பிரீமியம் ஸ்டோரி
‘பருவத்தே பயிர் செய்’ என்பது மாறி தற்போது, ‘தண்ணீரைப் பொறுத்துப் பயிர் செய்’ என்றாகிவிட்டது. தண்ணீர்ப் பற்றாக்குறையான நிலையில், எந்தப் பயிரைச் சாகுபடி செய்தால் நஷ்டத்திலிருந்து தப்பிக்கலாம் என ஆராய்ந்து சாகுபடி செய்யும் நிலையில் இருக்கிறார்கள் விவசாயிகள். அதிலும், குறைவான தண்ணீர்த் தேவை, குறைவான பராமரிப் பால் கொய்யாச் சாகுபடியில் பெரும்பான்மையான விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் விருதுநகரைச் சேர்ந்த திருப்பதி, ‘தைவான் பிங்க்’ ரக கொய்யாவைச் சாகுபடி செய்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார்.

விருதுநகர் மாவட்டம் அழகாபுரியில் உள்ளது திருப்பதியின் கொய்யாத் தோட்டம். அறுவடைப் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தவரை, சாரல்மழை பெய்த காலை நேரத்தில் சந்தித்தோம். சாரல் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன கொய்யாச் செடிகள். நம்மை அறிமுகப்படுத்தியதும், கொய்யாப் பழத்துண்டுகளை நமக்குச் சாப்பிட கொடுத்தபடியே பேசத் தொடங்கினார். “இந்த அழகாபுரிக்குப் பக்கத்துல இருக்கிற வெள்ளப்பொட்டல்தான் என்னோட சொந்தக் கிராமம். பாரம்பர்யமாவே விவசாயக் குடும்பம்தான். எம்.எஸ்ஸி விலங்கியல் படிச்சிட்டு பி.எட் முடிச்சதும் ஆசிரியர் பணிக்காகக் காத்திருந்தேன். இதுக்கிடையில, சென்னையில ஒரு தனியார் மருத்துவமனையில இதய நுட்பவியல் துறையில டெக்னாலஜிஸ்ட் வேலைக்கான நேர்முகத்தேர்வுல தேர்வாகி வேலைக்குச் சேர்ந்தேன். மருத்துவம் சார்ந்த அந்த வேலை எனக்குப் பிடிச்சு போச்சு. 7 வருஷம் கழிச்சு, ஈரோட்டுல ஒரு மருத்துவமனையில அதே வேலையில சேர்ந்தேன்.

கொய்யாத் தோட்டம்
கொய்யாத் தோட்டம்

மனைவி தனலெட்சுமி, அரசு மருத்துவ மனையில நர்ஸ் வேலை பாக்குறாங்க. வெளியூர்ல வேலை பார்த்தாலும் வாரம் தோறும் சனி, ஞாயிறுகள்ல சொந்த ஊருக்கு வந்திடுவோம். அப்பா காலத்துல நெல், வாழை, மிளகாய், நிலக்கடலைனு எல்ல விவசாயமும் இருந்துச்சு. ஆரம்பத்துல அடியுரமா மக்கிய தொழுவுரத்தை மட்டும்தான் பயன்படுத்தி சாகுபடி செஞ்சுட்டு வந்தாங்க. பசுமைப் புரட்சிக்குப் பிறகு, எங்க ஊர்ல எல்லா விவசாயிகளும் ரசாயன உரத்தைப் பயன்படுத்தி சாகுபடி செய்ய ஆரம்பிச்சாங்க. அப்பாவும் ரசாயன உரத்தைப் பயன்படுத்த ஆரம்பிச்சார். ஒரு கட்டத்துல மகசூல் குறைய ஆரம்பிச்சு, நிலமும் மலடாயிப்போச்சு. அப்பாவோட மறைவுக்குப் பிறகு, நிலம் தரிசாப் போச்சு.

ரசாயன விளைபொருளைத் தொடர்ந்து சாப்பிடுறதால ஆரோக்கியத்துக்குக் கேடுனு புரிஞ்சுகிட்டேன். உணவு முறையை மாற்ற வேண்டும் என்பதைவிட, நாம் உண்ணும் உணவு எப்படிப்பட்டது என்பதுல கவனமா இருக்கணும். நான் வேலை பார்க்குற ஈரோடு ஹாஸ்பிட்டல் எம்.டி சுதாகர், ‘ஈரோடை’, ‘உயிர்’ங்குற ரெண்டு அமைப்பைத் தொடங்கி குளங்கள் தூர் வாருவது, மரம் நடுவது மாதிரியான வேலைகளைச் செஞ்சுட்டு வர்றாரு. அவருக்கு இயற்கை விவசாயம் மேல ரொம்ப ஈடுபாடு. அவர்தான், ‘உங்க ஊர்ல இருக்க நிலத்தை ஏன் சும்மா தரிசாப் போட்டுருக்கீங்க. இயற்கைமுறையில விவசாயம் செஞ்சு நஞ்சில்லா விளைபொருளை நாலு பேருக்குக் கொடுக்கலாமே’ன்னு சொன்னார். நானும் என் மனைவியும் இந்த நிலத்துல இயற்கை முறையில விவசாயம் செய்யலாங்குற எண்ணத்துல தான் இருந்தோம்.

அறுவடை செய்த கொய்யாவுடன் திருப்பதி
அறுவடை செய்த கொய்யாவுடன் திருப்பதி

தொடர்ந்து யூடியூப்ல இயற்கை விவசாய வீடியோக் களைப் பார்த்தோம். என்ன பயிர் சாகுபடி செய்யலாம்னு யோசிச்சப்போ, ‘கொய்யாப் பழம் சாகுபடி செஞ்சா நஷ்டமில்லாத வருமானம் கிடைக்கும்னு எங்க அப்பா அடிக்கடிச் சொன்னது எனக்கு ஞாபகம் வந்துச்சு. அக்கனா புரத்துல பல வருஷமா கொய்யா சாகுபடி செஞ்சுட்டு வர்ற ஜெயரட்சகன் ஐயாகிட்ட கேட்டோம். கொய்யா சாகுபடியை செய்யச் சொல்லி ஊக்கப்படுத்தியதோடு பசுமை விகடனையும் அறிமுகப் படுத்தினார். இதுக்கு இடையில சீமைக்கருவேல மரங்களை அகற்றி, பல தானியம் விதைச்சு நிலத்தை வளப்படுத்தினேன். முதல்ல ஒரு ஏக்கர்ல லக்னோ-49 ரகக் கொய்யாவை சாகுபடி செஞ்சேன். சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளும் இதே ரகத்தைச் சாகுபடி செஞ்சதால விற்பனை செய்றதுல சிரமப் பட்டேன். வியாபாரிகள் கேக்குற விலைக்கே விற்பனை செய்ய வேண்டிய நிலை உருவாச்சு. பிறகுதான் வேற ரகக் கொய்யாவைச் சாகுபடி செய்யலாம்கிற யோசனை வந்துச்சு.

தைவான் சிவப்பு, தைவான் பிங்க், அர்கா கிரண் (இந்தியா) ரகங்களைச் சில விவசாயிகள் நடவு பண்ண சொன்னாங்க. அதுல, தைவான் சிவப்பும், அர்கா கிரணும் ஜூஸுக்கு ஏற்றது. இது மொத்தம் 10 ஏக்கர் நிலம். தைவான் பிங்க் ரகத்தைச் சாகுபடி செய்யலாம்னு முடிவெடுத்து 5 ஏக்கர்ல அடர் நடவு முறையில செடிக்குச் செடி 6 அடி, வரிசைக்கு வரிசை 9 அடி இடைவெளியில சாகுபடி செஞ்சிருக்கோம். அதோட வயசு 2 வருஷங்கள் 3 மாசம். இப்ப 3 மாசமா அதுல அறுவடை செஞ்சிட்டு இருக்கோம். இன்னொரு 5 ஏக்கர் சாகுபடிக்காகத் தயார் நிலையில இருக்கு” என்றவர் நிறைவாக,

‘‘5 ஏக்கர் நிலத்தில தினமும் காய்ப் பறிக்கிறேன். இந்த 3 மாசத்துல 5 ஏக்கர்லயும் சேர்த்து 5 டன் வரைக்கும் காய் எடுத்திருக்கேன். இன்னும் 15 டன் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். ஒரு ஏக்கருக்கு 10 டன் வரைக்கும் மகசூல் கொடுக்கும்னு சொல்றாங்க. இப்ப வரைக்கும் எனக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு டன் கிடைச்சிருக்கு. இன்னும் போகப் போக மகசூல் கூடும்.

அடர் நடவுனால கவாத்து ரொம்ப முக்கியம். அதனால வருஷத்துல மூணு மாசம் பறிப்பு இருக்காது. இயற்கையில் விளைஞ்ச தைவான் ரகத்தோட சுவைதான் வியாபாரிகளை என்னைத் தேடி வர வெச்சுது.

இனிப்பான லாபம் தரும் தைவான் ரகக் கொய்யா!

ஒரு ஏக்கர்ல இருந்து தினமும் 50 முதல் 60 கிலோ வரைக்கும் காய்கள் கிடைச்சுட்டு இருக்கு. இதுவரைக்கும் 5 ஏக்கர்லயும் மொத்தம் 5,000 கிலோ எடுத்திருக்கேன். ஒரு கிலோ கொய்யா சந்தையில 40 ரூபாய்க்குப் போகுது. நான் இயற்கை முறையில விளை விக்கிறதாலயும் சுவை நன்றாக இருக்கிறதாலயும் வியாபாரிக கூடுதல் விலைக்கு எடுத்துக்கிறாங்க. 45 ரூபாய்ல இருந்து 55 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்துட்டு இருக்கேன். சராசரியா 50 ரூபாய்னு வச்சுக்கிட்டாலும், 5,000 கிலோவுக்கு 2,50,000 ரூபாய் வருமானமாக் கிடைச்சிருக்கு. இன்னும் 6 மாசம் மகசூல் இருக்கு. முறையாப் பராமரிச்சா மகசூலும், வருமானமும் அதிகரிக்கும்.

லக்னோ-49 ரகக் கொய்யா ஒரு கிலோ வுக்குக் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சமா 40 வரை விற்பனையாயிட்டு இருக்கு. அந்த ரகக் கொய்யாவை அதிகபட்சமா 3 நாள்கள் வரைதான் இருப்பு வைக்க முடியும். ஆனா, தைவான் பிங்க் கொய்யாவை அதிகபட்சமா ஒரு வாரம் வரை இருப்பு வைக்க முடியும். இருப்பு வைப்பது மட்டுமல்லாம, இதன் தனிச் சுவையாலும் நல்ல விலை கிடைக்குது. வாங்கி விக்குற வியாபாரிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்குது. வெளியூர் வியாபாரிகளே நேரடியா வர்றாங்க. இப்போ ரெண்டு மாசமா கேரளாவுக்கும் அனுப்புறேன்” என்றார்.

தொடர்புக்கு, திருப்பதி, செல்போன்: 82485 84880

இப்படித்தான் கொய்யா சாகுபடி!

ரு ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் தைவான் ரகக் கொய்யா சாகுபடி செய்யும் முறை குறித்துத் திருப்பதி கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...

இனிப்பான லாபம் தரும் தைவான் ரகக் கொய்யா!

பழப்பயிர் சாகுபடியைப் பொறுத்தவரை பட்டம் கிடையாது. ஆனால், பருவ மழைக்கு முன்பாக ஆவணி, புரட்டாசி போன்ற மாதங்களில் நடவு செய்வது சிறந்தது. நடவு செய்வதற்கு முன்பாகவே உழவுப் பணிகளை முடித்துவிட வேண்டும். 3 நாள்கள் இடைவெளியில் 3 முறை உழவு செய்ய வேண்டும். பிறகு, ஒரு அடி ஆழத்தில் குழிகள் எடுக்க வேண்டும். நாம் சாகுபடி செய்யும் நிலத்தின் பரப்பளவு 2 ஏக்கருக்குக் குறைவு என்றால், வரிசைக்கு வரிசை 6 அடி, செடிக்குச்செடி 6 அடி இடைவெளியில் குழி எடுக்க வேண்டும். 2 ஏக்கருக்கு மேல் என்றால் வரிசைக்கு வரிசை 9 அடி, செடிக்குச் செடி 6 அடி இடைவெளி விட்டுக் குழி எடுக்க வேண்டும். சாகுபடி செய்யும் பரப்பளவு குறைவு என்றால் எளிதாகக் களை எடுக்கலாம்.

பரப்பளவு அதிகமானால் வேலையாட்கள் தட்டுப்பாடானாலும், டிராக்டர் மூலம் களை எடுத்துவிடலாம். குழிகளை 3 நாள்கள் ஆற விட வேண்டும். பிறகு, குழிக்குள் அரையடி உயரத்துக்கு மேல்மண்ணைப் போட்டு ஒரு குழிக்கு 25 கிராம் வீதம் ‘வேம் தூளைத் தூவிவிட்டுக் கன்றை நடவு செய்ய வேண்டும். 6 மாதக் கன்றுகள் நடவுக்கு ஏற்றது. தொடர்ந்து ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர்ப் பாய்ச்சி வர வேண்டும்.

15-ம் நாளில் அசோஸ்பைரில்லம், ரைசோபியம் தலா 2 லிட்டரை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து (இது ஒரு ஏக்கருக்கான அளவு) சொட்டுநீர் மூலம் கலந்துவிட வேண்டும். இதை ஒருமுறை மட்டும் கொடுத்தால் போதும். பிறகு அமுதக்கரைசல், ஜீவாமிர்தம், மூலிகைக்கரைசல், மீன் அமிலம், வேஸ்ட்-டி-கம்போஸர் ஆகிய ஐந்தையும் 7 நாள்கள் இடைவெளியில் சுழற்சி முறையில் சொட்டுநீர் மூலம் கொடுத்து வர வேண்டும் (அமுதக்கரைசல் 200 லிட்டர், ஜீவாமிர்தம் 200 லிட்டர். 200 லிட்டர் தண்ணீருடன் 20 லிட்டர் மூலிகைக்கரைசல், 200 லிட்டர் தண்ணீருடன் 2 லிட்டர் மீன் அமிலம், 200 லிட்டர் தண்ணீருடன் 20 லிட்டர் வேஸ்ட் டி-கம்போஸர். இவை ஒரு ஏக்கருக்கான அளவு)

4-ம் மாதம் செடிகளின் நடுக்கிளையை மட்டும் விட்டுவிட்டு, பக்கக் கிளை நுனிகளைக் கிள்ளிவிட (கவாத்து) வேண்டும். 6-ம் மாதத்தில் பூப்பூக்கும். இந்தப் பூக்களை உதிர்த்து விட வேண்டும் எனப் பெரும்பான்மையான விவசாயிகள் சொல்வார்கள். ஆனால், அப்போது ஒவ்வொரு செடியிலும் 5 முதல் 10 பூக்கள் மட்டும் விட்டு அவற்றின் காய்ப்புத் திறனைப் கூர்ந்து கவனிக்க வேண்டும். அந்தக் காய்ப்பை வைத்துப் பராமரிப்பைப் பரிசோதனை செய்துகொள்ளலாம். 8-ம் மாதம் செடிகளை முழுமையாகக் கவாத்து செய்து விட வேண்டும். பிறகு 10-ம் மாதத்தில் மீண்டும் பூப்பூக்கத் தொடங்கும். 18-ம் மாதத்துக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாகக் காய் காய்க்கத் தொடங்கும். 24-ம் மாதத்திலிருந்து நல்ல மகசூல் கிடைக்கும்.

கொய்யாவைப் பொறுத்தவரையில் கற்றாழைப் பூச்சித் தாக்குதல் அடிக்கடி இருக்கும். இலைகள் சுருண்டு காணப்படுவதுடன் இலைக்காம்புகள், இலைகளின் பின்புறம் எனப் பப்பாளியில் மாவுப் பூச்சியின் தாக்குதல் காணப்படுவதைப்போலக் காணப்படுவது இதன் அறிகுறி. 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீர், 50 கிராம் பெருங்காயத்தூள் ஆகியவற்றைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். இவை எப்போது வேண்டுமானாலும் தென்படும் என்பதால், 15 நாள்களுக்கு ஒருமுறை தெளித்து வரலாம். செடியில் காய்ப்புத் தொடங்கியதும் பழ ஈக்களின் தாக்குதல் இருக்கும். இதைத் தவிர்க்க, பூப்பூக்கத் தொடங்கியதும், ஒரு ஏக்கருக்கு 4 இடங்களில் விளக்குப் பொறி வைத்துக் கட்டுப்படுத்தலாம். 3 மாதத்துக்கு ஒரு முறை கன்றுக்கு 2 கிலோ வீதம் அடியுரமாகச் செறிவூட்டப்பட்ட தொழுவுரத்தை வைக்க வேண்டும்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் இதன் அளவை கூட்டிக்கொள்ள வேண்டும். மண்புழு உரத்தையும் அடியுரமாக வைக்கலாம். 4 மாதங்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். காய் பறிக்கும் போதே செடியின் நுனிக் கொழுந்துகளைக் கிள்ளி விட வேண்டும். காய்ப்பு குறைவது போலத் தெரியும்போது கவாத்து செய்து விடலாம். இயற்கை முறையில் முறையாகப் பராமரித்தால் 7 முதல் 10 ஆண்டுகள்வரை தொடர்ந்து காய் பறிக்கலாம்.

விவசாயமும் லாபமான தொழில்தான்!

“நூறு விவசாயிகளில் தொண்ணூறு விவசாயிகள், ‘விவசாயத்தில் லாபம் கிடைக்காது. விவசாயத்தில் இறங்கினால் வெறுங்கையோடுதான் திரும்பணும்’ எனச் சொல்றதைக் கேட்டிருக்கிறேன். இயற்கை விவசாயம் மேல நம்பிக்கை இல்லைன்னாலும், ரசாயன விவசாயத்துல உரம், பூச்சிக்கொல்லிக்கு ஆகுற செலவு அதிகம் என்பதை முதல்ல புரிஞ்சுக்கணும். அடுத்ததா நிலத்தோட தன்மையையும், தண்ணீரின் இருப்பையும் ஆராய்ந்த பிறகே என்ன பயிரைச் சாகுபடி செய்யணும்னு முடிவு செய்யணும். தண்ணீர்ப் பற்றாக்குறையால மகசூல் எடுக்க முடியாம கஷ்டப்படுற பல விவசாயிகளைப் பார்த்திருக்கிறேன். சாகுபடிக்கான பயிரைத் தேர்வு செய்த பிறகு, சுற்றுவட்டாரப் பகுதிகள்ல அதே பயிரைச் சாகுபடி செய்துட்டு வர்ற விவசாயிகளோட பண்ணையைப் பார்வையிடணும்.

இனிப்பான லாபம் தரும் தைவான் ரகக் கொய்யா!

அவங்களோட சாகுபடி முறை, விற்பனை வாய்ப்பைத் தெளிவாகக் கேட்டுத் தெரிஞ்சுக்கணும். குறைந்தபட்சம் 5 விவசாயிகளையாவது சந்திக்கிறது நல்லது. லாபகரமா சாகுபடி செய்றவங்க கடைப்பிடிக்குற யுக்தியையும், நஷ்டமடைஞ்ச விவசாயிகளோட தோல்விக்கான காரணத்தையும் ஆராய்ஞ்சு சரி செய்துக்கணும். சுற்றுவட்டாரப் பகுதிகள்ல சாகுபடி செய்யுற பயிரையே தேர்வு செய்யாம, சந்தையில தேவையும் விலையும் இருக்குற பயிரைத் தேர்வு செய்து சாகுபடி செய்யணும். இதையெல்லாம் செஞ்சா விவசாயமும் லாபகரமான தொழில்தான்” என்கிறார் திருப்பதி.

மூலிகைக் கரைசல்

இனிப்பான லாபம் தரும் தைவான் ரகக் கொய்யா!

ருக்கு, புங்கன், புளியமர இலை, வேம்பு, ஆடாதொடா, ஆவாரை, துத்தி, நொச்சி ஆகியவற்றில் தலா 20 கிலோவைத் தனித்தனியாகச் சேகரித்துக்கொள்ள வேண்டும். இவற்றை 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட தனித்தனி டிரம்களில், தனித்தனியாகப் போட வேண்டும். டிரம் நிறையும்படி தண்ணீர் ஊற்றி 7 நாள்கள் ஊற வைக்க வேண்டும். இந்த நாள்களில் அவற்றின் சாறு முழுவதும் தண்ணீருடன் கலந்துவிடும். இதுதான் மூலிகைக்கரைசல். இதில், ஒவ்வொரு டிரம்மிலும் தலா 30 லிட்டர் எடுத்து, தனியாக ஒரு டிரம்மில் கலந்து அதை அப்படியே சொட்டுநீர் மூலம் விட வேண்டும்.

செறிவூட்டப்பட்ட தொழுவுரம்

நிழலில் ஒரு பிளாஸ்டிக் தாளை விரித்து அதில் இரண்டு டன் மக்கிய தொழுவுரத்தைக் கொட்டிப் பரப்ப வேண்டும். அதில், சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றில் தலா 2 கிலோவும், அடுப்புச்சாம்பல் 100 கிலோவையும் சேர்த்து நன்கு கலவையாக்க வேண்டும். இக்கலவையின் மீது எருக்கு, புங்கன், புளியமர இலை, வேம்பு, ஆடாதொடா, ஆவாரை, துத்தி, நொச்சி ஆகியவற்றின் இலைகளைத் தலா 10 கிலோ போட்டு மூடி வைக்க வேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் இக்கலவையின் மீது தண்ணீர் தெளித்து வர வேண்டும். 15 நாள்களுக்கு ஒருமுறை கிளறி விட வேண்டும். 45 நாள்களுக்குப் பிறகு செறிவூட்டப்பட்ட தொழுவுரமாக மாறிவிடும். அதன்பிறகு இதை அடியுரமாகப் பயன்படுத்தலாம்.

கூடுதல் மகசூல், குறைவான சேதாரம்!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் பரமசிவனிடம் பேசினோம். “தைவான் ரெட், அர்க்கா கிரண் ரகங்களை விட தைவான் பிங்க் ரகக் கொய்யாவை 7 நாள்கள்வரை இருப்பு வைத்து விற்பனை செய்யலாம். நீண்ட தூரம் எடுத்துச் செல்வதும் எளிதாக இருக்கும். அதனால், வியாபாரிகளுக்குப் பழங்களில் சேதம் ஏற்படுவதும் குறைகிறது என்பதால் வியாபாரிகள் இந்த ரகத்தை விரும்புகிறார்கள். ‘தைவான் பிங்கி’ன் சுவை தேங்காய் துண்டைக் கடிப்பது போன்ற உணர்வும், இனிப்புச் சுவையும் இருப்பதால், கேரள மாநில மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. லக்னோ-49 ரகக் கொய்யாவை விட மென்மையாகவும் உள்ளது. அதிக காய்ப்பு தரும் ரகமாகவும் உள்ளது. அடர் நடவில் பயிரிட்டிருந்தால் மகசூல் அதிகமாகவே இருக்கும். அதே நேரத்தில் வெயில் காலத்தில் இதன் மகசூல் பாதியாகக் குறையும். இதன் எடை குறைந்தபட்சம் 200 கிராம் முதல் 500 கிராம் வரை இருக்கும். ஆண்டுக்கு ஒரு ஏக்கரில் 16 முதல் அதிகபட்சமாக 18 டன் வரை மகசூல் எதிர்பார்க்கலாம். அடர் நடவு என்றால், கூடுதலாக 2 டன் வரை எதிர்பார்க்கலாம். அதுவும் கவாத்துச் செய்து முறையாகப் பராமரித்து வந்தால் மட்டுமே சாத்தியம். கன்று நடவு செய்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த மகசூலை எதிர்பார்க்க முடியும்” என்றார்.

தொடர்புக்கு, பரமசிவன், செல்போன்: 99523 53724‘‘

சக்திகுமார், பரமசிவன்
சக்திகுமார், பரமசிவன்

’’கூடுதல் விலையால் சந்தை வாய்ப்புக் குறைவுதான்!

தூத்துக்குடி மாவட்டம், காயா மொழியில் இயற்கை முறையில் கொய்யா சாகுபடி செய்து வரும் சக்திகுமாரிடம் பேசினோம். “மற்ற ரகக் கொய்யாவைவிட ‘தைவான் பிங்க்’ ரகக் கொய்யா, அதிக இனிப்புச்சுவை உடையது. லக்னோ-49 ரகக் கொய்யா அதிகபட்சமாக ஒரு கிலோவுக்கு ரூ.30 வரைதான் விலை கிடைக்கிறது. ஆனால், தைவான் பிங்க் ரகத்தின் இனிப்புச் சுவைக்காகவே கூடுதல் விலை (ஒரு கிலோ ரூ.45 முதல் ரூ.60 வரை) கிடைக்கிறது. இந்த ரகக் கொய்யாவை ஒரு முறை சுவைத்தவர்கள் மீண்டும் மீண்டும் வாங்கிச் சுவைக்கத் தூண்டப்படுவார்கள். லக்னோ-49 ரகத்தைவிட விலை சற்றுக் கூடுதலாக இருப்பதால் உள்ளூரில் இதற்குச் சந்தை வாய்ப்பு சற்றுக் குறைவாகத்தான் உள்ளது” என்றார்.

தொடர்புக்கு, சக்திகுமார், செல்போன்: 94443 36353

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு