Published:Updated:

வயல்வெளியே பல்கலைக்கழகம்! - இது ஒரு கழனிக் கல்வி!

அனுபவம் - வாசகர்கள்

பிரீமியம் ஸ்டோரி

விவசாயிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது.

முருங்கையில் ஊடுபயிராக அவரைச் சாகுபடி!

நா
ன் 60 சென்ட் நிலம் வைத்துள்ளேன். அதில் கத்திரிச் சாகுபடி செய்து நல்ல மகசூல் கிடைத்தது. இதோடு முருங்கை நடவு செய்தேன். ஒரே வருடத்தில் முருங்கையும் காய்ப்புக்கு வந்துவிட்டது. முருங்கைக் காய் 3 மாதம் அறுவடை செய்துவிட்டுக் காய்க்காமல் ஓய்ந்துபோகும் சமயத்தில் அவரை விதையை நடவு செய்தேன்.

அவரை விதை நடவு செய்த 60 நாள்களில் முருங்கை மரத்தில் கொடிகள் ஓட ஆரம்பித்தன. அவரைக்கொடி முருங்கை மரத்தின் நுனிவரை ஓடியிருந்தது. முருங்கை மரத்தை 4 அடி உயரம்விட்டு மரத்தை வெட்டிவிட்டேன். அவரைக் கொடிகள் அனைத்தும் முருங்கை மரத்தைச் சுற்றி பந்தலில் படர்வதுபோலப் படர்ந்துவிட்டது. காய் எடுக்க எளிமையாக இருந்தது. பந்தல் போடும் செலவு மிச்சம். மூன்று, நான்கு மாதங்கள் காய்கள் தொடர்ந்து எடுத்த பிறகு, கொடியை அறுத்து மாடுகளுக்குப் போட்டுவிட்டுத் திரும்பவும் முருங்கை மரத்தில் வரும் சிம்புகளை அப்படியே விட்டுவிட்டேன். முருங்கை மரத்திலும் காய்கள் வர ஆரம்பித்தன.

அவரைச் சாகுபடியின்போது உயிர் உரங்களை மண்புழு உரத்துடன் கலந்து வைத்தேன். அதனால் பூ நிறைய எடுத்தது. மேலும், அவரை இலைகள் மஞ்சள் நிறத்துடன் இருந்தன. இதற்கு ஒரு ஏக்கருக்குப் பயிர் வகை நுண்ணூட்டம் 5 கிலோவை 20 கிலோ மணலுடன் கலந்து வைத்து, தண்ணீர்ப் பாய்ச்சி வயலில் ஈரம் இருக்கும்போது தூவிவிட்டேன்.

சாறு உறிஞ்சும் பூச்சியின் தாக்குதலுக்கு மஞ்சள் நிறப் பொறிகளை வயலில் பரவலாகக் கட்டிவிட்டேன். அசுவினித் தாக்குதல் இருந்தது. அதற்குச் செங்கல் சூளைச் சாம்பல் 10 கிலோவை அதிகாலை நேரத்தில் தூவிவிட்டேன். பிறகு, தாக்குதல் மறைந்தது. முருங்கைக்கு நல்ல விலை கிடைத்தது. தற்போது அவரைக்கும் நல்ல விலை கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறேன்.

- இஞ்ஞாசி, திண்டுக்கல்.

வயல்வெளியே பல்கலைக்கழகம்! - இது ஒரு கழனிக் கல்வி!

களையெடுப்புக்குப் பிறகு வயலைக் காயவிடுங்கள்!

நெ
ல் வயலில் களையெடுத்த பிறகு, வயலைக் காயவிடுவதால் களைகளின் ஆக்கிரமிப்பு இல்லாமல், மண்ணில் ஈரப்பதம் குறைந்து, காற்றோட்டம் அதிகரிக்கும். இதனால் காற்றுவெளியில் வாழும் நுண்ணுயிரிகளின் பெருக்கம் அதிகரித்து, பயிர்களுக்கு அபரிமிதமான சத்துகளை அளிக்கிறது. கோனோ வீடர் களையெடுப்பின்போது, பக்கவேர்கள் அறுபடுவதால், புதிய வேர்கள் உருவாகிறது. வேர் பரப்பு அதிகரிப்பதால், பயிரில் பக்க கிளைகளின் எண்ணிக்கையும் கூடுகிறது. மண்ணில் தண்ணீர் தேங்காதிருக்கும்போது, பயிரின் வேர் வளர்ச்சி அதிகரிக்கும்.

இந்தச் சமயத்தில் பயிர்களுக்கு இலை வழியாக ஊட்டமளிக்கும்போது, பயிரில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படுகிறது. இலைவழி தெளிப்பின் மூலம் பெறப்படும் சத்துகளைக் கொண்டு பயிர் இன்னும் செழுமையாகிறது. இதனால் வயலுக்குப் பாசனத்தைச் சில தினங்கள் கழித்தும் தரலாம். இதன் மூலம் தண்ணீரின் தேவை குறைகிறது. களையெடுப்புக்கு முன்னர் நிலத்துக்குத் தரப்படும் ஊட்ட உரம், ஜீவாமிர்தம் மற்றும் களையெடுப்புக்குப் பிறகு அளிக்கப்படும் இலைவழி ஊட்டம் ஆகியவற்றால், பயிரின் வேர்ப்பகுதிக்கும் இலைப் பரப்புக்கும் ஒரே தருணத்தில் ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. இதனால் பயிரில் தொய்வில்லா, அபரிமிதமான வளர்ச்சி இருக்கும்.

- ஜெயக்குமார், திருவண்ணாமலை.

நாட்டுக்கோழிப் பண்ணை பாதுகாப்பு முறைகள்!

கோ
ழிப் பண்ணை அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் தேவையற்ற குப்பைக் கூளங்கள் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அருகில் புதர்கள் இருந்தால் அவற்றை அகற்றிவிட வேண்டும். தினமும் காலையிலேயே கோழி எச்சங்களைப் பெருக்கி அவற்றைப் பண்ணைக்கு அப்பால் ஒரு தனி இடத்தில் கொட்டி மண்ணால் மூடிவிட வேண்டும். இதனால் அது நன்கு மட்கி நல்ல உரமாக மாறிவிடும். எச்சங்கள் குவித்து வைக்கப்பட்டால் அவை காற்றில் மட்கும்போது வெளிவரும் வாயுக்களின் வாசம் பாம்பு, உடும்பு, பூனை, கீரி, நரி, காட்டுப் பூனை முதலிய பிராணிகளை ஈர்த்துவிடும்.

காலையும் மாலையும் பண்ணைக்குள் வெயில் படும்படியாகச் சற்று உயரமாகக் கூரையை அமைத்தால் பண்ணைக்குள் ஈரம் கோர்ப்பது குறையும். ஈரமிக்கப் பண்ணைத் தரை, அதில் ஒட்டியுள்ள கோழி எச்சங்களிலிருந்து நச்சு வாயுக்களை வெளிவிடும். இதனால் கோழிகளுக்குச் சளித் தொல்லைகள் வரும். பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை பண்ணை முழுவதும் 5 சதவிகித வேம்புக் கரைசலைப் பரவலாகப் பண்ணைத் தரை நன்றாக நனையும்படி தெளிக்க வேண்டும். இதனால் உண்ணிகள், பேன்கள், தத்துப் பூச்சிகள், தெள்ளுப் பூச்சிகள் ஆகிய கோழி ஒட்டுண்ணிகள் அனைத்தும் பண்ணைக்குள் இருக்காது. எந்தக் காரணத்தைக் கொண்டும் கடுமையான ரசாயன நஞ்சுகளைப் பண்ணைக்குள் தெளிக்கக் கூடாது.

- விஸ்வநாதன், நாமக்கல்.

பேராசிரியர்களே வருக!

ந்த வயல்வெளிப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள்தான் பேராசிரியர்கள். நீங்கள் நிலத்தில் கற்ற, பெற்ற கழனிக் கல்வியைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது. உங்களின் அனுபவக் கல்வியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். கடிதம், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் அனுபவங்களை அனுப்பலாம்.

தொடர்புக்கு, வயல்வெளிப் பல்கலைக்கழகம், பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: pasumai@vikatan.com வாட்ஸ்அப் எண்: 99400 22128.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு