Published:Updated:

இலவச மின்சாரத்தைத் துண்டிக்கும் மின் திருத்தச் சட்டம்-2020

சட்டம்

பிரீமியம் ஸ்டோரி
ந்திய விவசாயிகளையும் ஏழை மக்களையும் ஒரு சேர குழியில் தள்ளிப் பன்னாட்டு முதலாளிகளின் காலடியில் வீழ்த்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது ‘புதிய மின் திருத்தச் சட்டம்-2020’.

பஞ்சபூதங்களில் நெருப்பு தவிர, நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகிய நான்கையும் விற்று காசு பார்க்கத் துடிக்கிறது மோடி அரசு. விளைவு விபரீதமாக முடியும். உலகமே கொரோனா கொடிய தாக்குதல் அச்சத்தில் உறைந்து கிடக்கும்போது, மோடி அரசு மட்டும் விழித்துக்கொண்டு பாரத விவசாயிகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட புதிய மின் (திருட்டு) திருத்தச் சட்டம் 2020-ஐ உருவாக்கியிருக்கிறார். இது கொரோனாவைவிட மிகக் கொடுமையானது.

இலவச மின்சாரத்தைத் துண்டிக்கும் மின் திருத்தச் சட்டம்-2020

‘மின் திருத்தச் சட்டம்-2020 என்ன சொல்கிறது?

இப்போது பெட்ரோல், டீசல் விலையை, உற்பத்திச் செய்யும் நிறுவனங்களே நிர்ணயம் செய்வதைப்போல, இனி மின் உற்பத்தி நிறுவனங்களே, அதன் விலையை நிர்ணயம் செய்யுமாம். இப்போது மாநில அரசுகள் கொடுக்கும் மானியங்களைக் குறிப்பாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், வீடுகளுக்கு வழங்கும் மின்சாரம் உள்பட எதையுமே கணக்கில் எடுத்துக் கொள்ளாது புதிய சட்டம். விவசாயிகள் பயன்படுத்தும் மின்சாரத்தில் உரியக் கட்டணத்தை விவசாயிகள் மின் விநியோக நிறுவனங்களுக்கு முறையாகச் செலுத்திவிட வேண்டும். பிறகு, மாநில அரசு மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்துமாம்.

மேலும் மத்திய அரசு, ஒரு ஆணையம் அமைக்கும். அந்த ஆணையத்தின் தலைவர், உறுப்பினர் உள்பட அனைவரையும் மத்திய அரசு நியமனம் செய்யும். மின்சாரத்தை வாங்குவது, விற்பது, விநியோகம் செய்வது அனைத்தையும் ஆணையமே கண்காணிக்கும் என்று நீள்கிறது இந்தச் சட்டத்தின் கோரைப்பற்கள். ஆக, மாநில அரசின் உரிமை முற்றிலுமாகப் பாதிக்கப்படும். மின்சாரத்தை உற்பத்தி சக்தியாகப் பார்க்க வேண்டுமே தவிர வணிகப் பண்டமாகப் பார்க்கக் கூடாது.

மின்சாரம்
மின்சாரம்

அடிமை இந்தியாவில் இயற்றப்பட்ட இந்திய மின் சட்டம்-1910, மின் விநியோக சட்டம்-1948 மற்றும் மின்சார ஒழுங்காற்று ஆணையம் 1998 ஆகியவற்றை இணைத்து இந்திய மின் சட்டம்-2003 உருவாக்கப்பட்டது. மின் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கவே இந்தப் புதிய சட்டம் என்று முகவுரை கொடுக்கப்பட்டது. 2003 மின் சட்டம், மாநில மின் வாரியங்களை உற்பத்தி, விநியோகம் என்று பிரித்தது. மேலும் ஒழுங்குமுறை ஆணையங்கள், மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்கள் உருவாக்கப்பட்டன. மிக முக்கியமாக அனல் மின் நிலையங்கள் தொடங்க (தொழில்நுட்ப, பொருளாதார) அரசு அனுமதி தேவையில்லை என்று முடிவு செய்தது. இதுதான் சமயம் என்று மாநில மின் வாரியங்கள், மின் உற்பத்தியிலிருந்து விலகப் பெரும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. சும்மாயிருக்குமா தனியார் உலகம். பல தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்தியில் குதித்தன. கிட்டத்தட்ட 40,000 மெகாவாட் அனல் மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டன. மின் தட்டுப்பாடு நிலவியதால் பல மாநில அரசுகள் அதிக விலை கொடுத்துத் தனியார் கம்பெனியிடம் மின்சாரம் வாங்கின.

மின்சாரம் வாங்கினாலும், வாங்காவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட தொகையை விநியோக கம்பெனிகள், உற்பத்தி கம்பெனிகளுக்குச் செலுத்த வேண்டும் என்ற நிர்பந்தம் ஒப்பந்தத்தில் புகுத்தப்பட்டது. மின்சாரம் வாங்காமலேயே பல மாநில அரசின் விநியோக கம்பெனிகள் பெரும் தொகையைச் செலுத்த மின் வாரியங்கள் நஷ்டத்தில் நொடிந்து போயின. சில மாநில அரசின் விநியோக கம்பெனிகள் ஒப்பந்தத்தை மீறின. இந்தச் சூழலில்தான் புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு காலத்தில் சூரிய மின் உற்பத்தி செலவு அதிகமாக இருந்தது. அதிக விலைக்கு விநியோகஸ்தர்கள் வாங்கினார்கள். புதிய தொழில்நுட்பம் காரணமாக இன்று உற்பத்திச் செலவு குறைந்துள்ளது. விலையைக் குறைக்க உற்பத்தியாளர்கள் ஒப்புக் கொள்ளாததால் தகராறுகள், வழக்கு, நீதிமன்றம் எனச் செல்வதைத் தடுக்கவேதான் புதிய ஆணையம் என்ற கருத்தும் நிலவுகிறது. சரி, சட்டம் பிறந்த வரலாறு கிடக்கட்டும். இந்தச் சட்டம் எப்படி ஏழை மக்களையும் விவசாயிகளையும் வஞ்சிக்கிறது என்று பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்திய நாட்டில் முதன்முதலாக மின்கட்டணத்துக்கு எதிராக வெகுண்டெழுந்த மாநிலம் தமிழ்நாடு. கோயம்புத்தூரில் 1970-களில் தொடங்கிய விவசாயப் போராட்டம், 1984-ம் ஆண்டு வரை நீடித்தது. 64 விவசாயிகள் தங்கள் இன்னுயிர்களைத் துப்பாக்கிச் சூட்டிற்குப் பறிகொடுத்துப் பெற்றதுதான் இலவச மின்சாரம். இன்றைக்கு, பட்டினிச்சாவு, விவசாயத் தற்கொலைகள் தமிழ்நாட்டில் மிகவும் குறைவாக இருக்கின்றன என்றால் அதற்குக் காரணம் இலவச மின்சாரம்தான். காய்கறிகள், உணவு உற்பத்தி பெருகக் காரணமாக இருக்கிறது. இலவச மின்சாரம் என்பதைவிடப் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைத்த சமூகநீதி என்பதுதான் சரியான வார்த்தை.

இலவச மின்சாரம்
இலவச மின்சாரம்

ஆற்றுப் பாசன விவசாயிகளுக்கு, ஆற்றில் வரும் மழைநீரை அணைக்கட்டித் தேக்கி, வாய்க்கால் வெட்டி, வயல்வரை தண்ணீரைக் கொண்டு விடுகிறது அரசு. ஆனால், கிணற்றுப் பாசன விவசாயிகள் தமது சொந்த பணத்தில் கிணறு, ஆழ்துளைக் கிணறு தோண்டி விவசாயம் செய்கிறார்கள். அவர்களுக்கு மின்சாரத்தை இலவசமாகக் கொடுப்பதுதானே நீதி. எனவே, கிணற்றுப் பாசன விவசாயிகளுக்கு அரசு கொடுப்பது இலவச மின்சாரம் அல்ல... சமூகநீதி மின்சாரம். ஆக, இந்தப் புதிய மின் சட்டம், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சமூக நீதியைப் பறிக்கிறது.

விவசாயிகள், தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான கட்டணத்தை விநியோக கம்பெனியிடம் மாதாமாதம் தவறாமல் செலுத்தி விட வேண்டும். மாநில அரசிடமிருந்து மானியம் வங்கிக் கணக்கில் வந்து சேருமாம். இது நல்ல கூத்து. ஏழெட்டு மாதங்களாக மாநிலத்திற்கு வர வேண்டிய பொருள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) இதுவரை வந்து சேரவில்லை. தடுப்பு மருந்து வாங்ககூடப் பணம் இல்லை. அதனால்தான் ஊரடங்கு, அடங்குவதற்கு முன்பே டாஸ்மாக் திறக்கிறோம் என்று மாநில அரசு கதறுகிறது. இதில் எப்படி விவசாயி வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்போகிறது அரசு. குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கவே அல்லாடுகிறது.

ஒரு விவசாயி மாதம் 4,000 முதல் 5,000 ரூபாய் மின் கட்டணம் கட்டவேண்டும் என்றால், மாநில அரசு அந்தப் பணத்தைக் கொடுக்குமா? அப்படியே கொடுத்தாலும், முதலில் கட்ட விவசாயிகளிடம் பணம் இருக்க வேண்டுமே? ஆக, மொத்தத்தில் இலவச மின்சாரத்தைப் பறிக்கும் சதித்திட்டமே இந்த மின் திருத்தச் சட்டம்-2020. இதுவரை அரசு விநியோகித்து வந்த மின்சாரத்தை இனி தனியார் கம்பெனிகள் விநியோகம் செய்யும். தனியார் கம்பெனிகளுக்கு வணிக முகம் இருக்குமே தவிர மனித முகம் இருக்காது. மாதாமாதம் விவசாயி சரியாக மின் கட்டணம் கட்ட போவதில்லை. மின் இணைப்புத் துண்டிக்கப்படும்; விவசாயம் நடக்காது; நிலம் தரிசாகும். தரிசு நிலத்தை அடிமாட்டு விலைக்குப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசு அபகரித்துக் கொடுக்கும். விவசாயி வீதியில் தூக்கி எறியப்படுவான். இதுதான் நடக்கும். விவசாயி என்ற ஓர் இனமே அழித்து ஒழிக்கப்பட்டுக் கூலிகளாக மாற்றம் பெறும்.

மின் சட்டத் திருத்தம்-2020 அமலுக்கு வந்தால் இதுதான் நடக்கப் போகிறது. தற்போது வீடுகள், கைத்தறி, விசைத்தறி போன்றவற்றுக்கு மின்சார மானியம் வழங்கப்படுகிறது. இது ஏறக்குறைய 1.5 கோடி இணைப்புகள் இருக்கும். இந்த ஒன்றரைக் கோடி மக்களும், இனி கட்டணத்தைச் செலுத்திவிட்டு, மீண்டும் அரசிடமிருந்து மானியம் பெற வேண்டும் என்பது நல்ல வேடிக்கை. இது, 60 தேங்காய்களை 70 முட்டாள்கள் சுமந்து சென்ற கதையாக இருக்கிறது. ஒவ்வொருவரும் கையில் ஒரு தேங்காயை எடுத்துக்கொண்டால் சுமையே இல்லாமல் நடக்கலாம். மூட்டைக் கட்டி தூக்கினால் கழுதையைப் போலப் பொதி சுமக்க நேரிடும். மின் சட்டத் திருத்தம்-2020, கழுதை மாதிரி மக்களைப் பொதி சுமக்க வைத்துவிடும் என்பதுதான் நிதர்சனம்.

மேலும் தற்போது இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரம், சிறுகுறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மின் கோபுரங்கள்மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் 23 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனை எதிர்த்து உரிய இழப்பீடு கேட்டு விவசாயிகள் போராடி வரும் நிலையில், இந்தப் புதிய சட்டம் விவசாயிகள் தலையில் பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டிருக்கிறது. நாடு விட்டு நாடு மின்சாரம் விற்க வாங்கப் போகிறது இந்திய அரசு. அப்படிச் செய்யும்போது, மின்சாரத்தைச் சுமந்து செல்ல இந்திய விவசாயிகள் நிலங்களின் மீது மின் கோபுரங்கள் அமைத்து, மின் வழித்தடங்கள் அமைத்துக் கொடுக்க வழிவகைச் செய்கிறது இந்தச் சட்டம். உதாரணத்திற்குச் சீனாவில் ஒரு கம்பெனி, மின்சாரத்தை உற்பத்தி செய்து இந்திய விவசாய நிலங்களின் வழியாகப் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்பிரிக்கா என எடுத்துச் சென்று விற்று லாபம் பார்க்க முடியும். விவசாயிகள் நிலத்தை இழந்து விட்டுக் கைக்கட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் என்கிறது மின் சட்டம்-2020.

மின்சார உற்பத்தி, மின் கடத்திச் செல்லுதல் மற்றும் விநியோகம் அனைத்தையும் கவனிக்க டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு, மத்திய மின்துறை ஆணையம் ஒன்று அமைக்கப்படும். ஆணையத்திற்கு ஒரு தலைவர் மற்றும் சில உறுப்பினர்கள் இருப்பார்கள். மத்திய கமிட்டியே மாநில உறுப்பினர்களையும் தேர்வு செய்யும். சுழற்சிமுறையில் மாநில அரசுக்கு உறுப்பினர்கள் வாய்ப்பு வழங்கப்படும். மாநில அரசு உறுப்பினர்களையும் மத்திய கமிட்டி தேர்வு செய்யும்.

உரிமை பறிக்கப்பட்ட விவசாயிகள் போலவே மாநில அரசும் உரிமை இழந்து கையைப் பிசைந்துகொண்டுதான் இருக்க வேண்டும்.

எனவே மாநில அரசுகள் இந்தக் கறுப்புச் சட்டத்தை எதிர்க்க வேண்டும். மின்சாரம் என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண் சக்தி. இந்தச் சக்தியை மிகவும் துல்லியமாகக் கவனமாகப் பயன்படுத்திப் பொருள்களை உருவாக்கி, உற்பத்தி செய்து வணிகம் செய்வதுதான் ஒரு நாட்டிற்கும், சுற்றுச்சூழலுக்கும் நல்லது. அதை விட்டுவிட்டு மின்சாரத்தையே ஒரு வணிகப் பண்டமாக மாற்ற நினைத்தால் உலகமே பேராபத்தில் சென்று முடிந்துவிடும். இயற்கையை அழித்து நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பது, நிலக்கரியை இறக்குமதி செய்து எரித்து, உபரியாக மின்சாரம் உற்பத்தி செய்வது, மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது எல்லாம் தனக்குத்தானே நெருப்பு வைத்துக் கொள்வதற்குச் சமம். நிலக்கரி சுரங்கம் தோண்டுவதால் காடுகள் அழிக்கப்படும். அனல் மின் நிலையங்கள்மூலம் காற்று மாசுபட்டு, தேவை இல்லாமல் நீர் சுரண்டப்படும். இது தடுக்கப்பட வேண்டும். மொத்தத்தில் ஏழைகளையும் விவசாயிகளையும் மாநில அரசின் உரிமைகளையும் ஒருசேரப் பறிக்கும் இந்தக் கறுப்புச் சட்டம் நிறைவேற்றக் கூடாது. அது நாட்டு வளர்ச்சிக்கு எதிராகவே முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு