முனைவர் சீனிவாசன் ராமசாமி

அன்பான பசுமை விகடன் வாசகர்களுக்கு வணக்கம். இனி ஒவ்வோர் இதழும் உங்களுடன் சேர்ந்து பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் தொடர் மூலமாக வேளாண் அறிவியலை எளிமையாகச் சொல்லப்போகிறேன். மிகச் சுலபமான, சிறிய வேளாண் தொழில்நுட்பங்கள் எப்படி மிகப்பெரிய மாற்றங்களையும் லாபத்தையும் கொடுக்கின்றன என்பதை உதாரணங்களுடன் சொல்லப்போகிறேன். சுமார், இருபது ஆண்டு களாக, 6 கண்டங்கள், 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேளாண் திட்டங்களைச் செயல்படுத்த, வேளாண் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள், விரிவாக்க அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலதரப்பினருடன் நான் மேற்கொண்ட பயணத்தில் கற்றவற்றையும் பெற்றவற்றையும் உங்களிடம் பகிர்ந்துகொள்ளப் போகிறேன். ஆனால், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற கண்டங்களில் உள்ள வளர்ந்த நாடுகளிலிருந்து, உதாரணங்களை நான் சொல்லப் போவதில்லை. நம்மைப் போன்ற தட்பவெப்ப நிலைகளைக் கொண்ட ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தே சொல்லப்போகிறேன்.

அவற்றை அப்படியே இந்தியாவில், தமிழகத்தில் பயன்படுத்த இயலுமா என்று கேட்டால், எல்லாவற்றையும் அப்படியே எடுத்துப் பயன்படுத்த முடியாது. சில தொழில்நுட்பங்களை அப்படியே பயன்படுத்தலாம். சிலவற்றை நமது சூழலுக்கு ஏற்றவாறு மாற்றங்களுக்கு உட்படுத்த வேண்டும். சிலவற்றை அடிப்படையாகக் கொண்டு நமது விஞ்ஞானிகள் ஆய்வுகளைச் செய்து, நம் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும். ஆனால், நான் சொல்லும் நுட்பங்கள் அனைத்தும் ஏதோவொரு வகையில் நமக்குப் பயனளிக்கக் கூடியவை என்பதில் ஐயமில்லை. வாருங்கள், உலகம் முழுவதிலும் உள்ள வேளாண் அறிவியல் உலகுக்குள் பயணிக்கலாம்.

காய்கறிகளில் ஒட்டுக்கட்டுதல்

ஒட்டுக்கட்டுதல் என்பது தோட்டக்கலைப் பயிர்களில், குறிப்பாகப் பழ மரங்கள், பூச்செடிகளில் வழக்கமான ஒன்று. ஆனால், காய்கறிகளில் ஒட்டுக்கட்டுதல் என்பது முற்றிலும் புதுமையான செயல்முறை. இது எப்போது ஆரம்பித்தது என்று பின்னோக்கிப் பார்த்தால், ஆச்சர்யப்பட்டுப்போவீர்கள். இது ஒரு நூற்றாண்டு வரலாறு கொண்டது. ஆனால், காய்கறிகளில் ஒட்டுக்கட்டுதலைப் பற்றிய முதல் குறிப்பு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனப் புத்தகத்திலேயே இருக்கிறது. பெரிய அளவிலான பூசணிக்காய்களை உருவாக்க, அவற்றை ஒட்டுக்கட்டியதாக அக்குறிப்புகள் சொல்கின்றன. அதற்குப் பிறகு, 17-ம் நூற்றாண்டில் இந்த நுட்பம் கொரியாவில் புழக்கத்திலிருந்ததாகவும் குறிப்புகள் இருக்கின்றன. இந்தக் குறிப்புக்கள் அனைத்துமே, பூசணி செடியை அதே பூசணி செடியுடன் ஒட்டுக் கட்டியதாகத்தான் சொல்கின்றன. ஆனால், முதன்முதலில் இருவேறுவகையான, அதாவது தண்டுப் பகுதியை ஒரு செடியி லிருந்தும், வேர்ப்பகுதியை மற்றொரு செடியி லிருந்தும் ஒட்டுக்கட்டிய அறிவியல்பூர்வமான நடைமுறை ஆரம்பித்தது 1927-ம் ஆண்டுதான். இது நடந்தது ஜப்பான் நாட்டில்!

பூசணியில் ஒட்டுக்கட்டுதல்

ஜப்பானைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தர்பூசணியைப் பூசணியுடன் ஒட்டுக்கட்டினார். தர்பூசணியின் தண்டுப் பகுதியை, பூசணிச்செடியின் வேர்ப்பகுதியுடன் ஒட்டுக்கட்டினார். அப்படி உருவாக்கப்பட்ட ஒட்டு தர்பூசணி செடிகள், பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் கொண்டிருந்ததோடு, அதிக விளைச்சலையும் கொடுத்தது. எனவே, இந்தத் தொழில்நுட்பம் ஜப்பானிய விவசாயிகளிடம் வேகமாகப் பரவியது. 1930-களின் மத்தியில் தர்பூசணியைச் சுரைக்காயின் வேர்ப்பகுதியுடன் ஒட்டுக்கட்டி விற்பனை செய்யும் நாற்றுப் பண்ணைகள் ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் உருவாகின. அதைப் போலவே வெள்ளரிக்காயில் ஒட்டுக்கட்டும் தொழில்நுட்பம் 1920-களிலேயே உருவானாலும், 1960-களில்தான் அது பிரபல மடையத் தொடங்கியது. இதே காலகட்டத் தில்தான் கத்திரி மற்றும் தக்காளியில் ஒட்டுக் கட்டும் தொழில்நுட்பமும் தொடங்கியது.

இந்த இடத்தில், தக்காளியில் ஒட்டுக் கட்டுதலின் அவசியம் என்ன என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். பொதுவாகவே, இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில், தக்காளியில் பூஞ்சை, பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களின் தாக்கம் அதிகம். இவற்றில், வைரஸ் நோய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த பல ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதேபோல, பூஞ்சை நோய்களையும் எளிதில் கட்டுப்படுத்தலாம். ஆனால், பாக்டீரியா நோய்கள் அப்படியில்லை; செடிகளைத் தாக்க ஆரம்பித்தால், ஒருசில நாள்களிலேயே வயலில் இருக்கும் அத்தனை செடிகளையும் தாக்கி அழித்துவிடும். ஒரு பழத்தைக்கூட அறுவடை செய்ய முடியாது. இதற்குப் பாக்டீரிய வாடல்நோய் என்று பெயர்.

மகசூலைப் பாழாக்கும் பாக்டீரியா வாடல்

இந்த பாக்டீரியா, மண்ணில் வாழும் ஒருவகையைச் சேர்ந்தது. தக்காளி மட்டுமன்றி, உருளைக்கிழங்கு, கத்திரி, மிளகாய், வாழை, இஞ்சி என இது தாக்கும் பயிர்களின் எண்ணிக்கை 200-க்கும் அதிகம். தண்ணீரிலும் மண்ணிலும் நீண்ட காலம் வாழும் திறன் படைத்த இந்த பாக்டீரியாவின் தாக்கம், மழைக்காலத்தில் மிக அதிகமாக இருக்கும். காரணம், மழைநீரில் ஒரு வயலிலிருந்து, பக்கத்து வயல்களுக்கு மிக எளிதாகப் பரவும். அதேபோல, இவற்றின் பாதிப்பு இருந்த வயலை உழுதுவிட்டு, அதே கலப்பையைப் பயன்படுத்தி உழக்கூடிய மற்ற வயல்களுக்கும் எளிதாகப் பரவும். பாக்டீரிய வாடல் நோய், முதலில் வயலில் ஒருசில செடிகளில் மட்டுமே தெரியும். ஆனால், அடுத்தடுத்த நாள்களில், வயலில் இருக்கும் அத்தனை செடிகளும் வாடி, வதங்கி மடிந்துவிடும். மற்ற எந்த நோய் தாக்கினாலும், ஓரளவுக்காவது அறுவடை செய்ய முடியும். ஆனால், பாக்டீரிய வாடல் நோய் தாக்கினால் 100 சதவிகிதம் சேதம் உறுதி. தக்காளியில் இது முதன்மையான நோய். மற்ற எந்த நோய்க்கட்டுப்பாட்டு முறைகளும் கைகொடுக்காத நிலையில், நோய் எதிர்ப்பு ரகங்கள் ஒன்றே தீர்வு. ஆனால், இந்த நோய்க்கு எதிராக எவ்வளவோ முயன்றும், இன்றுவரை சிறந்த நோய் எதிர்ப்பு ரகங்களை உருவாக்க முடியவில்லை.

பாரம்பர்ய பயிர் இனப்பெருக்க முறைகளைப் பயன்படுத்தி, நமக்குத் தேவையான நற்பண்புகளை மற்ற சிற்றினங்களிலிருந்து, நாம் பயிரிடும் தக்காளிக்குக் கொண்டு வர இயலும்.

ஒட்டுக் கட்டுதலே தீர்வு

இயற்கையில் ஒவ்வொரு பயிருக்குமே, சொந்தங்கள் உண்டு. அவை எல்லாமே ஒரு குறிப்பிட்ட குடும்பத்துக்குள் வகைப்படுத்தப் பட்டிருக்கும். உதாரணத்துக்கு, தக்காளி, கத்திரி, மிளகாய், மணத்தக்காளி, சுண்டைக்காய் ஆகியவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. இப்படியுள்ள பல்வேறு குடும்பங்களில், ஒரே பேரினத்துக்குள் வருபவை மிக நெருங்கிய உறவினர்கள். உங்களுக்குப் புரியும்படி சொல்கிறேன். நமக்கும் நியாண்டர்தால் மனிதர்களுக்கும் உள்ள உறவைப் போன்றது. அந்த வகையில், தக்காளியில் மட்டுமே சுமார் 13 சிற்றினங்கள் இருக்கின்றன. அவற்றுள், நாம் பயிரிடும் தக்காளி ஒரேயொரு சிற்றினம் மட்டுமே. இந்தத் தக்காளியில் இல்லாத எத்தனையோ நற்பண்புகள், மற்ற சிற்றினங்களில் இருக்கின்றன. அவற்றுள், நோய் எதிர்ப்பு சக்தியும் ஒன்று. பாரம்பர்ய பயிர் இனப்பெருக்க முறைகளைப் பயன்படுத்தி, நமக்குத் தேவையான நற்பண்புகளை மற்ற சிற்றினங்களிலிருந்து, நாம் பயிரிடும் தக்காளிக்குக் கொண்டு வர இயலும். அப்படி உருவாக்கப்படும் புதிய ரகங்கள்தாம் வேளாண் பல்கலைக் கழகங்களில் இருந்தும், மற்ற ஆய்வு நிறுவனங்களிலிருந்தும் நமது பயன்பாட்டிற்காக அவ்வப்போது வெளியிடப்படுகின்றன.

தக்காளி நாற்றுகளில் எப்படி ஒட்டுக் கட்டுவது? அதை அடுத்த பகுதியில் விரிவாகப் பார்க்கலாம்...

- வளரும்

இவரைப் பற்றி...

சீனிவாசன் ராமசாமி, சேலம் மாவட்டம், இளம் பிள்ளைக்கு அருகில் இருக்கும் ராமாபுரம் என்ற கிராமத்தைப் பூர்வீக மாகக் கொண்டவர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்வியைக் கற்றவர். பூச்சியியலில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவரது முனைவர் பட்ட ஆய்வுக்காக, டெல்லியில் இருக்கும் ஜவஹர்லால் நேரு நினைவு அறக்கட்டளையால் தேர்வு செய்யப்பட்டு, தைவான் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முனைவர் பட்டம் பெற்ற பிறகு, தைவான் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘சர்வதேச காய்கறி ஆய்வு மைய’த்தில் 2004-ம் ஆண்டு விஞ்ஞானியாகப் பணியில் சேர்ந்தார். பன்னாட்டு நிறுவனமான இம்மையம், வளரும் நாடுகளில் உள்ள காய்கறி விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரவும், நுகர்வோர்களின் உணவில் ஊட்டச்சத்துகள் அதிகரிக்கவும் தொழில்நுட்பங்களை உருவாக்கி, இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறது.

இவர், பூச்சி மேலாண்மையில் பூச்சிக்கொல்லி பயன்பாட்டைக் குறைப்பதற்காக உயிரியல் பூச்சிக்கொல்லிகளையும் ஒட்டுண்ணிகளையும் கண்டுபிடித்தவர். இவரது கண்டுபிடிப்புகள் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பல்வேறு வளரும் நாடுகளிலும் விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உலகின் 6 கண்டங்கள், 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேளாண் ஆய்வுகளை மேற்கொண்டவர். தற்போது அதே நிறுவனத்தில் ‘பாதுகாப்பான மற்றும் பேணத்தக்க காய்கறி மதிப்புச்சங்கிலிகள்’ ஆய்வுத்திட்டத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.