Published:Updated:

பழங்கள், காய்கறிகள், மூலிகைகள்... இங்கிலாந்துக்காரரின் உணவுக்காடு!

பண்ணையில் கிருஷ்ணா மெக்கன்சி

அனுபவம்

பழங்கள், காய்கறிகள், மூலிகைகள்... இங்கிலாந்துக்காரரின் உணவுக்காடு!

அனுபவம்

Published:Updated:
பண்ணையில் கிருஷ்ணா மெக்கன்சி

"எனக்கு கேரட், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் எல்லாம் பிடிக்கும். ஆனா, அதெல்லாம் இந்த மண்ணில் விளைஞ்சது இல்ல... விளைவிக்கப்பட்டது. மண்ணில் இயற்கையா என்ன விளையுதோ, அதுதான் அந்தப் பகுதியில வாழுற மக்களுக்கான உணவு. அது வாழை, பப்பாளி, திப்பிலி, பூசணி, கருணைக்கிழங்குனு எதுவாகவும் இருக்கலாம். இப்படித்தான் நம்ம முன்னோர்கள் சாப்பிட்டு ஆரோக்கியமா இருந்திருக்காங்க. அதுதான் நம்ம தமிழர்களோட மரபும்கூட. அது ஒரு இயற்கை சார்ந்த வாழ்வியல். அந்த மரபை நோக்கித் திரும்புறதுதான் இந்தப் பூமிக்கு நாம செய்யுற நன்றிக்கடன்” என்று முன்னுரையுடன் மழலை கொஞ்சும் அழகு தமிழில் பேசுகிறார், இயற்கை விவசாயி கிருஷ்ணா மெக்கன்சி.

விழுப்புரம் மாவட்டத்தில் (புதுச்சேரி அருகில்) உள்ள ஆரோவில் பகுதியில் அமைந்திருக்கிறது, கிருஷ்ணா மெக்கன்சியின் சாலிடியூட் ஃபார்ம்ஸ் (Solitude Farms). நாம் சென்றிருந்த நேரத்தில் பண்ணையில் தங்கியிருந்து விவசாயப் பயிற்சிகள் மேற்கொள்ள வந்திருக்கும் நபர்களுக்குப் பயிற்சிகள் வழங்கிக்கொண்டிருந்தவர், பயிற்சிகளை முடித்தவிட்டுப் பேச ஆரம்பித்தார்.

பண்ணையில் கிருஷ்ணா மெக்கன்சி
பண்ணையில் கிருஷ்ணா மெக்கன்சி


19 வயதில் தொடங்கிய பயணம்

“இங்கிலாந்துதான் என்னோட பூர்வீகம். அங்கதான் என்னோட பள்ளிப்படிப்பை முடிச்சேன். பள்ளிக்கூடத்துல படிக்குறப்போ, ஆரோவில்லுக்குச் சுற்றுலா வந்தேன். இந்த இடத்துக்கு வந்த பிறகு, தமிழ் மக்களோட வாழ்வியல் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. இங்க முன்னால ஒருத்தர் இயற்கை முறையில விவசாயம் பார்த்துக்கிட்டிருந்தார். அவர் வாழ்க்கை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. சுற்றுலா முடிச்சு, இங்கிலாந்துக்குப் போனேன். அப்படியே கொஞ்ச நாள் போனது. பள்ளிப்படிப்பும் முடிஞ்சது. என்கூடப் படிச்சவங்க கல்லூரிக்குப் போனாங்க. அப்போ நான் என்னவாகப் போறேன்னு யோசிச்சேன். படிக்கிற படிப்பு எனக்கும் இந்தச் சமுதாயத்துக்கும் எப்படி உதவியா இருக்கப்போகுதுனு பலகட்ட யோசனைகளுக்குப் பிறகு, விவசாயம்தான் நம்மளோட வாழ்க்கை. அதுக்கு தமிழ்நாடுதான் சிறந்த இடம்னு முடிவு பண்ணினேன். அதுக்கான வழிகளைத் தேடிட்டு 27 வருஷத்துக்கு முன்னால விமானம் ஏறினேன். அப்போ 19 வயசு. ஒரு விவசாயியா வாழணும்னா அதுக்கான வழிமுறைகளைத் தெரிஞ்சுக்கணும்ல, அதனால மசானோபு ஃபுகோகாவை குருவா ஏத்துக்கிட்டு, அவரோட விவசாய வழிமுறைகளைக் கத்துக்கிட்டேன்.

இங்க வந்து ரெண்டு வருஷம் பண்ணையில விவசாய வேலை செஞ்சு நிறைய கத்துக்கிட்டேன். அதுக்குப் பின்னாலதான் நான் பண்ணை ஆரம்பிச்சு நடத்திக்கிட்டு வர்றேன். இங்க விவசாயம் பார்த்துக்கிட்டு இருந்த நேரத்துல ஆரோவில்லுக்கு அடிக்கடி வந்துட்டுப்போன திருவண்ணாமலையைச் சேர்ந்த தீபாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. நான் செய்யுற விவசாயம் அவங்களுக்குப் பிடிச்சது. எனக்கு மனைவியாவும் ஆனாங்க. அதுக்கப்புறம்தான் ரெண்டுபேரும் சேர்ந்து இங்க உணவகம் ஆரம்பிச்சோம்” என்று முன்கதை சொன்னவர் தொடர்ந்தார்.

பண்ணையில் கிருஷ்ணா மெக்கன்சி
பண்ணையில் கிருஷ்ணா மெக்கன்சி


பயிர்வாரி முறை ஒன்றே போதும்

“மொத்தமா 6 ஏக்கர் நிலம் இருக்கு. இது ஆரோவில் அமைப்புக்குச் சொந்தமான நிலம். இங்க நான் ஒரு பயிரைப் பயிர் செய்றது இல்ல. அதே மாதிரி வெளியூர், வெளிமாநில பயிர்களையெல்லாம் பயிர் செய்றது இல்லை. உள்ளூர்ல இந்தச் சூழலுக்கு என்ன பயிர் வருமோ அதை மட்டும் பயிர் செய்றேன். அதுதான் நமக்கும் நல்லது. பயிர்வாரி முறைனு ஒண்ணு இருக்கு. உரம் கொடுக்காம அந்தச் சூழலுக்கு, அந்த மண்ணுக்குனு பயிர்களும் இருக்கு. அதைப் பயிர் செஞ்சாலே போதும். அந்த வகையில இந்தப் பண்ணையை உணவுக்காடா மாத்திட்டேன்.

‘‘உள்ளூர்ல இந்தச் சூழலுக்கு என்ன பயிர் வருமோ அதை மட்டும் பயிர் செய்றேன்.’’


வாழை, பப்பாளி, மா, பனை, முருங்கை, கொய்யா, சீத்தாப்பழம், சப்போட்டானு மர வகைகள் இருக்கு. அதே மாதிரி திப்பிலி, முடக்கத் தான், நன்னாரி மாதிரியான மூலிகைகளும், கத்திரி, கோவக்காய், சுண்டைக்காய், மணத்தக்காளி, பூசணி உள்ளிட்ட காய் வகைகளும்னு மொத்தமா 120-க்கும் மேல பயிர்கள் இருக்கு. ஊடுபயிரா மஞ்சள், அன்னாசி மாதிரியான பயிர் வகைகளும் இருக்கு. ஒரு பண்ணை நடத்துறதுக்கு முக்கியமான தேவை தண்ணீர். ஆனா, அதை வீணாக்காம உபயோகிக்கப் பழகணும். சாதாரணமா பயிர் செய்றப்போ பாய்ச்சுற தண்ணீருக்கும், மூடாக்கு போட்டுப் பாய்ச்சுற தண்ணீருக்கும் வித்தியாசம் இருக்கு. மூடாக்கு போட்டுத் தண்ணீர் பாய்ச்சுறப்போ, 3-ல 2 பங்கு தண்ணீர் மிச்சமாகுது. கூடுதல் லாபமா மூடாக்காலக் களைகள் வர்றதும் இல்ல. அதை எடுக்கச் செலவும் செய்றது இல்ல. மூடாக்கு மட்குறப்போ பயிர்களுக்கு உரமாவும் மாறிடுது” என்றவர் மூடாக்குப் போட்டிருக்கும் பகுதியைக் காட்டினார்.

பலவித பயிர்கள் வளரும் உணவுக்காடு
பலவித பயிர்கள் வளரும் உணவுக்காடு


காற்றாலை மின்சாரம்

“இங்க மட்டும் நான் மூடாக்கு போடல. என் பண்ணை முழுக்கவே மூடாக்கு போட்ட மாதிரிதான் இருக்கும். பல பயிர்களைச் சாகுபடி செய்யுறதால வர்ற பூச்சிகள், அந்தப் பயிரை மட்டும் தாக்கும். மற்ற பயிர்கள் எல்லாம் தப்பிச்சிடுது. அதே மாதிரி பண்ணைக்குள்ள வெளியில இருந்து எதுவும் உள்ள வரக்கூடாதுங்குறதுல உறுதியா இருக்கேன். அப்போதான் முழுமை யான இயற்கை விவசாயம் சாத்தியம்னு நம்புறவன் நான். மர இலைகள் மூடாக்கு, மாடுகள்ல இருந்து அடியுரம், இலைகள்ல இருந்து பூச்சிவிரட்டினு எல்லாமே இங்க இருந்துதான் தயார் பண்றேன். இதுபோக இங்க பெரிய காற்றாலை ஒண்ணு இருக்கு. அதை வச்சு அப்பப்போ மின்சாரமும் எடுத்துக்குறேன்.

நான் இங்க வர்ற எல்லா விவசாயிக்கும் சொல்றது ஒண்ணுதான். நம்ம விவசாயம் காசு மட்டும் குறிக்கோளா கொண்டதா இருக்கக் கூடாது. அதே நேரத்தில வருமானமே இல்லாம விவசாயமும் செய்ய முடியாது. இயற்கை விவசாயத்தை நாம முறைப்படி செய்யணும். நிலம் நம்மளுக்குச் சோறு கொடுக்குற தெய்வம் மாதிரி. தெய்வத்துக்கு விஷத்தை (ரசாயன உரங்களைச் சொல்கிறார்) கொடுப்பதை ஏத்துக்க முடியாது. அதே மாதிரிதான் நானும் நிலத்தை தெய்வமா மதிக்கிறேன். ரொம்பச் சுலபமா சொல்லணும்னா ஒரு பயிர் 3 மாசத்துல பலன் கொடுக்கணும்னா, அதுக்கு உண்டான காலத்தை நாம அதுக்கு கொடுக்கணும். 3 மாசத்துல விளையுற பொருளை உரம் கொடுத்து 2 மாசத்துல விளைவிச்சா அதுல ஏதோ கெடுதல் இருக்குதுனுதானே அர்த்தம்” என்றவர் தோட்டத்தில் உள்ள மரங்கள்பற்றித் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

பலவித பயிர்கள் வளரும் உணவுக்காடு
பலவித பயிர்கள் வளரும் உணவுக்காடு
பலவித பயிர்கள் வளரும் உணவுக்காடு
பலவித பயிர்கள் வளரும் உணவுக்காடு


மண்ணுக்கும் மனுஷனுக்கும் பிணைப்பு உண்டாகணும்

“ஒரே பயிரை நம்பி விவசாயிகள் இருக்கக் கூடாதுங்குறதுல உறுதியா இருக்கேன். இங்க தோட்டத்துல இருக்குற மரங்கள் காடு மாதிரி நிற்குது. அதுக்கு இடையில் நிழல் இருக்கும் இடத்துல மஞ்சள், இஞ்சி, திப்பிலி, அன்னாசி மாதிரியான பயிர்களையும், வெயில் கிடைக்கிற இடத்துல வரகு, சாமை மாதிரி யான பயிர்களையும் விளைவிக்குறேன். என் தோட்டத்துல நடக்குறப்போ உங்களால ஒரு விஷயத்தை உணர முடியும். மண் மெத்தை மாதிரி இருக்கும். இயற்கை உரமும், இங்க இருக்குற மரங்களும்தான் அதுக்கு காரணம். அதனாலயே இங்க டிராக்டர் அதிகமா உழுறது இல்ல. அதே மாதிரி வெறும் கால்கள்லதான் இந்தப் பண்ணையில நடக்குறேன். வெறும் கால்கள்ல நடக்குறப்போ தான் நம்ம மண்ணுக்கும் நம்மளுக்கும் பிணைப்பை உண்டாக்க முடியும். இங்க வர்றவங்களுக்குச் சங்குப்பூ டீ, திப்பிலி கசாயம், சாமை தோசை, கீரை சாலட்னு உணவும் தயார் பண்ணி கொடுக்குறேன்” என்றவர் பண்ணையில் நடக்கும் பயிற்சியைப் பற்றி விளக்கினார்.

பலவித பயிர்கள் வளரும் உணவுக்காடு
பலவித பயிர்கள் வளரும் உணவுக்காடு


இங்க விளைவது மட்டும்தான் விற்பனை செய்யப்படும்

“இங்க அதிகமான வெளிநாட் டவர்கள் பயிற்சி எடுத்துக்க வர்றாங்க. அதே மாதிரி தமிழ்நாட்டுல பல பகுதியில இருக்குற இளைஞர்கள் இங்க மாசக்கணக்குல தங்கி பயிற்சி எடுத்துக்குறாங்க. அவங்களுக்கும் என்னுடைய இயற்கை வழிமுறை களைச் சொல்லிக் கொடுக்குறேன். நம்மளுக்குத் தெரிஞ்ச விவசாய முறையை எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்தாதானே, பின்னால வர்ற தலைமுறை விவசாயம் நல்லா இருக்கும். இங்க விளையுற காய்கறிகளை வாரம் ஒருமுறை விற்பனை செய்றேன். அதுல இங்க விளையுற காய்கறிகள் மட்டும்தான் இடம்பெறும். வாடிக்கையாளர்கள் கேட்குற காய்கறிகளை நான் கொடுக்குறது இல்ல. இங்க என்ன விளையுதோ அதைத்தானே நான் விற்பனை செய்ய முடியும்’’ என்றவர் நிறைவாக,

உணவகத்தில்
உணவகத்தில்


‘‘இங்க தனியா உணவகம் ஒண்ணும் நடத்துறேன். இங்க பயிற்சியில கலந்துக்க வர்றவங்க. இந்தப் பண்ணையைப் பார்க்க வர்றவங்களுக்கு அதுல இருந்து உணவு தயாரிச்சு கொடுக்குறோம். இங்க சுற்றுலா வர்ற வெளிநாட்டவர்களுக்கும் உணவு கொடுக்கிறேன். அதுல இருந்து வர்ற பணத்தைப் பண்ணையில இருக்குற வேலை ஆட்களுக்குச் சம்பளம் கொடுக்கிறேன். பப்பாளியில மதிப்புக் கூட்டி சோப் தயாரிக்கிறேன். மூலிகைப் பொடிகள் தயாரிச்சும் விற்பனை செய்றேன். பெரிய அளவுல விற்பனை இல்ல. இங்க வர்றவங்க மட்டும் வாங்கிட்டுப் போவாங்க. தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இலவசமாத்தான் பயிற்சி கொடுக்குறேன். ஆரோக்கியமான உணவைத் தர்றோம்கிற திருப்தி கிடைக்குது” என்றபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, கிருஷ்ணா மெக்கன்சி,

மின்னஞ்சல்: solitudepermaculture@gmail.com

மட்கும் உரம்
மட்கும் உரம்

2 அடிக்கு மட்கும் உரம்

“இங்கு மேட்டுப்பாத்தியில காய்கறி விளைய வைக்குறோம். ஒரு பாத்திக்கும் மற்ற பாத்திக்கும் ஓர் அடி இடைவெளி. மேட்டுப்பாத்தியின் உயரம் மூன்றரை அடி. பாத்திக்கான இடைவெளியில் பண்ணையில் கிடைக்கும் மட்கும் மரப் பாகங்கள், வாழை மரங்கள், புற்கள், செடிகளோட இலைகளைப் போட்டு மட்க வைப்போம். எல்லோரும் பாத்தி தயாரிக்கும்போது பாத்திக்கு மட்கும் பொருள்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால், அதைத்தாண்டி அந்த மண் வளமாக இருப்பதற்குப் பக்கவாட்டில் கூடுதலாக மூடாக்கு மாதிரி மட்க வைத்து உரம் கொடுக்குறோம்” என்கிறார் கிருஷ்ணா.

இயற்கை உணவகம்

பண்ணையில் உள்ள உணவகத்தில் காலை மற்றும் மதிய உணவு உண்டு. வாடிக்கையாளர்களின் கண் முன்னே பண்ணையிலிருந்து பறிக்கப்படும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் சமைக்கப்படுகின்றன. சிறுதானியங்கள் இல்லாத தோசையோ, இட்லியோ, வேறு பதார்த்தங்களோ கிடையாது. மதிய உணவில் கீரை சாலட் நிச்சயமாக இடம்பெறும். எளிய உணவு, அதிக ருசி இதுதான் அவரது தாரக மந்திரம். தமிழர்களின் பாரம்பர்ய பதார்த்தங்களும் பழச்சாறுகளும் இங்கே கிடைக்கின்றன. இரவு உணவு இல்லை.

பண்ணையில் கிருஷ்ணா மெக்கன்சி
பண்ணையில் கிருஷ்ணா மெக்கன்சி

இங்கிலாந்தில் பிறந்து நீங்கள் ஏன் தமிழ்நாட்டில் விவசாயம் பார்க்க வேண்டும்?

“கடவுள் போன பிறவில இங்கதான் படைச்சிச்சு. நான் இங்கதான் கட்ட வண்டி ஓட்டிச்சு. இங்கதான் விவசாயம் பார்த்துச்சு. அதான் இங்க கிளம்பி வந்துச்சு. தமிழ்நாடுதான் எனக்குத் தெரிஞ்ச சொர்க்கம். அதான் நான் இங்க விவசாயம் பார்க்குறான்” என்று பதிலளிக்கிறார், மழலை கொஞ்சும் தமிழில்.

மூலிகைப் பொடிகள்
மூலிகைப் பொடிகள்

சங்குப் பூ தேநீர்

“உங்களுக்கு வித்தியாசமான ஒரு சித்து விளையாட்டைக் காட்டுறேன்” என்று சொன்ன கிருஷ்ணா மெக்கன்சி, சங்குப் பூக்களையும், நன்னாரி வேரையும் பறித்தார். நேராக உணவகம் சென்றவர், 200 மி.லி தண்ணீரில் சிறிதளவு நன்னாரி வேரை நசுக்கிப்போட்டுக் கொதிக்க வைத்தார். தண்ணீர் கொதித்தவுடன் 15 சங்குப் பூக்களைப் போட்டு அடுப்பிலிருந்து இறக்கினார். நீர் பசுமை நிறமாக மாறியிருந்தது. “இப்போதான் உங்களுக்கு மேஜிக் காட்டப்போறேன்” என்றவர், எலுமிச்சையைப் பிழிந்தவுடன் தண்ணீர் ஊதா நிறத்துக்கு மாறியது. “இந்தத் தேநீரை நான் கண்டுபிடிச்சதுனு நீங்க நினைச்சா அது தப்பு. இது தமிழர்களோட பாரம்பர்ய தேநீர்” எனச் சொல்லி ஆச்சர்யப்பட வைத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism