Published:Updated:

கஜா புயல், ஊரடங்கு... நசுங்கிய பொருளாதாரம் நம்பிக்கை கொடுத்த ஆடு வளர்ப்பு!

ஆடுகளுடன் முத்துக்குமரன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆடுகளுடன் முத்துக்குமரன்

கால்நடை

ஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெரியக்கோட்டை கிராமம்.

2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலுக்கு இந்த ஊரும் தப்பவில்லை. ஆயிரக்கணக்கான தென்னை மரங்களைப் புயல் சாய்த்துவிட்டு சென்றதால் பெரும்பாலான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்தனர். தென்னை மரங்களையே குடும்ப வருமானத்தின் முதுகெலும்பாகக் கொண்ட முத்துக்குமரன் என்ற விவசாயி, இதனால் பெரும் துயரத்துக்கு ஆளானார்.

கொட்டகை, வேலிமசால்
கொட்டகை, வேலிமசால்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பெற்றோரின் மருத்துவச் செலவு, மகனின் படிப்பு எனப் புயல் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மீள்வதற்காக வேறு தொழில் செய்ய முடிவு செய்து ஆடு வளர்ப்பில் இறங்கினார் முத்துக்குமரன். அது நல்ல பலனைக் கொடுக்கவும் தற்போது முழு மூச்சாக ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். கஜா பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், அடுத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது ஊரடங்கு. ‘இந்த இக்கட்டான நேரத்தில் கஷ்டத்தில் மூழ்காமல் கரைசேர வைத்துள்ளது ஆடு வளர்ப்பு’ என்கிறார் முத்துக்குமரன்.

ஒரு காலை பொழுதில் முத்துக்குமரனைச் சந்தித்துப் பேசினோம். “பெரியக்கோட்டையில எங்க 5 ஏக்கர் நிலத்தில 450 தென்னை மரங்கள் இருந்துச்சு. அதிலிருந்து வரக்கூடிய வருமானத்தில குடும்பம் நிம்மதியா இருந்தது. பெத்த பிள்ளையாட்டம் தென்னை மரங்களை கவனிச்சுசிட்டு வந்தேன். வீட்டைவிட தோப்பிலதான் ரொம்ப நேரம் இருப்பேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தென்னை மரங்களும் நல்ல முறையில காய்ச்சது. 45 நாளுக்கு ஒரு முறை தேங்காய் வெட்டு நடக்கும். அது மூலமா 80,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதனால எந்த சிரமமும் இல்லாம, வாழ்க்கை ஓடிட்டு இருந்தது. அப்போ திடீர்னு ஏற்பட்ட கஜா புயல்னால தென்னை மரங்கள் சாய்ஞ்சிடுச்சு. அது எங்கள மட்டுமல்லாமல் எங்க கனவுகளையும் களைச்சுப் போட்டுடுச்சு. என் தோப்புல இருந்த 262 தென்னை மரங்களும் வேரோட சாய்ஞ்சுப் போச்சு. மிச்சமிருந்த மரங்களும் தலை இல்லாத முண்டம் மாதிரி மொட்டையாக நின்னுச்சு. ஒரு வழியாகத் தேற்றிக்கொண்டு அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சேன். நம்மை நம்பி வயசான பெற்றோர் இருக்காங்க. அவர்களுக்கு மாசம் 5,000 ரூபாய் ஆஸ்பத்திரி செலவுக்கு வேணும். என் மகன் சி.பி.எஸ்.இ ஸ்கூல்ல படிக்கிறான். அந்த செலவு இருக்குது. அதோட குடும்பச் செலவு எல்லாத்தையும் சமாளிக்க மாசம் ஒரு தொகை வேணும்.

ஆடுகளுடன் முத்துக்குமரன்
ஆடுகளுடன் முத்துக்குமரன்

ஆடு வளர்த்தா, நல்ல லாபம் பார்க்கலாம்னு தோணுச்சு. அந்த நேரத்துல விழுந்த தென்னை மரங்களுக்கு நிவாரணத் தொகையா அரசு கொடுத்த 2 லட்சம் ரூபாய் கைக்கு வந்துச்சு. உடனே ஆடு வளர்ப்புல இறங்கிட்டேன். அதுக்காக ரெண்டு ஏக்கர் நிலத்தை ஒதுக்கினேன். கஜாவுல சாய்ஞ்ச என்னோட தோப்புல தென்னை, தேக்கு மரங்களை அறுத்துப் பலகையாக்கினேன். 30 சென்ட்ல பரண் அமைச்சேன். வீட்டு மாடியிலிருந்து கஜா தூக்கி வீசுன தகர சீட்டை வெச்சு, மேற்கூரை அமைச்சேன். இதுக்காகப் பெருசா செலவு செய்யக் கூடாதுனு உறுதியா இருந்தேன். கட்டையடிக்க பயன்படும் ஆணி, ஆள்கூலி மட்டும்தான் செலவு. மொத்தம் 20,000 ரூபாயில கொட்டகை அமைச்சுட்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிறகு, 2019-ம் வருஷம், ஜனவரி மாசம் பழனிக்குப் பக்கத்துல இருக்க ஆயக்குடிக்குப் போய், தலைச்சேரி, சேலம் கருப்பு, நாட்டு ரகம்னு கலந்து, 10 தாய் ஆடுகள், ஒரு கிடாய், 30 குட்டிகளை வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சேன். ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில நடந்த ஆடு வளர்ப்பு பயிற்சியில கலந்துகிட்டு, பல நுட்பங்களைத் தெரிஞ்சு கிட்டேன். அங்கேயே தீவனப் பயிருக்கான வேலிமசால், முயல் மசால், தக்கைப் பூண்டு விதைகளைக் கொடுத்தாங்க. அதைக் கொண்டு வந்து விதைச்சேன். அதோட 5,000 சூப்பர் நேப்பியர் தீவன விதைக்கரணைகளை வாங்கிட்டு வந்து நட்டேன். கோ.எஃப்.எஸ்.29 தீவனச் சோள விதையை விதைச்சேன். அதுக வளர்ந்த பிறகு, தீவனமாகக் கொடுத்தேன். அதுவரைக்கும் என்கிட்ட இருந்த கடலைக் கொடி, கிளுவை, வேப்பிலை, கிளரிசீடியா இலைகளை தீவனமாகக் கொடுத்தேன். இதுக்காக என் இடத்தைச் சுத்தி கிளுவை உயிர்வேலியை உருவாக்குனேன். இதனால ஆடுகளுக்கு விதவிதமான தீவனங்கள் கிடைச்சது. ஆடுக வேகமாகக் கொழுகொழுனு வளர்ந்துச்சு. நோய் வராம இருக்க, மழைக்காலத்துல கடலைக் கொடி, வைக்கோல் மாதிரியான உலர் தீவனத்தைக் கொடுத்தேன். அதோட, ஆடுக இருக்குற இடத்துல ஈரப்பதம் இல்லாம பார்த்துக்கிட்டாலே போதும். மழைக்காலத்துல வர்ற நோய்கள்ல இருந்து ஆடுகளைக் காப்பாத்திடலாம்.

ஆட்டை எடை போடுதல்
ஆட்டை எடை போடுதல்

ஜனவரி மாசம் ஆடு வளர்ப்பை ஆரம்பிச்சேன். ஜூன் மாசம் 10 தாய் ஆடுகளும் 18 குட்டிகளைப் போட்டுச்சு. அதே நேரம், குட்டியா வாங்கிட்டு வந்த 30 உருப்படியும் பெரிய ஆடுகளாக வளர்ந்திடுச்சு. அதுல 15 ஆடுகளை வித்துவிட்டேன். ஆட்டை குத்து மதிப்பா வித்தா நல்ல விலை கிடைக்காது. அதனால உயிர் எடை கிலோ 300 ரூபாய்னு விற்பனை செஞ்சேன். ஒரு ஆடு 4,500 ரூபாய்க்கு மேல வரைக்கும் விலை போனது. அந்த வகையில 15 ஆடுகள் விற்பனை மூலமா 80,000 ரூபாய் வருமானம் கிடைச்சது’’ என்றவர்,

‘‘தரகு ஆட்கள்கிட்ட விற்பனை செய்யாம, நானே நேரடியா விற்பதை செஞ்சதால லாபம் அதிகமாச்சு. கொரோனா ஊரடங்கு ஆரம்பிச்ச பிறகு, மறுபடியும் 15 ஆடுகளை வித்தேன். 80,000 ரூபாய்க்கு மேல விற்பனை ஆச்சு. இப்ப 10 பெரிய ஆடுக, 20 குட்டிக நிக்குது. இதுகளை வெச்சுதான் பண்ணையைப் பெருசாக்கணும். எப்படியோ, கஜாவுல விழுந்த அடியைக் கொஞ்சம் கொஞ்சமா மறக்கடிச்சுட்டு இருக்குது ஆடுங்க. இது மூலமா தோராயமாக வருஷம் 75,000 ரூபாய்க்குக் குறையாம, இப்போதைக்கு வருமானம் கிடைக்குது. இதுபோகப் போக அதிகமாகும்’’ என்றார் நிறைவாக.

தொடர்புக்கு, முத்துக்குமரன், செல்போன்: 95979 99510.

இனப்பெருக்க காலம் கவனம்!

டு வளர்ப்பில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் பற்றி முத்துக்குமரன் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார். “ஜூன், ஜூலை மாசங்கள்ல இனப்பெருக்கத்துக்காக ஆடுகளைக் கிடாய்களிடம் சேர விடக்கூடாது. அந்தச் சமயத்தில் ஒன்று சேர்ந்தால் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்கள்ல குட்டியை ஈன்றெடுக்கும். அது குளிர்காலம் என்பதால் இறப்பு விகிதம் அதிகமாகும். ஆகஸ்ட் மாதத்தில் இனப்பெருக்கத்துக்கு விட்டால் இந்தப் பிரச்னையிருக்காது. அத்துடன் ஒரே தாய்வழி வந்த கிடாய்களைத் தொடர்ச்சியாக ஆடுகளுடன் சேர விடுவதால் ஊனமுடைய குட்டிகளாக பிறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, வெளி கிடாய்களையே இனப் பெருக்கத்துக்குப் பயன்படுத்த வேண்டும். கொட்டகை அமைப்பதில் பெரிய முதலீடு செய்யக்கூடாது. ஒரே நேரத்தில் நிறைய ஆடுகளை வாங்கி வளர்க்கக் கூடாது.’’