Published:Updated:

காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்க சதி?! - கொதிக்கும் பி.ஆர்.பாண்டியன்

காவிரி
காவிரி

தமிழக மக்கள் ஒன்றுபட்டு நடத்திய தீவிர போராட்டத்தையடுத்து தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தையும், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழுவையும் 2018-ல் அமைத்தது.

"காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்கும் மத்திய அரசின் முயற்சியைத் தடுத்துநிறுத்தி, புதிய தலைவரை உடனடியாக நியமனம் செய்திட குடியரசுத்தலைவர் முன்வர வேண்டும்" என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவிரி ஆறு
காவிரி ஆறு

இதுபற்றி பி.ஆர்.பாண்டியனிடம் பேசினோம். "காவிரியில் தமிழக உரிமை மீட்பதற்கு 50 ஆண்டுகால போராட்டத்தின் மூலம் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியதன் அடிப்படையில், இறுதித் தீர்ப்பு 2013 -ம் ஆண்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. 

அதைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கும், ஆண்டுதோறும் கர்நாடகம் விடுவிக்கவேண்டிய தண்ணீரைப் பெற்றுத்தருவதற்கும் மத்திய அரசு மறுத்துவந்தது. தமிழக மக்கள் ஒன்றுப்பட்டு நடத்திய தீவிர போராட்டத்தையடுத்து, தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தையும், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழுவையும் 2018 -ல் அமைத்தது.

காவிரி ஆறு
காவிரி ஆறு

ஆனால், ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை இது நாள் வரை நியமிக்கவில்லை. மத்திய நீர்வள ஆணையச் செயலாளர் மசூத் உசேன், தற்காலிகத் தலைவராக நியமனம் செய்யப்பட்டு, அவரும் கடந்த 2019ல் ஓய்வு பெற்றுவிட்டார். ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், புதிய நிரந்தர தலைவர் நியமனம் செய்யாமல் ஆணையம் முடக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு கூட்டம் மட்டும் பெயரளவில் நடைப்பெற்றுவருகிறது. இக்கூட்டம் எடுக்கும் முடிவுகளை ஆணையத்திற்குப் பரிந்துரைக்க வேண்டும். ஆணையம் அதைச் செயல்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஆணையம் தலைவர் நியமனமின்றி முடங்கியதால், ஒழுங்காற்றுக்குழு கூட்டம், சடங்கு கூட்டமாகவே நடைபெற்று வருவது ஏமாற்றமளிக்கிறது.

இந்நிலையில், கடந்த 20.04.2020 அன்று முதல் காவிரி மேலாண்மை ஆணையம் மத்திய நீர்வள ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் குடியரசுத் தலைவர் அரசாணை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இதன்மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதை ஆரம்பம் முதல் தொடர்ந்து எதிர்த்துவரும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்குத் துணைபோகும் வகையில் மத்திய அரசு செயல்பட்டுவருவது தெரியவருகிறது. தற்போது, அதை முடக்கும் மறைமுக நடவடிக்கையாக இவ்வாணையைப் பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் இந்த வஞ்சக நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

கொரோனா நோய்த் தாக்குதலில் உலகம் முடங்கியுள்ள நிலையில், அவசர அவசரமாக மத்திய அரசு அரசியல் சுயலாபத்திற்காக தமிழகம் போராடிப் பெற்ற உரிமையைக் குழி தோண்டிப் புதைக்க நினைக்கிறது. சட்ட விரோதமாக கர்நாடகாவின் நயவஞ்சக நடவடிக்கைக்கு மத்திய அரசு துணை போவதற்கு குடியரசுத் தலைவர் அனுமதியளித்திருப்பது வேதனையளிக்கிறது. எனவே, தமிழக விவசாயிகளின் நலன் கருதி அரசாணையை திரும்பப் பெறுவதோடு, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு புதிய தலைவரை நியமனம் செய்து தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட மேதகு குடியரசு தலைவர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு