Published:Updated:

டிஜிட்டல் எடையில் தில்லுமுல்லு... வியாபாரிகளை நையப்புடைத்த நிலக்கடலை விவசாயிகள்!

அஞ்செட்டி காவல் நிலையம்

ரிமோட் மூலம் டிஜிட்டல் எடை இயந்திரத்தை இயக்கி, வேர்க்கடலை விவசாயிகளை ஏமாற்றிய 2 பேருக்கு தர்மஅடி விழுந்தது.

டிஜிட்டல் எடையில் தில்லுமுல்லு... வியாபாரிகளை நையப்புடைத்த நிலக்கடலை விவசாயிகள்!

ரிமோட் மூலம் டிஜிட்டல் எடை இயந்திரத்தை இயக்கி, வேர்க்கடலை விவசாயிகளை ஏமாற்றிய 2 பேருக்கு தர்மஅடி விழுந்தது.

Published:Updated:
அஞ்செட்டி காவல் நிலையம்

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டிப் பகுதியின் மலைக் கிராமங்களில், நிலக்கடலை மற்றும் கேழ்வரகு பயிர்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. இங்கு அறுவடை செய்யப்படும் நிலக்கடலைகளை வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மொத்தமாகக் கொள்முதல் செய்து வாங்கிச் செல்கிறார்கள்.

இந்த நிலையில், அஞ்செட்டி அருகேயுள்ள குமார்த்தனப்பள்ளி கிராமத்தில் அறுவடை செய்யப்பட்ட வேர்க்கடலைகளை எடைபோட்டு வாங்குவதற்காகத் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற வியாபாரி, தனக்கு அறிமுகமான உள்ளூர் இடைத்தரகர் நூரந்தப்பாவுடன் அங்கு சென்றிருக்கிறார்.

அஞ்செட்டி
அஞ்செட்டி

இருவரும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த நிலக்கடலை மூட்டைகளைத் தாங்கள் கொண்டுவந்த டிஜிட்டல் எடை மெஷின் மூலம் எடை போட்டிருக்கிறார்கள். 100 கிலோ மூட்டை அவர்களின் மெஷினில் 90 கிலோ என்றே காட்டியிருக்கிறது. இதனால், விவசாயிகள் சந்தேகமடைந்து, வியாபாரி ஆறுமுகத்தைக் கவனித்திருக்கிறார்கள். அவர் இடுப்பில் கை வைத்து எதையோ அமுக்கும்போது, எடைக் காட்டும் மெஷினிலிருந்து `பீப்’ சத்தம் கேட்பதைப் பார்த்தனர்.

இடுப்பில் அவர் மறைத்து வைத்திருந்த பொருளை காண்பிக்கச் சொன்னபோது, அவர் காண்பிக்க மறுத்துவிட்டார். `எடை மெஷினில் என்னமோ தில்லுமுல்லு நடக்கிறது’ என்று விவசாயிகள் சத்தம் போடவே, வியாபாரி ஆறுமுகத்தின் இடுப்பில் மறைத்து வைத்திருந்த பொருளையும் பறித்து பார்த்தனர் சிலர். அது, எடைபோடும் டிஜிட்டல் இயந்திரத்தை இயக்கக்கூடிய `ரிமோட்’ எனத் தெரியவந்ததால், அந்த வியாபாரியையும், அவருக்கு உதவிய இடைத்தரகரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து சிறைப்பிடித்தனர்.

அஞ்செட்டி காவல் நிலையம்
அஞ்செட்டி காவல் நிலையம்

தகவலறிந்ததும், அங்கு விரைந்து சென்ற அஞ்செட்டி போலீஸார், விவசாயிகளிடமிருந்து இருவரையும் மீட்டு விசாரணை நடத்தினர். இருவரும் சேர்ந்து, மூட்டைக்கு 10 கிலோவைக் குறைத்துக் காட்டியிருப்பதும், இப்படியே 500 மூட்டை நிலக்கடலைகளை கொள்முதல் செய்து விவசாயிகளை ஏமாற்றியிருப்பதும் தெரியவந்தது.

இதே பாணியில், கடந்த ஒரு வாரமாக அஞ்செட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான உரிகம், கோட்டையூர், மல்லள்ளி, மட்டியூர், தாண்டியம், நாயக்கனக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் இருவரும் கைவரிசை காட்டியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, விவசாயிகளிடமிருந்து புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட போலீஸார், இருவரையும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இந்த மோசடி சம்பவம், விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.