Published:Updated:

வயல்வெளியே பல்கலைக்கழகம்!

கழனிக் கல்வி
பிரீமியம் ஸ்டோரி
News
கழனிக் கல்வி

இது ஒரு கழனிக் கல்வி!

அனுபவம் - வாசகர்கள்

விவசாயிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பூக்காத மரங்கள் பூக்கும்!

சுமை விகடனைச் சில வருடங்களாக ஆண்டுச் சந்தா செலுத்தித் தொடர்ச்சியாகப் படித்து வருகிறேன். இதனால் நான் பல புதிய விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் தாலுகாவில் உள்ள வெங்கல் - கண்ணியபுத்தூர் சாலையில் திருக்கண்டலம் கிராமத்தில் ‘அகஸ்தியர் வனம்’ என்ற பெயரில் 5 ஏக்கர் விவசாயப் பண்ணை இருக்கிறது.

எங்கள் தோட்டத்தில் உள்ள ஐந்து பப்ளிமாஸ் மரங்கள் 10 வருடங்களாகப் பூக்காமலிருந்தது. பலமுறை அதை வெட்டி விட வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் ஒரு தகவலைக் கேள்விப்பட்டேன். எந்த மரமாவது காய்க்காமலிருந்தால் அந்த மரம், எந்தத் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதை அறிந்து, அந்தக் குடும்பத்தில் உள்ள வேறொரு பழ மரத்திலிருந்து பென்சில் அளவு ஒரு கிளையை 9 அங்குலம் வெட்டிக் கூர்மையாகச் சீவிக்கொள்ள வேண்டும். காய்க்காத மரத்தில் அதன் வெளிப்புற மேல் பரப்பில் 3 அங்குலத்துக்கு வெட்டி எடுத்துவிட வேண்டும். ஏற்கெனவே வெட்டிய கிளையின் கூரான முனையைக் காய்க்காத மரத்தின் வெட்டிய பாகத்தில் அடித்துவிட வேண்டும்.

பிறகு அந்த மரத்திற்குப் பஞ்சகவ்யா இட 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டிரம்மின் அடித்தளத்தில் சிறிய துளையிட்டு அதில் பஞ்சகவ்யா ஊற்றி வைக்க வேண்டும். மேலும், வேறொரு பிளாஸ்டிக் டிரம்மில் இது போன்று தண்ணீர் வைக்க வேண்டும். தண்ணீர் குறைய குறைய நிரப்ப வேண்டும் என்பதுதான் அந்தத் தகவல். நான் அந்த முறையைக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து எனது பப்ளிமாஸ் மரங்களுக்குச் செய்து வந்தேன். பப்ளிமாஸ் மரம் சிட்ரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. எங்கள் தோட்டத்தில் கிடாரங்காய் காய்க்கின்ற மரம் ஒன்று இருக்கிறது. அதுவும், அதே குடும்பத்தைச் சேர்ந்தது. அதிலிருந்து பென்சில் அளவு கிளையைப் பப்ளிமாஸ் மரத்தில் அடித்துவிட்டேன். கடந்த ஏப்ரல் மாதம் மூன்று பப்ளிமாஸ் மரங்களில் அதிக அளவில் பூக்கள் வந்துள்ளது.

- டி.எஸ்.கோபாலன், திருவள்ளூர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இயற்கைக் களைக்கொல்லி!

கோரை, அறுகு போன்ற களைகளை அழிக்கும் இயற்கை களைக்கொல்லிக்கு மாட்டுக் கோமியம் 130 லிட்டர், கடுக்காய்க்கொட்டை 3 கிலோ, எலுமிச்சம்பழம் 10 இவை மூன்றையும் கலந்து தயார் செய்ய வேண்டும்.

வயல்வெளியே பல்கலைக்கழகம்!

தயாரிக்கும் முறை

130 லிட்டர் கோமியத்தைச் சேகரித்து பிளாஸ்டிக் தொட்டியில் ஊற்றி மழை, வெயில் படாமல் ஒரு மாதம் வைத்திருக்க வேண்டும். தொட்டியின் மேல்பகுதியைச் சணல் சாக்குக் கொண்டு மூடி வைக்கவும். 3 கிலோ கடுக்காய்க்கொட்டை (பொடியாக வாங்கக் கூடாது) வாங்கி, இடித்து வைத்துக்கொள்ளுங்கள். 10 லிட்டர் கோமியம் (சேகரித்து ஒரு மாதத்துக்கும் மேல் ஆனது) எடுத்து அதை பிளாஸ்டிக் வாளியில் ஊற்றி அத்துடன் இடித்து வைத்த கடுக்காய்க் கொட்டையைக் கொட்டி நன்றாகக் கலக்கவும்.

அத்துடன் 10 எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, தோலையும் போட்டுக் கலக்கவும். இவற்றை 15 நாள்கள் ஊறவிட வேண்டும். தினமும் இரண்டு முறை கலக்கி விட வேண்டும்.

தெளிப்பு முறை

15 நாள்கள் ஊறவைத்த கடுக்காய், எலுமிச்சை கலந்த கலவையைத் துணியில் வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு மாதம் ஆன பழைய கோமியம் 70 லிட்டர் எடுத்து, அதில் கலவையைச் சேர்த்துக் கலக்கவும். (களைகள் முற்றி இருந்தால் 50 லிட்டர் சிறுநீர்) கைத்தெளிப்பானை எடுத்துக்கொண்டு அதில் இந்தக் கலவையை ஊற்றிக் களைகளின் அனைத்து பகுதியிலும் படும்படி நன்றாகத் தெளிக்க வேண்டும். தெளித்த ஒரு வாரத்தில் களைகள் கருக ஆரம்பிக்கும்.

குறிப்பு: கடுக்காய்க் கொட்டையை உடைக்கும்போது மூக்கைத் துணியில் கட்டிக் கொள்ளுங்கள். அதன் துகள்கள் சுவாசக்குழாயின் வழியே நமது உடலுக்குள் சென்றால் காய்ச்சல் வரும். தெளிப்புக்குக் கைத்தெளிப்பானை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தெளிக்கும்போது பயிரின் மேல் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தெளிப்புக்கு முதல் நாள் தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும். தெளித்த பிறகு 5 நாள்களுக்குத் தண்ணீர்ப் பாய்ச்சக் கூடாது. காலை 7 மணி முதல் 10 மணி வரைதான் தெளிக்க வேண்டும்.

- ஆர்.அன்பரசு, திண்டுக்கல்.

பேராசிரியர்களே வருக!

ந்த வயல்வெளிப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள்தான் பேராசிரியர்கள். நீங்கள் நிலத்தில் கற்ற, பெற்ற கழனிக் கல்வியைப் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது. உங்களின் அனுபவக் கல்வியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். கடிதம், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் அனுபவங்களை அனுப்பலாம்.

தொடர்புக்கு, வயல்வெளிப் பல்கலைக்கழகம், பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: pasumai@vikatan.com வாட்ஸ்அப் எண்: 99400 22128.