Published:Updated:

வயல்வெளியே பல்கலைக்கழகம்! - இது ஒரு கழனிக் கல்வி!

கழனிக் கல்வி
பிரீமியம் ஸ்டோரி
கழனிக் கல்வி

அனுபவம் - வாசகர்கள்

வயல்வெளியே பல்கலைக்கழகம்! - இது ஒரு கழனிக் கல்வி!

அனுபவம் - வாசகர்கள்

Published:Updated:
கழனிக் கல்வி
பிரீமியம் ஸ்டோரி
கழனிக் கல்வி

விவசாயிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது.

ஹைட்ரோபோனிக்ஸ் தீவன வளர்ப்பு!

‘ஹை
ட்ரோபோனிக்ஸ்’ முறையில் மண்ணில்லாமல் தண்ணீரை மட்டும் கொண்டு மிகக் குறைந்த காலத்தில் தீவனப் பயிர் வளர்க்கலாம். இதற்குத் தண்ணீர்த் தேவை மிகவும் குறைவு. இதனால் வறட்சிக்காலத்தில் கால்நடைகளுக்குப் பசுந்தீவனம் வழங்கலாம். இதை வளர்ப்பதற்குக் குறைந்த வேலையாட்களே போதும். இந்த முறையில் வளர்க்கப்படும் தீவனங்களில் மண், குச்சி போன்றவை இல்லாததால் கால்நடைகள் விரும்பி உண்ணும். வெளிச்சம் குறைவான சிறிய அறை. வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி, காற்றில் ஈரப்பதம் 80 முதல் 85 சதவிகிதம் இருக்க வேண்டும்.

ஒன்றரை சதுரஅடி பரப்பளவுள்ள பிளாஸ்டிக் தட்டு (டிரே) ஒன்றுக்கு 300 கிராம் மக்காச்சோள விதைகள் போதுமானது. விதைகளை நன்குக் கழுவி, ஒருநாள் முழுக்க ஊற வைக்க வேண்டும். ஊறிய விதையைச் சணல் சாக்கில் கட்டி 24 மணி நேரத்துக்கு இருட்டில் வைக்க வேண்டும். 24 மணி நேரம் கழித்துப் பார்த்தால், விதைகளில் சிறு முளைப்பு இருக்கும். அந்த விதைகளைப் பிளாஸ்டிக் தட்டுகளில், தட்டு ஒன்றுக்கு சுமார் 300 கிராம் வீதம், இடைவெளியின்றி ஒரு விதைமேல் இன்னொரு விதை விழாத வகையில் பரப்பிச் சில நிமிடங்கள் காற்றோட்டமாக வைக்க வேண்டும். பிறகு, தட்டுகளை வளர்ப்பு அறைக்கு எடுத்துச்சென்று ஸ்டாண்டில் அடுக்கி வைத்து, நீர் தெளிப்பான் மூலம் தண்ணீரைப் புகைபோல் தெளிக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தண்ணீரை ஊற்றக் கூடாது. விதைகளில் எப்போதும் ஈரப்பதம் இருக்க வேண்டும். மண் இல்லாத தீவனப் பயிருக்குத் தண்ணீரின் தேவை மிகக் குறைவுதான். ஆனால், அடிக்கடி தண்ணீர் தெளிப்பது மிகவும் அவசியம்.

8 நாள்களில் நாற்று போன்ற பசுந்தீவனத்தை உற்பத்தி செய்யலாம். பொதுவாக, ஒரு கிலோ தானியத்துக்கு 6 முதல் 7 கிலோ பெற முடியும். கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படுத்தப்படும் தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஹைட்ரோபோனிக்ஸ் தொழில்நுட்பத்துக்கு 75 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயனடையக் குறைந்தபட்சம் 40 சதுர அடி இடமும், மின்சார வசதியும், குறைந்தபட்சம் 2 மாடுகளும் இருக்க வேண்டும். விவசாயம் சம்பந்தமான பொருள்கள் விற்கும் கடைகளில் ‘ஹைட்ரோபோனிக்ஸ் கிட்’ கிடைக்கிறது. அதை வாங்கியும் பயன்படுத்தலாம்.

- விஜயன், விழுப்புரம்.

வயல்வெளியே பல்கலைக்கழகம்! - இது ஒரு கழனிக் கல்வி!

படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

டைப்புழுக்களைக் கட்டுப்படுத்த பயிர் சுழற்சி முறையைக் கடைப்பிடிக்கலாம். சோளம் பயிர் செய்த நிலத்தில் மீண்டும் சோளப்பயிர் செய்வதைத் தவிர்க்க வேண்டும். கோடையில் உழவு செய்யும்போது ஆழமாக உழவு செய்ய வேண்டும். பயிர்களுக்கு ஏற்றக் காலத்தில், சரியான பருவத்தில் நடவு செய்ய வேண்டும். சோளம் பயிரிட்ட இடத்தில் ஊடுபயிராக, பயறு வகைப் பயிர்களான உளுந்து, தட்டைப்பயறு, பாசிப்பயறு மற்றும் துவரை போன்ற பயிர்களைப் பயிரிட வேண்டும்.

சோளத்தைப் பயிர் செய்த விவசாயிகள், அடிக்கடி பயிர்களைக் கண்காணிக்க வேண்டும். சோளம் பயிரிட்ட வயலைச் சுத்தமாக வைத்திருந்து, சரியான அளவு உரத்தைக் கொடுக்க வேண்டும். முடிந்தவரை இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும். அதிகப்படியான முட்டைகள், படைப்புழுக்கள் இலை மடிப்புகளிலிருந்தால் கைகளால், பறித்து அழித்துவிடலாம். தீமை செய்யும் பூச்சி புழுக்களைக் கட்டுப்படுத்துவதில் பறவைகள் பெரும் பங்காற்றுகின்றன. ஆகையால், புழுத் தாக்கம் ஏற்படும் அறிகுறிகள் தென்பட்டால், பறவைகளுக்குப் பயத்தை ஏற்படுத்தக்கூடிய ஒலிபெருக்கி பயன்படுத்துவது, தகரங்களைக் கட்டித் தொங்க விடுவது, பயிர்களுக்கு நடுவில் பொம்மைகளை நிறுத்தி வைப்பது போன்ற வேலைகளைச் செய்யக் கூடாது. இதுமட்டுமல்லாமல் பறவைகள் உட்கார ஆங்காங்கே ‘T’ வடிவ கம்புகளைக் குத்தி நிறுத்த வேண்டும். இதன் மூலம் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த முடியும்.

- லக்சி, இலங்கை.

முருங்கையில் அதிகமாகப் பூப்பிடிக்க!

மு
ருங்கை வறட்சிக்கு ஏற்றப் பயிர். முருங்கையை ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதைகள் தேவைப்படும். விதை நடவு செய்வதற்கு முதல்நாள் இரவு, விதையைத் தண்ணீரில் ஊறவைத்து அடுத்தநாள் எடுத்து நடவு செய்தால் முளைப்புத்திறன் நன்றாக இருக்கும்.

25 X 25 அடி இடைவெளியில் முருங்கைக் கன்றுகளை நடவு செய்து சொட்டுநீர்ப் பாசன குழாயை அமைக்கலாம். ஒவ்வொரு செடிக்கும் வேப்பம் பிண்ணாக்கு 150 கிராம், 1 கிலோ மண்புழு உரத்தைப் போட்டுத் தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும். ஒரு கணு விட்டு அடுத்த கணுவை கிள்ளி விட வேண்டும். முருங்கை மரத்தின் அடியிலேயே கிள்ளிவிட்டால் மரம் நிறைய போத்துகள் வெடித்து அதிக பக்கக் கன்றுகளுடன் இருக்கும். மாதம் ஒரு முறை தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும். 6 மாதத்தில் காய் வந்துவிடும். தொடர்ந்து 5 ஆண்டுகள் வரை காய்கள் பறிக்கலாம்.

முருங்கைப் பூப்பூக்கும் சமயத்தில் தண்ணீர்ப் பாய்ச்சுவதைக் குறைக்க வேண்டும். காலை வேளையில் எந்தவொரு வளர்ச்சி ஊக்கியையும் தெளிக்கக் கூடாது. அவ்வாறு தெளித்தால் அயல் மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும். முருங்கையில் பூ எடுக்கும் சமயத்தில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி நன்கு புளித்த தயிரைக் கலந்து அடித்தால் பூக்கள் நிறைய பிடிக்கும் கொட்டாது.

- கார்த்திகேயன், திண்டுக்கல்.

பேராசிரியர்களே வருக!

ந்த வயல்வெளிப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள்தான் பேராசிரியர்கள். நீங்கள் நிலத்தில் கற்ற, பெற்ற கழனிக் கல்வியைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது. உங்களின் அனுபவக் கல்வியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். கடிதம், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் அனுபவங்களை அனுப்பலாம்.

தொடர்புக்கு, வயல்வெளிப் பல்கலைக்கழகம், பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: pasumai@vikatan.com வாட்ஸ்அப் எண்: 99400 22128.