Published:Updated:

வயல்வெளியே பல்கலைக்கழகம்! - இது ஒரு கழனிக் கல்வி!

கழனிக் கல்வி
பிரீமியம் ஸ்டோரி
News
கழனிக் கல்வி

அனுபவம் - வாசகர்கள்

விவசாயிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது.

மாட்டுக் கொட்டகை அமைப்பு!

டு, மாடுகளை அடைக்கும் கொட்டகை சிறந்த காற்றோட்டம், வெளிச்சத்துடன் இருக்க வேண்டும். சரியாகத் திட்டமிட்டுக் கொட்டகை அமைக்கவில்லையென்றால் அது தேவையில்லாத செலவுகளை உருவாக்கிவிடும். கொட்டகை அமைக்கத் தேர்ந்தெடுக்கும் இடம், நல்ல வடிகால் வசதியுடன் சற்று மேடான பகுதியில் இருக்க வேண்டும். சுற்றியுள்ள நிலம் நன்கு சமன்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.

கொட்டகைக்கான கட்டடம் கட்டக்கூடிய இடத்தில் மண்ணின் தரம் நன்றாக இருப்பது அவசியம். களிமண் சார்ந்த தரை, கட்டடங்களுக்கு உகந்ததாக இருக்காது. வண்டல் மற்றும் சரளை மண் வகைகள் ஏற்றவை. நல்ல காற்று வசதி கிடைக்குமாறு சூரிய வெளிச்சம் கால்நடைகளை நேரடியாகத் தாக்காத வகையில் நீளவாக்கில் கிழக்கு மேற்காக அமைக்க வேண்டும். காற்று வீசும் இடங்களில் மரங்கள் வளர்த்தால் காற்றின் வேகத்தை ஓரளவு குறைக்க முடியும்.

மாடு மற்றும் கன்றுகளுக்குச் சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும். கொட்டகையைச் சுற்றியுள்ள இடம் தீவனப் பயிர்கள் மற்றும் மரங்கள் வளர்க்க ஏற்ற நிலமாக இருக்க வேண்டும். தினசரி தேவைக்கு ஏற்ப நல்லா உழைக்கிற வேலை ஆட்கள் எளிதில் கிடைக்கும் பகுதியாக இருப்பது நல்லது. மாட்டுக் கொட்டகை அருகே தீவனம் சேமிக்கக் கிடங்கும் இருக்க வேண்டும். இதன் மூலம் தீவனத்துக்கு ஆகும் செலவைக் குறைக்கலாம். பால் கறக்கும் இடம் கொட்டகையின் மையத்தில் இருக்க வேண்டும். எப்போதும் சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

- ராஜேஷ், விருத்தாசலம்.

கழனிக் கல்வி
கழனிக் கல்வி

பட்டுப்புழு வளர்ப்பு!

ட்டுப்புழுவில் பொதுவாக, இளம்புழு வளர்ப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முட்டை அட்டையிலிருந்து, புழுக்கள் சீராகப் பொரிந்து வந்தவுடன் புதிதாகப் பறிக்கப்பட்ட இளம் மல்பெரித் தழைகளைச் சிறுசிறு சதுரத் துண்டுகளாக வெட்டி இலைத் துணுக்குகளைப் பரவலாகத் தூவ வேண்டும். முட்டை அட்டைகளின் மேல் ஒட்டியிருக்கும் ஒன்றிரண்டு புழுக்களை மெதுவாக இறகால், புழு வளர்ப்புத் தட்டுகளுக்கு மாற்ற வேண்டும். புதிதாகப் பொரிக்கப்பட்ட புழுக்களுக்கு உணவளிக்காமல் வெகுநேரம் வைத்திருந்தால் அவை நலிவுற்றுவிடும்.

மல்பெரிச் செடியில் துளிரின் கீழே உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது இலைகள், இளம் புழு வளர்ப்புக்கு ஏற்ற வகையில் புரதம் மற்றும் மாவுச்சத்து மிக்கதாய் உள்ளன. நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டங்களில் போதிய அளவு இயற்கை உரம் அளிப்பதால் சத்துமிக்க இலைகள் கிடைக்கின்றன. இளம்புழு வளர்ப்பில் தழைகளின் ஈரப்பதத்தைச் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். மல்பெரித் தழைகளை எப்போதும் இளங்காலை அல்லது மாலை நேரங்களில் பறிக்க வேண்டும். தழைகளைத் தகுந்த இலைப் பாதுகாப்புப் பெட்டிகளில் வைத்துச் சுத்தமான ஈரத்துணியைக் கொண்டு மூடிப் பாதுகாக்க வேண்டும்.

பருவநிலைக்கேற்ப இரண்டு அல்லது மூன்று முறை இளம் புழுக்களுக்குச் சீரான கால இடைவெளியில் உணவளிக்க வேண்டும். புழுக்களின் வளர்ச்சிக்கேற்ப இலைத் துணுக்குகளின் அளவை அதிகமாக்கிக்கொள்ளலாம்.

- ராமநாதன், வேலூர்.

தேனீப் பெட்டிகள் வாங்கும்போது கவனம்!

தே
னீப் பெட்டியின் உள்ளே உள்ள தேன் சேகரிக்கும் 6 சட்டங்களில் சுமார் 15,000 முதல் 20,000 தேனீக்கள் இருக்கும். அதில் சுமார் 8,000 முதல் 10,000 தேனீக்கள் வெளியே சென்று குடும்பத் தேவைக்காக மகரந்தம் மற்றும் தேன் சேகரித்து வரும். நம் தோட்டங்களில் முழுக் கொள்ளளவு தேனீப் பெட்டிகளை அமைத்தால் மட்டும்தான் முழுப் பயனை நாம் அடையலாம். இரண்டு அல்லது மூன்று சட்டங்களுள்ள பெட்டிகளை வைத்தால் அதில் சுமார் 3,000 முதல் 5,000 பூச்சிகள் மட்டுமே இருக்கும். தேன் சேகரிப்புக்குச் செல்லும் பூச்சிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும்.

6 சட்டங்களுள்ள முழுக் கொள்ளளவு கொண்ட பெட்டிகளை நம் பண்ணையில் அமைத்த நாளிலிருந்தே நாம் முழு மகரந்த சேர்க்கை பயனை அடைய முடியும்.

- ராகேஷ், சேலம்.

பேராசிரியர்களே வருக!

ந்த வயல்வெளிப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள்தான் பேராசிரியர்கள். நீங்கள் நிலத்தில் கற்ற, பெற்ற கழனிக் கல்வியைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது. உங்களின் அனுபவக் கல்வியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். கடிதம், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் அனுபவங்களை அனுப்பலாம்.

தொடர்புக்கு, வயல்வெளிப் பல்கலைக்கழகம், பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: pasumai@vikatan.com வாட்ஸ்அப் எண்: 99400 22128.