பிரீமியம் ஸ்டோரி

அனுபவம் - வாசகர்கள்

விவசாயிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது.

‘ஆட்டு எரு அவ்வாண்டு மாட்டு எரு மறு ஆண்டு!’

ட்டு எருவில், மாட்டு எருவில் உள்ளதைவிட இரண்டு மடங்கு தழைச்சத்தும், சாம்பல் சத்தும் கூடுதலாக உள்ளன. ஒரு ஆடு, ஒரு வருடத்துக்கு 500 முதல் 750 கிலோ வரை எரு கொடுக்கும். எல்லாச் சத்துகளையும் கொண்டு ஒரு ஏக்கர் நிலத்தைத் தயார்ப்படுத்த 100 ஆடுகளை வளர்த்தால் போதுமானது. ‘ஆட்டு எரு அவ்வாண்டு, மாட்டு எரு மறு ஆண்டு’ என்ற பழமொழிக்கு ஏற்ப ஆட்டு எரு மண் வளத்தைப் பெருக்குகிறது. ஆட்டு எருவை மண்ணில் இட்டால் கரிமப் பொருள்களின் அளவு அதிகரித்து, ஈரப்பதத்தைச் சேமிக்கும் திறன் அதிகமாகும்.

ஆட்டு எருவில் 60 முதல் 70 சதவிகிதம் தண்ணீர், இரண்டு சதவிகிதம் தழைச்சத்து, 0.4 சதவிகிதம் மணிச்சத்து, 1.7 சதவிகிதம் சாம்பல் சத்து ஆகியவை இருக்கின்றன. மேலும், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான போரான், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம் சத்துகளும் அதிக அளவில் காணப்படுகின்றன.

அதிக அளவில் ஆட்டு எரு தேவைப்பட்டால் ஆழ்கூள முறையில் தயாரிக்கலாம். அதற்கு முதலில் ஆட்டுக்கொட்டகையின் தரைப்பகுதியில் நிலக்கடலைத்தோல், சிறிய துண்டுகளாக நறுக்கிய வைக்கோல், இலைச்சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்க்கழிவு போன்றவற்றை அரையடி உயரத்தில் ஒரு ஆட்டுக்கு ஏழு கிலோ என்ற அளவில் பரப்ப வேண்டும். அப்படிப் பரப்பினால் ஆட்டுப்புழுக்கை இந்த ஆழ்கூளத்தில் படிந்துவிடும். சிறுநீர் ஆழ்கூளத்தால் உறிஞ்சப்பட்டுத் தழைச்சத்து வீணாகாமல் பாதுகாக்கப்படும். ஆழ்கூளத்திலுள்ள ஈரத்தன்மையைப் பொறுத்து மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஆழ்கூள ஆட்டு எருவை விவசாயத்துக்கு எடுத்துக்கொள்ளலாம்.

கழனிக் கல்வி
கழனிக் கல்வி

ஆழ்கூள முறையைப் பொறுத்தவரை 10 ஆடுகளிலிருந்து ஒரு வருடத்தில் இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும். இதில் 50 கிலோ யூரியாவில் உள்ளதைப்போல் தழைச்சத்தும், 37 கிலோ சூப்பர் பாஸ்பேட்டிலுள்ள மணிச்சத்தும், 40 கிலோ பொட்டாஷிலுள்ள சாம்பல் சத்தும் கிடைக்கும். மேலும் ஆட்டு எருவிலுள்ள தழைச்சத்து மெதுவாக வெளிப்படுவதால் பயிர்கள் மற்றும் காய்கறிகளின் தேவைக்கேற்ப தழைச்சத்து சீராகக் கிடைக்கிறது. ஆனால் ரசாயன உரம் தழைச்சத்தை உடனடியாக வெளியிடுவதால் நிறையச் சத்து ஆவியாகி வீணாகிவிடும். இவ்வாறு ஆழ்கூள முறையில் பெறப்படும் ஆட்டு எருவைப் பயன்படுத்தினால் களை எடுக்கும் செலவு குறையும். ஆகவே ஆட்டு எருவை முறையாகப் பயன்படுத்தி இயற்கைவழி வேளாண்மைக்கு வித்திட்டால் நாமும் உயரலாம்.

- கவியரசு, திருவண்ணாமலை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முருங்கையில் பூப்பிடிக்க...

முருங்கை வறட்சியான காலநிலைக்கு ஏற்ற பயிர். பொதுவாக, முருங்கையை ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம். முருங்கைச் சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை தேவைப்படும். விதை நடவு செய்வதற்கு முதல் நாள் இரவு ஒரு விதையைத் தண்ணீரில் ஊறவைத்து, பிறகு அடுத்த நாள் எடுத்து நடவு செய்தால் முளைப்புத்திறன் நன்றாக இருக்கும்.

25 அடிக்கு 25 அடி இடைவெளியில் முருங்கைக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். சொட்டுநீர்ப் பாசனமுறையைப் பயன்படுத்தலாம். ஒரு கன்றுக்கு 150 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, ஒரு கிலோ மண்புழு உரத்தைப் போட்டு தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும். செடி வளரும்போது, ஒரு கணுவிட்டு அடுத்த கணுவைக் கிள்ளிவிட வேண்டும். முருங்கை மரத்தின் அடியிலேயே கிள்ளிவிட்டால், நிறைய போத்துகள் வெடித்து, அதிக பக்கக் கன்றுகளுடன் இருக்கும். அதிக உயரம் வராது. மாதத்துக்கு ஒரு முறை தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும். ஆறு மாதங்களிலேயே காய் காய்ப்புக்கு வந்துவிடும். தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் வரை காய் வரும். பூச்சி, புழு தென்பட்டால் வேம்பு சார்ந்த மருந்துகள் அடித்தாலே போதும்.

செடி ஒன்றரை அடி வளர்ந்தவுடன், நுனிக்கிளைகளை ஒடித்துவிட வேண்டும். அப்போது நன்றாகப் படர்ந்து கிளைகள் விடும். அதேபோல 20 கிளைகள் வரை வளரவிட்டு நுனியை வெட்டிவிட வேண்டும். முருங்கை பூப்பூக்கும் சமயத்தில் பாசனம் செய்வதைக் குறைக்க வேண்டும். காலை வேளையில் எந்தவொரு வளர்ச்சி ஊக்கியையும் தெளிக்கக் கூடாது. அப்படித் தெளித்தால் அயல் மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும். முருங்கையில் பூ எடுக்கும் சமயத்தில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மி.லி நன்கு புளித்த மோரைத் தெளித்தால் பூக்கள் உதிராது. நிறைய பூப்பிடிக்கும்.

- ஆசைத்தம்பி, திண்டுக்கல்.

பேராசிரியர்களே வருக!

ந்த வயல்வெளிப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள்தான் பேராசிரியர்கள். நீங்கள் நிலத்தில் கற்ற, பெற்ற கழனிக் கல்வியைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது. உங்களின் அனுபவக் கல்வியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். கடிதம், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் அனுபவங்களை அனுப்பலாம்.

தொடர்புக்கு, வயல்வெளிப் பல்கலைக்கழகம், பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: pasumai@vikatan.com வாட்ஸ்அப் எண்: 99400 22128.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு