Published:Updated:

20 ஏக்கர்... மாதம் 10,000 கிலோ காய்கறிகள்! - சிறைச்சாலையில் சிறந்த சாகுபடி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிறைச்சாலையில் சிறந்த சாகுபடி
சிறைச்சாலையில் சிறந்த சாகுபடி

அனுபவம்

பிரீமியம் ஸ்டோரி
‘சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, சிறைக்குள் விவசாயம் செய்கிறார். பப்பாளி, வெள்ளரி, பீன்ஸ் விளைய வைத்திருக்கிறார்’ என்ற செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. சிறைச்சாலையில் கைதிகள் விவசாயம் செய்ய வாய்ப்பு இருக்கிறதா? என முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி ராமச்சந்திரனிடம் கேட்டோம். ‘‘சிறைவாசிகளும் விவசாயம் செய்யலாம்’’ என்றவர் அவர் தனது பணிக்காலத்தில் நடந்த நிகழ்வைப் பகிர்ந்துகொண்டார்.
ராமச்சந்திரன்
ராமச்சந்திரன்

‘‘1980-ம் ஆண்டு, கோவை மத்திய சிறையில் உதவி சிறை அலுவலராக இருந்தேன். இளம் வயது. சீருடை கொடுத்த திமிர். விதிகளுக்குப் புறம்பாக நடக்கும் கைதிகளை உடனுக்குடன் தண்டிப்பேன். போதைப் பொருள்களால் சீரழியும் சிறையைச் சீர்திருத்த முயற்சி செய்தேன். இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத மேலதிகாரிகள், என்னைச் சிங்காநல்லூர் திறந்தவெளிச் சிறைச் சாலைக்குப் பணி மாறுதல் செய்தார்கள். எனது சீருடைக்கும் கைத்தடிக்கும் சற்று ஓய்வு கொடுத்துவிட்டு, புதிய அனுபவத்தை நோக்கி, 1981-ம் ஆண்டு ஜூன் மாதம் சிங்காநல்லூர் திறந்தவெளிச் சிறையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.

நான் பொறுப்பு ஏற்றுக்கொண்டபோது அங்கு 8 காவலர்கள், 10 சிறைவாசிகள், 40 கால்நடைகள், 20 ஏக்கரில் தரிசு நிலம் இருந்தது. மோட்டார் இல்லாத கிணறு ஒன்றும் போர்வெல் ஒன்றும் இருந்தன. போர்வெல்லில் மட்டும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. எனக்கோ விவசாயம் புதிது. அப்போது, வாரம் ஒரு முறை 100 கிலோ கீரையை (கட்டுகளாக இல்லாமல் கிலோ கணக்கில் அனுப்புவது வழக்கம்) விளைவித்துக் கோவை மத்திய சிறைக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள் சிறைவாசிகள்.

‘பல்லாண்டு வாழ்க’ என்ற திரைப்படத்தில் வரும் எம்.ஜி.ஆராக என்னைக் கற்பனை செய்துகொண்டேன். அங்கு மாற்றம் கொண்டு வர முடிவுசெய்தேன். வேளாண்மை அதிகாரி களைச் சந்தித்தேன். அவர்களை அழைத்து வந்து மண், நீர் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தேன். பரிசோதனைக்குப் பிறகு, ‘மண் மிகவும் ஊட்டமாக இருக்கிறது. தண்ணீர் சற்று உப்பாக இருந்தாலும் காய்கறிகள் பயிரிட ஏற்றதுதான். கிணற்று நீர் நன்றாக இருக்கிறது. மோட்டாரைச் சரிசெய்து பயன்படுத்தினால் 10 ஏக்கர் பாசனம் செய்யலாம்’ என்று சொன் னார்கள் அதிகாரிகள். விவசாயம் தொடர்பாக ஆலோசனைகளும் வழங்கினார்கள். காவலர்கள், சிறைவாசிகளிடம் பேசினேன். ‘நாம் சிரமம் பார்க்காமல் சற்றுக் கடுமையாக உழைத்தால் இந்த வெற்று பூமியைப் பொன் விளையும் நிலமாக மாற்றிவிடலாம்’ என்றேன். உடனடியாகக் களத்தில் இறங்கினோம்.

20 ஏக்கர்... மாதம் 10,000 கிலோ காய்கறிகள்! - சிறைச்சாலையில் சிறந்த சாகுபடி!

அனைவரும் இணைந்து அங்கு மண்டிக் கிடந்த பார்த்தீனியம், முள் புதர்களை அகற்றினோம். மாடுகளை வைத்து நிலங்களை உழவு செய்து சீராக்கினோம். முதலில் கீரைகளை விதைத்தோம். அங்கு விளையும் காய்கறிகளைக் கோவை மத்திய சிறைக்கு அனுப்புவது வழக்கம். அதன்படி முதல் மாதம் 1,000 கிலோ கீரைகளை அறுவடை செய்து அனுப்பி வைத்தோம். அடுத்த மாதம் முள்ளங்கி, தண்டுக்கீரையுடன் இன்னும் சில கீரைகளைச் சேர்த்து அனுப்பினோம். மூன்றாவது மாதத்தில் பீட்ரூட், நூக்கல் போன்ற காய்கறிகள் வரத் தொடங்கின. 3,000 கிலோ அனுப்பினோம். அந்த மாதம் ஆய்வுக்காக வந்த மத்திய சிறை கண்காணிப் பாளர், ‘பீட்ரூட், முள்ளங்கி, கீரைகளைச் சிறைவாசிகள் விரும்பி உண்பதில்லை’ என்றார்.

‘‘ஒருநாள் வேலை செய்தால் ஒருநாள் தண்டனை குறைப்பு. உதாரணமாக 5 வருடம் தண்டனை பெற்ற ஒருவர் இரண்டரை வருடத்தில் விடுதலை ஆகிவிடலாம்.’’

அதனால் கத்திரி, கொத்தவரை, தக்காளி, வெண்டை போன்ற காய்கறிகளைப் பயிர் செய்து 4,000 கிலோவுக்கும் அதிகமாக அனுப்பினோம். சுரைக்காய், பூசணி, புடலை போன்ற கொடி காய்களும் வரத் தொடங்கின. கோவை மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளுக்குத் தேவையான காய்கறியின் அளவு மாதம் 7,000 கிலோ முதல் 8,000 கிலோ. ஆனால், நாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகள் 10,000 கிலோவைத் தாண்டியது. அதனால் காய்கறிகள் ஏதும் கோவை மத்திய சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்ற உத்தரவு வந்தது. இப்போது போல, அன்றைக்கு விளையும் காய்கறிகளை வெளிமார்க்கெட்டில் விற்க முடியாது. அதனால் விளைந்த காய்கறிகளைத் திறந்த வெளிச் சிறைக்கு வெளியே கொட்டி வைப்போம். அந்த வழியே செல்லும் மக்கள், காய்கறிகளைப் பணம் எதுவும் கொடுக்காமல் எடுத்துச் செல்வார்கள்.

பிற சிறையிலுள்ள சிறைவாசிகளைவிட திறந்தவெளிச் சிறைவாசிகளுக்குப் பல சலுகைகள் கிடைக்கும். பெரிய சுவர் இருக்காது. லாக்கப் இல்லாமல் பெரிய அறைகளில் 100 பேர் வரை ஒன்றாகத் தங்கலாம். குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, ஃபேன், டி.வி இருக்கும். உறவினர்களிடம் தொலைபேசியில் பேசலாம். இப்படிப் பல வசதிகள் கிடைக்கும். திறந்த வெளிச் சிறையில் பணி செய்யும் கைதிகளுக்கு, நாளொன்றுக்கு 100 கிராம் கூடுதல் அரிசி வழங்கப்படும். 10 நாள்களுக்கு ஒருமுறை 30 கிராம் நல்லெண்ணெய் வழங்கப்படும். ஒரு நாளைக்குக் கூலி 200 ரூபாய். படுப்பதற்கு இரும்புக் கட்டில். வருடத்துக்கு ஒரு ஜோடி காலணிகள். இவை அனைத்துக்கும் மேலாக ஒரு நாள் வேலை செய்தால் ஒருநாள் தண்டனை குறைப்பு. உதாரணமாக 5 வருடம் தண்டனை பெற்ற ஒருவர் இரண்டரை வருடத்தில் விடுதலை ஆகிவிடலாம். மேலும் நன்னடத் தைக்காக மாதத்தில் இரண்டு நாள்கள் தண்டனை குறைப்பு எனப் பல சலுகைகள் கிடைக்கும். எல்லாச் சிறைவாசிகளும் இங்கு வர முடியாது. நல்ல நடத்தை உடைய, விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட, 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் வேலை செய்வதற்கு சக்தியும் திறமையும், ஆர்வமும் இருக்கும், ஆயுள் தண்டனை மற்றும் குறைந்த தண்டனை சிறைவாசிகள் மட்டுமே திறந்த வெளிச் சிறைக்கு வர முடியும்.

பல சிறைகளில் தற்போது விவசாயத்தை முன்னெடுத்து வருகிறார்கள். இன்னும் தீவிர கவனம் செலுத்தினால், சிறைவாசிகளாக உள்ளே சென்றவர்கள் சிறந்த விவசாயிகளாக வெளியே வருவார்கள்’’ என்றார் நம்பிக்கையுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு