பிரீமியம் ஸ்டோரி

அனுபவம் - வாசகர்கள்

விவசாயிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது.

3.5 சென்ட் நிலம் ஐந்து வகையான பயிர்கள்!

னது தோட்டத்தில் இரண்டு பாத்தியில் கத்திரிக்காய் நடவு செய்துள்ளேன். அதைச் சுற்றிச் சாமந்திப்பூச்செடி நடவு செய்துள்ளேன். கத்திரியின் நடுவே சின்ன வெங்காயம், அதற்கு உள்ளே செரி தக்காளியென நடவு செய்திருக்கிறேன். இதனால் பாசனம் செய்யும்போது, அனைத்து பயிர்களுக்கும் ஒரே பாசனத்தில் சமமாக நீர் சென்றடைகிறது. கத்திரிச் செடிக்குப் பூச்சி அதிகமாக வரும் நிலையில் சுற்றி சாமந்தி, நடுவே சின்ன வெங்காயம் இருப்பதால் வாசனையை மாற்றிக் கொடுக்கும் அரணாக இருக்கிறது. சாமந்தியால் மகரந்தச் சேர்க்கை நல்ல முறையில் இருக்கும். தேனீக்களும், நன்மை செய்யும் பூச்சிகளும் முதலில் சாமந்திக்குச் சென்று மகரந்தச் சேர்க்கையை இயற்கையாக ஏற்படுத்திக் கத்திரிச் செடிக்கு வரும். இதனால் அதிக உற்பத்திக்கான வழி இயற்கையாகவே நமக்குக் கிடைக்கும்.

கத்திரியைச் சுற்றி சாமந்தி இருப்பதால் தீமை செய்யும் பூச்சிகள் பெரிய பயிரான கத்திரியை அதிகமாகத் தாக்காது. நன்மை செய்யும் பூச்சிகளுக்கும் ஓர் உணவு கிடைக்கும். இரண்டுவிதமான மகரந்தச் சேர்க்கை இதில் நடைபெறும். பூவால் தேனீக்களும், வண்டுகளும் ஈர்க்கப்பட்டுத் தேன் எடுக்கப்படும். பிறகு அதைக் கத்திரிச் செடியில் செலுத்தும். அதனால் அதிக மகசூல் பெறவும் வாய்ப்பு இருக்கிறது. நல்ல ருசியான காயும் நமக்குக் கிடைக்கும். வெங்காயம் நடுவே இருந்தால் இயற்கையாகவே மண்வளத்தை அதிகமாக்கும். பயிர்களுக்கும், மண்ணுக்கும் சத்துகள் இயற்கையாகவே சமநிலையில் கிடைக்கும். வெங்காய வாடைக்குத் தீமை செய்யும் பூச்சிகள் எட்டிகூடப் பார்க்காது. பெரிய பயிரான கத்திரி நல்ல முறையில் பாதுகாக்கப்படும். இந்த முறையில் தண்ணீர் குறைவு, உழைப்புக் குறைவு, எல்லாப் பயிர்களுக்கும் சேர்த்துக் களை வெட்டுதல், வேலையாள்கள் குறைவு எனப் பல வழிகளில் லாபம் கிடைக்கிறது. பலவிதமான பூச்சிக்கொல்லியைப் போட்டு நம் மண்ணை மலட்டுத் தன்மையாக ஆக்குவதைவிட, இயற்கையான வழியில் நாம் பயிர்களைப் பாதுகாப்போம். அதுதான் நஞ்சு இல்லா உணவும், நாமும், பறவைகளும், மற்ற உயிரினங்களும் வாழச் சிறந்த வழியாக இருக்கும். ஐயா நம்மாழ்வார் துணையுடன், எங்கள் முன்னோடி விவசாயிகள் துணையுடன் இயற்கை விவசாயத்தைச் செய்துகொண்டிருக்கிறேன்.

-சு.பாலாஜி, மதுராந்தகம்.

கழனிக் கல்வி!
கழனிக் கல்வி!

ஒரு நிலக்கடலைச் செடியில் 100 காய்கள்!

நிலக்கடலையைத் தற்போது அறுவடை செய்துகொண்டு இருக்கிறோம். எப்போதும் இல்லாத வகையில், இந்த முறை ஒரு செடியில் நூற்றுக்கும் மேற்பட்ட காய்கள் உள்ளன. ஒரு அடி இடைவெளியில் விதைக்கப்பட்டுச் செடியின் மேற்பகுதியிலும், பக்கவாட்டிலும் நன்றாக மண் அணைக்கப்பட்டதால் செடிகளில் இவ்வளவு காய்கள் பிடித்துள்ளன. மேட்டுப்பாத்தி முறையில் விதைக்கப்பட்டதில் சுமார் 60 காய்கள் பிடித்துள்ளன. இயந்திர முறையில் விதைக்கப்பட்டு முக்கால் அடிக்கும் குறைவாக இருந்த செடிகளில் 50-க்கும் குறைவான காய்களே பிடித்துள்ளன. நிலக்கடலையைப் பொறுத்தவரைச் செடிகள் மேல்நோக்கி வளர்வதைவிடப் பக்கவாட்டில் படர்வது சிறப்பு. விதைப்பதற்கு முன்பு நிலத்தை ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு ஆழமாக உழுது, காய வைக்க வேண்டும். அதேபோல விதைத்தபிறகு கைக்களை எடுத்து, மண் அணைக்க வேண்டும். இப்படிச் செய்வதே இந்த விளைச்சலுக்குக் காரணம்.

- அருண்பாண்டியன், செஞ்சி.

கழனிக் கல்வி!
கழனிக் கல்வி!

திராட்சையில் அதிக மகசூல் பெற...

திராட்சை செம்மண்ணில் நன்றாக வளரும். செடியை நடவு செய்யும்போது வரிசைக்கு வரிசை, செடிக்குச் செடி 10 அடி இடைவெளி விட்டு நட வேண்டும். செடி நட்டு அது கொடியாகப் படர்ந்து அறுவடைக்கு வர ஒன்றரை வருடம் ஆகும். அப்போது கடலைப் பிண்ணாக்கைச் சரியான விதத்தில் உரமாகத் தரும்போது நல்ல பலன் கிடைக்கும். கொடி, பந்தலை அடைந்த பிறகு, கட்டிங் செய்து பந்தலில் நன்கு படருமாறு செய்ய வேண்டும். பறவைத் தாக்குதலிலிருந்து தப்பிக்க, தோட்டத்தைச் சுற்றிலும் வலை அமைக்கலாம்.

மழை மாதங்களான ஐப்பசி, கார்த்திகையில் கவனமாக இருக்க வேண்டும். அப்போது பூக்கள் மலர்ந்து இருக்கும் அல்லது பழம் பழுக்கும் நிலையில் இருக்கும். அந்த நேரத்தில் மழை வந்தால் மொத்தமாக வீணாகிவிடும். குளிர்காலங்களில் மாவுப்பூச்சித் தொல்லை அதிகமாக இருக்கும். அந்த நேரத்திலும் கவனமாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் கம்பி கட்டி, வலை அமைக்கும் செலவு அதிகமாகும். அதன் பிறகு அதற்குச் செலவில்லை. வருமானத்தில் 30 சதவிகிதம் செலவுபோக 70 சதவிகிதம் லாபமாக நிற்கும். சரியான முறையில் திராட்சையைப் பயிரிட்டால் நல்ல லாபம் தொடர்ந்து கிடைக்கும். திராட்சைச் சாகுபடியில் மற்றொரு முக்கியமான விஷயம் தண்ணீர். சரியான அளவுக்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும். நான் சொட்டுநீர்ப் பாசனத்தில் பயிர் செய்திருக்கிறேன். அதனால் தண்ணீர் செலவு குறைவு. கூடவே இயற்கை முறையில் செய்தால் லாபம் இன்னும் அதிகமாகும்.

-பன்னீர்செல்வம், நாமக்கல்.

வயல்வெளியே பல்கலைக்கழகம்!

மாடுகளுக்கு ஏற்ற கொட்டகை!

கொட்டகையின் சுற்றுச்சுவர் நீள, அகல, உயரம் முறையே 5 அடி அளவு இருக்க வேண்டும். தீவனம் கொடுக்கும் இடம் ஒரு கால்நடைக்கு இரண்டிலிருந்து இரண்டரை அடி இடைவெளியுடன் இருக்க வேண்டும். தேவையான அளவு குடி தண்ணீர் அளிக்க 10 அடி அளவு அகலமான தண்ணீர்த் தொட்டி அமைக்க வேண்டும். மேலும் தண்ணீர்த் தொட்டி தீவனத் தொட்டிக்கு அருகே அதிக நீர் சேதாரம் ஆகாமலும் இருக்க வேண்டும். அதைத்தாண்டி ஒரு திறந்த நடைபாதை ஒரு கதவுடன் இருக்க வேண்டும். தீவனம் உட்கொள்ளும்போது கால்நடைகள் வடக்கு நோக்கியவாறு இருத்தல் வேண்டும். குளிர்காற்று வீசும்போது சுற்றுச்சுவர் மாடுகளைக் குளிரிலிருந்து பாதுகாக்குமாறு அமைக்க வேண்டும்.

- விஜயராகவன், திருநெல்வேலி.

கன்றுகளுக்கான கொட்டகை

மாட்டுக்கொட்டகையின் ஒரு பக்கத்தில் சுற்றுச்சுவருடன் கூடிய 10-க்கு 15 அடி அளவுள்ள கொட்டகை கன்றுகளுக்கென தனியாக அமைக்க வேண்டும். தேவையான அளவு இடவசதி கன்றுகளின் எண்ணிக்கைக்கேற்ப இருக்க வேண்டும். இதையடுத்து சுற்றுச்சுவருடன் கூடிய 20-க்கு 10 அடி திறந்தவெளி இருக்க வேண்டும். இதில் கன்றுகள் சுதந்திரமாக உலவ விடுதல் நலம்.

இதேபோன்று அதிக மாடுகளுக்கு 50-க்கு 50 அடி பரப்பளவுள்ள கொட்டகை தேவை. இதில் 20 மாடுகள் வரை வளர்க்கலாம். இதற்குத் தேவையான பொருளாதார வசதி இல்லையெனில் நமது வசதிக்கேற்ப சுற்றுச்சுவர் அமைத்துக்கொள்ளலாம். ஆனால் தண்ணீர் மற்றும் தீவனத் தொட்டி சிமென்ட்டினால் போடப்படுவதே சிறந்தது.

- விஜயராகவன், திருநெல்வேலி.

பேராசிரியர்களே வருக!

ந்த வயல்வெளிப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள்தான் பேராசிரியர்கள். நீங்கள் நிலத்தில் கற்ற, பெற்ற கழனிக் கல்வியைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது. உங்களின் அனுபவக் கல்வியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். கடிதம், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் அனுபவங்களை அனுப்பலாம்.

தொடர்புக்கு,

வயல்வெளிப் பல்கலைக்கழகம், பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: pasumai@vikatan.com வாட்ஸ்அப் எண்: 99400 22128.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு