Published:Updated:

வயல்வெளியே பல்கலைக்கழகம்! - இது ஒரு கழனிக் கல்வி!

கழனிக் கல்வி
பிரீமியம் ஸ்டோரி
News
கழனிக் கல்வி

அனுபவம் - வாசகர்கள்

விவசாயிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது.
சொட்டுநீர்க் குழாய் பாதுகாப்பு!

விவசாய நிலங்களில் சொட்டுநீர்க் குழாய்கள் அமைத்து நீர்ப்பாசனம் செய்யும்போது, நிலத்தின் நான்கு மூலைகளில் உள்ள குழாய்களை அணிலோ, எலியோ கடித்து காயப்படுத்திவிடும். அதனால் நீர் பாய்ச்சும் ஒவ்வொரு முறையும் அதைச் சரிசெய்வது சிரமமான காரியம். தன் தாகத்தைத் தணித்துக்கொள்ள அணிலோ, எலியோ நீர் அருந்துவதற்காகக் குழாய்களைக் கடித்துச் சேதப்படுத்திவிடுவதுதான் இதற்குக் காரணம்.

இதற்குத் தீர்வு இருக்கிறது. பயன்பாடற்ற காலி பிளாஸ்டிக் டப்பாவின் மேல் பாகத்தை அகற்றிவிட்டு அதை சொட்டுநீர்க் குழாயில், நீர் விழும் பகுதியின் அடிப்பகுதியில் நான்கு மூலைகளிலும் வைத்துவிட்டால் போதும். நாம் நீர் பாய்ச்சும்போது தானாக டப்பாவில் நீர் நிரம்பிக்கொள்ளும். அணிலோ, எலியோ அந்த நீரைப் பருகிக்கொள்ளும்; குழாயும் சேதமாகாது. இதில் கவனிக்க வேண்டிய ஒரே விஷயம்... பழைய நீரை இவை பருகாது. ஒவ்வொரு முறை நீர் பாய்ச்சும்போதும் டப்பாவிலுள்ள பழைய நீரைக் கொட்டிவிட வேண்டும். தானாக புதிய நீர் டப்பாவில் நிறைந்துவிடும்.

- க.மகேந்திரன், காமயகவுண்டன்பட்டி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
கேம்பிரிட்ஜ் - கோட்டூர்

பி.இ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிரிட்டிஷ் அரசின் உதவித்தொகை மூலமாக எம்.ஃபில் நானோ டெக்னாலஜி படித்தேன். சிறிது காலம் அங்கு வேலை பார்த்துவிட்டு என் ஊருக்குத் (கோட்டூர்) திரும்பியபோது என் தந்தைக்கு உடல்நிலையில் குறைபாடு ஏற்பட்டது. சிறுநீரகச் செயல்பாடு குறைந்திருப்பது தெரியவந்தது. அதனால் அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. என் தந்தையின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு எங்கள் விவசாய பூமியைப் பராமரிக்க, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயத்தில் இறங்கினேன்.

கழனிக் கல்வி
கழனிக் கல்வி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆழியார் ஆராய்ச்சி நிலையத்தில் தென்னை வளர்ப்பில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றேன். எங்களுக்குச் சொந்தமான 15 ஏக்கரில் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். தென்னைச் சாகுபடியில் ஊடுபயிராக ஜாதிக்காய், மா, பாக்கு பயிரிட்டேன். பாக்கு வளர்ந்த பிறகு அதில் குறுமிளகு ஏற்றியுள்ளேன். தோட்டத்தைச் சுற்றி மூன்று புறமும் தண்ணீர்தான். ஆற்றில் குளிக்க, சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக மாறிவிட்டது.

எங்கள் தோட்டத்தில் காற்றின் ஈரப்பதம் நன்றாக இருப்பதால், பட்டையும் கிராம்பும் சோதனை முயற்சியில் நடவு செய்திருக்கிறேன். மா மரங்களையும் ஒரு சோதனை முயற்சியாக அடர் நடவு முறையில் நட்டு, கவாத்து செய்து பராமரித்துவருகிறேன். தோட்டத்தைச் சுற்றியுள்ள இடங்களில் வனத்துறை அறிவுரையின்படி அறிவியல் முறையில் வேளாண் காடுகள் வளர்த்து வருகிறேன். என் பண்ணையே எனக்கு பயிற்சி கொடுக்கும் பல்கலைக்கழகமாக மாறியிருக்கிறது.

- ரஞ்சித் குமார், கோட்டூர், கோவை மாவட்டம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முயல் கற்றுக்கொடுத்த பாடம்!

சில வகை முயல்கள் சமவெளிப் பிரதேசங்களிலும், சில வகைகள் மலைப் பிரதேசங்களிலும் வளர்வதற்கு ஏற்றவை. தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து மாவட்ட சீதோஷ்ணநிலைக்கும் நியூசிலாந்து வெள்ளை இன முயல்களே சிறந்தவை. இந்த நுட்பம் தெரியாமல், மலைப் பிரதேசங்களில் வளரும் முயலை வாங்கி வந்து வளர்த்து, நஷ்டத்தில் விழுந்தேன். பிறகுதான் நியூசிலாந்து வெள்ளை ரகத்துக்கு மாறினேன்.

10 பெண் முயல்களை இனவிருத்தி செய்வதற்கு ஒரு ஆண் முயல் போதுமானது. எட்டு மாதப் பருவத்திலிருந்து அவை இனப்பெருக்கத்துக்குத் தயாராகும். ஆண் முயல்களை இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு இனவிருத்திக்காகப் பயன்படுத்தலாம். பெண் முயல்கள் ஆறு மாத வளர்ச்சியிலேயே சினைப் பருவத்துக்குத் தயாராகிவிடும். அதை மூன்று ஆண்டுகளுக்கு இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்த முடியும். அதன் இனப்பெருக்கச் சுழற்சி 16 நாட்கள். அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பெண் முயலை ஆண் முயலின் கூண்டுக்குள்விட்டு இனச்சேர்க்கைக்கு உதவ வேண்டும். பெண் முயலுக்கான சினைக்காலம் 28 முதல் 32 நாள்கள். குறுகியகாலத்திலேயே இவற்றை வளர்த்து கணிசமாக வருவாய் ஈட்டிட முடியும். மூன்று முதல் நான்கு மாதங்களில் ஒரு முயலில் ஒன்றரை கிலோ முதல் இரண்டு கிலோ வரை இறைச்சி கிடைக்கும். உங்கள் பகுதியில் முயல் இறைச்சியை வாங்கும் ஹோட்டல்கள் இருக்கின்றனவா என்பதை அறிந்துகொண்டு முயல் வளர்ப்பில் இறங்கினால்தான் விற்பனையில் பிரச்னை ஏற்படாது.

- ப.சிவகாமி, புதுச்சேரி.

பேராசிரியர்களே வருக!

இந்த வயல்வெளிப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள்தான் பேராசிரியர்கள். நீங்கள் நிலத்தில் கற்ற, பெற்ற கழனிக் கல்வியைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது. உங்களின் அனுபவக் கல்வியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். கடிதம், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் அனுபவங்களை அனுப்பலாம்.

தொடர்புக்கு,

வயல்வெளிப் பல்கலைக்கழகம், பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: pasumai@vikatan.com வாட்ஸ்அப் எண்: 99400 22128.