Published:Updated:

ஆடு முதல் யானை வரை... நூற்றுக்கணக்கான கால்நடைகள்... ஓர் அதிசய பண்ணை!

யானையுடன் கம்பீரமாக நிற்கும் தாஜ்தீன்
பிரீமியம் ஸ்டோரி
யானையுடன் கம்பீரமாக நிற்கும் தாஜ்தீன்

கால்நடை

ஆடு முதல் யானை வரை... நூற்றுக்கணக்கான கால்நடைகள்... ஓர் அதிசய பண்ணை!

கால்நடை

Published:Updated:
யானையுடன் கம்பீரமாக நிற்கும் தாஜ்தீன்
பிரீமியம் ஸ்டோரி
யானையுடன் கம்பீரமாக நிற்கும் தாஜ்தீன்

கால்நடை வளர்ப்பு என்று சொன்னாலே... ஆடு, மாடு, கோழிகள்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், ஈரோடு மாவட்டம் கொடுமுடி யைச் சேர்ந்த தாஜ்தீன், தனக்குச் சொந்தமான அரை ஏக்கர் நிலத்தில் ஆடு, மாடு, கோழி களோடு கழுதை, நாய், ஒட்டகம், குதிரை, யானை எனப் பலதரப்பட்ட வளர்ப்புப் பிராணி களையும் வளர்த்து வருவது ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது.

கொடுமுடி நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற மகுடேஸ்வரர் கோயிலில் இருந்து கரூர் செல்லும் வழியில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது ‘தாஜ்’ கால்நடைப் பண்ணை. இப்பண்ணையின் மூலம் தாஜ்தீன் நிறைவான வருமானம் பார்த்து வருகிறார்.

பண்ணையைப் பார்க்க ஆர்வத்தோடு பண்ணைக்குள் நுழைந்ததும் பலதரப்பட்ட பிராணிகளும் விதவிதமான குரலில் குரலெழுப்பின. தாஜ்தீன் ஆணையிட்டதும், அத்தனையும் அமைதியாயின.

இன்முகத்துடன் நம்மை வரவேற்ற தாஜ்தீன், தன்னுடைய சிறு வயதில் தொடங்கிய செல்லப் பிராணிகளுக்கும் தனக்குமான பந்தத்தை நெகிழ்ச்சியுடன் விவரிக்கத் தொடங்கினார்.

கழுதைகளுடன்
கழுதைகளுடன்

“என் கூடப் பிறந்தவங்க மொத்தம் 16 பேர். ரெண்டாம் வகுப்பு வரைக்கும்தான் படிச்சேன். கொடுமுடியில என் பெற்றோர் கறிக்கடை வியாபாரம் பண்ணிகிட்டு இருந்தாங்க. படிப்பைப் பாதியிலேயே நிறுத்திட்டு, எட்டு வயசுலயே வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். சின்ன வயசுல இருந்தே செல்லப் பிராணிகள் மேல எனக்கு பிரியம் அதிகம். அப்போ எங்க ஊர் திருவிழாவுக்கு யானையைக் கொண்டு வருவாங்க. அதோட உசரத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போவேன். வீட்டுல சொல்லிக்காம அந்த யானைப் பாகனோடு போயிட்டேன். அந்த யானையின் உரிமையாளர் மதுரைக்காரர். அவர் வீட்டுலயே சில காலம் தங்கியிருந்து, யானையை எப்படியெல்லாம் பராமரிக் கணும்னுங்கறதை கத்துக்கிட்டேன்.

கொஞ்ச நாள்கள் கழிச்சு மறுபடியும் எங்க வீட்டுக்கே வந்துட்டேன். 20 வயசுலயே சொந்தமா யானை வாங்கினேன். அதுக்கப் புறமா, ஒட்டகம், ஆடு, மாடு, எருமைனு பல விதமான பிராணிகளையும் வளர்க்க ஆரம் பிச்சேன். கொஞ்ச காலம் வளர்த்து விற்பனை செய்றது, விசேஷ நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு அனுப்பி வருமானம் பார்க்குறதுனு என் னோட வாழ்க்கை இப்படி ஓட ஆரம்பிச்சது. இது சம்பந்தமா, இந்தியா முழுக்கப் பல மாநிலங்களுக்குச் சுத்தியிருக்கேன்” என்று பெருமிதத்துடன் சொன்னவர், பண்ணையை வலம் வந்தபடியே இங்கு வளர்க்கப்படும் கால்நடைகளைப் பட்டியலிட்டார்.

பண்ணையில் கால்நடைகள்
பண்ணையில் கால்நடைகள்

கோழிகளில் ஐந்து ரகங்கள்
ஆடுகளில் நான்கு ரகங்கள்


“கின்னிக்கோழி, வான்கோழி, சிறுவிடை, பெருவிடை, கடக்நாத்னு அஞ்சு ரகத்துலயும் மொத்தமா 70-க்கும் மேற்பட்ட கோழிகள் இருக்கு. 20 வாத்துகளும் இருக்கு. நாட்டுக் கோழிகளோட முட்டைகளையும், வாத்து முட்டைகளையும் பண்ணைக்கே வந்து மக்கள் வாங்கிக்கிட்டுப் போறாங்க. தலைச் சேரி வெள்ளாட்டு ரகங்களோடு, வட மாநிலத்தைச் சேர்ந்த அஸ்ஸாமி, ஜமுனா பாரினு 40-க்கும் மேற்பட்ட ஆடுகள் இங்க இருக்கு. 2 அடி உயரம் மட்டுமே வளரக் கூடிய அஸ்ஸாமி வகை ஆடுகளோட உடல்பகுதி வெள்ளையாவும், கண், தடை, கால் பகுதிகள் கறுப்பாவும் இருக்கும். இந்தப் பண்ணைக்கு வரக்கூடியவங்க, அஸ்ஸாமி வகை ஆடுகளை ஆச்சர்யமா பார்ப்பாங்க. தமிழ்நாட்டு வகை ஆடுகளை மட்டுமே பார்த்தவங்களுக்கு, அதிக உயரமும், நீளமான காதும் உள்ள ஜமுனாபாரி ஆடுகளும்கூட புதுமையானதாகத்தான் தெரியுது. அழகுக்கு வளர்க்குறதுக்காக, இந்த ரெண்டு ரக ஆடுகளையுமே பலர் விரும்பி வாங்கிக்கிட்டுப் போறாங்க.

காங்கேயம் முதல் கலப்பினம் வரை

காங்கேயம், பர்கூர் குட்டை, தஞ்சாவூர் குட்டை, புங்கனூர் குட்டை உள்பட பல வகையான நாட்டு மாடுகள் வளர்க்குறேன். இதுமட்டுமல்லாம, கலப்பின மாடுகளும் வளர்க்குறேன். பல ரகங்கள்லயும் சேர்த்து மொத்தம் 50 மாடுகள் இருக்கு. ரெண்டு நாட்டு எருமைகளும் வளர்த்துக்கிட்டு இருக்கேன்.

டைசன், லாப்ரடர் ரக நாய்கள்

ராஜபாளையம், ஜெர்மன் செப்பர்டு, பாமரேனியன், டைசன், லாப்ரடர் வகை களைச் சேர்ந்த 18 நாய்கள் இருக்கு.

ஆடுகள்
ஆடுகள்

அங்க லட்சண சுழிகள் பார்த்துக் குதிரைகள் வாங்கணும்

நாட்டு ரகத்துல ஆறு குதிரைகளும், காட்டு வாடி ரகத்துல 10 குதிரைகளும் வெச்சிருக்கோம். நெத்தி, காது, கழுத்துலனு குதிரையோட உடல்ல பல இடங்கள்லயும் சுழி இருக்கும். அதுல ‘தப்பு சுழி’ங்கிற வேண்டாத சுழிகளைக் கணக்கிடாம, குறிப்பிட்ட சில அங்க லட்சண சுழிகளைப் பார்த்துதான் குதிரைகளை வாங்கணும். புதுசா குதிரைகள் வாங்கி வளர்க்க விரும்புறவங்க, இந்த மாதிரியான விஷயங் களைத் தெரிஞ்சுக்குறதுக்காகவே எங்க பண்ணைக்கு வருவாங்க. புல்லு, கோதுமை, நெல், கொள்ளுனு பலவிதமான உணவுகளைக் குதிரைகளுக்குக் கொடுக்கிறோம்.

அரச மர இலைகளை ஒட்டகம் விரும்பி சாப்பிடும்

கொரோனா காலகட்டத்துக்கு முன்னாடி 30 ஒட்டகங்கள் வெச்சிருந்தோம். கல்யாண ஊர்வலங்களுக்கு வாடகைக்கு அனுப்புறது மூலமா நிறைய வருமானம் வந்துகிட்டு இருந்துச்சு. ஒட்டகத்தோட பால் ஒரு லிட்டர் குறைந்தபட்சம் 900 ரூபாய்னு விற்பனை செஞ்சுகிட்டு இருந்தேன். அது மூலமாவும் வருமானம் வந்துச்சு. கொரோனா சமயத்துல, இந்த வருமானம் எல்லாம் நின்னுபோயிடுச்சு. தீவனம் போட்டு கட்டுப்படியாகாததுனால, நிறைய ஒட்டகங்களை வித்துட்டேன். இப்போ ஆறு ஒட்டகங்கள் இருக்கு. பொதுவா ஒட்டகங்கள் வெப்ப மண்டல பகுதிகள்ல வளரக்கூடியது. ஆனாலும்கூட நம்மூர் சீதோஷ்ண நிலையிலயும் ஆரோக்கியமா வளருது. கருவேல மர இலை, வேப்பிலை, ஆலமர இலை, அரசமர இலைகளையும் ஒட்டகங்கள் விரும்பி சாப்பிடுது. வேக வெச்ச கோதுமை, அவல், கோதுமைத் தவிடு... மாதிரியான உணவுகளையும் கொடுப்போம்.

ஒட்டகங்கள்
ஒட்டகங்கள்

கழுதைப் பால்... 300 மி.லி 500 ரூபாய்

குழந்தைகளுக்குக் கழுதைப் பால் கொடுத்தா, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக் கும்னு நம்பப்படுறதுனால, இதுக்காகப் பலரும் எங்க பண்ணையை நாடி வர்றாங்க. நாட்டு ரகத்தைச் சேர்ந்த 15 கழுதைங்க இங்க இருக்கு. ரெண்டு ஆண் கழுதைங்க. 13 பெண் கழுதைங்க. இதுல அஞ்சு கழுதைங்க கறவையில இருக்கு. ஒரு கழுதைகிட்ட இருந்து தினமும் ரெண்டு வேளையும் தலா 250 - 300 மி.லி பால் கறக்கலாம். கழுதைப்பால் கேட்டு வர்றவங்க கண்ணு முன்னாடியேதான் பாலைக் கறந்து கொடுப்போம். கூடக்குறைய எவ்ளோ பால் வந்தாலும், ஒரு கழுதைகிட்ட இருந்து ஒரு முறை கறக்கிற பாலை 500 ரூபாய்க்குக் கொடுக்கிறோம். மற்ற கால்நடை களை ஒப்பிடும்போது கழுதைங்களைப் பராமரிக்குறது ரொம்பவே எளிது.

மீனாட்சிக்கு வயது 57

என்கிட்ட ரெண்டு யானைகள் இருக்கு. ரெண்டு யானையோட பெயருமே மீனாட்சிதான். 57 வயசான மீனாட்சியை இந்தப் பண்ணையில பராமரிக்கிறோம். அந்த மீனாட்சியைக் குளிப்பாட்ட என் பையன் ஆத்துக்குக் கூட்டிட்டுப் போயிருக்கான். 51 வயசாகிற இன்னொரு மீனாட்சியை எங்க வீட்டுக்குப் பக்கத்துலயே தனியா பராமரிக்கிறோம்.

மாடுகள்
மாடுகள்

ஒரு ஏக்கரில் பசுந்தீவனம்

அதிக எண்ணிக்கையில கால்நடைகள் வளர்க்கிறதால, நிறையப் பசுந்தீவனம் தேவைப்படும். இதுக்காக எங்களுக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்துல கோ.4 ரகத் தீவனப் புல் சாகுபடி பண்ணிக்கிறோம். சோளத்தட்டை, வரகுத்தட்டை, கரும்புதோகைனு இதர தீவனங்களை வெளியில வாங்கிப்போம். எங்களோட கால்நடைகளுக்குத் தடுப்பூசிகளை முறையா போட்டுடுவோம். நாட்டு ரகப் பிராணிகளை அதிகமா வளர்க்கிறதால எல்லாப் பருவநிலையையும் தாங்கி திடகாத்திரமா வளருது. இந்தப் பண்ணையில சேகரமாகிற கால்நடைகளோட கழிவுகள் எல்லாத்தையும் ஒண்ணா சேகரிச்சு மக்க வச்சி எருவா மாத்திடுவோம். ஒரு ஏக்கர் தீவன புல் சாகுபடிக்கு பயன்படுத்தினது போக, மீதியுள்ள எருவை வெளியில வித்துடுவோம்.

நடைபயிற்சிக்குச் செல்லும் ஒட்டகம், குதிரை, யானை

ஒட்டகங்களையும் குதிரைகளையும் அடிக்கடி வெளியில கூட்டிட்டுப்போய்க் காலாற நடக்க வைப்போம். ரெண்டு யானையையும் தினமும் காலையிலயும் சாயந்தரமும் நடைப்பயிற்சிக்காக வெளியில கூட்டிக்கிட்டுப் போவோம். சுற்றுவட்டார பகுதிகள்ல அறுவடை முடிஞ்ச நிலங்கள்ல விவசாயிகள்ட்ட அனுமதி வாங்கி, எங்களோட ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவோம். இப்ப எனக்கு 57 வயசாகுது. எனக்கு மூணு பசங்க. என்னோட குடும்பத் தினர் எல்லாருமே இந்தப் பண்ணைப் பராமரிப்புக்கு ஒத்தாசையா இருக்காங்க. எங்களோட உழைப்பு மட்டமில்லாம, 10 பணியாளர்களும் இங்க வேலைக்கு இருக்காங்க.

கோழிகள்
கோழிகள்

பூஜைகளுக்குச் செல்லும் பசு, குதிரை, யானை எங்களோட கால்நடைகளைக் கோயில் விசேஷங்களுக்குத் தொடர்ச்சியா அனுப்புறேன். கோ பூஜைக்குப் பசு போகும்; அஸ்வமேத பூஜைக்குக் குதிரை போகும்; கஜ பூஜைக்கு யானை போகும். கல்யாண விசேஷத்துல மணமக்கள் ஊர்வலத்துக்குச் சாரட் வண்டிக்குக் குதிரையையும், ஊர்வலத்துல முன்னாடி போக, ஒட்டகத் தையும் வாடைக்குக்குக் கேட்பாங்க. இது தவிர கோயில் திருவிழாவுக்கும் கால்நடை களைக் கேட்பாங்க. கொரோனா நேரத்துல வழக்கமான விசேஷங்கள், கோயில் நிகழ்ச்சிகளும் சரிவர நடக்கலை. அப்போ வருமான வாய்ப்புகள் ரொம்பவே குறைஞ்சுட்டதால, கால்நடை பராமரிப்பு, தீவனம், பணியாளர்கள் சம்பளம்னு செலவுகளைச் சமாளிக்க சிரமமாகிடுச்சு. இப்போதான் மறுபடியும் இயல்புநிலை திரும்ப ஆரம்பிச்சிருக்கு.

இப்போ 12 மாடுகள் கறவையில இருக்கு. தினமும் 60-70 லிட்டர் பால் கிடைக்குது. எங்க தேவைக்குப் போக, மீதியுள்ள 50 லிட்டர் பாலை, ஒரு லிட்டர் 28 ரூபாய்னு கூட்டுறவு சொசைட்டியில கொடுக்கிறோம் தலைச்சேரி, வெள்ளாடுகளை, ஒரு கிலோ உயிர் எடை 350 ரூபாய்னு விற்பனை செஞ்சி கிட்டு இருக்கேன். நாட்டுக்கோழி முட்டைகள் விற்பனை செய்றது மூலமாவும் கணிசமான வருமானம் கிடைக்குது.

முன்னாடி பிற மாவட்டங்கள், மாநிலங் கள்ல இருந்தெல்லாம் எங்க பண்ணைக்கு வந்து கால்நடைகளை வாங்கிட்டுப் போவாங்க. கொரோனாவுக்குப் பிறகு, அந்த வருமான வாய்ப்புகள் இன்னும்கூட பழையபடி முழுமையா சீராகலை. ஆனாலும், இங்கவுள்ள ஜீவராசிகளையும், என்னோட குடும்பத்தையும் காப்பாத்துற அளவுக்காவது வருவாய் கிடைச்சிக்கிட்டு இருக்கேனு ஆத்மார்த்தமா சந்தோஷப்படுறேன்’’ என மனநிறைவுடன் தெரிவித்தார் தாஜ்தீன்.

தொடர்புக்கு, தாஜ்தீன்,

செல்போன்: 99444 33891

யானைகளை இப்படித்தான் வளர்க்கணும்!

பண்ணை அனுபவங்களை விவரித்த தாஜ்தீன், கொடுமுடி நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் தன் வீட்டுக்கு நம்மை அழைத்துச் சென்றார். இவரின் வருகைக்காகக் காத்திருந்த மீனாட்சி யானைக்கு உணவு கொடுத்தபடியே அதன் பராமரிப்புக் குறித்துப் பேசினார்.

“இந்த மீனாட்சியை 20 வருஷமா வளர்க்குறேன். குதிரைக்குச் சுழி பார்க்கிற மாதிரி, யானைக்குக் கால் நகங்களைப் பார்த்து மதிப்பிடுவாங்க. பெரும்பாலான யானைகளுக்கு 16 - 18 நகங்கள்தான் இருக்கும். இந்த மீனாட்சிக்கு 21 நகங்கள் இருக்குது. எங்க பண்ணையில வளரும் மூத்தவ மீனாட்சிக்கு 18 நகங்கள் இருக்குது. 32 அங்க லட்சணங்கள் பொருந்திய யானையைத்தான் வளர்ப்புக்கு உகந்ததா சொல்வாங்க. அந்த அம்சங்களுடன், 20 நகங்கள் இருக்கிற ‘உத்தமம்’னு சொல்லப்படுற யானைகளைத்தான் ராஜாக்கள் அதிகம் வளர்த்திருக்காங்க. 18 நகங்கள் இருக்கிற பொதுவான யானைகளை ‘மத்தமம்’னு சொல்வாங்க. 16 நகங்கள் இருக்கிற யானை காட்டு வாழ்க்கைக்குத்தான் சரியானது. அதோட நகங்களை வெச்சு ‘அதமம்’னு அதைக் குறிப்பிடுவாங்க.

யானையுடன் கம்பீரமாக நிற்கும் தாஜ்தீன்
யானையுடன் கம்பீரமாக நிற்கும் தாஜ்தீன்

யானை, வியர்வைச் சுரப்பிகள் இல்லாத ஜீவராசி. அதனால, உடல் சூட்டைத் தணிக்க, ரெண்டு காதுகளையும் விசிறிவிட்டுகிட்டே இருக்கும். தினமும் சில மணி நேரமாச்சும் இதனைக் குளிப்பாட்டணும். வீட்டுக்குப் பக்கத்துலயே வாய்க்கால் ஓடுது. அதுல தினமும் குளிப்பாட்டுவோம். இந்த ஊர்ல ஆறும் இருக்கு. தினமும் ரெண்டு மணி நேரம் ஆத்துக்குக் கூட்டிட்டுப்போய்க் குளிப்பாட்டுறதையும் வழக்கமா செய்வோம். யானைகளைத் தினமும் நடைப்பயிற்சி கூட்டிட்டுப்போவோம். வேக வச்ச உணவை ரெண்டு வேளைக்குக் கொடுப்போம். தவிர, 250 - 300 கிலோ வரை தினமும் பசுந்தீவனம் கொடுப்போம். தினமும் எட்டு மணி நேரம் யானை தூங்கினாலே ஆரோக்கியமா இருக்கும். தனக்கான பணிவிடைகளை ஒரே பராமரிப்பாளர் செய்றதைத்தான் யானைகள் விரும்பும். குளிக்க, சாப்பிட, தூங்கத்தான் யானைகள் அதிகம் விரும்பும். அதைச் சரியா செஞ்சா சந்தோஷமா இருக்கும்.

யானை வளர்ப்புக்கு இப்போ கடுமையான கட்டுப்பாடுகள் வந்திடுச்சு. புதுசா யாருக்குமே யானை வளர்க்க அனுமதி தரப்படுறதில்லை. நீண்டகாலமா யானை வளர்க்கிற சிலருக்கு மட்டும்தான், ஆயுட்காலம் முடியுற வரைக்கும் வளர்க்க அரசாங்கம் அனுமதி கொடுத்திருக்கு. நான் முறைப்படி அனுமதி வாங்கியிருக்கேன். யானைகளோட சராசரி ஆயுட்காலம் 100 - 120 ஆண்டுகள். என்னால யானையை வளர்க்க முடியலைனா, என் ரத்த சம்பந்தம் உள்ளவங்க, சட்டப்படியான அனுமதியோடு இந்த யானையை வளர்க்கலாம்.

இதுமாதிரியான வளர்ப்பு யானையை இனவிருத்தி செய்ய அரசாங்கம் அனுமதிக்குறதில்லை. காற்றோட்ட வசதியோடு முறையான பாதுகாப்பு வழிமுறைகளோடு யானைக்கான வசிப்பிடம் இருக்கணும். அவ்வப்போது கால்நடை அதிகாரிகள் நேர்ல வந்து யானையின் உடல்நலனையும் பராமரிப்பு முறையையும் ஆய்வு செய்வாங்க” என்றார்.