Published:Updated:

காய்கறிகளைச் சாப்பிடுங்கள்... மண்ணைப் பூசிக்கொள்ளுங்கள்!காந்தி சொல்லிய மருத்துவம்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

காய்கறிகளைச் சாப்பிடுங்கள்... மண்ணைப் பூசிக்கொள்ளுங்கள்!காந்தி சொல்லிய மருத்துவம்!

மாத்தியோசி

Published:Updated:
மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

‘பஹு ரூப் காந்தி’ என்ற ஆங்கில நூல் ‘பல ரூபங்களில் காந்தி’ என்ற பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில் காந்திஜி ஓர் உழைப்பாளி, காந்திஜி ஒரு மருத்துவர், காந்திஜி ஒரு விவசாயி, காந்திஜி ஒரு பிச்சைக்காரர், காந்திஜி ஒரு கொள்ளைக்காரர், காந்திஜி ஒரு பத்திரிகையாளர், காந்திஜி ஒரு சமையல்காரர்... என்று வித்தியாசமான தலைப்புகளில் 180 பக்கங்களுக்கு நீண்டிருந்த இந்தப் புத்தகம் குறித்துக் கடந்த இதழில் சொல்லியிருந்தேன்.

‘‘டி.ஜி.டெண்டுல்கர் அவர்களின் ‘மகாத்மா’ புத்தகத்தின் கையெழுத்துப் பிரதியை 1948-ம் ஆண்டில் நான் படித்தேன். அப்போது வங்காளத்தில் உள்ள கஸ்தூர்பா மையத்தில் என் பணியை முடித்து விட்டு, ஒரு கிராமத்தில் பணியாற்றினேன். என்னுடன் அங்கிருந்த பெண் பயிற்சியாளர்களுக்குக் காந்திஜியைப் பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. அவர்கள் தினமும், ராட்டையில் நூல் நூற்றார்கள். காந்தி ஜயந்தியையும் கொண்டாடினார்கள். சிலர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்கும் சென்றிருந்தனர். இருப்பினும், காந்திஜி நம் நாட்டுக்காக என்னவெல்லாம் செய்தார் என்பது பற்றி அவர்கள் அறியவில்லை. நாட்டு மக்கள் அவரை அறிந்து கொள்ளவே இதை எழுதியுள்ளேன்’’ என்று நூல் ஆசிரியர் அனுபந்தோ பாத்யாயா ஆதங்கத்துடன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது மட்டும் என்ன? காந்தியைப் பற்றி அனைவருக்கும் தெரிந்துவிட்டதா? மகாத்மா காந்தி என்ற ஆளுமையைக் காலம் தோறும் மறுவாசிப்புச் செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது.

இந்த நூலில் ‘காந்திஜி ஒரு மருத்துவர்’ என்ற தலைப்பின் கீழ் பல பயனுள்ள சுவாரஸ்யமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் கொஞ்சம் மட்டும் எடுத்து வந்து, உங்களுக்கு பகிர்ந்துள்ளேன்.

‘‘அவரை சட்டப் படிப்புக்காக இங்கிலாந்துக்கு அனுப்ப குடும்பத்தினர் முடிவு செய்தனர். ‘எனக்கு மருத்துவம் படிக்கத்தான் விருப்பம்’ என்று காந்தி சொல்லியிருக்கிறார். ‘பிராணிகளின் உடலை அறுத்து ஆராய்ச்சி செய்யும் படிப்பைப் படிக்கக் கூடாது’ என்று அவரின் அண்ணன் கட்டுப்பாடு போட்டுவிட்டார்.

பல ரூபங்களில் காந்தி
பல ரூபங்களில் காந்தி

சட்டம் படித்து, பிறகு தென்னாப்பிரிக்கா சென்றதும், பின்பு இந்தியா திரும்பிய கதையை உலகம் அறியும். ஆனால், அவருக்குள் இருந்த மருத்துவர் அவ்வப்போது எட்டிப்பார்த்து வந்தார். இதை அவரிடம் நெருங்கி இருந்தவர்கள்தாம் அறிவார்கள்.

இயற்கை வைத்தியத்தில் நிபுணரான குஹ்னே என்பவரின் நூல்களைக் காந்தி படித்தார். அந்த நூலில் நீர்ச் சிகிச்சை முறை அவரை மிகவும் கவர்ந்தது. முதலில் தன் மீதே சில பரிசோதனைகளைக் காந்திஜி செய்துகொண்டார். பிறகு தன்னுடைய மனைவியையும் மகன்களையும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார். அதற்குப் பின், தண்ணீர், மண், காற்று, சூரிய ஒளி ஆகியவற்றின் உதவியுடன் வைத்தியம் செய்யும் ஆற்றலை அவர் பெற்றார். மாத்திரைகளையும் மருந்தையும் பயன்படுத்தி உடலுக்கு விஷச் சிகிச்சை தருவதைத் தவிர்த்து, உபவாசம். சரியான உணவு முறைகள் மற்றும் பச்சிலைகள் மூலம் எவ்வித வியாதியையும் குணப்படுத்தலாம் என்பது அவரின் அசையாத நம்பிக்கை.

தன் 77-வது வயதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள உருளிகாஞ்சன் என்ற கிராமத்தில் இயற்கை மருத்துவமனை ஒன்றைக் காந்தி உருவாக்கினார். அதில் விலை உயர்ந்த மருத்துவச் சாதனங்கள் இல்லை. ஒரு லட்சிய மருத்துவர் மருத்துவத்தைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். மேலும் தான் அறிந்துள்ளதை மக்களுடன் இலவசமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் என்பதில் தெளிவாக இருந்தார். இந்த மருத்துவமனையில் காந்தியே நோயாளிகளைப் பரிசோதனை செய்து சிகிச்சை முறையைச் சீட்டில் எழுதிக்கொடுப்பது உண்டு.

ராஜு என்பவருடைய மருந்து சீட்டில் “சூரிய ஒளிக்குளியல், இடுப்புக் குளியல் மற்றும் ஒத்தடம்; பழரசம், தண்ணீர் கலந்த மோர், பால் கூடாது; மோர் செரிக்கவில்லை என்றால் மேலும் பழரசமும் கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரும் கொடுக்கவும்” என்று எழுதப்பட்டிருந்தது. மற்றொரு சீட்டுப் பார்வதி என்ற நபருடையது. அதில் ‘‘சாத்துக்குடி ரசம் மட்டுமே கொடுக்க வேண்டும். இடுப்புக் குளியல், ஒத்தடம், வயிற்றின் மீது மண்சாந்து பூசவும்; சூரிய ஒளிக் குளியல் தினம்தோறும், இதையெல்லாம் செய்தால் அவருக்குச் சரியாகிவிடும்.”

“காந்திஜி உன்னை நெருங்கிவந்து உன்னுடன் பேசவேண்டும் என்றால் நீ ஒரு நோயாளியாக மாற வேண்டும்’’ என்று ஆசிரம வாசிகள் வேடிக்கையாகச் சொல்வதுண்டு. நோயாளிகளின் சிறு தேவைகள் பற்றிகூட காந்தி அறிந்து வைத்திருந்தார். தினம்தோறும் மாலையில் உலாவிவிட்டுத் திரும்பும் சமயத்தில் ஒவ்வொரு நோயாளியையும் சந்தித்துப் பேசுவார். நோயாளியின் உணவு எப்படித் தயாரிக்கப்பட வேண்டும், ஒத்தடம் எப்படிக் கொடுக்க வேண்டும், எனிமாவில் எந்த அளவுக்கு உப்பு சேர்க்கப்பட வேண்டும் போன்ற விஷயங்கள் பற்றி விவரமான அறிவுரைகளைக் காந்தி வழங்கி வந்தார்.

சேவா கிராமத்தில் தினம்தோறும் ஒரு மணிநேரம் நோயாளி களுக்காக அவர் ஒதுக்கி இருந்த சமயத்தில் ஆசிரம வாசிகள் மட்டுமன்றிப் பக்கத்துக் கிராமங்களிலிருந்தும் கூட்டமாக மக்கள் வரத்தொடங்கினர். எல்லோருக்கும் கொடுத்து வந்த முக்கியமான அறிவுரை இதுதான். ‘‘காய்கறிகளைச் சாப்பிடுங்கள்; மோர் அருந்துங்கள்; மண்ணைப் பூசிக் கொள்ளுங்கள்.’’

சேவா கிராமம் ஆசிரமம்
சேவா கிராமம் ஆசிரமம்


காந்தி எவ்வளவு முக்கியமான பணியில் ஈடுபட்டிருந்தாலும், யாருக்காவது உணவு பற்றியோ, நோய் பற்றியோ அறிவுரை தேவைப்பட்டால் அவரைத் தொந்தரவு செய்ய அனுமதி உண்டு.

சிறைவாசத்தின்போது சிறையில், உடன் இருந்தவர்களுக்கு இயற்கை மருத்துவச் சிகிச்சை அளித்து வந்தார். பிளேக், டைஃபாய்ட் ஜுரம், மலேரியா, அஜீரணம், மஞ்சள் காமாலை, ரத்த அழுத்தம், தீக்காயங்கள், பெரியம்மை மற்றும் எலும்பு முறிவு எல்லாவற்றுக்கும் மண்சாந்து சிகிச்சையைச் சிபாரிசு செய்தார். ஒரு பயணத்தின்போது அவர் மகனின் கை உடைந்து விட்டது. உடனே, மண்ணைக் குழைத்துப் பூசிக் கட்டு போட்டார் காந்தி. காயம் ஆறிவிட்டது. இந்தச் சிகிச்சை முறையில் நிறைய நபர்களைக் குணப்படுத்தி வந்தார்.

‘ஆரோக்கியத்துக்கான வழிகாட்டி’ என்ற நூலில் தான் சொல்லும் இந்தச் சிகிச்சை முறையை மேற்கொள்வதில் ஆபத்தும் இருக்கிறது என்று எச்சரிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார். ‘‘மருத்துவமனைகளையோ, மருந்து விற்பனைக்கூடங்களையோ நிறைய கட்டிவைக்க வேண்டாம்; மாறாக மக்களுக்குச் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் போதிப்பதுதான் முக்கியம். நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதைவிட நோய் வராமல் தடுப்பது அவசியம்’’ என்பதை வலியுறுத்தி வந்தார்.

‘‘தண்ணீர், மண், காற்று, சூரிய ஒளி ஆகியவற்றின் உதவியுடன் வைத்தியம் செய்யும் ஆற்றலை அவர் பெற்றார்.’’

தவிர்க்க முடியாதபோது, அலோபதி மருத்துவத்தை ஏற்றுக் கொள்ளும்படி சொல்லியிருக்கிறார். ஒரு முறை சேவா கிராமத்தில் காலரா நோய் பரவி இருந்தபோது காந்தியே ஆசிரம வாசிகளையும் கிராமத்து மக்களையும் காலரா தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளும்படி சொன்னார். ஒரு முறை சிறையிலிருந்தபோது, அவருக்கு குடல்வால் (Appendicitis) ஒவ்வாமை ஏற்பட்டது. இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்டது. முதலில் அலோபதி மருத்துவத்தை மறுத்தார். ஆனால், அவர் நலனில் அக்கறைகொண்ட மருத்துவர்கள் விடுவதாக இல்லை. வேறு வழியில்லாமல் குடல்வால் அறுவைசிகிச்சையை ஏற்றுக்கொண்டார். இந்தச் செய்தி வெளியில் பரவியது. அப்புறம் என்ன? ஒரே களோபரம்தான்.

அந்தச் சமயத்தில் இயற்கை மருத்துவம் குறித்து, பத்திரிகைகளில் எழுதியும் பேசியும் வந்தார். அவரே, அலோபதி மருத்துவம் செய்து கொண்டது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. கண்டனக் கடிதங்கள், மூட்டை மூட்டையாக வந்தன. கடைசியில், அலோபதி சிகிச்சையை, தான் ஏற்றுக்கொண்டது தவறுதான் என்று மக்களிடம் தெரிவித்தார். அதனால்தான் அவர் மகாத்மா காந்தி...’’

-இப்படியாக அந்த நூலில் பல சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், காந்தியின் ‘சத்திய சோதனை’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலிலும் இயற்கை மருத்துவம் குறித்த ஏராளமான பதிவுகள் உண்டு.

‘‘அன்று ஏதோ பண்டிகை நாள். மத்தியானம் நான் எதுவும் சாப்பிடப்போவதில்லை என்று கஸ்தூரிபாயிடம் கூறியிருந்தேன். ஆனால், சாப்பிடும் ஆசையை அவள் தூண்டிவிட்டாள். அதற்குப் பலியாகிவிட்டேன். பாலையோ, பாலால் ஆனவற்றையோ சாப்பிடுவதில்லை என்று நான் விரதம் கொண்டிருந்ததால், நெய்க்குப் பதிலாக எண்ணெய் விட்டு அவள் எனக்காக கோதுமைத் தித்திப்புப் பலகாரம் செய்திருந்தாள். ஒரு கிண்ணம் நிறையப் பயறுக் கஞ்சியையும் வைத்திருந்தாள். இதை உண்பதில் எனக்கு அதிக பிரியம் உண்டு. அவற்றைச் சாப்பிட்டேன். கஸ்தூரி பாயைத் திருப்தி செய்து, என் நாவின் ருசிக்கும் திருப்தி அளிக்கும் அளவு சாப்பிட்டால் கஷ்டப்பட வேண்டி வராது என்றும் நம்பினேன்.

ஆனால், ருசிப் பிசாசோ எப்பொழுது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருந்தது. மிகக் கொஞ்சமாகச் சாப்பிடுவதற்குப் பதிலாக வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டேன். இதுவே எமனுக்குப் போதுமான அழைப்பாகிவிட்டது. ஒரு மணி நேரத்துக்கெல்லாம் சீதபேதி கடுமையாகத் தோன்றிவிட்டது. வயிற்றிலிருந்த கடுப்பு வலி அதிகரித்துக்கொண்டே போயிற்று. வழக்கமாகப் போகும் கக்கூசு, தூரத்திலிருந்ததால், பக்கத்து அறையிலேயே ஒரு மலச்சட்டி கொண்டு வந்து வைக்கும்படி கூறினேன். இதைக் கேட்க எனக்கு வெட்கமாக இருந்தபோதிலும் வேறு வழியில்லை.

‘‘உணவு விஷயத்தில், என் கொள்கைகளைப் புறக்கணித்துவிட்டு வாழும் ஆசை எனக்கு இல்லை.’’

அப்பொழுது நான் நீர் சிகிச்சை செய்துகொண்டு வந்தேன். அதில் எனக்குக் கொஞ்சம் சுகம் தெரிந்தது. ஆனால், உடம்பு தேறும்படி செய்வது மிகவும் கஷ்டமான வேலையாக இருந்தது. வைத்தியர்கள் பலர் எனக்கு ஏராளமாக ஆலோசனை கூறி வந்தார்கள். ஆனால், அவற்றில் எதையும் அனுசரிக்க எனக்கு விருப்ப மில்லை. பால் சாப்பிடுவதில்லை என்ற விரதம் கெடாமல் மாமிச சூப் சாப்பிடலாம் என்றும் இரண்டு, மூன்று வைத்தியர்கள் யோசனை கூறினர். இந்த ஆலோசனைக்கு ஆயுர்வேதத் திலிருந்தும் மேற்கோள்களைக் காட்டினர். அவர்களில் ஒருவர், முட்டைகளைச் சாப்பிடும்படி பலமாக சிபாரிசு செய்தார். ஆனால், அவர்கள் எல்லோருக்கும், “முடியாது” என்ற ஒரே பதிலையே நான் கூறி வந்தேன்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

உணவு விஷயத்தில், என் கொள்கைகளைப் புறக்கணித்து விட்டு வாழும் ஆசை எனக்கு இல்லை. என் மனைவி, குழந்தைகள், நண்பர்கள் இவர்கள் விஷயத்தில் இரக்கமற்ற வகையில் நான் வற்புறுத்தி வந்திருக்கும் ஒரு கொள்கையை என் விஷயத்தில் மாத்திரம் நான் எப்படிக் கைவிட்டுவிட முடியும்?

என் வாழ்க்கையில் எனக்கு முதன்முதலில் ஏற்பட்ட நீண்ட நாள் தொடர்ந்த நோய் இதுதான். வாட்டி எடுத்தது.

நான் மரணத்தின் நுழைவாயிலில் நின்றேன். சாவை எதிர்பார்த்துக்கொண்டு நான் படுத்திருந்தபோது, டாக்டர் தல்வல்கர், ஒரு விசித்திர ஆசாமியை அழைத்துக்கொண்டு அங்கே வந்தார். மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் அந்த ஆசாமி. அவர் பிரசித்த மானவர் அன்று. ஆனால், அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவரும் என்னைப் போன்ற ஒரு பைத்தியம் என்பதைக் கண்டு கொண்டேன். தம்முடைய சிகிச்சை முறையை என்னிடம் சோதித்துப் பார்ப்பதற்காகவே அவர் வந்தார். கிரான்ட் வைத்திய கல்லூரியில் அவர் அநேகமாகப் படித்து முடித்துவிட்டார்.

ஆனால், இன்னும் பட்டம் பெறவில்லை. அவர் பிரம்ம சமாஜத்தில் ஓர் அங்கத்தினர் என்று பின்னால் எனக்குத் தெரிந்தது. கேல்கர் என்பது அவர் பெயர். சுயேச்சையான, பிடிவாதப் போக்குள்ளவர் அவர். பனிக் கட்டிச் சிகிச்சையில் அவருக்கு அதிக நம்பிக்கை. அந்தச் சிகிச்சையை என்னிடம் பரீட்சிக்க விரும்பினார். அவர் கண்டுபிடித்திருப்பவற்றின் குணாதிசயங்கள் எதுவாக இருந்தாலும், என் உடலில் அவற்றைப் பரிசோதிக்க அவரை நான் அனுமதித்தேன். உடலுக்கு வெளியில் செய்யும் சிகிச்சையைப் பற்றி எனக்கு ஆட்சேபமில்லை. உடம்பு முழுவதும் பனிக் கட்டி வைத்துக் கட்டுவதே அவருடைய சிகிச்சை. அவருடைய சிகிச்சையால் என் உடம்பில் ஏற்பட்ட குணத்தைக் குறித்து அவர் சொல்லிக்கொண்டதை அங்கீகரிக்க என்னால் முடியாவிட்டாலும், எனக்கு ஒரு புதிய நம்பிக்கையையும் பலத்தையும் என்னுள் அது நிச்சயமாக உண்டாக்கியது. இயற்கையாகவே உடம்பிலும் பிரதிபலித்தது.

எனக்குப் பசியெடுக்க ஆரம்பித்தது. ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை மெள்ள நடக்கவும் தொடங்கினேன்’’ என்று இப்படிப் தன் அனுபவங்களை பதிவு செய்துள்ளார், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற பெருங்கிழவன்.

அடுத்து, சொல்லப் போகும் தகவலும், ஒரு கிழவரைப் பற்றித்தான். இவரை நீங்கள் வாட்ஸ் அப்பிலும், ஃபேஸ்புக்கிலும், யூடியூபிலும்கூட பார்த்திருக்கலாம். ஆனால், நான் பார்த்ததோ வேறு இடத்தில். அதைப் பற்றி அடுத்த இதழில் சொல்கிறேன்.