பிரீமியம் ஸ்டோரி

அனுபவம் - வாசகர்கள்

விவசாயிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது.

துவரைத் தொழில்நுட்பம்!

யறு வகைகளில் ஒன்றான துவரை ஒரு லாபகரமான பயிர். துவரையைப் பச்சைக் காயாகவும், முதிர்ந்தவுடன் அறுவடை செய்து காயவைத்துப் பருப்பாகவும் விற்பனை செய்யலாம். துவரையில் உள்ள பல ரகங்கள் நீண்ட கால (6 மாதங்கள்) ரகங்களாகும். தற்போது பி.ஆர்.ஜி- 4, 5, 6, கோ-8 போன்றவை குறுகியகால ரகங்களாக (130-140) உள்ளன. பி.ஆர்.ஜி (Bengaluru Red Gram) பெங்களூரு துவரை-1, 2 ஆகிய ரகங்கள் குளிர்ச்சியான, உயரமான மலைப்பகுதிகளில் பயிரிட ஏற்றது. இவை சமவெளியில் அதிக மகசூல் தருவதில்லை.

துவரைப் பயிரைச் சரியாகப் பராமரித்தால் அதிக மகசூலும், அதிக லாபமும் பெறலாம். துவரைப் பயிரை நெருக்கமாக விதைக்கக் கூடாது. வரிசைக்கு வரிசை 6-8 அடி இடைவெளிவிட்டு விதைக்க வேண்டும். செடிக்குச் செடி 1-2 அடி இடைவெளி விட்டு நடும்போது அதிக கிளைப்பும், நிறைய காய்களும் காய்க்கும். துவரைப் பயிர் 4-5 அடி வளர்ந்தவுடன் நுனி கிள்ளி (மேல் இலைக் கொத்தை) விட வேண்டும். இதனால் அதிக பக்க கிளைகளும், அதிக பூக்களும், காய்ப்பும் வரும். குழித்தட்டு முறையில் நாற்று நடும்போது அனைத்து நாற்றுகளும் நன்கு வளரும். விதைச் செலவும் குறையும். 15 நாள்களுக்கு முன்னரே பூப்பூக்கும்.

துவரைப் பூக்கும் பருவத்தில் காய்த்துளைப்பான் பூச்சி, பூவிற்குள் முட்டை வைத்து அதிக சேதத்தை ஏற்படுத்தும், பூ உதிரும். காயில் பருப்பு இல்லாமல் சாவியாக இருக்கும் காயைப் புழு சாப்பிட்டு முழுவதும் சேதப்படுத்திவிடும். எனவே துவரைப் பூக்கும் பருவத்திலிருந்து 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை பயிர் பாதுகாப்பு மருந்து தெளித்தால் துவரைப் பயிரில் நல்ல மகசூலும், அதிக லாபமும் பெறலாம்.

-கே.கந்தசாமி, புதுக்கோட்டை..

வயல்வெளியே பல்கலைக்கழகம்!

தென்னையைத் தாக்கும் வெள்ளை ஈக்கள்!

வெள்ளை ஈக்களின் தாக்குதல் உடுமலைப்பேட்டையைச் சுற்றியுள்ள கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இந்த வெள்ளை ஈக்கள் தென்னையைத் தாக்குவதோடு மட்டுமல்லாமல், கொய்யா, வாழை போன்ற பயிர்களையும் தாக்குகிறது. இந்தத் தாக்குதல் கேரளாவின் பாலக்காடு வழியாகப் பொள்ளாச்சியில் தொடங்கித் தற்போது அருகருகே உள்ள மாவட்டங்களுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டுப் பொள்ளாச்சியில் காணப்பட்ட இந்தப் பூச்சி தற்போது உடுமலைப்பேட்டை பகுதியிலும் உள்ளது. ஈரப்பதம் குறைவாக இருக்கும்போது இந்தப் பூச்சியில் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த வெள்ளை ஈக்கள் பொதுவாக ஒட்டுரகத் தென்னை மரங்களை மட்டும் அதிகமாகத் தாக்கியுள்ளது. குட்டை, நெட்டை, மஞ்சள் குட்டை, ஆரஞ்சு குட்டை மற்றும் நெட்டை போன்ற எந்த ரகமும் தப்பவில்லை. நாட்டு ரகத் தென்னை மரங்களை இந்த வெள்ளை ஈக்களால் தாக்க முடியவில்லை, நாட்டு ரக மரங்களின் நோய் எதிர்ப்பு சக்தி இதன் மூலம் நிரூபணமாகிறது. இந்தப் பூச்சிகளால் அதிக உயரத்திற்குப் பறந்து செல்ல முடியாது என்பதால் 30 அடி உயரத்திற்கு மேற்பட்ட மரங்களை இந்தப் பூச்சியால் தாக்க முடிவதில்லை.

கழனிக் கல்வி
கழனிக் கல்வி

இந்த வெள்ளை ஈ, தென்னைக் கீற்றுகளின் அடியிலிருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுகிறது.இதனால் இலை கறுப்பு நிறமடைந்து ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு, 20 சதவிகிதம் வரை மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. இதற்காக வேளாண்துறை வல்லுநர்களின் பரிந்துரையைக் கேட்டேன். அவர்கள் கடலைப் பிண்ணாக்கு மற்றும் வேப்பங்கொட்டைத்தூள் போன்றவற்றை அடியுரமாகப் பயன்படுத்த அறிவுறுத்தினர். மேலும், மஞ்சள் நிற ஒட்டும் தாள்களைப் பயன்படுத்துவதும், 1 சதவிகித ஸ்டார்ச் கரைசலை இலைகளின் மீது தெளிப்பதும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் என்றனர். அதன்படியே 1 லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் ஸ்டார்ச் தூள் கலந்து கரைசல் தயார் செய்தும், வேப்பங்கொட்டைத்தூளையும் அடியுரமாகப் பயன்படுத்தினேன். பயன்படுத்த ஆரம்பித்த சில நாள்களில் வெள்ளை ஈக்கள் தாக்குதல் வெகுவாகக் குறைந்துபோனது. இப்போது வெள்ளை ஈ என்பதே என் தோட்டத்தில் இல்லை.

-ராமநாதன், உடுமலைப்பேட்டை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பேராசிரியர்களே வருக!

ந்த வயல்வெளிப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள்தான் பேராசிரியர்கள். நீங்கள் நிலத்தில் கற்ற, பெற்ற கழனிக் கல்வியைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது. உங்களின் அனுபவக் கல்வியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். கடிதம், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் அனுபவங்களை அனுப்பலாம்.

தொடர்புக்கு, வயல்வெளிப் பல்கலைக்கழகம், பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: pasumai@vikatan.com வாட்ஸ்அப் எண்: 99400 22128.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு