Published:Updated:

ஊடுபயிரில் உற்சாக வருமானம் கொடுக்கும் மரவள்ளி! - மூன்றரை ஏக்கர், ரூ. 2,90,000

மரவள்ளி
News
மரவள்ளி

மகசூல்

  • எங்க அப்பா ராஜாராமன் மூன்று முறை பாபநாசம் தொகுதி

    எம்.எல்.ஏ-வாக இருந்தார்.

  • மரப்பயிர்களோடு ஊடுபயிராக முள்ளுவாடி ரக மரவள்ளிச் சாகுபடி செஞ்சுக்கிட்டு இருக்கேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

விவசாயத்தில், கடும் உழைப்பு மட்டுமே நிறைவான லாபத்தைக் கொடுத்து விடாது. தனித்துவமான வழிமுறைகள், சந்தைப்படுத்துதலுக்கான சாத்தியக்கூறுகளை அலசி ஆராய்ந்து அவற்றுக்கு ஏற்ற வகையில் பயிர் செய்யும் விவசாயிகள்தான் வெற்றிகரமாக வருமானம் எடுக்கிறார்கள். இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகிலுள்ள மாத்தூரைச் சேர்ந்த விவசாயி சச்சிதானந்தம். ஊடுபயிர்ச் சாகுபடியை தாரக மந்திரமாகக் கடைப்பிடித்துவருகிறார். மூன்றரை ஏக்கரில் மரப்பயிர்களைச் சாகுபடி செய்திருக்கும் சச்சிதானந்தம், ஊடுபயிராக மரவள்ளியைப் பயிர் செய்திருக்கிறார்.

மரவள்ளிக் கிழங்குடன் சச்சிதானந்தம்
மரவள்ளிக் கிழங்குடன் சச்சிதானந்தம்

ஒரு பகல் பொழுதில் அவரைச் சந்தித்தோம். உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘ஊடுபயிர் சாகுபடிங்கறது விவசாயத்துல மிக முக்கியமான விஷயம். இரு வேறுபட்ட பயிர்களின் வேர்கள், மண்ணுக்குள்ள பரஸ்பரம் நண்பர்களாகக் கைகுலுக்கும்போது வேதியியல் மாற்றம் நிகழும். இதனால் ரெண்டு பயிர்களுமே ஒண்ணுக்கு ஒண்ணு உதவி செஞ்சு செழிப்பா வளரும். ஒரேவிதமான உழைப்பு, செலவுல ரெண்டு விதமான வருமானம் எடுத்தால்தான் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும்’’ என்றவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பி.எஸ்ஸி பட்டப்படிப்பு படிச்சிட்டு, எங்க அப்பாகூடச் சேர்ந்து விவசாயத்தைக் கவனிச்சிக்கிட்டேன். அப்பா ராஜாராமன் மூன்று முறை பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தவர். அவருக்கு விவசாயத்துல ஈடுபாடு அதிகம். ஏதாவது ஒரு ஊர்ல, ஒரு விவசாயி அதிக விளைச்சல் எடுத்திருக்கார்னு தெரிய வந்துச்சுன்னா உடனே தேடிப் போய்ப் பார்ப்பார்.

எங்க பகுதியில நாங்கதான் முதல்முறையா தென்னையில ஊடுபயிரா வாழை போட்டோம். சுற்றுவட்டார விவசாயிகளெல்லாம் கிண்டல் பண்ணினாங்க. அந்த வருஷம் எங்க பகுதியில கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு. ஆனாலும் ஊடுபயிர் வாழையால மண்ணுல ஈரப்பதம் பாதுகாக்கப்பட்டு, ரெண்டு பயிர்களுமே செழிப்பா இருந்துச்சு. அதைப் பார்த்து ஊர் மக்கள் ஆச்சர்யப்பட்டாங்க.

மரவள்ளி
மரவள்ளி

ஏழு ஏக்கர்ல எண்ணெய்ப்பனைச் சாகுபடி செஞ்சு, அதுல சோதனை முயற்சியா ஊடுபயிராக நெல் சாகுபடி பண்ணினோம். நல்ல விளைச்சல். எண்ணெய்ப்பனையும் செழிப்பா வளர்ந்துச்சு. ஊடுபயிர் சாகுபடி மூலம் ஒரே பராமரிப்புல ரெண்டு வருமானம் கிடைக்கிறதோடு மட்டுமல்லாம, களைகளும் கட்டுப்படுத்தப்படுது. நிலத்தின் ஈரப்பதமும் பாதுகாக்கப்படுது” என்றவர், இயற்கை விவசாயம், மரப்பயிர்கள் மற்றும் ஊடுபயிரான மரவள்ளிச் சாகுபடி குறித்த தனது அனுபவத்தை விவரிக்கத் தொடங்கினார்.

‘‘2006-ம் வருஷம் லண்டனுக்குப் போய் புத்தக விற்பனை நிலையம் நடத்தினேன். அந்த நேரத்துல எங்க குடும்பத்துல இருக்கறவங்க விவசாயத்தை கவனிச்சிக்கிட்டாங்க. ஒன்பது வருஷம் கழிச்சு மறுபடியும் சொந்த ஊர் திரும்பினேன். பசுமை விகடன் மூலம் சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயப் பயிற்சி வகுப்புகள்பத்தித் தெரிஞ்சுகிட்டு அதுல கலந்துகிட்டேன்.

தேக்கு மரங்கள்
தேக்கு மரங்கள்

அதுக்கு முன்னாடியே நாங்க ரசாயனப் பூச்சிக்கொல்லி அதிகம் பயன்படுத்த மாட்டோம். பாலேக்கர் பயிற்சி வகுப்புகள்ல கலந்துகிட்ட பிறகு, முழுமையா இயற்கை விவசாயத்துக்கு மாறினோம். உம்பளச்சேரி மாடு வாங்கினோம். ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் உள்ளிட்ட இடுபொருள்களைப் பயன்படுத்தி பாரம்பர்ய நெல் ரகங்கள், எள், கடலை, உளுந்து, எண்ணெய்ப் பனை, மரப்பயிர்கள், மரவள்ளிச் சாகுபடி செஞ்சுக்கிட்டு இருக்கோம்.

எங்களுக்கு 40 ஏக்கர் நிலம் இருக்கு. ஏழு ஏக்கர்ல எண்ணெய்ப்பனையும், மூன்றரை ஏக்கர்ல மரப்பயிர்களும், அதுல ஊடுபயிரா மரவள்ளியும், அரை ஏக்கர்ல தென்னையும், நாலு ஏக்கர்ல பழ வகை மரங்களும் அமைச்சிருக்கேன். மீதமுள்ள நிலத்துல பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செஞ்சுக்கிட்டு இருக்கேன்.

ஊடுபயிரில் உற்சாக வருமானம் கொடுக்கும் மரவள்ளி! - மூன்றரை ஏக்கர், ரூ. 2,90,000

நடைமுறைச் செலவுகளுக்கு நெல், எண்ணெய்ப் பனைப் பயிர்கள்ல இருந்து வருமானம் கிடைச்சுடுது. எனக்கு இரண்டு மகள்கள். அவங்க எதிர்காலச் சேமிப்புக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சப்போதான் தேக்கு, மலைவேம்பு, மஞ்சக்கடம்பு, குமிழ்தேக்கு, வேங்கை, மருது உள்ளிட்ட மரப்பயிர்களைச் சாகுபடி செய்யலாம்னு முடிவெடுத்து ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி மூன்றரை ஏக்கர்ல நடவு செஞ்சேன்.

இதுல உயிர் மூடாக்காகவும், நடைமுறைச் செலவுகளை ஈடுகட்டுறதுக்காகவும் ஊடுபயிரா என்ன செய்யலாம்கிற தேடுதல்ல இறங்கினேன். இது வண்டல் கலந்த மணல்சாரி. இதுல மரவள்ளி நல்லா விளையும்னு சொன்னாங்க. மரவள்ளிக்கு விற்பனை வாய்ப்பும் நல்லா இருக்குங்கறதை உறுதிப்படுத்திக்கிட்டேன்.

இதுல சொல்லிக்கிற மாதிரி பூச்சி, நோய்த்தாக்குதலும் வராதுங்கறதால மூன்றரை ஏக்கர்லயும் ஊடுபயிராக முள்ளுவாடி ரக மரவள்ளியைச் சாகுபடி செஞ்சுக்கிட்டு இருக்கேன். போன வருஷம், மூன்றரை ஏக்கருக்கும் சேர்த்து 45 டன் மரவள்ளிக்கிழங்கு மகசூல் கிடைச்சுது. நாமக்கல் பக்கத்துல இருக்குற ஒரு ஜவ்வரிசி கம்பெனிக்கு நேரடியா விற்பனை செஞ்சேன். அவங்களே நிலத்துக்கு வந்து அறுவடை செஞ்சு எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. ஒரு டன்னுக்கு 6,500 ரூபாய் வீதம் 45 டன்னுக்கு 2,92,500 ரூபாய் வருமானம் கிடைச்சுது. சாகுபடிச் செலவு, வெட்டுக்கூலி, போக்குவரத்துச் செலவு எல்லாம் போக, போன வருஷம் 1,62,730 ரூபாய் லாபமாகக் கிடைச்சுது.

ஊடுபயிரில் உற்சாக வருமானம் கொடுக்கும் மரவள்ளி! - மூன்றரை ஏக்கர், ரூ. 2,90,000

இந்த வருஷம் அதே மூன்றரை ஏக்கர்ல பயிர் பண்ணியிருக்கேன். இப்போ இதோட வயசு பத்து மாதங்கள். 5-6 அடி உயரத்துல செடிகள் நல்லா செழிப்பா இருக்கு. மண்ணுக்குள்ள கிழங்கு நல்லா பெருத்து முதிர்ச்சி அடைஞ்சிருக்கு. இன்னும் சில வாரங்கள்ல அறுவடை செஞ்சுடுவேன். எவ்வளவு மகசூல் கிடைக்கும்னு இப்போ என்னால யூகிக்க முடியலை” என்றார்.

மரமும் மரவள்ளியும்!

மூன்றரை ஏக்கரில் மர வகைப் பயிர்களைச் சாகுபடி செய்து, அதில் ஊடுபயிராக மரவள்ளிச் சாகுபடி செய்யும் வழிமுறைகள்:

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் நன்கு உழவு ஓட்டி, அடியுரமாக ஏக்கருக்கு 500 கிலோ வீதம் கனஜீவாமிர்தம் போட்டு மண்ணைச் சமப்படுத்த வேண்டும். தலா 15 அடி இடைவெளியில் ஒரு கன அடி ஆழத்துக்குக் குழி எடுத்து, ஒரு குழிக்கு ரெண்டு கிலோ வீதம் கனஜீவாமிர்தம் போட்டு தேக்கு, மஞ்சக் கடம்பு, வேங்கை, மருது, பிள்ளை மருது, செஞ்சந்தனம், பலா, எலுமிச்சை உள்ளிட்ட மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். சதுர வடிவில் நான்கு மரங்களை உள்ளடக்கிய பகுதியின் நடுவில் தலா ஒரு மலைவேம்பு வீதம் நடவு செய்ய வேண்டும். கன்று நடவு செய்த பிறகு, ஒரு குழிக்கு ஒரு லிட்டர் வீதம் ஜீவாமிர்தம் ஊற்ற வேண்டும். ஊடுபயிராக மரவள்ளிச் சாகுபடி செய்ய இரண்டரை அடி அகலம்கொண்ட பார் அமைக்க வேண்டும். பாரின் நடுவில் தலா நான்கடி இடைவெளியில் மரவள்ளி விதைக்கரணை நடவு செய்ய வேண்டும். இதில் உயிர் மூடாக்காகவும், வேர் முடிச்சு மூலமாக மண்ணில் தழைச்சத்தை அதிகப்படுத்தவும் ஏக்கருக்கு எட்டு கிலோ வீதம் உளுந்து தெளிக்கலாம். மண்ணின் தன்மைக்கு ஏற்ப 7-10 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 25-ம் நாள் களையெடுக்க வேண்டும்.

ஊடுபயிரில் உற்சாக வருமானம் கொடுக்கும் மரவள்ளி! - மூன்றரை ஏக்கர், ரூ. 2,90,000

30-ம் நாள் ஏக்கருக்கு 130 லிட்டர் தண்ணீரில் 20 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து பயிர்கள்மீது தெளிக்க வேண்டும். 45-ம் நாள் ஏற்கெனவே சொன்ன அளவு கரைசலுடன் ஐந்து லிட்டர் புளித்த மோர்க் கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும். நடவிலிருந்து 30, 60, 90 ஆகிய நாள்களில் பாசன நீரில் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்துவிட வேண்டும்.

65-70 நாள்களில் உளுந்து அறுவடைக்கு வரும். உளுந்து அறுவடை செய்தவுடன், தூர்களில் சிறிதளவு கன ஜீவாமிர்தம் தூவி, மண் அணைக்க வேண்டும். 11-ம் மாதம் மரவள்ளி அறுவடைக்கு வரும்.

மரப்பயிர்களுக்கு உறுதுணையான மரவள்ளி!

“மூன்றரை ஏக்கரில் 300 மலைவேம்பு, 250 மஞ்சக் கடம்பு, 220 தேக்கு, 25 செஞ்சந்தனம், 25 மருது, 75 பலா, எலுமிச்சை உள்ளிட்ட மரங்களும் இருக்கு. இதுல ஊடுபயிராக மரவள்ளிச் சாகுபடி செஞ்சதுனால மரப்பயிர்களுக்கு எந்த ஒரு பின்னடைவும் ஏற்படலை. சொல்லப்போனா, மரப்பயிர்களோட வளர்ச்சிக்கு ஊடுபயிரான மரவள்ளி உறுதுணையாத்தான் இருக்கு’’ என்கிறார் சச்சிதானந்தம்.

வித்தியாசமான விற்பனை வியூகம்

``விவசாயிகள் இயன்றவரை தங்களுக்குள்ள பண்டமாற்று முறையைக் கடைப்பிடிக்கணும். வியாபாரிகளையும் இடைத்தரகர்களையும் தவிர்க்கணும். நான் உற்பத்தி செய்யும் பாரம்பர்ய அரிசியை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் தொடர்புகள் மூலம் விற்பனை செய்யறேன். அதுமட்டுமல்ல, `மாத்தூர் பண்ணை நேரடி விற்பனை நிலையம்’கிற பேர்ல கடையும் வெச்சிருக்கோம். நான் உற்பத்தி செய்யும் அரிசியோடு, மற்ற இயற்கை விவசாயிகள்கிட்ட இருந்து உளுந்து, நாட்டுச்சர்க்கரை, மரச்செக்கு எண்ணெய் உள்ளிட்டவற்றையும் வாங்கி விற்பனை செய்யறேன்.

சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயிகிட்ட இருந்து நான் நாட்டுச்சர்க்கரை வாங்குறேன். நான் உற்பத்தி செயயும் அரிசியை அவருக்குக் கொடுக்கிறேன். சந்தை விலைக்கு ஏற்ப விலையைக் கணக்குப் பண்ணி இதை நாங்க கடைப்பிடிக்கிறோம். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த ஒரு விவசாயிக்கு அரிசி கொடுத்துட்டு, அவர்கிட்ட இருந்து நான் மிளகும் தேனும் வாங்கிக்கிறேன்.

நான் உற்பத்தி செய்யும் பாரம்பர்ய அரிசியை கால் கிலோ பாக்கெட்டா போட்டு, கையில வெச்சிருப்பேன். வேற வேலையா உறவினர்கள், நண்பர்களைப் பார்க்கப் போனாலும், பேருந்துல பயணம் போனாலும் கையில வெச்சிருப்பேன். அதைப் பற்றி நான் எதுவுமே பேச மாட்டேன். பக்கத்துல இருக்குறவங்க ஆர்வப்பட்டு அதைப் பத்திக் கேட்க ஆரம்பிப்பாங்க. அந்த பாக்கெட்டை அவங்ககிட்ட கொடுத்துடுவேன். சாப்பிட்டு பார்த்துட்டு தானாக வந்து வாங்க ஆரம்பிச்சிடுவாங்க’’ என்று விற்பனை வியூகம் குறித்துத் தெரிவித்தார் சச்சிதானந்தம்.

மறுதாம்பு தேக்கு

“1991-ம் வருஷம் வேலி ஓரத்துல எங்க அப்பா 123 தேக்குக் கன்றுகள் நடவு செஞ்சிருந்தார்.

2015-ம் வருஷம் அதுல 68 மரங்களை மட்டும் அறுவடை செஞ்சோம். வழக்கமா எல்லாரும் வேரோடு வெட்டிடுவாங்க. ஆனா, நான் அப்படிச் செய்யலை. மறுதாம்புவிட்டுப் பார்க்கலாம்கிற எண்ணத்தோடு, தரையிலிருந்து ஓரடி உயரத்துக்கு விட்டுட்டு அதுக்கு மேல மரத்தை அறுத்தோம். தாய் மரத்தோட வேர்ல இருந்து பக்கத் தூர்கள் நிறைய வந்துச்சு. அதுல நல்ல தரமான 2-3 தூர்களை மட்டும் வெச்சுக்கிட்டு மீதியை நீக்கிட்டோம்.

மறுதாம்பு தேக்கு
மறுதாம்பு தேக்கு

மறுதாம்புக்குவிட்ட தூர்கள் அடுத்த அஞ்சு வருஷத்துலயே 30 அடி உயரத்துக்கு வளர்ந்திருக்கு. இன்னும் ரெண்டு வருஷத்துல ஒவ்வொரு குத்துல இருந்தும் ஒரு மரம் வீதம் அறுவடை செஞ்சுடுவோம். அதுக்கு அடுத்த அஞ்சு வருஷம் கழிச்சு மிச்சமிருக்குற மரங்களை அறுவடை செய்வோம். ஆக மொத்தம் மூணு போகம் வருமானம் கிடைக்கும்’’ என்கிறார் சச்சிதானந்தம்.

தொடர்புக்கு, சச்சிதானந்தம், செல்போன்: 95970 27011