Published:Updated:

ஒன்றரை ஏக்கர் ரூ. 4,40,000... வளமான வருமானம் தரும் ஜீரோ பட்ஜெட் வாழை!

வாழைத்தோட்டத்தில் சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
வாழைத்தோட்டத்தில் சுரேஷ்

தொழில்நுட்பம்

‘விவசாயம் பரம்பரை பரம்பரையா செய்யுற தொழில்தான். தாத்தா, அப்பா செஞ்சதை நாமளும் அப்படியே பின்பற்றிட்டு வர்றோம். ஆனாலும் விவசாயத்துல ஜெயிக்க முடியலயே’ என்ற வேதனை இன்றைக்கும் பல விவசாயிகளுக்கு இருக்கிறது. தாத்தா, அப்பா செய்த விவசாயத்தைச் செய்கிறோம். ஆனால், அவர்கள் கடைப்பிடித்த பாரம்பர்ய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்காமல் ரசாயன விவசாய முறைகளைப் பின்பற்றுவதுதான் வெற்றியைப் பாதிக்கும் விஷயம் என்பதைப் பலரும் யோசிப்பதில்லை. இதைப் புரிந்துகொண்ட பலரும் இன்றைக்கு விவசாயத்தில் வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ். கணினித் துறையிலிருந்து கழனிக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்.
வாழையில் ஊடுபயிராக கொத்தவரை
வாழையில் ஊடுபயிராக கொத்தவரை

தேனி மாவட்டம், நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், அங்கு தனது நிலம் போகக் குத்தகை நிலத்திலும் சுபாஷ் பாலேக்கரின் இயற்கை விவசாயத்தைச் (ஜீரோ பட்ஜெட்) செய்து வருகிறார். தனது வயலில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் இவர், அதில் கற்றுக் கொள்ளும் விஷயங்களைச் சக விவசாயிகளிடமும் பகிர்ந்து கொள்கிறார். தேனி மாவட்டத்தில் சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் ஒரு குழுவாக இணைந்து, ஓர் அங்காடி அமைத்துத் தங்கள் பொருள்களை விற்பனையும் செய்து வருகிறார்கள். ஒரு காலை வேளையில் சுரேஷை அவரது தோட்டத்தில் சந்தித்தோம்.

வாழையில் ஊடுபயிராக வெண்டைக்காய்
வாழையில் ஊடுபயிராக வெண்டைக்காய்

‘‘இதுதான் பூர்வீகம். பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்ற குடும்பம். நான் படிப்பு முடிஞ்சதும் சென்னையில ஐ.டி கம்பெனியில வேலை பார்த்துகிட்டு இருந்தேன். பிறகு, பட்டப்படிப்பு படிச்சவங்க வேலைக்குப் போறது தொடர்பான பயிற்சி கொடுக்குற பயிற்சியாளர் வேலை பார்த்தேன். பல கல்லூரி களுக்குப் போவேன். அப்பவும் விவசாயத்தை விடல. பகுதி நேரமா விவசாயத்தையும் பார்த்துக் கிட்டுத்தான் இருந்தேன். 2012-ம் வருஷம் திடீர்னு உடல்நிலை ரொம்ப மோசமாகிடுச்சு. அப்போ ஊருக்கு வந்து ஓய்வுல இருந்தேன். யோசிக்க நிறைய நேரம் கிடைச்சது. அப்பதான் விவசாயத்தைப் பத்தி முழுமையா சிந்திக்க ஆரம்பிச்சேன். நாம ஏதோ தவறு செஞ்சுகிட்டு இருக்கோம்னு தோணுச்சு. ‘மண்ணுல ரசாயன உரம் கொடுக்கிறதுனால நிலம் மலடாகுது. அங்க இருக்குற பல நுண்ணுயிர்கள் அழிஞ்சுபோகுது. அந்த விளைச்சலை நாம சாப்பிடுறதால நமக்கும் நோய் வருது’னு நான் படிச்சது, கேட்டதெல்லாம் நினைவுக்கு வந்துச்சு. அதோட தண்ணி, காத்து எல்லாத்தையும் மாசுபடுத்துறோம்னு புரிஞ்சது. இனிமே நிலத்தில எந்த ரசாயனத்தையும், பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்தக் கூடாதுன்னு அப்ப முடிவு பண்ணினேன். இனிமே விவசாயத்தை முழுமையா செய்யலாம்னும் முடிவுக்கு வந்தோம்.

வாழைத்தோட்டத்தில் சுரேஷ்
வாழைத்தோட்டத்தில் சுரேஷ்

முதல்ல பாரம்பர்ய வேளாண்மையில ஈடுபட்டோம். அதுலயும் நிறைய சிரமங்களைச் சந்திச்சோம். முக்கியமா, எங்க நிலத்துல கிடை நிறுத்துன இடத்திலெல்லாம் அதிகமாகக் களை வர ஆரம்பிச்சது. களை எடுத்தே ஓய்ஞ்சுட்டோம். அந்த நேரத்திலதான் (2019) திருச்சியில 9 நாள்கள், சுபாஷ் பாலேக்கர் ஐயாவுடைய இயற்கை விவசாய நேரடி களப்பயிற்சி நடந்துச்சு. அதுல கலந்துகிட்டேன். அங்க என்னுடைய பல கேள்விகளுக்குப் பதில் கிடைச்சது. விவசாயத்தைப் பற்றி ஒரு தெளிவு கிடைச்சது. அதுக்குப் பிறகு, ஒரு புத்துணர்வோடு விவசாயத்தை ஆரம்பிச்சேன். அங்கயிருந்து வந்ததும் நாட்டு மாடு வாங்குனோம். இப்ப என்கிட்ட ரெண்டு நாட்டு மாடுகள் இருக்கு. அதுகளை வெச்சுதான், இவ்வளவு நிலத்திலயும் விவசாயம் செய்றோம். அப்ப இருந்து எங்க நிலங்களுக்கு ஜீவாமிர்தம் மட்டும்தான் கொடுத்துக்கிட்டு இருக்கோம். இன்னும் பாலேக்கர் சொன்ன அளவுக்குக்கூடக் கொடுக்கல. ஆனாலும், பயிர்கள் நல்லா இருக்கு’’ என்றவர், தனது சாகுபடி தொடர்பாகப் பேசத் தொடங்கினார்.

ஒன்றரை ஏக்கர் ரூ. 4,40,000... வளமான வருமானம் தரும் ஜீரோ பட்ஜெட் வாழை!

‘‘எனக்கு 5 ஏக்கர் நிலமிருக்கு. அதோட 7 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்திருக்கேன். மொத்தம் 12 ஏக்கர்ல விவசாயம் செய்றேன். பொதுவா எங்க பகுதியில வாழை விவசாயம் தான் அதிகமா செய்வாங்க. இது வருஷ வெள்ளாமை. நானும் வாழையைத்தான் பிரதான பயிரா சாகுபடி செய்றேன். பூவன், நாட்டு நேந்திரன், ஜி.9 வாழை ரகங்களை 10 ஏக்கர்ல சாகுபடி செய்றேன். மீதமுள்ள ஒரு ஏக்கர்ல வெள்ளைச் சோளமும், ஊடுபயிரா கொள்ளும் விதைச்சிருக்கேன். ஒரு ஏக்கர்ல பூசணிச் சாகுபடி பண்ணி, இப்ப அறுவடை நடந்துகிட்டு இருக்குது. நாட்டு நேந்திரன் வாழையில மஞ்சள், செண்டுமல்லி, உளுந்து ஊடுபயிரா பண்ணியிருக்கேன். முன்ன நான் ரசாயன விவசாயம் செய்யும்போது, வாழையில காய் முத்தியதும் சரியான நேரத்துல தார் வெட்டிடணும். இல்லைன்னா காய் பழமாகி, தண்ணி கொட்ட ஆரம்பிச்சிடும். ஆனால், இயற்கை விவசாயத்துல ஒரு அற்புதமான விஷயம், சரியான நேரத்துல தார் வெட்டலைன்னாலும் காய் ஊறிக்கிட்டே இருக்கும். எவ்வளவு பெருசாக முடியுமோ அவ்வளவு பெருசாகும். அதுக்குப் பிறகு வெடிக்க ஆரம்பிக்கும்.

இயற்கை விவசாயத்தில் விளைந்த வாழைத்தார்
இயற்கை விவசாயத்தில் விளைந்த வாழைத்தார்

இயற்கை விவசாயத்துல செலவு ரொம்பக் குறைவு. இந்த வருஷம், 10,000 தார் அறுவடை நேரத்தில, லாக்டௌன் அறிவிச்சிட்டாங்க. ஒண்ணுமே பண்ண முடியல. ஏற்கெனவே காற்று பாதிப்புனால நிறைய மரங்கள் சாய்ஞ்சு சேதம் அடைஞ்சு இருந்துச்சு. மீதி இருந்த தார்களைக் குறைஞ்ச விலைக்குதான் விற்பனை செய்ய முடிஞ்சது. நிறைய தாரை அறுவடை செய்யாம விட்டுட்டேன். பழங்கள் பழுத்து நிலத்தில விழுந்துருச்சு.

நஷ்டத்தைக் குறைத்த
இயற்கை வேளாண்மை

வாழையில் ஊடுபயிராக மொச்சை
வாழையில் ஊடுபயிராக மொச்சை

இது மிக மோசமான நிலைமை. இந்த நிலைமையில ரசாயன விவசாயம் செஞ்சிருந்தா, எனக்கு 15 லட்சம் ரூபா வரைக்கும் நஷ்டம் ஆகியிருக்கும். ஆனா, மறுதாம்பு வாழை, இயற்கை விவசாயம் இது மாதிரியான காரணங்களால 7-8 லட்சம் ரூபா நஷ்டம் குறைஞ்சது. போன வருஷம் 5,000 தார் மூலமா 20 லட்சம் ரூபாய் கிடைச்சது. அதனால கொரோனாவுல ஏற்பட்ட நஷ்டத்தைச் சமாளிக்க முடிஞ்சது. என்னைப் பொறுத்தவரைக்கும் இயற்கை விவசாயம், பெரிய நஷ்டத்திலிருந்து காப்பாற்றும், மற்ற நேரங்கள்ல அள்ளிக் கொடுக்கும்’’ என்றவர் தற்போதைய பயிர்கள் பற்றி விளக்கினார்.

காற்றில் சாய்ந்த வாழை
காற்றில் சாய்ந்த வாழை

ஏக்கருக்கு ரூ.2,00,000 நிச்சயம்

“நான் வாழையில ஊடுபயிர் செய்யாம இருக்க மாட்டேன். இப்ப நாட்டு பூவன் வாழைக்கு இடையில சின்ன வெங்காயம், தக்காளி, வெண்டை, கொத்தவரைச் சாகுபடி பண்ணியிருக்கேன். ஏற்கெனவே சின்ன வெங்காயம் போட்டு எடுத்திருக்கேன். இன்னொரு வயல்ல மஞ்சளை ஊடுபயிரா சாகுபடி செஞ்சிருக்கேன். பூசணி அறுவடை நடந்துகிட்டு இருக்கு. இந்த ஒரு வருஷம்தான் சுபாஷ் பாலேக்கர் இயற்கை வேளாண்மை முறையில விவசாயம் செய்றோம். அதுக்கு முன்ன பாரம்பர்ய வேளாண்மையில செய்யும் போது நாட்டு நேந்திரன் வாழையில ஒரு தார் சராசரியா 12 கிலோ எடை கிடைச்சது. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் கிடைச்சது. ஒன்றரை ஏக்கர்ல 1,500 தார்கள். ஒரு தாருக்கு 360 ரூபாய் வீதம் 5,40,000 ரூபாய் கிடைச்சது. அதுல 1,00,000 செலவுப் போக 4,40,000 ரூபாய் லாபமாகக் கிடைச்சது. என்னைப் பொறுத்தவரைக்கும் வாழையில ஏக்கருக்கு 2,00,000 ரூபாய் நிச்சயம் லாபம் கிடைக்கும். இது என்னோட அனுபவம்’’ என்றவர் நிறைவாக,

வாழையில் ஊடுபயிராக தட்டைப் பயறு
வாழையில் ஊடுபயிராக தட்டைப் பயறு

‘‘எங்க பகுதியில திருட்டு ஜாஸ்தி. ஜீவாமிர்தம் தயார் செய்ற பேரலைக்கூடத் தூக்கிட்டுப் போயிடுறாங்க. வாழைத்தாரை வெட்டிகிட்டுப் போயிடுவாங்க. அதை யெல்லாம் தாண்டித்தான் சாகுபடி செய்ய வேண்டியிருக்கு. இருந்தாலும் இயற்கை வேளாண்மை மனசுக்கு நிம்மதியைக் கொடுக்குது. குடும்ப ஆரோக்கியமும் நல்லா இருக்கு’’ என்று விடைகொடுத்தார் சுரேஷ்.

தொடர்புக்கு, சுரேஷ், செல்போன்: 98406 73437.

ஒருவித்திலை... இருவித்திலை!

ருவித்திலை, இருவித்திலை தாவரம் குறித்துப் பேசிய சுரேஷ், ‘‘இயற்கை விவசாயத்துல ஒருவித்திலை, இருவித்திலைத் தாவரம் பற்றி விவசாயிகள் நிச்சயம் தெரிஞ்சுக்கணும். ஒருவித்திலைத் தாவரம் பக்கத்துல இருவித்திலைத் தாவரம் இருந்தா, அது ஒருவித்திலைத் தாவரம் சிறப்பாக வளர உதவியா இருக்கும். அதை நான் என்னோட வயல்லயே சோதனை செஞ்சு பார்த்தேன். ஒரு வயல்ல வாழை நடவு பண்ணினதும், 5 பார்கள்ல நாட்டு மல்லி, 5 பார்கள்ல கொத்தவரை நடவு பண்ணினேன்.

இதுல வாழை ஒருவித்திலை. மல்லி, கொத்தவரை இருவித்திலை. இந்த இருவித்திலை தாவரம் காற்றுல இருக்க நைட்ரஜனை எடுத்துத் தனக்கும் பயன்படுத்திக்கிட்டு பக்கத்துல இருக்க ஒருவித்திலை பயிர்களுக்கும் கொடுக்கும். அதோட நிலத்துக்குச் சிறந்த உயிர் மூடாக்காவும் இருக்கும். என் வயல்லயும் அதுதான் நடந்துச்சு. கொத்தவரை வயல்ல இருந்த வாழை வளர்ச்சி சிறப்பா இருந்துச்சு. அதுக்கு அடுத்த பார்ல வெண்டி நடவு செஞ்சிருந்தேன். அது ஒருவித்திலை தாவரம். வாழை, வெண்டி ரெண்டு ஒருவித்திலை தாவரமும் பக்கம் பக்கமா இருந்ததுனால வாழை வளர்ச்சி குன்றிப் போச்சு. இதை நான் என்னோட அனுபவத்துல பார்த்தேன்.

அதேபோல இன்னொரு பாத்தியில இருவித்திலை தாவரமான தட்டைப்பயறு நடவு செஞ்சேன். அங்க வாழை வளர்ச்சி அருமையா இருந்துச்சு. பாலேக்கர் ஐயா, சிறந்த ஊடுபயிரா பரிந்துரை செய்றது தட்டைப் பயறைத்தான். இது சிறந்த உயிர் மூடாக்கு. அதோட இதன் பயறு ஜீவாமிர்தம் தயாரிக்கப் பயன்படுத்திக்கலாம். அதனால வாழை, கரும்புனு எந்தப் பயிரா இருந்தாலும் தட்டைப்பயறை ஊடுபயிரா சாகுபடி செய்யலாம்’’ என்றார்.

வயது, பட்டம் முக்கியம்!

“ஜி.9 வாழை விவசாயிகள் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், கன்று வாங்கும்போது தரமான கன்றுகளைப் பார்த்து வாங்கணும். ஒரே வயசுல இருக்கக் கன்றுகளா இருக்கணும். அதே மாதிரி சரியான பட்டத்துல நடவு செய்யணும். நான் பட்டம் மாற்றி நடவு பண்ணிட்டேன். தார் போட ஆரம்பிச்சப்ப தென்மேற்குப் பருவக்காற்று ஆரம்பிச்சது. தேனி மாவட்ட வாழை விவசாயிகளுக்கு இந்தக் காற்று பத்தித் தெரியும். மரத்தைச் சாய்க்கிறதோடு நிக்காது. மிச்சம் மீதி இருக்க மரங்கள்லயும் காய் பருக்க விடாது. எனக்கும் அதுதான் நடந்துச்சு. பாதி மரம் தார் வெட்டும்போதுதான் சில மரங்கள் பூத்துச்சு. அதுனால வயது, பட்டம் எல்லாம் ரொம்ப முக்கியம்’’ என்கிறார் சுரேஷ்.

பக்கக் கன்றைத் தேர்வு செய்யும் முறை!

“வாழை நடவு செய்த 3 முதல் 4 மாசங்கள்ல பக்கக் கன்றுகள் முளைக்க ஆரம்பிக்கும். அதைத் தொடர்ந்து கன்றுகள அறுத்து விட்டுகிட்டே இருக்கணும். வாழை குலை தள்ள ஆரம்பிக்கும் நேரத்தில ஒரு பக்கம் சாயும். அப்போ எந்தப் பக்கம் சாயுதோ, அதுக்கு நேர் எதிர் பக்கத்துல இருக்கிற பக்கக்கன்றுகளை விட்டுடணும். மத்த கன்றுகளை அறுத்துவிட்டுகிட்டே இருக்கணும்.

குலை கொஞ்சம் கொஞ்சமா எடை கூடக் கூட மரம் சாய ஆரம்பிக்கும். அப்ப எதிர் திசையில இருக்கப் பக்கக் கன்றுதான் குலை தள்ளிய மரத்துக்கு வேர் பிடிப்புல உதவியா இருக்கும். குலை வெட்டிய பிறகு, மரத்தைச் சிலர் வேரோடு வெட்டிடுறாங்க. ஆனா, அப்படிச் செய்யாம மரத்துல கிளையை வெட்டிட்டு அப்படியே விட்டுட்டா போதும். அது கொஞ்சம் கொஞ்சமா காய ஆரம்பிக்கும். தாய் மரத்துல இருக்கச் சத்துகளை எடுத்துக்கிட்டு, ரெண்டாவது தலைமுறை மரம் செழுமையா வளரும்” என்கிறார் சுரேஷ்.

முக்கோண நடவு!

முக்கோண நடவு குறித்துப் பேசிய சுரேஷ், “நான் ஜிக்ஜாக் முறையில (முக்கோண வடிவில்) வாழை சாகுபடி செஞ்சிருக்கேன். இதுல செடிக்குச் செடி 6 அடியும், வரிசைக்கு வரிசை 4 அடியும் போதும். இதனால வழக்கமா ஒன்றரை ஏக்கர்ல நடவு செய்ற வாழைகளோட எண்ணிக்கையைவிட அதிகமான (1,800 கன்றுகள்) எண்ணிக்கையில ஒரே ஏக்கர்ல நடவு செய்யலாம். அதுபோல வாழையில ஊடுபயிர் ரொம்ப முக்கியம்” என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ஒன்றரை ஏக்கர் ரூ. 4,40,000... வளமான வருமானம் தரும் ஜீரோ பட்ஜெட் வாழை!

அன்பார்ந்த வாசகர்களே...

‘ஒன்றரை ஏக்கர், ரூ.4,40,000 வளமான வருமானம் தரும் ஜீரோ பட்ஜெட் வாழை’ என்ற கட்டுரை இந்த இதழில் அட்டைப்பட கட்டுரையாக இடம்பெறுள்ளது. அந்தத் தோட்டத்தை வாசகர்கள் நேரலையில் பார்வையிடலாம். 19.12.2020 அன்று காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை தோட்டத்திலிருந்து நேரலை நிகழ்ச்சி நடைபெறும். அதில் கலந்துகொண்டு உங்கள் சந்தேகங்களைச் சம்பந்தப்பட்ட விவசாயியிடம் கேட்டு தெளிவு பெறலாம்.

இந்த லிங்க் மூலமும் கட்டணம் செலுத்தலாம் : https://bit.ly/3gnnGLK

மேலும் விவரங்களுக்கு வாட்ஸ் அப் எண் : 97909 90404

ஒன்றரை ஏக்கர் ரூ. 4,40,000... வளமான வருமானம் தரும் ஜீரோ பட்ஜெட் வாழை!

கட்டணம் செலுத்த இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யவும்.