Published:Updated:

திருமண விழாக்களுக்கு பல்லாயிரம் வாடகை; விவசாய நிகழ்ச்சிகளுக்கோ இலவசம்!வியப்பூட்டும் திருமண மண்டபம்!

மாடுகளுடன் ராமமூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
மாடுகளுடன் ராமமூர்த்தி

சேவை

திருமண விழாக்களுக்கு பல்லாயிரம் வாடகை; விவசாய நிகழ்ச்சிகளுக்கோ இலவசம்!வியப்பூட்டும் திருமண மண்டபம்!

சேவை

Published:Updated:
மாடுகளுடன் ராமமூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
மாடுகளுடன் ராமமூர்த்தி

விழுப்புரம் நகரப் பகுதியில் புதுச்சேரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஜெயசக்தி திருமண மண்டபம். இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமானது. பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலை வில் இந்தத் திருமண மண்டபம் அமைந் துள்ளதால், மக்களின் போக்குவரத்துக்கும் எளிதானது. குளிர்சாதன வசதியுடன்கூடிய இந்த மண்டபத்தில் 600 பேர் அமரலாம். திருமணம் போன்ற விஷேச நிகழ்ச்சிகளுக்கு ஒருநாள் வாடகையாக 80,000 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், விவசாயம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு வாடகை கிடையாது என்பது ஆச்சர்யமான விஷயம் தானே.

விவசாய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்து வரும் அதேவேளையில் கல்வி, மருத்துவம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தவும் இங்கு வாடகை வசூலிக்கப்படுவதில்லை என்பது கூடுதல் சிறப்பு. இத்திருமண மண்டபத்தின் உரிமையாளரும் ஓய்வுபெற்ற வேளாண் அலுவலருமான ராமமூர்த்தி கடந்த 20 ஆண்டுகளாக இந்தச் சேவையை ஆற்றி வருகிறார்.

மண்டப வளாகத்துக்குள் வளர்க்கப்படும் தோட்டத்துக்குள் ராமமூர்த்தி
மண்டப வளாகத்துக்குள் வளர்க்கப்படும் தோட்டத்துக்குள் ராமமூர்த்தி

வளாகத்தில் மரங்கள், மூலிகைகள், மாடுகள்

வில்வம், மருதம், வேங்கை, மகோகனி, செம்மரம், சந்தனம், விலா, மா, பலா, தென்னை என ஏராளமான மரங்கள் மற்றும் 55 வகையான மூலிகைச் செடிகளுடனும் இயற்கை சூழலில் அமைந்துள்ள இத்திருமண மண்டபத்தின் வளாகத்தில்தான் ராம மூர்த்தியின் வீடும், மாட்டுக் கொட்டகையும் அமைக்கப்பட்டுள்ளது. பசுக்களுக்கு வைக்கோல் அள்ளிப் போட்டுக்கொண்டிருந்த ராமமூர்த்தி இன்முகத்தோடு நம்மை வரவேற்றவர்.

“எனக்கு சொந்த ஊர் திண்டிவனம் பக்கத்துல இருக்குற கிளியனூர். எங்க அம்மா, அப்பாவுக்கு நாங்க மொத்தம் 9 புள்ளைங்க. நான் எட்டாவது புள்ளை. நாங்க விவசாயக் குடும்பம். நிறைய ஆடு, மாடுகள் எல்லாம் இருந்துச்சு. நாங்க பெரிய குடும்பமா இருந்த தால விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்காம எங்க அப்பா ஆயில் மில், உரக்கடை எல்லாம் வச்சிருந்தார்.

சின்ன வயசுல இருந்தே எனக்கு விவசாயத்துல ஆர்வம் அதிகம். அதனாலதான் பள்ளிப்படிப்பை முடிச்சதும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துல இளநிலை வேளாண்மை பட்டப்படிப்புப் படிச்சேன். 1972-ம் வருஷம் தமிழ்நாடு வேளாண்மைத்துறையில எனக்கு வேலை கிடைச்சது. உயர் விளைச்சல் தரக்கூடிய நெல் ரகங்களைப் பத்தி விவசாயிகள்கிட்ட எடுத்து சொல்லி, ஊக்கப்படுத்தணுங்கறதுதான் எனக்கு வழங்கப்பட்ட பணி. விவசாயிகளும் அதுல ஆர்வம்காட்டி சாகுபடி செஞ்சாங்க.

திருமண மண்டபம்
திருமண மண்டபம்

அதனால எனக்குனு பெருசா எந்த வேலையும் இல்லாதது மனசுக்கு சலிப்பா இருந்துச்சு. என்னோட மேலதிகாரிககிட்ட எடுத்துச் சொல்லி, புதுக்கோட்டை மாவட்டத் துல இருந்த ஒரு அரசு பண்ணைக்கு இடமாறுதல் வாங்கிக்கிட்டு போனேன். அங்க முக்கியமான வேலையே விதை உற்பத்தி செய்றதுதான். மக்காச்சோளம், நெல், கம்பு, உளுந்து, பச்சைப்பயறு விதைகளை உற்பத்தி செஞ்சோம்.

என்னோட கல்யாணத்துக்குப் பிறகு, புதுச்சேரி வேளாண்மைத் துறையில வேலைக்குச் சேர்ந்தேன். அங்க 35 வருஷம் வேளாண் அதிகாரியா வேலை பார்த்து ஓய்வு பெற்றேன். இதனால எனக்கு விவசாயத்திலும் விவசாயிகளிடமும் எப்பவும் நேரடி தொடர்பு இருந்துகிட்டே இருந்துச்சு.

ஆயில் மில் பஸ் ஸ்டாப்

விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல எங்க குடும்பத்துக்குச் சொந்தமான ஆயில் மில் நீண்ட காலமா இயங்கிக்கிட்டு இருந்துச்சு. அது விழுப்புரம் மக்கள் மத்தியில ரொம்பப் பிரபலம். அந்தப் பகுதிக்கு ஆயில் மில் பஸ் ஸ்டாப்னே பேரு. காலப்போக்குல அந்த ஆயில் மில்ல லாபகரமா நடத்த முடியாத சூழ்நிலை. 2002-ம் வருஷம் மில்லை எடுத்து விட்டு ‘ஜெயசக்தி மகால்’ங்கற பேர்ல இந்தத் திருமண மண்டபத்தைக் கட்டினேன். இதோட தொடக்க விழா அப்பவே ஒரு முடிவெடுத்துட்டேன். விவசாயம், கல்வி, மருத்துவம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு வாடகை வாங்கக் கூடாதுனு. கடந்த 20 வருஷமா இதைக் கடைப்பிடிச்சுக்கிட்டு இருக்கேன்.

மின் கட்டனம், கிளீனிங் சார்ஜ்

இதுமாதிரியான நிகழ்ச்சிக்கு இதுவரைக்கும் நான் யார்கிட்டயும் வாடகை கேட்டது கிடையாது. அவங்களாவே விருப்பப்பட்டு ஏதாவது கொடுத்தா உண்டு. குறிப்பா, விவசாயம் தொடர்பான நிகழ்ச்சிகள் தொடர்ச்சியா ரெண்டு மூணு நாள்களுக் கெல்லாம்கூட நடக்கும்... அது மாதிரியான சமயங்கள்ல விவசாயிகளை என்னோட மண்டபத்துல கூட்டம் கூட்டமா பார்க்குறப்ப மனசுக்கு ரொம்பவே ஆத்ம திருப்தியா இருக்கும். விதைத் திருவிழா, இயற்கை விவசாயப் பயிற்சிகள், கருத்தரங்கம்.. இதுமாதிரி இங்க தொடர்ச்சியாக நடத்துகிட்டே இருக்கும். இப்படி ஒரு எண்ணம் எனக்குள்ள வர முக்கியக் காரணம் விவசாயத்தை நான் இயல்பாவே நேசிச்சது தான். வருஷம் முழுக்க எல்லா நாள்கள்லயும் இது மாதிரியான நிகழ்ச்சிகள் நடக்கப் போறதில்லை. கல்யாணம், காதுகுத்துனு மற்ற விஷேசங்களுக்கு என்னோட மண்டபத்தை வாடகைக்கு விடுறது மூலமா கணிசமான வருமானம் கிடைச்சிடுது... அது போதும்.

விவசாயம் மாதிரியே கல்வி, மருத்துவமும் கூட இந்தச் சமூகத்துக்குத் தவிர்க்க முடியாத துங்கறதுனால, அதுக்கும் இலவசம்னு அறிவிச்சேன். இதுமாதிரியான நிகழ்ச்சிகளை நடத்துறவங்க. மின் கட்டணம், கிளீனிங் சார்ஜ் மட்டும் கொடுத்துடுவாங்க. விவசாய நிகழ்ச்சிக்குனு முன்கூட்டியே யாராவது பதிவு செஞ்சிருக்கக்கூடிய நிலையில அடுத்த கொஞ்ச நேரத்துல யாராவது வந்து, கல்யாணம், காதுகுத்துனு கேட்டா, நிச்சயம் மறுத்துடுவேன்.

விவசாயம், கல்வி, மருத்துவம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு வாடகை வாங்கக் கூடாதுனு. கடந்த 20 வருஷமா இதைக் கடைப்பிடிச்சுக்கிட்டு இருக்கேன்.

இயற்கை சூழல்

நான் எங்க வெளியில போனாலும்... என் கண்ணுல படக்கூடிய மரக்கன்றுகள், செடிகளை வாங்கிக்கிட்டு வர்றதை வழக்கமா வச்சிருக்கேன். அப்படி வந்ததுதான் என்னுடைய மண்டபத்தைச் சுத்தியுள்ள மரங்களும், செடி, கொடிகளும். இந்த மண்டபத்தைச் சுத்திப் பார்த்தா மா, பலா, தென்னை, சந்தனம், செம்மரம், வேங்கைனு ஏகப்பட்ட மரங்கள் இருக்கும். 55 வகையான மூலிகை தாவரங்களையும் இங்க வளர்த்துக் கிட்டு இருக்கேன். இந்தச் சூழல் எல்லாருக்குமே ரொம்ப பிடிச்சிருக்கு. விவசாய நிகழ்ச்சி களுக்கு என்னோட மண்டபத்தை இலவசமா பயன்படுத்திக்கக் கொடுக்குறதை என்னோட கடமையா நினைக்குறேன்” எனத் தெரிவித்தார்.

ஜெயசக்தி மகால் போலவே ராம மூர்த்தியின் மனமும் விசாலமானது.

தொடர்புக்கு, ராமமூர்த்தி,

செல்போன்: 98423 34843

இயற்கை விவசாயிகளை உருவாக்கிய இடம்

நம்மிடம் மிகவும் நெகிழ்ச்சியோடு பேசிய, பசுமை இயற்கை விவசாய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், “2010-ம் வருஷம் சுபாஷ் பாலேக்கர் இயற்கை வேளாண் பயிற்சி முகாம்ல கலந்துக்குறதுக்காக ஜெயசக்தி மகாலுக்குப் போயிருந்தேன். அப்பதான் மண்டபத்தோட உரிமையாளர் ராமமூர்த்தியை யதார்த்தமா சந்திச்சு பேசிக்கிட்டு இருந்தேன். அப்பதான் சொன்னார், ‘விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு மண்டபத்துக்கு வாடகை வாங்குறதில்லை’னு.

பாண்டியன்
பாண்டியன்

எங்களோட அமைப்பு சார்பா, 2012-ம் வருஷம் இயற்கை விவசாயக் கருத்தரங்கத்தை முதல் முறையா இந்த மண்டபத்துல நடத்தினோம். அந்தச் சமயம் மின் தட்டுப்பாடு அதிகமா இருந்ததுனால, ஜெனரேட்டருக்கு டீசல் செலவு அதிகம் ஆச்சு. அவர் சொன்னது மாதிரியே மண்டப வாடகையை வாங்கல. டீசலுக்கான பணத்தை என்னால உடனடியா கொடுக்க முடியலை. பொறுமையா கொடுங்க... இப்ப என்ன அவசரம்னு ராமமூர்த்தி சொன்னார். நாலு மாசம் கழிச்சுதான் கொடுத்தேன். அதுக்குப் பிறகு, ஒவ்வொரு வருஷமும் இயற்கை விவசாயக் கருத்தரங்கு, விதைத் திருவிழா, இயற்கை வழி வேளாண்மை களப்பயிற்சினு வருஷத்துக்கு 6 தடவை இந்த மண்டபத்தைப் பயன்படுத்திக்குறோம். இதுமாதிரியான நிகழ்ச்சிகள் நடத்துறப்ப வெளியூர்கள்ல இருந்து வரக்கூடிய விவசாயிகளை இங்கயே தங்கவும் வச்சிக்குவோம். எதுக்குமே வாடகை வாங்குனது கிடையாது. குறிப்பா, நம்மாழ்வார் நினைவுநாள் கருத்தரங்குக்கு மின் கட்டணம், கிளினிங் சார்ஜ்கூட கிடையாது. விழுப்புரம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பல விவசாயிங்க இயற்கை விவசாயத்துக்கு மாறியிருக்காங்கனா, அதுக்கு ஜெயசக்தி மகாலுக்கு மிகப் பெரிய பங்குண்டு. எங்களை மாதிரி இன்னும் பல அமைப்புகள் இந்த மண்டபத்தைப் பயன் படுத்திக்கிட்டு இருக்காங்க. பசுமை விகடன் இதழ் சார்பாகூட இந்த மண்டபத்துல பல விவசாய நிகழ்ச்சிகள் நடந்திருக்கு’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

மாடுகளுடன் ராமமூர்த்தி
மாடுகளுடன் ராமமூர்த்தி

நானும் ஒரு விவசாயி

‘‘இளங்காடுங்கற ஊர்ல என்னோட 8 ஏக்கர் நிலத்துல விவசாயமும் செஞ்சுகிட்டு இருக்கேன். முடிஞ்ச அளவுக்கு ரசாயனத்தைத் தவிர்த்துக்கிட்டு இருக்கேன். அடியுரத்துக்காக மாட்டு எரு, இலைதழை, சணப்பு, தக்கைப்பூண்டு, ஆட்டுக்கிடை கட்டுறதை வழக்கமா வச்சிருக்கேன்.

உணவே மருந்து... மாதம்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

`இயற்கை வாழ்வியல் இயக்கம்’ங்கற பேர்ல ஒரு அமைப்பை ஆரம்பிச்சு ஒவ்வொரு மாசமும் மூணாவது ஞாயிற்றுக்கிழமை சாயந்தரம் ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ங்கற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துறோம். உடல் ஆரோக்கியத்துக்கு அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள், பாரம்பர்ய மருத்துவ முறைகள் பத்தி சித்த மருத்துவர்கள் விரிவா பேசுவாங்க. இதுவரைக்கும் 200-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தி இருக்கோம்’’ என்கிறார் ராமமூர்த்தி.

கூட்டத்துக்கு ஏற்ற அரங்கம்

‘‘இங்க மூணு விதமான அரங்கம் இருக்கு. விவசாயிகள் தங்களோட நிகழ்ச்சிக்கு ஏத்த வகையில இதைத் தேர்வு செஞ்சிக்குவாங்க. நிறைய கூட்டம் வரும்னா, 600 பேர் அமரக்கூடிய ஜெயசக்தி மகால்... கூட்டம் கொஞ்சம் குறைவா இருக்கும்னா, 300 பேர் அமரக்கூடிய பாலாஜி வரவேற்பு அரங்கத்தைக் கேட்பாங்க. இங்க உணவருந்தும் வசதி இருக்கு. சின்ன நிகழ்ச்சினா 150 பேர் அமரக்கூடிய மினி ஹால் கொடுப்பேன்’’ என்கிறார் ராமமூர்த்தி.