Published:Updated:

வயல்வெளியே பல்கலைக்கழகம்! - இது ஒரு கழனிக் கல்வி!

அனுபவம் - வாசகர்கள்

பிரீமியம் ஸ்டோரி
விவசாயிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது.

கால்நடைகளுக்கு அசோலா!

சுந்தீவன உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், தீவனச் செலவைக் குறைக்க கறவை மாடுகளை வளர்ப்போர் அசோலா உற்பத்தி செய்யலாம். நிழலான பகுதியில் ஒரு பாலித்தீன் தார்பாலினைத் தரையில் விரித்து, 6 X 4 X 2.5 அடி குழி அமைத்து, அதில் அசோலா வளர்க்கலாம். குழியின் ஆழம் சமமாக இருக்க வேண்டும். 1 அடி உயரம் தண்ணீரைத் தேக்கிக்கொள்ளவும். தொட்டியில் இருக்கும் தண்ணீரில் சாணம் ஒரு கிலோ, பாறைத்தூள் ஒரு கைப்பிடி, அசோலா விதைகள் ஒரு கைப்பிடி போட்டுக் கலக்கிவிடவும். அடுத்த ஒரே வாரத்தில் பத்துமடங்கு அளவுக்கு அசோலா பெருகியிருக்கும். மீண்டும் அசோலா வேண்டுமென்றால் சாணம் மற்றும் பாறைத்தூளைத் தொட்டியில் போட்டால் மீண்டும் பெருக ஆரம்பித்துவிடும். இந்த அசோலாவை நெல் வயலுக்குப் பயன்படுத்தினால் கூடுதல் மகசூல் கிடைக்கும்.

இதைப் பறித்துத் தண்ணீரில் நன்கு அலசி, ஒரு கிலோவிற்கு ஒரு கிலோ என்ற அளவில் அடர் தீவனத்தில் கலந்து கால்நடைகளுக்கு அளிக்கலாம். புதிதாக மாடுகளுக்கு அசோலா தீவனத்தை அளிக்கும்போது, சிறிதளவு சமையல் உப்பு சேர்த்துக் கொடுத்துப் பழக்கப்படுத்தலாம். பசுந்தீவனம் பயிரிட முடியாத நிலையில் அசோலா ஒரு சிறந்த மாற்றுத்தீவனம். என் கால்நடைகளுக்கும் அசோலாவைத் தீவனமாகக் கொடுத்து வருகிறேன்.

-விவேக், புதுக்கோட்டை.

வயல்வெளியே பல்கலைக்கழகம்! - இது ஒரு கழனிக் கல்வி!

கத்திரி விதைநேர்த்தி!

ந்த ரகக் கத்திரியாக இருந்தாலும், அதை விதைநேர்த்தி செய்வதால், முளைப்புத் திறன் அதிகரிப்பதோடு, நோய்களும் தடுக்கப்படும். விதை நேர்த்திக்கு 40 கிராம் அசோஸ் ஸ்பைரில்லத்தை, அரிசி வடிகஞ்சியில் கலந்து, விதையை அதில் மூழ்கி எடுத்து, நிழலில் இரண்டு மணி நேரம் உலர வைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதைக்கு, 4 கிராம் என்ற அளவில், ‘டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் ‘சூடோமோனஸ் எடுத்து, விதைகளைப் புரட்டி, இரண்டு மணி நேரம் வைத்திருந்து, நாற்றங்காலில் விதைக்க வேண்டும்.

வயலில் 10 அடி நீளம், 3 அடி அகலம், அரையடி உயரத்தில் மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும். பாத்தியின் மேல், 10 செ.மீ, இடைவெளியில் ஆள்காட்டி விரலால் வரிசையாகக் கீற வேண்டும். அதன்மீது, கோலப்பொடியைத் தூவுவதுபோல, நேர்த்தி செய்த விதைகளைத் தூவ வேண்டும். விதைகளை மண் மூடுமாறு கையால் கிளறி, வைக்கோல் போட்டு மூடி, பூவாளியில் தண்ணீர்த் தெளிக்க வேண்டும். தொடர்ந்து, ஒரு வாரம் தண்ணீர் தெளித்துவந்தால், விதைகள் முளைத்து வரும். 10-ம் நாளில் வைக்கோலை நீக்கிவிடலாம். 40 நாள்களில் நாற்றைப் பறித்து நடவு செய்யலாம்.

-முத்துராஜ், ராஜபாளையம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மழைக்காலக் கோழிப் பராமரிப்பு!

னி பருவ மழைக்காலம். இம்மழையின் மூலம் கோழிகளுக்கு நோய்கள் ஏற்படுவது வாடிக்கை. இதிலிருந்து கோழிகளைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் தேவையான நுட்பங்கள் குறித்து, நாம் தெரிந்துகொள்வது அவசியம்.

கோழிப்பண்ணையைச் சுற்றி பள்ளங்கள் இருந்தால், அவற்றை மூட வேண்டும். இல்லையெனில் மழைநீர் நிரம்பி, தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தீவன மூட்டைகளை, மழையில் பாதிக்காத இடத்தில் சேமிக்க வேண்டும். மழைத்துளியானது தீவனத்தில் கலந்தால் பூஞ்சைத் தொற்று ஏற்படக்கூடும். மழைச்சாரல் அடிக்காமல் இருக்க, சுற்றிலும் பாலித்தீன் கவர் கொண்டுப கட்ட வேண்டும். மழைக்கு முன் மற்றும் மழைக்குப் பிறகு போட வேண்டிய தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் உணவு முறைகளை எல்லாம் சரிவரச் செய்ய வேண்டும். நனைந்த, ஈரமான தீவனம் காரணமாகப் பூஞ்சைக் காளான் நோய் வரக்கூடும். காற்று மற்றும் நீரினால் பரவக்கூடிய சுவாசப் பாதிப்பு, ஈகோலி, காலரா, வெள்ளைக் கழிச்சல் போன்ற நோய்களும் ஏற்படும். இந்நோய்கள் தாக்கிய கோழிகளை உடனே தனிமைப்படுத்த வேண்டும்.

-தமிழ்ச்செல்வன், விருத்தாசலம்.

பேராசிரியர்களே வருக!

இந்த வயல்வெளிப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள்தான் பேராசிரியர்கள். நீங்கள் நிலத்தில் கற்ற, பெற்ற கழனிக் கல்வியைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது. உங்களின் அனுபவக் கல்வியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். கடிதம், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் அனுபவங்களை அனுப்பலாம்.

தொடர்புக்கு, வயல்வெளிப் பல்கலைக்கழகம், பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: pasumai@vikatan.com வாட்ஸ்அப் எண்: 99400 22128.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு