Published:Updated:

ஏக்கருக்கு ரூ. 74,000... சொட்டுநீரில் செழிக்கும் கேழ்வரகுச் சாகுபடி!

கேழ்வரகுச் சாகுபடி
பிரீமியம் ஸ்டோரி
கேழ்வரகுச் சாகுபடி

மகசூல்

ஏக்கருக்கு ரூ. 74,000... சொட்டுநீரில் செழிக்கும் கேழ்வரகுச் சாகுபடி!

மகசூல்

Published:Updated:
கேழ்வரகுச் சாகுபடி
பிரீமியம் ஸ்டோரி
கேழ்வரகுச் சாகுபடி
விவசாயத்தில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அந்தத் தொழில்நுட்பங்களைச் சிறப்பாகப் பயன்படுத்துபவர்கள் மட்டுமே விவசாயத்தில் சிறப்பான வளர்ச்சியை அடைகிறார்கள்.

அந்த வகையில் சொட்டுநீர்ப் பாசனத்தில் கேழ்வரகுச் சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுத்து வருகிறார் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கதிர்வேல். இவருடைய பண்ணை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் 7 கி.மீ தொலைவில் உள்ள மிட்டப்பள்ளி என்ற கிராமத்தில் இருக்கிறது. கேழ்வரகைக் காயவைக்கும் பணியிலிருந்த கதிர்வேல் நம்மை இன்முகத்தோடு வரவேற்றுப் பேசினார்.

கேழ்வரகு நாற்று நடுதல்
கேழ்வரகு நாற்று நடுதல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் அருகில் உள்ள பெரிய தள்ளப்பாடி கிராமம். விவசாயம்தான் பூர்வீகத் தொழில். எனக்கு மிட்டப்பள்ளியில 8 ஏக்கர், பெரிய தள்ளப்பாடியில நாலரை ஏக்கர் நிலம் இருக்கு. இது செம்மண் கலந்த மணற்பாங்கான நிலம். ஆரம்பத்துல இந்த 8 ஏக்கர்ல 450 மாமரங்கள வளர்த்துட்டு வந்தேன். வறட்சியில நிறைய மரங்க காய்ஞ்சு போச்சு. 8 மரங்கள வெச்சுகிட்டு மீதியிருந்த மரங்களை வெட்டிட்டேன். பிறகு, வாழை, காய்கறி, கரும்புச் சாகுபடிக்கு மாறினேன். ஒருகட்டத்துல அதுலயும் போதுமான வருமானம் இல்லாம நிறுத்திட்டேன். பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையத்துக்குப் போய் ஆலோசனை கேட்டேன். ‘தண்ணீர் அதிகம் தேவைப்படுற வாழை, காய்கறிகள் நிறைய பேரு சாகுபடி செய்யறாங்க. அதனால, நீங்க தண்ணீர் அதிகம் தேவைப்படாத கேழ்வரகு, பயறு வகைகளைச் சாகுபடி செய்யுங்க’னு சொன்னாங்க. அப்படித்தான் கேழ்வரகுச் சாகுபடிக்கு வந்தேன். 10 வருஷமா கேழ்வரகு, துவரைச் சாகுபடி செய்றேன். 3 வருஷத்துக்கு முன்ன பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் தமிழ்ச்செல்வன் சொட்டு நீர்ப் பாசனத்துல கேழ்வரகு, துவரைச் சாகுபடி செய்யச் சொல்லி வழிமுறைகளைச் சொன்னார். அதைக்கேட்டு இப்ப சொட்டு நீர்ப் பாசனத்துல கேழ்வரகு, துவரைச் சாகுபடி செய்றேன்” என முன்கதை சொன்னவர் தொடர்ந்தார்.

கேழ்வரகு வயல்
கேழ்வரகு வயல்

‘‘பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து நிறைய ஆராய்ச்சி ரகங்கள விதைப் பெருக்கத்துக்காகக் கொடுப்பாங்க. அதை விதைச்சு உற்பத்தி செஞ்சி, விதைச் சான்றளிப்புத் துறைக்குக் கொடுத்திடுறேன். போன வருஷம் கோ-8 துவரை ரகத்தைச் சாகுபடி செஞ்சு புதுக்கோட்டையில இருக்கிற வம்பன் ஆராய்ச்சி நிலையத்துக்கும் வேளாண்மைத் துறைக்கும் கொடுத்தேன். இது நல்லா விளைஞ்சதைக் கேள்விப்பட்டு, கலெக்டரே நேரடியா வயலுக்கு வந்து பாராட்டிட்டுப் போனாரு. அதேபோலக் கேழ்வரகுல பையூர்-2, கோ-15 ரகங்களைச் சாகுபடி செஞ்சேன். பையூர்-2 எல்லாப் பட்டத்திலேயும் சாகுபடி செய்யலாம். கோ-15 ஐப்பசி, கார்த்திகைப் பட்டங்களுக்கு மட்டுமே ஏற்றது. அதுவும் இறவைச் சாகுபடியிலதான் நல்லா விளையுது. அதைத்தான் கடைசியா அறுவடை செஞ்சேன்” என்றவர் சொட்டு நீர்ப்பாசனத்தில் கேழ்வரகுச் சாகுபடி செய்வது குறித்துப் பேசினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கதிர்வேல்
கதிர்வேல்

“சொட்டு நீர்ல கேழ்வரகுச் சாகுபடி செய்றது சுலபம்தான். உழவு ஓட்டிட்டு கலப்பையில திட்டு(பார்) ஓட்டணும். திட்டு மேல சொட்டு நீர்க் குழாய்களை நீளவாக்குல அமைக்கணும். ஒரு ஏக்கருக்கு 3,200 மீட்டர் குழாய்த் தேவைப்படும். நாமளே வாங்கி அமைச்சா 30,000 ரூபாய்ச் செலவாகும். அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்குது. அதிகபட்ச மானியத்தொகை 43,000 ரூபாய். கேழ்வரகு, துவரை உள்ளிட்ட பயிர்களுக்கு வேளாண்மைத்துறை மூலமா சொட்டுநீர் அமைச்சுக்கலாம். ஒருமுறை அமைச்சுட்டா 5 வருஷத்துக்குப் பிரச்னையில்லை. வாய்க்கால்ல ஒரு ஏக்கருக்குப் பாசனம் செய்யுற தண்ணியை வெச்சு, சொட்டு நீர் முறையில 4 ஏக்கருக்குப் பாசனம் செய்யலாம். நான் அப்படித்தான் பாசனம் செய்றேன்” என்றவர் கேழ் வரகுச் சாகுபடி நுணுக்கங் களைப் பகிர்ந்து கொண்டார்.

சொட்டுநீர் அமைப்புகளுடன்
சொட்டுநீர் அமைப்புகளுடன்
காயவைத்த கேழ்வரகுடன்
காயவைத்த கேழ்வரகுடன்

“கேழ்வரகு 115 நாள் பயிர். மானாவாரிக்கு வைகாசி, ஆடிப்பட்டமும் இறவைக்கு ஐப்பசி, கார்த்திகைப் பட்டமும் ஏற்றது. தூர் வெடிக்கிறதுக்கும் கதிர்ல பால் பிடிக்கிறதுக்கும், பால் பிடிச்ச கதிர் நல்லா திரட்சியா மணிகள் வளர கடலைமாவுக் கரைசலைத் தெளிக்கணும். நான் 80 சதவிகித இயற்கை விவசாயமும், 20 சதவிகிதம் ரசாயன விவசாய மும் கலந்து செய்றேன். சீக்கிரமா 100 சதவிகித இயற்கை விவசாயத்துக்கு மாறிடுவேன்” என்றவர் வருமானம் குறித்துப் பேசினார். “கடைசியா 5 ஏக்கர்ல கேழ்வரகு போட்டிருந்தேன். ஏக்கருக்கு 20 மூட்டை (50 கிலோ) மகசூல் கிடைச்சது. 20 மூட்டைக்கு 1,000 கிலோ. இதுல 100 கிலோ கழிவு போக 900 கிலோவை விதைச் சான்றளிப்புத்துறைக்கு விற்பனை செஞ்சிட்டேன். ஒரு கிலோ 58 ரூபாய், உற்பத்தி மானியம் 25 ரூபாய்னு ஒரு கிலோவுக்கு 83 ரூபாய் கிடைச்சது. இது மூலமா ஒரு ஏக்கருக்கு 74,700 ரூபாய் வருமானம் கிடைச்சது. உழவு, களை, அறுவடை, போக்குவரத்துனு 23,000 ரூபாய் செலவு ஆச்சு. அதுபோக 51,700 ரூபாய் லாபமா நின்னது. 5 ஏக்கருக்கும் சேர்த்து 2,58,500 ரூபாய் லாபமா கிடைச்சது. இதையே வெளி மார்க்கெட்ல வித்திருந்தா ஒரு கிலோ கேழ்வரகு 30 ரூபாய்க்குள்ளதான் போயிருக்கும். விதைப்பண்ணைக்காகக் கொடுத்ததாலதான் இந்த லாபம் சாத்தியமாச்சு‬” என்றபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, கதிர்வேல், செல்போன்: 94879 86696

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படித்தான் செய்யணும் கேழ்வரகுச் சாகுபடி!

ரு ஏக்கரில் கேழ்வரகுச் சாகுபடி செய்ய, கதிர்வேல் சொல்லிய தகவல்கள் இங்கே இடம் பிடிக்கின்றன.

கேழ்வரகு அனைத்து வகையான மண்ணிலும் வளரும். இறவைக்கு ஐப்பசி, கார்த்திகைப் பட்டம் சிறந்தது. ஒரு ஏக்கர் நிலத்தில் நடவு செய்ய 2 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். இதற்கு 2 கிலோ விதை தேவைப்படும். மேட்டுப்பாத்திகள் அமைத்து நிலத்தைச் சமப்படுத்தி, தூளான எருவை 100 கிலோ தூவிவிட வேண்டும். 4 லிட்டர் தண்ணீரில் தலா 100 கிராம் சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா, அசோஸ்பைரில்லம் கலந்து அதில் 2 கிலோ கேழ்வரகு விதையைப் போட்டு ஓர் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் பாத்திக்குத் தண்ணீர் பாய்ச்சி விதையைத் தூவிவிட வேண்டும். 10-ம் நாள், 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மி.லி பஞ்சகவ்யா கொடுக்க வேண்டும். 18-ம் நாள் நாற்று, நடவுக்குத் தயாராகிவிடும்.

நடவுக்கான நிலத்தை 4 சால் உழவு ஓட்டி, 5 டன் எருவைக் கொட்டி நன்றாகக் கலைத்துவிட வேண்டும். பிறகு கலப்பையிலேயே பார் ஓட்ட வேண்டும். பார்களின் மீது 4 அடிக்கு 4 அடி இடைவெளியில் சொட்டுநீர்க் குழாய்களை நீளவாக்கில் பதிக்க வேண்டும். குழாய்களில் 2 அடிக்கு 2 அடி இடைவெளியில் தண்ணீர் சொட்டுவதற்கு ஏற்றவாறு லேட்ரல்களைப் பொருத்த வேண்டும். சொட்டுநீர்ப் பாசன அமைப்புகளைப் பொருத்திவிட்டு, நிலத்துக்குத் தண்ணீர்ப் பாய்ச்சி ஒரு அடிக்கு ஒரு அடி இடைவெளியில் ஒரு குத்துக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும். நாற்றை நடவு செய்வதற்கு முன் தலா ஒரு கிலோ சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா, அசோஸ்பைரில்லம் ஆகியவற்றை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து, அதில் நாற்றை அரை மணிநேரம் முக்கி எடுத்து நடவு செய்ய வேண்டும். ஒரு நாற்று அதிகபட்சமாக 12 தாள்களாகக் கிளைக்கும். அதனால் நடவுக்கு ஒரு நாற்றே போதுமானது. 10 முதல் 15-ம் நாள், பயிர் வளர்ச்சி ஊக்கத்திற்கான உரத்தை இட வேண்டும் (இயற்கை விவசாயம் செய்பவர்கள் 100 லிட்டருக்கு 3 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்கலாம்) பிறகு, 30-ம் நாள் ஒரு களையெடுத்து பயிர் வளர்ச்சி ஊக்கி உரத்தை இட வேண்டும்.

40 நாள்களுக்கு மேல் தூர்கள் வெடிக்கத் தொடங்கும். அந்தச் சமயத்தில் கடலைமாவுக் கரைசலைத் தெளிக்க வேண்டும். 70-ம் நாள், கதிர்களில் பால் பிடிக்கத் தொடங்கும்போதும் 90-ம் நாள், கதிரில் உள்ள மணிகள் முற்றத் தொடங்கும்போதும் கடலைமாவுக் கரைசலைத் தெளிக்க வேண்டும். 100 நாள்களுக்கு மேல் கதிர்கள் பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறத்துக்கு மாறும். 110 நாள்களுக்கு மேல் அறுவடை செய்துவிட வேண்டும். பூச்சித் தாக்குதல் பெரும்பாலும் இருக்காது. அப்படியிருந்தால் வேப்பெண்ணெய் அல்லது ஐந்திலைக் கரைசலைத் தெளிக்கலாம். தாளோடு அறுவடை செய்து மூன்று நாள்கள் காயவைத்து, டிராக்டரில் ஓட்டித் தானியத்தைப் பிரித்தெடுத்து, மூட்டைப் பிடிக்க வேண்டும்.

கடலைமாவுக் கரைசல் தயாரிப்பு!

டலைமாவு 2 கிலோ, வெல்லம் 2 கிலோ எடுத்து, 20 லிட்டர் தண்ணீரில் நன்றாகக் கலந்து, பிறகு அடுப்பில் கொதிக்க வைத்து, ஆற வைக்க வேண்டும். 200 லிட்டர் டிரம்மில் 195 லிட்டர் தண்ணீரை நிரப்பித் தலா ஒரு கிலோ சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா, அசோஸ்பைரில்லம், 4 லிட்டர் மாட்டுச் சிறுநீர் ஆகியவற்றை அதில் சேர்க்க வேண்டும். இதோடு ஆறவைத்த வெல்லம் கலந்த கடலைமாவுக் கலவையையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு காடாத்துணியால் வாய்ப்பகுதியைக் கட்டி, நிழலான இடத்தில் வைத்து 4 நாள்களுக்குத் தினமும் இரண்டு முறை கலக்கி வர வேண்டும். 5-ம் நாள், புளித்த வாடை வந்தால் கரைசல் தயாராகிவிட்டது என்று அர்த்தம். இதை ஸ்பிரேயரில் ஒரு தடவைக்கு 100 லிட்டர் என்ற கணக்கில் அப்படியே தெளிக்கலாம் அல்லது சொட்டு நீர்ப்பாசனத்தில் கலந்தும் விடலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism