திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனப்பகுதியில் இருந்து இறங்கிய யானைகள் மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக யானைகள் நடமாட்டம் இருப்பதால் விவசாயப் பணிகளுக்காகக்கூட விவசாயிகள் யாரும் தோட்டங்களுக்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் அனைவரும் சேர்ந்து வனத்துறையிரிடம் யானைகளை விரட்டக்கோரி முறையிட்டனர். அதனடிப்படையில் கன்னிவாடி வனச்சரகத்தினர் யானைகளை விரட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆனால், அதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதனால் டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து கலீம் மற்றும் சின்னதம்பி ஆகிய கும்கி யானைகளை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர். இந்த கலீம் இதுவரை 100-க்கும் மேற்பட்ட யானைகளை விரட்டவும், பிடிக்கவும் நடத்தப்பட்ட ஆபரேஷன்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
சின்னத்தம்பி யானையும் விளைநிலங்களை சேதப்படுத்திக் கொண்டிருந்ததுதான். அதைப் பிடிக்க வனத்துறை படாதபாடுபட்டது. இன்று சின்னதம்பி கும்கியாகத் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு கும்கி யானைகள் பராமரிப்புக்கான ஏற்பாடுகளை மாவட்ட வன அலுவலர் பிரபு செய்துகொடுத்துள்ளார். மேலும் 30 பேர் கொண்ட சிறப்பு வனக்குழுவினர் கன்னிவாடி வனப் பகுதிகளில் இருந்து இறங்கிய யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். யானைகள் விவசாய நிலங்கள் குடியிருப்புக்கு வருவதைத் தடுக்க நிகழாண்டு 120 கிலோ மீட்டர் தூரத்துக்கு அகழியும், 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு சோலார் மின்வேலியும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுகுறித்து கன்னிவாடி வனச்சரக ரேஞ்சர் சக்திவேலிடம் பேசினோம். ``பண்ணைப்பட்டி வனப்பகுதியில் அடர்காடுகள் உள்ளன. அப்பகுதியில் யானைகள் இருப்பதாக அறிந்துள்ளோம். மேலும் வேறு இடங்களில் யானைகள் உள்ளனவா என்பதை அறிய கண்காணிப்புப் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 நாள்களாக 24 மணி நேரமும் யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக 3 குழுக்களைப் பிரித்துள்ளோம். இரவிலும் கூட கண்காணிப்புப் பணி தொடர்கிறது. கும்கி யானைகளின் பாகன்கள் மூலம் எவ்வாறு வனத்துக்குள் சென்று திரும்புவது என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். இன்னும் 2 நாள்களில் கும்கி யானைகள் மூலம் யானைகளை விரட்டிவிடுவோம்“ என்றார்.