளவு நேரமானாலும் எண்ணெய் வராது. ஏனென்றால், இயற்கையில் பிண்ணாக்கிலிருந்து எண்ணெய் பிரிந்து வராது. அதனால் அதற்குப் பிடிக்காத ஒரு பொருளை அதிலிட்டு எண்ணெயை வெளிவரச் செய்ய வேண்டும்.

எண்ணெய் தண்ணீரில் கரையாது. ஆனால், பிண்ணாக்கு தண்ணீரை உள்வாங்கிக்கொள்ளும். மேலும், அங்கு ஏற்படும் உராய்வு, அழுத்தம் மற்றும் பிணைப்பு ஆகியவற்றால் எண்ணெய் பிரியும். அதனால் தண்ணீர் தெளித்துச் செக்கு ஓட்டினால்தான் எண்ணெய் பிரியும். இதை இப்படியும் சொல்லலாம். நீரை வெறுக்கும் எண்ணெயைப் பிரிக்க, செக்கு ஆட்டும்போது நீரை விரும்பும் பிண்ணாக்கில் தண்ணீரை ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் சேர்க்கும்போது எண்ணெய் பிரியும். அவ்வளவுதான் விஷயம். இதில் நீங்கள் இளநீரைச் சேர்த்தாலும் சரி, ஆர்.ஓ நீரைச் சேர்த்தாலும் சரி, அமுதத்தைச் சேர்த்தாலும் சரி... எண்ணெய் அந்தப் பொருளை கிரகிக்காது. அதனால் எண்ணெயில் எவ்வித வேதியியல் மாற்றமும் நிகழாது, எந்தச் சத்துகளும் சேராது.

-சதிஸ்குமார், செஞ்சி.

என் வீட்டுத்தோட்டத்தின் வெள்ளரிப்பழக் கதை!

ந்தக் காலத்தில் சேலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கோடைக்காலம் வந்துவிட்டால், வெள்ளரிப்பழம் வீதிக்கு வீதி விற்கும். கண்ட கண்ட குளிர்பானங்களைவிட, வெள்ளரிப்பழம் உடலுக்கு நல்லது. கோடை முடியும் வரை வெள்ளரிப்பழங்களைச் சுவைப்போம். அதுவும் நாட்டுச்சர்க்கரையைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அமுதமாக இருக்கும். பெங்களூரு வந்த பிறகு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு சேலம் சென்றிருந்தபோது, வெள்ளரிப்பழங்களை வாங்கி வந்து சாப்பிட்டு ஆனந்தப்பட்டோம். அவற்றின் விதைகளைச் சாம்பலில் நனைத்து, காயவைத்திருந்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்னர் வீட்டுத்தோட்டத்தில் அவற்றை விதைத்துவிட்டேன். வெள்ளரிக்கொடி ஓடி, பிஞ்சு பிடித்து, பழமும் கொடுக்கத் தொடங்கிவிட்டது. அதே மஞ்சள் நிறம். ஆனால், சுவை மட்டும் கொஞ்சம் குறைந்திருந்தது. அந்தந்த மண்ணுக்கும் நீருக்கும் தக்கப்படிதானே சுவை கிடைக்கும்... வெள்ளரிப்பழங்களை என் தோழிகளுக்குப் பரிசாகக் கொடுத்துவருகிறேன். பழத்தின் ருசியைப் பாராட்டினார்கள். `கண்ட கண்ட க்ரீமை முகத்தில் தடவுவதைவிட, வெள்ளரிப் பழத்தைத் தடவினால் முகம் பளபளக்கும்’ என்று அழகுக்கலை நிபுணராக இருக்கும் தோழி ஆலோசனை சொன்னாள். அடுத்த ஆண்டு, என் தோழிகள் வீட்டுத்தோட்டத்திலும் வெள்ளரிப்பழம் பழுக்கும் என நம்புகிறேன்.

- சைலஜா பழனிச்சாமி, பெங்களூரு.

பேராசிரியர்களே வருக!

ந்த வயல்வெளிப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள்தான் பேராசிரியர்கள். நீங்கள் நிலத்தில் கற்ற, பெற்ற கழனிக் கல்வியைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது. உங்களின் அனுபவக் கல்வியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். கடிதம், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் அனுபவங்களை அனுப்பலாம்.

தொடர்புக்கு, வயல்வெளிப் பல்கலைக்கழகம், பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: pasumai@vikatan.com வாட்ஸ்அப் எண்: 99400 22128.