விவசாயிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது.
விதைகளை முறையாக விதைநேர்த்தி செய்த பிறகுதான் விதைக்க வேண்டும். பல விவசாயிகளுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு இல்லை. நான் மண், நீர், விதைகளை நன்கு பரிசோதனை செய்து, அது தொடர்பான ஆலோசனையைப் பெற்றுவிட்டுத்தான் பயிரிடுகிறேன். பிறகு, பயிருக்கு ஏற்ற உரங்களை இட்டு பயிர்களை வளர்க்கிறேன். நீரின் தேவை அறிந்து சொட்டுநீர்ப் பாசன வசதி செய்கிறேன். இடுபொருள்களையும் நீரில் கலந்துவிடுகிறேன். நாம் விதைக்கும் விதைகள் மிக மிகத் தரமாக, சுத்தத் தன்மையுடையவையாக இருக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறுவடை முடிந்த பிறகு பிரித்து எடுக்கப்படும் விதைகள் உடனே விதைக்க, நடவு செய்யத் தகுதியானவையாக, தரமானவையாக இருக்காது. அவற்றில் மண், சிறு கற்கள், இலைகள், சிறு சாவி விதைகள், சிறு சிறு குச்சிகள் கலந்திருக்கும். எனவே, விதைகளைச் சுத்திகரிப்புச் செய்து பயன்படுத்துகிறேன். அதற்கு அரசு விதைப் பரிசோதனை நிலையங்களும் உதவுகின்றன. அங்கு புறத்தூய்மைப் பரிசோதனை செய்வார்கள். அதில் தூய, தரமான விதைகளில் உயிர்ப்பற்ற பொருள்கள், களை விதைகள், பிற ரக விதைகள் கலந்துள்ளனவா, குறைந்தபட்ச தரம் இருக்கிறதா எனப் பரிசீலனை செய்வார்கள்.
விதையில் சரியான ஈரப்பதம் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்த பிறகு, விதைகளைச் சேமிக்கிறேன். விதையின் ஈரப்பதத்தைப் பொறுத்தே விதையின் ஆயுளும் நிர்ணயிக்கப்படும். ஈரத்தன்மை குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கக் கூடாது. எனவே, விதைகளை காலை, மாலையில் வெப்பம் இல்லாதபோது காயவைக்க வேண்டும். சரியான ஈரப்பத நிலையிலுள்ள விதைகள்தான் பூச்சி, பூஞ்சணத் தாக்குதல் இல்லாமல் அதிக நாள்கள் சேமித்து வைக்கக்கூடிய தரத்தில் இருக்கும். ஒவ்வொரு விதைக்கும் ஈரப்பதம் மாறுபடும்.
- தனசேகர், திருவண்ணாமலை.
எனது வயலில் எலித் தொல்லை அதிகமாக இருந்தது. எனவே, சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தேன். அதில் வெற்றியும் கண்டேன். என் வயலில் ஆட்டுக் கிடைகளை அமைத்து பயிர் செய்தேன். நொச்சி மற்றும் எருக்குச் செடிகளை வயலைச் சுற்றி வேலிப்பயிராக நடவு செய்தேன். இதனால் எலித்தொல்லை ஓரளவுக்குக் குறைந்தது. இதுபோக ஒரு மண்பானையில் பாதியளவு களிமண் சாந்தை நிரப்பிவைத்தேன். அந்தப் பானைக்குள் எலியைக் கவரும் உணவு வகையான ஊறவைத்த அரிசியை வைத்தேன்.
உணவுக்கு ஆசைப்பட்டு வந்த சில எலிகளும் பானைக்குள் மாட்டிக்கொண்டன. முதலில் இந்த நடவடிக்கையில் நான் ஈடுபட்டபோது எலிகள் விழவில்லை. சில நாள்களுக்குப் பிறகுதான் எலிகள் என் வியர்வை வாசனையை நுகர்ந்திருக்கின்றன என்ற உண்மை தெரிந்தது. அதனால் அடுத்த நாள் கையுறை அணிந்து பானையை வைத்தேன். அன்றே எலிகள் அனைத்தும் மாட்டிக்கொண்டன.
பொதுவாக, `ஆந்தைகளின் நடமாட்டம் இருக்கும் வயல்களில் எலித் தொந்தரவு அறவே இருக்காது’ என்று சொல்வார்கள். எனவே, ஆந்தைகள் இரவில் பறந்து வந்து அமர ‘T’ வடிவ மரக் குச்சிகளை வயல்களில் ஆங்காங்கே நட்டுவைக்கலாம். எலி எண்ணிக்கையை முற்றிலுமாகக் குறைக்க ஒவ்வொரு பயிர் அறுவடைக்குப் பிறகும் எலிவலை தோண்டி எலிகளை அழிக்கலாம். பாசன நீரில் தொடர்ச்சியாக ஜீவாமிர்தம் மற்றும் மீன் அமிலம் கலந்துவிடும்போது எலிகளின் நடமாட்டம் அறவே இல்லாமல் போகிறது. ரசாயன விவசாயத்தில்தான் எலிவெட்டு இருக்கும். இயற்கை விவசாயத்தில் எலிப் பிரச்னைகள் கிடையாது. இது எனது அனுபவத்தில் கற்றது.
- செல்வகுமார், கடலூர்.
மாடித்தோட்டம் அமைக்க முதலில் தேர்வு செய்ய வேண்டியது இடத்தைத்தான். இதற்கெனத் தனியாக ஓர் இடம் தேவையில்லை. மாடியில் காலியாக இருக்கும் இடங்கள், படிக்கட்டுகள், மாடிச் சுவர்கள் மற்றும் தொங்கு தொட்டிகள் என மாடித்தோட்டம் அமைப்பதற்கு ஏராளமான இடமும், வழியும் இருக்கின்றன. இதனால் மொட்டைமாடியின் தளம் வீணாகும் என்ற கவலை வேண்டாம். கீழே பாலித்தீன் விரிப்பை விரித்து அதன்மீது வைக்கலாம். இவை தவிர, பி.வி.சி பைப்புகள், கட்டையாலான பலகைகள் எனப் பல தீர்வுகள் இருக்கின்றன. முதலில் நாம் தேர்வு செய்ய வேண்டியது வெயில் படும்படியான இடம். பொதுவாக, தொட்டிகள் அமைக்கும்போது எல்லாத் தொட்டிகளையும் ஒன்றாக அமைக்காமல், எளிதாகப் பராமரிக்கும் செடிகளைத் தனியாகவும், அதிக நேரம் பராமரிக்க வேண்டிய செடிகளைத் தனியாகவும் பிரித்து அமைக்க வேண்டும்.
- ரகு குமார், சென்னை.
இந்த வயல்வெளிப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள்தான் பேராசிரியர்கள். நீங்கள் நிலத்தில் கற்ற, பெற்ற கழனிக் கல்வியைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது. உங்களின் அனுபவக் கல்வியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். கடிதம், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் அனுபவங்களை அனுப்பலாம்.
தொடர்புக்கு, வயல்வெளிப் பல்கலைக்கழகம், பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: pasumai@vikatan.com வாட்ஸ்அப் எண்: 99400 22128.