நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பழ ஈக்களால் 70% மகசூல் குறையும்! - முருங்கை விவசாயிகளே கவனம்!

முன்னெச்சரிக்கை
பிரீமியம் ஸ்டோரி
News
முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை

``முருங்கையில் முக்கியப் பிரச்னையாக இருப்பது பழ ஈக்கள். தற்போது முருங்கை பூவெடுத்து, பிஞ்சுகளை இறக்கிக் கொண்டிருக்கிறது. இது இரண்டாவது பருவம். இந்தக் காலகட்டத்தில் பழ ஈக்கள் தாக்குதல் அதிகமாக இருக்கும். இன்னும் ஒரு மாதத்தில் காய் பெரிதானவுடன், இதனால் மகசூல் பாதிப்பு இருக்கும். எனவே, அதற்கான தடுப்பு நடவடிக்கையில் உடனே இறங்க வேண்டும். அப்போதுதான் மகசூல் இழப்பைத் தடுக்க முடியும்’’ என்கிறார் சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன்.

பழ ஈக்களால் 70% மகசூல் குறையும்! - முருங்கை விவசாயிகளே கவனம்!

பழ ஈ அல்லது முருங்கைக்காய் ஈ

முருங்கைச் சாகுபடியைப் பொறுத்தவரை, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை பழ ஈக்கள் தாக்குதல் இருக்கும். ஆனால், அந்தப் பருவத்திலிருக்கும் அதன் பாதிப்பைவிட, இரண்டாவது பருவமான தற்போது அதிக பாதிப்பு இருக்கும். இது, காய் பூப்பூத்து, பிஞ்சு இறங்கிக் கொண்டிருக்கும் காலம். இந்தக் காய் மார்ச் மாதம் வரை சந்தைக்கு வரும். குளிர் மாதமான டிசம்பரில் பழ ஈ தாக்குதல் அதிகமாக இருக்கும். இதன் காரணமாகக் காய் பச்சை நிறம் குறைந்து, கறுப்பு நிறம் கலந்து, சொரசொரப்பாக மாறிவிடும். இந்தப் பருவத்தில் இந்தியா முழுக்க இது மிகப்பெரிய பாதிப்பாக இருக்கிறது.

முருங்கைக்காய் ஈ, புழு,  காய்க்குள் புழு பாதிப்பு
முருங்கைக்காய் ஈ, புழு, காய்க்குள் புழு பாதிப்பு

`பழ ஈ’ அல்லது `முருங்கைக்காய் ஈ’ எனப்படும் இந்த ஈக்கள், வீடுகளிலிருக்கும் ஈக்களைப்போல உருவத்தில் சற்றுப் பெரியதாக இருக்கும். இதன் கண் சிவப்பு நிறத்திலிருக்கும். இறக்கை, உடம்பைவிடப் பெரியதாக இருக்கும். இறக்கையின் நுனிப்பகுதியில் கறுப்பு நிறத்தில் ஒரு புள்ளி இருக்கும். பழ ஈக்களின் வாழ்நாள் 35 நாள்கள். வாழ்நாளில் 200 முதல் 250 முட்டைகள் வரை இடும். முருங்கைப் பிஞ்சுகள் உருவாகி, காய் ஒல்லிக்காயாக அரையடியில் தொங்கிக்கொண்டிருக்கும். அந்த நேரத்தில் காயின் மேற்பகுதியில் கோடுபோலப் பள்ளம் இருக்கும். அந்தப் பள்ளங்களில்தான் பழ ஈ முட்டையிடும். மூன்று முதல் நான்கு நாள்களில் முட்டை பொரிந்துவிடும். அப்போது வரும் புழுக்கள், காயின் மேல் ஊர்ந்து, துளையிட்டு காயின் உள்ளே போய்விடும். ஒரு காயில் அதிகபட்சமாக 20 முதல் 28 புழுக்கள் உள்ளே போக வாய்ப்பிருக்கிறது. அப்படி அதிக புழுக்கள் உள்ளே புகுந்து முருங்கைக்காயைச் சேதப்படுத்துவதால், காய் முதிர்ச்சி அடைவதற்கு முன்பாக வெளுத்து, சிறிது கறுப்பு நிறம் கலந்த பழுப்பு காயாக மாறிவிடும். காயின் உள்ளே இருக்கும் புழுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாதிப்பு இருக்கும். 18 முதல் 25 நாள்கள் வரை புழுக்கள் உள்ளே இருக்கும். காயின் உள்ளே இருக்கும் சதைப்பகுதியைச் சுரண்டி உண்டு உயிர் வாழும்.

நவம்பர் மாதம் ஓர் உழவு செய்ய வேண்டும். இதில் பழ ஈக்களின் கூட்டுப்புழுப் பருவத்தை மொத்தமாக அழித்துவிடலாம். டிசம்பர் மாதம் முதல் ஜனவரி வரை இதன் தாக்குதலிலிருந்து மரங்களைக் காப்பாற்றினால் போதும்.

காய் வளர்ந்துகொண்டிருக்கும் அதே காலத்தில், புழுக்களும் வளர்ந்து வரும். அப்போது காயின் வெளியே தேன்போல ஒரு திரவம் வெளியாகும். அதை கவனித்து, புதிதாக உருவாகும் முருங்கைக்காய்களுக்கு பாதிப்புவராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் 50 முதல் 70 சதவிகிதக் காய்கள் பச்சை நிறம் மாறி, கறுப்பு கலந்த நிறத்துக்கு மாறிவிடும். பெரிதானவுடன் காயிலிருந்து வெளியே வரும் புழுக்கள், மண்ணுக்குச் சென்று கூட்டுப்புழுப் பருவத்தை அடையும். ஐந்து முதல் ஒன்பது நாள்கள் கூட்டுப்புழுப் பருவத்திலிருக்கும். அதன் பிறகு அந்துப் பூச்சியாக வெளியே வரும். பின்பு காய்களில் அமர்ந்து முட்டை இடும். எனவே, கூட்டுப்புழுப் பருவத்திலேயே அவற்றை அழித்துவிடுவது சிறந்த வழிமுறை.

பழ ஈக்களால் 70% மகசூல் குறையும்! - முருங்கை விவசாயிகளே கவனம்!

இயற்கை விவசாயத்தைப் பொறுத்தவரை, `வருமுன் காப்போம்’ மட்டுமே சிறந்த நிவாரணி. எனவே, பழ ஈக்களைக் கட்டுப்படுத்த உழவுதான் சிறந்த வழி. முருங்கை வயல்களில் ஆண்டுதோறும் கோடை உழவு செய்ய வேண்டும். முருங்கைக்காய் ஈக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அனைத்து முருங்கைத் தோட்டம் வைத்திருப்பவர்களும் கட்டாயம் நவம்பர் மாதம் ஓர் உழவு செய்ய வேண்டும். அதன் மூலமாக, பழ ஈக்களின் கூட்டுப்புழுப் பருவத்தை மொத்தமாக அழித்துவிடலாம்.

‘‘ஈக்களால் 25 முதல் 30 சதவிகிதம் பாதிக்கப்பட்ட காய்களை விற்க, அண்டாக்களில் தண்ணீரை 45 டிகிரி சூடுபடுத்தி அதில் காய்களை ஊறவைத்து விற்பனைக்கு அனுப்பலாம்.’’

உழவு செய்துவிட்டு, வயலில் ஒரு ஏக்கருக்கு 12 இடங்களில் பறவை தாங்கிகளை அமைக்க வேண்டும். இதனால் அதில் வந்து அமரும் பறவைகள் கூட்டுப்புழுக்களை வேட்டையாடிவிடும். ஓரிரு மரங்கள் மட்டுமே வைத்திருப்பவர்கள் மரங்களின் கீழே, உச்சி வெயில் வேளையில் நிழல் விழும் பகுதி முழுக்கக் கொத்திவிட வேண்டும். கூட்டுப்புழு அதிகபட்சம் 15 செ.மீ ஆழத்துக்குள்தான் இருக்கும். ஆண்டுதோறும் இதன் பாதிப்பு இருக்கும் வயல்களில், உழவு செய்துவிட்டு, மரத்தின் கீழ் அரையடி ஆழத்தில் அரைக்கிலோ வேப்பம் பிண்ணாக்கை வைக்க வேண்டும் அல்லது ஒரு மரத்துக்கு ஆறு லிட்டர் தண்ணீரில் இரண்டு லிட்டர் வேப்பங் கொட்டைக் கரைசலைக் கலந்து, மரத்தின் கீழே தெளித்துவிட வேண்டும். இப்படிச் செய்தால் கூட்டுப்புழுவின் இயக்கத்தை நிறுத்திவிடலாம்.

பழ ஈக்களால் 70% மகசூல் குறையும்! - முருங்கை விவசாயிகளே கவனம்!

காயில் பாதிப்பிருந்தால் அதைக் கவர்ந்து அழிக்கலாம். மா, சப்போட்டா, மாதுளைப் பயிர்களில் வரும் பழ ஈக்களைக் கட்டுப்படுத்த ரசாயன விவசாயிகள், மீத்தேல் யூஜினால் என்ற வேதியியல் பொருளைப் பயன்படுத்துகிறார்கள். இது, பழ ஈக்களை ஈர்க்கக்கூடியது. ஆனால், முருங்கைக்காய் ஈ இதற்கெல்லாம் மசியாது. எனவே, முருங்கையில் அதைப் பயன்படுத்துவதால் எந்தப் பயனும் இல்லை. அதே நேரத்தில் இயற்கை விவசாயிகள், மீன் அமிலத்தை ஆங்காங்கே வைக்கிறார்கள். இது கொய்யாவிலுள்ள பழ ஈக்களை ஈர்க்கும். ஆனால், முருங்கைக்காய் ஈ வித்தியாசமானது. இதற்கும் மசியாது. அதற்கு பதிலாக, சிட்ரோனெல்லா எண்ணெய் அல்லது யூக்கலிப்டஸ் எண்ணெய் அல்லது லாக்டிக் அமிலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி முருங்கைக்காய் ஈக்களைக் கவர்ந்திழுத்து அழிக்கலாம். லாக்டிக் அமிலம், புளித்த தயிர் மற்றும் நன்கு புளித்த மோரில் இருக்கிறது. இவற்றைப் பானையில் வைத்துவிட வேண்டும். இந்த வாடைக்கு ஈக்கள் வந்து பானையில் விழுந்துவிடும். இதை ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் வைக்கலாம்.

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மி.லி வேப்பெண்ணெய் அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மி.லி வேப்பங்கொட்டைக் கரைசல் கலந்து 15 நாள்களுக்கு ஒரு முறை காய்கள்மீது தெளிக்கலாம். காய் கருமை நிறமான பிறகு தெளித்தால் பயனில்லை. ஒல்லிக்காய்களாக, குடல்போலத் தொங்கிக்கொண்டிருக்கும்போதே தெளிக்க வேண்டும். பிஞ்சுகள் இருக்கும் அதே நேரத்தில், முதலில் உருவான காய் பெரிதாகியிருக்கும். அதில் சொறி, பிசின், முட்டைகளைப் பார்த்தால் உடனே அதை அறுவடை செய்துவிட வேண்டும். அவற்றை ஓரடி ஆழத்தில் குழியெடுத்து, அதில் புதைத்து விடுவது நல்லது. அதன்மீது வேப்பெண்ணெய்க் கரைசலைக் கொஞ்சம் தெளித்துவிட வேண்டும். இதைத் தவிர மூலிகைப்பூச்சி விரட்டிக் கரைசலை வாரம் ஒரு முறை காய்கள்மீது அடிக்கலாம். டிசம்பர் முதல் ஜனவரி மாதம் வரை இதன் தாக்குதலிலிருந்து மரங்களைக் காப்பாற்றினால் போதும். காய்கள் முற்றிவிடும். அதன் பிறகு தாக்குதல் அவ்வளவாக இருக்காது.

புழு பாதித்த காய்
புழு பாதித்த காய்

ஈக்களால் 25 முதல் 30 சதவிகிதம் பாதிக்கப்பட்ட முருங்கைக்காய்களை ஓரளவுக்குச் சந்தைப்படுத்தலாம்; தகுதி வாய்ந்த, கொஞ்சம் வெளுத்த, பிசின் தள்ளிய காய்களைச் சந்தைப்படுத்தும் விவசாயிகள், அண்டாக்களில் தண்ணீரை 45 டிகிரி சூடுபடுத்தி அதில் காய்களை ஊறவைக்க வேண்டும். 45 டிகிரிக்கு மேல் வெப்பம் இருந்தால் காய் நிறம் மாறிவிடும். முட்டைகள், பிசின் இருந்தாலும் கரைந்துவிடும். காயும் சற்றுப் பச்சையாக இருக்கும். முழுக்க பழுப்பு நிறத்திலுள்ள காய்களைச் சுடுநீரில் வைக்க முடியாது. ஈ தாக்குதலுக்கு உள்ளான முருங்கை சந்தைக்கு வந்தால், அதைப் பயன்படுத்தும் நுகர்வோர் சில முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். முழுக்கப் பிசின் வந்து, சொறி சொறியாக இருக்கும் காய்களை யாரும் வாங்க மாட்டார்கள். ஓரளவுக்கு வெளுத்து, கருமை நிறத்திலிருக்கும் காய்களை நறுக்கி, தண்ணீரைச் சூடுபடுத்தி (45 டிகிரி) அதில் அரை மணி நேரம் போட வேண்டும். பிறகு அந்தத் தண்ணீரைக் கொட்டிவிட்டுக் காயைப் பயன்படுத்தலாம். அப்படிச் செய்வதால் முட்டைகள், பழ ஈக்களால் உருவாகும் உடலுக்கு ஒவ்வாத பொருள்கள் இருந்தால் வெளியேறிவிடும்’’ என்று ஆலோசனை வழங்கினார்.

தொடர்புக்கு, செந்தூர்குமரன், செல்போன்: 80720 09011