Published:Updated:

13 ஏக்கர்... ரூ. 26 லட்சம் லாபம்! வறண்ட நிலத்தில் வளமான வருமானம் கொடுக்கும் அத்தி!

அமர்நாத் மற்றும் அவரது மனைவி
பிரீமியம் ஸ்டோரி
அமர்நாத் மற்றும் அவரது மனைவி

முயற்சி

13 ஏக்கர்... ரூ. 26 லட்சம் லாபம்! வறண்ட நிலத்தில் வளமான வருமானம் கொடுக்கும் அத்தி!

முயற்சி

Published:Updated:
அமர்நாத் மற்றும் அவரது மனைவி
பிரீமியம் ஸ்டோரி
அமர்நாத் மற்றும் அவரது மனைவி
னிதனின் ஆதிதொழில் விவசாயம். இன்றைய காலகட்டத்தில் சூழலுக்கு ஏற்ப பணிபுரிய வேண்டிய நிலை. ஆனாலும், ஆழ்மனதில் படிந்துள்ள விவசாய எண்ணங்கள் அவ்வப்போது நினைவில் அலையடித்துக்கொண்டே இருக்கும். சமீபகாலமாக அப்படிப்பட்ட எண்ணமுள்ளவர்கள் அதிகளவில் விவசாயம் நோக்கி நகர்ந்துகொண்டிருக் கிறார்கள். அந்த வரிசையில் சென்னையைச் சேர்ந்த அமர்நாத் என்ற இளைஞரும் விவசாயத்தில் இறங்கிக் கலக்கி வருகிறார். வறட்சி பகுதியான அருப்புக்கோட்டை பகுதியில், வறட்சியைத் தாங்கும் பயிர்களைச் சாகுபடி செய்து அசத்தி வருகிறார். அவரைச் சந்திப்பதற்காக அவரது பண்ணைக்குச் சென்றோம்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை-நரிக்குடி சாலையில் வெடத்தகுளம் என்ற இடத்தில் அமைந்துள்ளது அவரது பண்ணை. நுழைவாயிலில் கேட்டுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த கூரைக்கொட்டகையில் தோட்டத்தில் விளைந்த அத்தி, டிராகன் ஃபுரூட், கொய்யா உள்ளிட்ட பழங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. பணியாளர்களிடம் வேலையைப் பிரித்துக் கொடுத்துக்கொண்டிருந்த அமர்நாத், நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்றார். பணியாளர்களை அனுப்பிவிட்டுப் பேசத் தொடங்கினார்.

அத்தி, டிராகன் ஃபுரூட் பழங்களுடன் அமர்நாத் மற்றும் அவரது மனைவி
அத்தி, டிராகன் ஃபுரூட் பழங்களுடன் அமர்நாத் மற்றும் அவரது மனைவி

‘‘எங்க பூர்வீகம் ஆந்திரா. விவசாயக் குடும்பம். அங்க இருந்து வேலைக்காக அப்பா அஞ்சய்யா சென்னைக்கு வந்தாரு. அப்ப, அப்பாவும் பெரியப்பா ரவீந்திரகுமார் ரெண்டு பேரும் சேர்ந்து கட்டுமான நிறுவனம் ஒன்றை ஆரம்பிச்சாங்க. நான் பி.காம் படிச்சு முடிச்சேன். அப்பாவோட தொழில்ல எனக்கு ஆர்வம் இல்லை. புகைப்படம் எடுக்குறதுல ஆர்வம் அதிகம். அதேபோல விவசாயம் மீதும் ஆர்வம் இருந்தது. சில பண்ணைகளுக்குப் போய்த் தங்குவேன். அப்படிப் போனதுல விவசாய ஈடுபாடு அதிகமாகிடுச்சு. நாமளும் விவசாயத்துல இறங்கலாம்னு முடிவு பண்ணினேன். அப்ப இந்த இடம் எங்ககிட்ட இருந்துச்சு. ஆனால், இது வறட்சியான பகுதி. இங்க விவசாயம் செஞ்சு ஜெயிக்க முடியுமானு ஒரு யோசனை. வேற இடம் பார்க்கலாம்னு நினைச்சோம். அதுக்காக 2 வருஷம் அலைஞ்சோம். கடைசியில இதையே ஒரு சவாலா எடுத்துக்கலாம். வறட்சியான பகுதியில என்ன மாதிரியான பயிர் சாகுபடி செய்யலாம்ங்கிற ஆராய்ச்சியில இறங்குனோம். இங்க விவசாயம் பண்ணி ஜெயிக்க முடியும்னு மனசுக்குத் தோணுச்சு. அதுக்குப் பிறகு முழுமூச்சா இறங்கிட்டோம்’’ என்று முன்னுரை சொன்னவர், பண்ணைக்குள் நம்மை அழைத்துச் சென்றார். அங்கு நடந்துகொண்டே பேச்சைத் தொடர்ந்தார்.

அத்தி அறுவடையில்
அத்தி அறுவடையில்

‘‘2016-ம் வருஷம் இங்க விவசாய வேலையை ஆரம்பிச்சோம். கிணறு இல்லை. போர்வெல் தண்ணிதான். அதுவும் 250 அடிக்குக் கீழே போனா உப்பு தண்ணியாகிடும். இப்படிப் பல சவால்களுக்கு இடையிலதான் வேலையை ஆரம்பிச்சோம். முதல்ல 20 ஏக்கர்ல மா, 8 ஏக்கர்ல கொய்யா, 2 ஏக்கர்ல மாதுளை, 2 ஏக்கர்ல எலுமிச்சை, இடையில நாவல் நடவு செஞ்சோம். அதுல மாதுளை, எலுமிச்சை இந்த மண்ணுக்கு செட் ஆகல. பிறகு 5 ஏக்கர்ல பேரீட்சை, 3 ஏக்கர்ல டிராகன் ஃபுரூட் நடவு பண்ணினோம். பிறகு, அத்திச் சாகுபடி பண்ணலாம்னு இறங்குனோம். கொய்யாவுக்கு இடையில புனே ரெட் (pune red fig) அத்தி நடவு செஞ்சோம். ஆனா, அந்த ரகம் சரியா வரல. பிறகு தேடி அலைஞ்சதுல பிரவுன் டர்க்கி (Brown Turkey fig) ரக அத்திதான் இந்த மண்ணுக்கு நல்லா வரும்னு தெரிஞ்சுகிட்டு, அதை 13 ஏக்கர்ல நடவு செஞ்சோம். நடவு செஞ்சு 3 வருஷம் ஆச்சு. இதுல பல விஷயங்கள் கத்துகிட்டோம். இப்ப ரெண்டு வருஷமா மகசூல் எடுத்து, பண்ணையிலயே விற்பனை செஞ்சிட்டு இருக்கோம். கொரோனா காலத்துல பலரும் பண்ணைக்கு வந்து பழம் வாங்க ஆரம்பிச் சிட்டாங்க. இப்ப வரைக்கும் விற்பனை பிரச்னை இல்லாமப் போகுது’’ என்றவர், அத்தித் தோட்டத்துக்கு முன்பாக இருந்த புன்னை மரங்களைக் காட்டினார்.

பண்ணையின் தோற்றம்
பண்ணையின் தோற்றம்

‘‘ரெண்டு ஏக்கர்ல புன்னை மரங்களை ஆராய்ச்சிக்காக நடவு பண்ணியிருக்காங்க மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தார். இந்த 4 வருஷத்துல விவசாயத்துல பல விஷயங்களைக் கத்துக்கிட்டோம். சமீபத்தில்தான் எனக்குத் திருமணமாச்சு. என்னோட மனைவியும் ஆர்வமா என்கூடச் சேர்ந்து விவசாய வேலையில் ஈடுபட்டுட்டு இருக்காங்க’’ என்றவர், அத்திச் சாகுபடி குறித்த தகவல் களைப் பகிர்ந்துகொண்டார்.

13 ஏக்கர்... ரூ. 26 லட்சம் லாபம்! வறண்ட நிலத்தில் வளமான வருமானம் கொடுக்கும் அத்தி!
பண்ணையில் நாட்டு மாடுகள்
பண்ணையில் நாட்டு மாடுகள்

‘‘அத்தியில் பல ரகங்கள் இருக்கு. அதிலே அந்தந்தப் பகுதியோட மண் வகைக்கு ஏற்ற ரகம் எதுன்னு தெரிஞ்சு சாகுபடி செய்யணும் கிறதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். அத்தி சாகுபடி செஞ்சா அதிக லாபம் கிடைக்கும். உண்மைதான். அதுக்காக ஏதாவது ஒரு ரகத்தை நடவு செஞ்சா நிச்சயமா நஷ்டம்தான் ஆகும்.

உதாரணமா, நான் நடவு செஞ்சு இருக்கிற பிரவுன் டர்க்கி ரக அத்திப் பழங்களை அப்படியே சாப்பிடலாம். அதனால இதுக்கு நுகர்வோர் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கு. அதேநேரம் ‘புனே ரெட்’ ரகம் இந்தளவுக்கு ருசியா இருக்காது. நுகர்வோர் மத்தியில பெரிய வரவேற்பு இருக்காது. அதனால அதோட விலை குறைவா இருக்கும். இப்படி நம்ம மண்ணுக்கு ஏற்ற ரகம், அதற்கான விலை இதையெல்லாம் தெரிஞ்சுகிட்டு சாகுபடி செய்றது ரொம்ப ரொம்ப நல்லது. எங்க மண் மணற்பாங்கான மண். அதற்கு ஏற்ற ரகம் ‘பிரவுன் டர்க்கி’. ரெண்டு மூணு ரகத்தை நடவு பண்ணிப் பார்த்து எங்க மண்ணுக்கு ஏற்ற ரகத்தைச் சாகுபடி செஞ்சதால, இப்ப எனக்கு அத்திச் சாகுபடி லாபமா இருக்குது’’ என்றவர் வருமானம்குறித்துப் பேச ஆரம்பித்தார்.

13 ஏக்கர்... ரூ. 26 லட்சம் லாபம்! வறண்ட நிலத்தில் வளமான வருமானம் கொடுக்கும் அத்தி!

‘‘நாங்க நடவு செஞ்சு 3 வருஷம் ஆகிடுச்சு. நாங்க நடவு செய்யும்போது 13 அடிக்கு 9 அடி இடைவெளியில் நடவு செஞ்சோம். அதனால ஒரு ஏக்கர்ல கிட்டத்தட்ட 380 செடிகள்தான் வெக்க முடிஞ்சது. போன வருஷம், சராசரியா ஒரு மரத்திலிருந்து 6.5 கிலோ மகசூல் கிடைச்சது. மொத்தம் 2,470 கிலோ மகசூல். ஒரு கிலோ 100 ரூபாய் விலையில் பண்ணையிலேயே விற்பனை செஞ்சோம். அது மூலமா 2,47,000 ரூபாய் கிடைச்சது. இதுல செலவு 47,000 ரூபாய் போக 2,00,000 ரூபாய் நிகர லாபமா நின்னுச்சு. 13 ஏக்கர் மூலமா 26,00,000 லட்சம் ரூபா கிடைச்சது. ஒரு கிலோ 120 ரூபாய் விலையில டிராகன் ஃபுரூட் சென்னைக்கு அனுப்புறோம். 3 ஏக்கர் ‘டிராகன் ஃபுரூட்’ மூலமா வருஷத்துக்கு 2,00,000 ரூபாய் லாபம் கிடைக்குது’’ என்றவர் நிறைவாக,

‘‘எங்க பண்ணையில முழுக்க இயற்கை வழி விவசாயம்தான். இடுபொருள் தயாரிக்கிறதுக்காக, நாட்டு மாடுகள் வெச்சிருக்கோம். ஓங்கோல், தார்பார்க்கர், சாகிவால், சிந்துனு பல ரக மாடுகள் இருக்குது. ஆடுகள் வளர்க்குறோம். முழுமையான ஒருங்கிணைந்த பண்ணையமா இந்தப் பண்ணையை மாத்தணும். அதுதான் எங்க நோக்கம். அதை நோக்கித்தான் போயிட்டு இருக்கோம். ஒரு காலத்துல வளமான பகுதியா இருந்த நிறைய இடங்கள் இன்னிக்கு வறட்சியான பகுதியா மாறியிருக்கு. அந்த மாதிரி இடங்கள்ல குறைந்த தண்ணீர் வசதியுள்ள பயிர்களைச் சாகுபடி செய்யுறது மூலமா மறுபடியும் வளமான பகுதியா மாத்த முடியும்னு நம்புறோம். அதுக்கான முயற்சிதான் இந்தப் பண்ணை’’ என்றார் நம்பிக்கையுடன்.

தொடர்புக்கு, அமர்நாத், செல்போன்: 63802 92248.

அத்திச் சாகுபடி

சாகுபடி நிலத்தை நன்றாக உழவு செய்து, தயார் செய்துகொள்ள வேண்டும். வரிசைக்கு வரிசை 11 அடி செடிக்குச் செடி 7 அடி இடைவெளியில் குழி எடுக்க வேண்டும். இந்த இடைவெளியில் நடவு செய்தால் ஒரு ஏக்கருக்கு 560 செடிகள்வரை நடவு செய்யலாம். மண் வாகைப் பொறுத்து குழியின் அளவு, சற்று முன்பின் இருக்கலாம். சராசரியாக ஒன்றரை அடி நீள, அகல, ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். அத்தி வேர் அதிக ஆழத்தில் போகாது. இதில் சல்லிவேர்கள் அதிகமாக இருக்கும். எனவே, தூர்பகுதியில் அதிக அளவு மண் அணைக்க வேண்டும். குழி எடுத்த பிறகு, குழிக்குள் 5 முதல் 10 கிலோ அளவுக்கு ஊட்டமேற்றிய தொழுவுரம் இட வேண்டும். (ஒரு டன் தொழுவுரத்தில் தலா 500 மி.லி சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் பாஸ்போ பாக்டீரியா கலந்தால் ஊட்டமேற்றிய தொழுவுரம் தயார்) குழியில் தொழுவுரம் இட்டபிறகு, செடியை நடவு செய்ய வேண்டும். ஒரு செடிக்குத் தினமும் 5 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். சொட்டுநீர்ப் பாசனம் மூலமாகத் தினமும் பாசனம் செய்ய வேண்டும். வேர்ப் பகுதியில் எப்போதும் ஈரப்பதம் இருப்பதுபோல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

13 ஏக்கர்... ரூ. 26 லட்சம் லாபம்! வறண்ட நிலத்தில் வளமான வருமானம் கொடுக்கும் அத்தி!

அத்திச் சாகுபடியில் பெரிய பராமரிப்பு கவாத்துச் செய்வதுதான். இரண்டு வகையாகக் கவாத்துச் செய்யலாம். வேர்ப் பகுதியிலிருந்து கிளைகள் பிரிந்து, படர்ந்து வளரும் வகையில் மேலே செல்லும் கிளைகளைக் கவாத்து செய்யும் முறை. இரண்டாவது முறையில், 3 அடி உயரம் வரை ஒரே தண்டாக வளரவிட்டு, அதற்குமேல் கிளைகளைப் பரவவிடுவது. இதில் இரண்டாவது வகைக் கவாத்துச் சிறந்தது. 3 அடி வளர்ந்த பிறகு, பக்கக் கிளைகளை வெட்டுவதைத் தவிர்த்து, மேல்நோக்கிச் செல்லும் கிளைகளை வெட்டிவிட்டால், செடி பக்கவாட்டில் வளரும். ஆண்டுதோறும் கவாத்துச் செய்ய வேண்டும். அக்டோபர், நவம்பர் மாதங்கள் கவாத்துச் செய்ய ஏற்ற மாதங்கள். நடவு செய்த 3 மாதங்களுக்கு மேல் பிஞ்சுகள் வரத் தொடங்கும். குறைந்தபட்சம் ஓர் ஆண்டுவரை பிஞ்சுகளைக் கிள்ளிவிட வேண்டும். அதன்பிறகு மகசூல் எடுக்கலாம்.

18 மாதங்களுக்குப் பிறகு, மகசூல் எடுத்தால் மரம் பலமாகும். பிஞ்சு எடுத்ததிலிருந்து 50 நாள்களில் பழம் அறுவடை செய்யலாம். 2-ம் ஆண்டு ஒரு மரத்திலிருந்து 3 முதல் 5 கிலோ பழங்கள் கிடைக்கும். 3-ம் ஆண்டு, 5 முதல் 7 கிலோ பழங்கள் கிடைக்கும். பூச்சி, நோய் பராமரிப்பில் கவனம் தேவை. மழைக்காலத்தில் இலைத்துரு நோய் தாக்குதல் இருக்கும். இதைத் தடுக்க ஒரு லிட்டர் தண்ணீரில் 3 மி.லி சூடோமோனஸ் கலந்து இலையின் மீது தெளிக்கலாம். மழை பெய்வதற்கு முன்பாகவே தூர்பகுதியிலும் இதை ஊற்றலாம். பனிக்காலத்தில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் இருக்கும். அதைத் தடுக்க, ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மி.லி வேப்ப எண்ணெய் கலந்து தெளித்தால் போதும். சின்னச் செடியாக இருக்கும்போது வெள்ளை ஈக்கள் தாக்குதல் இருக்கும். அதற்கும் வேப்ப எண்ணெய்தான் தீர்வு. களிமண் உள்ள பகுதிகளில் வேர் அழுகல் நோய் ஏற்படும். அதைத் தடுக்க நடவு செய்யும்போதே குழியில் வேப்பம் பிண்ணாக்கு போட்டு நடவு செய்ய வேண்டும். அதையும் மீறித் தாக்குதல் இருந்தால் பவேரியா பேசியானா தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

காய், பச்சை நிறத்திலிருந்து நேரடியாகச் சிவப்பு நிறமாக மாறும். பழங்கள் 80% சிவப்பு நிறத்துக்கு மாறிய பிறகு அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்யும்போது காம்பு பகுதியில் பால் குறைவாக இருக்க வேண்டும். இந்த ரகப் பழங்களை அன்றைக்கே விற்பனை செய்வது நல்லது. அதிகபட்சம் மூன்று நாள்கள்வரை இதைச் சேமிக்கலாம்.

13 ஏக்கர்... ரூ. 26 லட்சம் லாபம்! வறண்ட நிலத்தில் வளமான வருமானம் கொடுக்கும் அத்தி!

பலருக்கும் பயனுள்ள இடமா இருக்கும்!

ந்தப் பண்ணையின் அனைத்துப் பணிகளையும் அமர்நாத் கவனித்துக்கொண்டாலும், அதன் முதுகெலும்பாக இருப்பவர் அமர்நாத்தின் பெரியப்பா ரவீந்திரகுமார். தமிழகத்தின் முன்னணி கட்டுமான நிறுவனத்தை வழி நடத்தி வரும் ரவீந்திரகுமார், ஓய்வு நேரத்தை இந்தப் பண்ணையில்தான் கழிக்கிறார். பண்ணையைப் பற்றி அவரிடம் பேசினோம். ‘‘நான் சென்னைக்கு வரும்போது, கையில பணம் இல்லாமதான் வந்தேன். என் உடன்பிறவா சகோதரர் அஞ்சய்யா அறிமுகம் ஆனார். ரெண்டு பேரும் சேர்ந்து கட்டுமான தொழில் செய்ய ஆரம்பிச்சோம். தேவையான பொருளாதாரம் கிடைச்சது. சமூக அந்தஸ்து கிடைச்சது. இது எல்லாமே இந்தச் சமூகம் கொடுத்தது. அந்தச் சமூகத்துக்கு நாம ஏதாவது செய்யணும்னு மனசுக்குள்ள தோணும். அந்த நேரத்துலதான் அமர்நாத், விவசாயத்துல ஆர்வமா வந்தாரு. இன்னிக்கு உலகமே இயற்கை விவசாயத்தை நோக்கித்தான் போயிட்டு இருக்கு. நம்ம உடல் ஆரோக்கியம், சமூக மக்களோட உடல் ஆரோக்கியத்துக்காக ரசாயனம் இல்லாத விளைபொருள்களை உற்பத்தி பண்ண நினைச்சோம். நான், இப்ப இயற்கை வழி வாழ்வியலை நடைமுறையாக்கிகிட்டேன். பண்ணையில என்னோட வீடு ரெண்டாவது மாடியில இருக்கும். அந்த வீட்டுக்கு ஜன்னல், கதவு எதுவுமே இருக்காது. பால்கனியில ஊஞ்சல் இருக்கும். அதுல உக்காந்து நிலா வெளிச்சத்துல பண்ணையைப் பார்த்துகிட்டேதான் இருப்பேன். பண்ணைக்கு வந்தா நானும் ஒரு வேலையாளாதான் இருப்பேன். பண்ணையில இருக்க ஒவ்வொரு மரமும் எனக்கு அத்துபடி. அதுகளுக்கும் என்னை நல்லா தெரியும். இந்தப் பண்ணை மூலமா இயற்கை விவசாயப் பயிற்சிகள் கொடுக்கலாமா? இந்தப் பகுதி மக்களுக்கு எந்த வகையில உதவ முடியும்னு யோசிச்சுட்டு இருக்கோம். கூடிய விரைவில் இது பலருக்கும் பயனுள்ள இடமா இருக்கும்’’ என்றார்.