Published:Updated:

அரை ஏக்கர்... ரூ.80,000 - மீன் வளர்ப்பில் அருமையான வருமானம்..!

மீன் குளம்
பிரீமியம் ஸ்டோரி
மீன் குளம்

மீன் வளர்ப்பு

அரை ஏக்கர்... ரூ.80,000 - மீன் வளர்ப்பில் அருமையான வருமானம்..!

மீன் வளர்ப்பு

Published:Updated:
மீன் குளம்
பிரீமியம் ஸ்டோரி
மீன் குளம்

விவசாயிகள், உப தொழிலாகத்தான் மீன் வளர்ப்பைத் தேர்ந்தெடுக் கிறார்கள். ஆனால், இதில் ஆச்சர்யம் என்னவென்றால், முதன்மை தொழிலான பயிர் சாகுபடியைவிட, மீன் வளர்ப்பில் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. எளிமையான பராமரிப்பு... பிரகாசமான சந்தை வாய்ப்பு... இதுபோன்று இன்னும் பலவிதமான பலன்களால், மீன் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் மன நிறைவு அடைகிறார்கள். இதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், பாபாநாசம் தாலூகா, அன்னப்பன் பேட்டையைச் சேர்ந்த இளம் விவசாயியான சதீஷ். கடந்த 8 ஆண்டுகளாக மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் இவர், தனித்துவமான தீவன முறைகளைக் கடைப்பிடித்து, செலவை மிச்சப்படுத்தி நிறைவான லாபம் பார்த்து வருகிறார்.

ஒரு பகல்பொழுதில் இவரைச் சந்திக்கச் சென்றோம். வயல்களுக்கு இடையே காட்சி அளித்தது அவரது மீன் குளம். அதன் கரைகளில் தென்னை, வாழை, வேம்பு, முருங்கை, நெல்லி, கொய்யா மரங்கள் நம் கண்களைப் பசுமை மயமாக்குகிறது. தன் நண்பர்களுடன் சேர்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த சதீஷ், மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று, உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். ‘‘நாம கொடுக்குற தீவனம்தான் மீனோட வளர்ச்சியையும், சுவையையும் தீர்மானிக்குது. அரிசி தவிடோடு, கடலைப் பிண்ணாக்கு கலந்து கொடுக்குறோம். எங்க வயல்ல களைகளாக வளர்ந்திருக்கக்கூடிய ஆமணக்கு இலை, வாய்க்கால்கள்ல வளர்ந்திருக்குற வள்ளிக்கொடி இலை... இதையெல்லாம் தீவனமாகக் கொடுக்குறோம். இதை மீன்கள் விரும்பி சாப்பிடுது. இதனால்தான் எங்களோட மீன்கள் தனிச்சுவையோடு இருக்கு. மத்தவங்ககிட்ட வாங்குற மீன்களுக்கும், எங்கக்கிட்ட வாங்குற மீன்களுக்கும் நல்லாவே வித்தியாசம் தெரியுறதா மக்கள் சொல்றாங்க.

மீன் பிடிக்கும் பணியில் சதீஷ்
மீன் பிடிக்கும் பணியில் சதீஷ்

கடலைப் பிண்ணாக்கு மட்டும்தான் வெளியில காசு கொடுத்து வாங்குறோம். இந்தச் செலவையும் குறைக்க, எங்க தென்னை மரத்துல விளையக்கூடிய தேங்காய்ல இருந்து எண்ணெய் ஆட்டி, அது மூலமா கிடைக்குற தேங்காய்ப் புண்ணாக்கு, வண்டு வச்சி வீணாகிப்போன கோதுமை மாவு, அரிசி மாவு, உளுந்து தோல், பச்சைப்பயறு தோல் இதையெல்லாம் அப்பப்ப தீவனமாகக் கொடுக்குறோம். நாங்க மீன் வளர்ப்புல இறங்கி 8 வருஷம் ஆச்சு. இதுல எனக்கு அனுபவமாயிடுச்சு. மீன்களை மாசா மாசம் எடைப் பார்த்து, பட்டியல் போட்டுத் தீவனம் கொடுக்குறதுல எனக்கு உடன்பாடு இல்ல. அது தேவையும் இல்ல. இப்பெல்லாம் மீன் வளர்ப்புல ஈடுபடக்கூடியவங்க, குளத்துல கயிறு கட்டி, அதுல தீவன மூட்டையைத் தொங்கவிட்டு, அதை அப்பப்ப கண்காணிச்சு, தீவன அளவை மாத்திக்கிட்டே இருக்காங்க. இந்த முறையில செலவும் நேரமும் விரயமாகும். முன்னாடியெல்லாம் நீர் நிலைகள்ல, இயல்பாகக் கிடைக்கக்கூடிய தீவனத்தைச் சாப்பிட்டுதான் மீன்கள் வளர்ந்துச்சு. ஓரளவுக்கு அதைதான் நான் கடைப் பிடிக்குறேன். செலவு மிச்சமாகுறதுனால நிறைவான லாபம் கிடைக்குது’’ என்று சொன்னவர், தன்னைப் பற்றியும், மீன் வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கியதற்கான காரணத்தையும் விவரிக்கத் தொடங்கினார்.

“சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துல இன்ஜினீயரிங் படிச்சிட்டு, தனியார் நிறுவனங்கள்ல வேலை பார்த்துக்கிட்டே, எங்க அப்பாவுக்கு விவசாயத்துல உதவியாக இருந்தேன். எங்களுக்கு நாலரை ஏக்கர் நிலம் இருக்கு. ரெண்டு போகம் நெல் சாகுபடி செய்றோம். 2013-ம் வருஷம், ஊரக வளர்ச்சித்துறையில இருந்து 100 சதவிகித மானியத்துல மீன் குளம் அமைச்சி கொடுக்குறதா, ஊர் மக்களை அதிகாரிகள் அணுகினாங்க. அதுக்கு எங்க ஊர்ல ஒருத்தர்கூட முன் வரலை. ஆனால் எங்க அப்பா மட்டும் அதுல ரொம்ப ஆர்வமா இருந்தார்.

மீன் அறுவடை
மீன் அறுவடை

‘இது நமக்குச் சரி வராது... வேண்டாம்ப்பா’னு சொன்னேன். அப்பதான் எங்கப்பா ஒரு கணக்கு சொன்னார். ‘ரெண்டு போகம் நெல் சாகுபடி செஞ்சா, ஒரு ஏக்கர்ல 15,000 லாபம் கிடைக்குறதே பெரிய விஷயம். இதுக்கு இடையில வறட்சி, வெள்ளம் வந்தால் அதுக்கும் வாய்ப்பில்ல. இப்ப வெறும் 33 சென்ட்ல மட்டும் குளம் அமைச்சிப் பார்ப்போம். இதுல நாம் பெருசா எதையும் இழந்துடப் போறதில்ல. அது மூலமா நமக்கு வருமானம் கிடைக்கலானும் கூடப் பரவாயில்லை. அதுல நாம வளர்க்குற மீன்கள், நம்ம வீட்டு தேவைக்காவது உபயோகமாக இருக்கும். குளத்தோட கரைகள்ல தென்னையை வைப்போம். மீனுல வருமானம் கிடைக்கலைனாலும் கூட, தென்னையில இருந்து வருமானம் கிடைச்சிடும்’னு சொன்னார்.

அப்பா சொன்னது என் மனசுக்கு சரிதான்னு பட்டுச்சு. எங்க பகுதியில உள்ள நிலம் எல்லாமே, களி கலந்த சுக்கா மண். இதுல ஏக்கருக்கு அதிகபட்சம் 30 மூட்டை நெல்தான் மகசூல் கிடைக்கும். இந்தப் பகுதியில விவசாய வேலையாள் களுக்கான சம்பளம் அதிகம். நெல் சாகுபடியில பெருசா சொல்லிக்குற மாதிரி லாபம் கிடைக்கா துங்கறதை உணர்ந்தேன். அதேசமயம், எங்க ஊர் மண், மீன் வளர்ப்புக்கு மிகவும் உகந்தது. அதிக களித்தன்மை இருக்குறதுனால, தண்ணீரைப் பூமிக்குள்ளாற இழுக்காது. முதல் கட்டமா 100 சதவிகித மானியத்துல 33 சென்ட்ல மட்டும் குளம் அமைச்சி மீன் வளர்ப்புல இறங்கினோம். அதுல கொஞ்சம் லாபம் கிடைச்சது. அடுத்த வருஷம், எங்க சொந்த செலவுல, புதுசா 17 சென்ட்ல குளம் வெட்டி மீன் வளர்ப்பை விரிவுபடுத்தினோம். இப்ப மொத்தம் 50 சென்ட்ல அதாவது அரை ஏக்கர்ல மீன் வளர்ப்பைத் தொடர்ந்துகிட்டு இருக்கோம்’’ என்றவர், மீன் வளர்ப்பு முறை குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

மீன் குளத்தைச் சுற்றி தென்னை மரங்கள்
மீன் குளத்தைச் சுற்றி தென்னை மரங்கள்


‘‘வயல்ல மீன் குளம் அமைக்குறதா இருந்தால் வடிகால் வசதி ரொம்ப முக்கியம். எங்க குளத்தோட தண்ணீரை எங்க நிலத்துலயே முழுமையாக வடிய வைக்கூடிய இடமா பார்த்துத் தேர்வு பண்ணினோம். போர்வெல்லுக்குப் பக்கத்துலயே இது அமைஞ்சிருக்கு. குளத்துக்குத் தன்ணீர் கொண்டு வர்றது எளிமையா இருக்கு. சின்ன அளவுல மீன் குளம் அமைக்குறதா இருந்தால், வட்ட வடிவில் அமைக்கக் கூடாது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். இதனால் நாங்க செவ்வக வடிவத்துல இந்தக் குளத்தை அமைச்சிருக்கோம். மீன் குளத்துக்கு வெயில் தேவை. ஆனால், அதேசமயம் கோடைக் காலத்துல, வெயில் நேரடியாகப் பட்டால், தண்ணீர்ல சூடு அதிகமாகி, மீன்களுக்குத் தொந்தரவாகிடும். அதிக வெப்பத்தால், மீன்கள் செத்துப்போகக்கூட வாய்ப்புகள் அதிகம். இந்தக் குளத்தைச் சுற்றிலும் நான்கு பக்கமும், நிறைய மரங்கள் வளர்த்திருக்கோம். 41 தென்னை மரங்கள் இருக்கு. ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்குக் குறைந்தபட்சம் 100 காய்கள் காய்க்குது, ஒரு காய்க்கு 15 ரூபாய் வீதம் விலை கிடைக்குது. இது மூலமாக மட்டுமே வருஷத்துக்கு 60,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. தேங்காய்ல இருந்து எண்ணெய் ஆட்டுவோம். தேங்காய் புண்ணாக்கை, மீன்களுக்குத் தீவனமாகப் பயன்படுத்துவோம்.

மீன் குளம்
மீன் குளம்

மீன் குளம் அமைப்பு முறை

குளத்தோட ஆழம் 6 அடி. இதுல நாலு அடிக்குத் தண்ணீர் இருக்குற மாதிரி பராமரிக்குறோம். மழைக்காலத்துல 3 அடி உயரம் பராமரிக்குறோம். பொதுவாக மீன் வளர்ப்புல ஈடுபடக்கூடியவங்க, வருஷத்துக்கு ஒரு தடவை தண்ணீரை முழுமையாக வெளியேத்தி, குளத்தைக் காயப்போட்டு, மறுபடியும் புதுசா தண்ணீர் விட்டு, மீன் குஞ்சுகள் விடுவாங்க, ஆனால் நாங்க அந்த மாதிரி செய்றதில்லை. இரண்டு வருஷத்துக்கு ஒரு தடவைதான் தண்ணீரை வெளியேத்தி குளத்தைக் காயப்போடுவோம். அதேசமயம் இரண்டு வருஷத்துக்குள்ளார இரண்டு முறை குஞ்சுகள் விட்டு லாபம் எடுத்துடுவோம். இதனால் செலவு, தண்ணீர், காலம் எல்லாம் மிச்சமாகுது.

‘‘மீன் குளம் அமைக்க, வெயில் காலம்தான் ஏற்றது. மழைக்காலத்துல அமைச்சா வேலை செய்றது கஷ்டம், அதிகமாகச் செலவாகும்.’’

குளம் தயாரிப்பு

மீன் குளம் அமைக்க, வெயில் காலம்தான் ஏற்றது. மழைக்காலத்துல அமைச்சா வேலை செய்றது கஷ்டம், அதிகமாகச் செலவாகும். குளம் அமைத்த பிறகு, வழக்கமாக எல்லாரும் கிளிஞ்சல் சுண்ணாம்பு போட்டு, அதன் பிறகுதான் தண்ணீர் விடுவாங்க. ஆனால், நாங்க கொஞ்சம்கூட ரசாயனத்தன்மை இருக்கக் கூடாதுங்கறதுனால சுண்ணாம்பைத் தவிர்த்துடுவோம். 4 அடி உயரத்துக்குத் தண்ணீர் விட்டு, மறுநாள் இந்த அரை ஏக்கர் குளத்துக்கு இரண்டு டன் ஈர சாணம் போடுவோம். இதைக் கரைச்சுக்கூட விட வேண்டியதில்லை. தானாகவே கரைஞ்சிடும். அடுத்த 10 - 15 நாள்கள்ல நுண்ணுயிரிகள் தண்ணீர்ல பல்கி பெருகி இருக்கும். அதுக்கு பிறகு குஞ்சு விடுவோம்.

மீன் சுத்தப்படுத்தும் பணி
மீன் சுத்தப்படுத்தும் பணி


சீதோஷ்ண நிலையை உருவாக்குதல்

மீன் குஞ்சுகளை வாங்கிக்கிட்டு வந்த வுடனேயே, குளத்துக்குள்ளார இறக்கிடக் கூடாது. காரணம், பாக்கெட்ல உள்ள தண்ணீரோட சீதோஷ்ண நிலையும், நம்ம குளத்தோட சீதோஷ்ண நிலையும் வேறுபடும். மீன் குஞ்சு அடைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாக்கெட்டை, 10 - 15 நிமிஷம் குளத்துக்குள்ள வச்சிருந்து, அதுக்குப் பிறகுதான் குஞ்சுகளைக் குளத்துக்குள்ளார இறக்கிவிடணும்.

அரை ஏக்கரில் 1,500 குஞ்சுகள்

2 இன்ச் நீளமுள்ள 1,500 குஞ்சுகள் விடுவோம். இந்தப் பகுதியில ரோகு, கட்லா, மிர்கால்தான் அதிகமாக மக்கள் விரும்பி வாங்குவாங்க. சிலர் பொட்லா, புல் கெண்டை, சிசி வாங்குவாங்க. 500 ரோகு, 400 கட்லா, 300 மிர்கால், தலா 100 பொட்லா, புல் கெண்டை, சிசி குஞ்சுகள் விடுவோம்.

பிண்ணாக்கு
பிண்ணாக்கு

தீவனம்

குஞ்சுகள் விட்ட முதல் மாதம் தினமும் ஒரு கிலோ அரிசி தவிடு தூவி விடுவோம். 2-ம் மாதம் தண்ணீரில் ஊற வைச்ச, அரைக் கிலோ கடலைப்புண்ணாக்கை, ஒரு கிலோ தவிடுல கலந்து உருண்டையா உருட்டி, தினமும் இதே அளவு குளத்துக்குள்ளார போட்டுடுவோம். கடலைப்புண்ணாக்கை தண்ணீர்ல ஊற வச்சிப் போட்டால்தான், மீன் குஞ்சுகளால் எளிதா சாப்பிட முடியும். 3-ம் மாதம் ஒரு கிலோ ஊற வைச்ச கடலைப்புண்ணாக்கு, ஒரு கிலோ தவிடு கலந்து தினமும் போடுவோம். அதாவது, தினமும் 3 கிலோ வீதம் தீவனம் கொடுப்போம். 4, 5, 6 மாதங்கள் தினமும் ஒன்றரை கிலோ ஊற வைச்ச கடலைப் புண்ணாக்கோடு, ஒரு கிலோ தவிடு கலந்து உருண்டையா உருட்டிப் போடுவோம். அதுக்குப் பிறகு தீவனத்தின் அளவைக் குறைச்சிடுவோம். 7, 8, 9-ம் மாதங்கள்ல தினமும் அரைக்கிலோ தவிடு, அரைக்கிலோ கடலைப்புண்ணாக்கை தனித்தனியாகத் தூவிவிட்டாலே போதும். மீன்கள் 500 - 600 கிராம் எடையில வளர்ச்சி அடைய தொடங்கியிருக்கும்.

அதுக்கு பிறகு, தீவனம் அதிகமாகக் கொடுத்தாலும் கூட இயல்பான வளர்ச்சிதான் இருக்கும். அதுமட்டுமல்லாம, பெரிய மீன்கள், தண்ணீர்ல கிடைக்கக்கூடிய தாவரங்களைச் சாப்பிட ஆரம்பிச்சிடும். இன்னும் சொல்லப் போனால், 5-ம் மாசத்துல இருந்தே ஆமணக்கு இலை கொடுக்க ஆரம்பிச்சிடுவோம். இது மிக அருமையான சத்து நிறைஞ்ச தீவனம். இதைச் சாப்பிட்டு வளர்றதுனாலதான் எங்களோட மீன்கள் தனிச்சுவையோடு இருக்கு. 15 - 20 நாள்களுக்கு ஒரு தடவை 20 - 25 கிலோ ஆமணக்கு இலை போடுவோம். மழைக் காலங்கள்ல எங்க பகுதி வாய்க்கால்கள்ல களைகளாக, வள்ளிக்கொடி அதிகமாக மண்டிக்கிட்டே இருக்கும். இதன் இலைகளை மீன்கள் விரும்பிச் சாப்பிடும். நான்கு நாள்களுக்கு ஒரு தடவை, 20 கிலோ வள்ளிக்கொடி இலைகளைக் குளத்துக்குள்ளார போடுவோம். இரண்டு மாதத்துக்கு ஒரு தடவை 30 கிலோ முட்டைக்கோஸ் தழை போடுவோம். காய்கறிச் சந்தையில இருந்து, இதுக்கு 40 ரூபாய் விலை கொடுத்து வாங்கிக் கிட்டு வருவோம். சில சமயங்கள்ல இலவசமாகவும் இது கிடைக்கும்.

வள்ளிக்கொடி
வள்ளிக்கொடி

தீவனச் செலவை மேலும் சிக்கனப்படுத்துதல்

கடலைப்புண்ணாக்குக்குக்கான செலவை குறைக்க, வீட்ல வண்டு வச்சி வீணாகிப்போன பழைய கோதுமை மாவு, அரிசி மாவு, கடலை மாவு... இதுல எது கிடைச்சாலும் பயன்படுத்துவோம்.

விற்பனை

குஞ்சுகள் விட்ட 6-ம் மாதத்திலிருந்து மீன்களை அறுவடை செய்யலாம். 400 - 750 கிராம் எடையுள்ள பெரிய மீன்களைப் பிடித்து விற்பனை செய்வோம். இதுல யதார்த்தமான உண்மை நிலை என்னென்னா, இதுல எல்லா மீன்களும் ஒரே சமயத்துல ஒரே சீரான வளர்ச்சியில இருக்காது. வெவ்வேறு காலகட்டங்கள்ல வளர்ச்சி அடையும். அரை ஏக்கர்ல விடப்பட்ட 1,500 குஞ்சுகள்ல, 1,400 குஞ்சுகள் மட்டும் பிழைப்புத்திறனோடு தேறி பெரிய மீன்களாக விற்பனைக்குக் கிடைக்கும். 6-ம் மாதம் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் மீன்களைப் பிடிச்சு விற்பனை செய்வோம். 500 மீன்கள் விற்பனை தேறும். இரண்டு மாதம் இடைவெளி விட்டு, அதாவது 9-ம் மாதம் 500 மீன்கள் பிடிப்போம். [1,000 மீன்கள் பிடித்த பிறகு, மறு சாகுபடிக்காக, முதல் கட்டமாக, 1,000 குஞ்சுகள் விடுவோம். இதனால் காலம் மிச்சமாகிறது. ஏற்கெனவே குஞ்சுகளுக்குச் சொன்ன அளவில் தீவனம் கொடுத்தால் போதும். மீதமுள்ள 400 பெரிய மீன்கள், நாம் கொடுக்கும் ஆமணக்கு இலைகள், வள்ளிக்கொடி இலைகள், முட்டைக்கோஸ் தழைகளைச் சாப்பிட்டே வளர்ந்துவிடும். என்னுடைய அனுபவத்தில் பெரிய மீன்களால், சிறிய குஞ்சுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை].

12-ம் மாதம் மீதமுள்ள 400 மீன்களைப் பிடிப்போம். [மூன்றாம் சாகுபடிக்குப் புதிதாக 500 குஞ்சுகள் விடுவோம்]. சரசாரியாக ஒரு மீன் 450 கிராம் வீதம், 1,400 மீன்கள் மூலம், 630 கிலோ மீன்கள் மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ உயிர் மீன் 200 ரூபாய் விலையில விற்பனை செய்றோம். 630 கிலோ மீன்கள் மூலமாக, ஒரு வருஷத்துக்கு 1,26,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல, மீன்குஞ்சு, தீவனம், மீன்பிடிப்புச் செலவு எல்லாம் போக, 80,000 ரூபாய் நிகர லாபமாகக் கையில மிஞ்சும்’’ எனத் தெரிவித்தார்.


தொடர்புக்கு, சதீஷ்,

செல்போன்: 82202 83239

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism