Published:Updated:

மாதம் ரூ.50,000... பலே வருமானம் கொடுக்கும் பஞ்சகவ்யா சோப் + மண்புழு உரம்!

மதிப்புக்கூட்டல்
பிரீமியம் ஸ்டோரி
News
மதிப்புக்கூட்டல்

மதிப்புக்கூட்டல்

இயற்கை விவசாயத்தில் போதுமான லாபம் கிடைக்கவில்லை எனப் புலம்பாமல், இயற்கை விவசாயத்தோடு இடுபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம்” என்கிறார் கண்ணன்.

ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் அருகில் உள்ள புதுக்கரைப் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். பி.ஏ தமிழ் இலக்கியம் படித்தவர். பாரம் பர்யமான விவசாயக் குடும்பம். செயற்கை உரங்களால் சிதைந்து போயிருந்த சொந்த நிலத்தை இயற்கை விவசாயத்தின் மூலமாக மீட்டெடுத்திருக்கிறார். சுமார் 20 வருடங்களாக இயற்கை விவசாயத் தைக் கையிலெடுத்துச் செய்துவரும் கண்ணனை, பனி கொட்ட தொடங்கியிருந்த ஒரு மாலை வேளையில் சந்தித்தோம். கூடு திரும்பும் பறவைகளின் கீச்சொலி களுக்கு மத்தியில் சன்னமான குரலில் பழைய நினைவுகளை எடுத்துப் பேசத் தொடங்கினார்.

மண்புழு உரம்
மண்புழு உரம்

“நான் வீட்டுக்கு ஒரே பையனுங்க. படிக்கிற காலத்துல அம்மா அப்பாவுக்கு ஒத்தாசையா தோட்டத்துல வேலை செய்வேன். மண் வாசனை, பூமிய முட்டித் தழைஞ்சு வர்ற பயிர்கள்னு விவசாயம் மேல சின்ன வயசுலயே எனக்குப் பெரிய ஆர்வம் உண்டாகிடுச்சு. பி.ஏ தமிழ் படிச்சு முடிச்சதும், நிலத்துலதான் நம்ம வேர்வை யைக் கொட்டணும்னு தெளிவா இருந்தேன். அதுமட்டுமல்லாம அப்ப ஒரு குவிண்டால் மஞ்சள் 18,000 ரூபாய்க்கு விற்பனையாச்சு. விவசாயம் பண்ணா போதும்... வேற பக்கம் வேலைக்குப் போக வேண்டிய அவசியமே இல்லைங்கிற நிலைமை இருந்துச்சு. அதனால எனக்கும் வெளியே வேலைக்குப் போகத் தோணலை.

2000-ம் வருஷம், கரும்புல வந்த பூச்சியைக் கட்டுப்படுத்த, ஒட்டுண்ணியை வாங்க கோபிசெட்டிபாளையம் போயிருந்தேன். அங்க ஒருத்தரு, ‘பூச்சியைக் கட்டுப்படுத்த இதைச் செய்றீங்க. சத்தியமங்கலத்துல சுந்தரராமன்னு ஒருத்தரு மண்புழு உரம் தயாரிச்சு விவசாயத்துக்குப் பயன்படுத்துறாருப்பா’ன்னு சொன்னாரு. கேக்கவே வித்தியாசமா இருந்துச்சு. உடனே சுந்தரராமன்கிட்ட போனேன். அங்கதான் நம்மாழ்வார் ஐயாவோட அறிமுகம் கெடச்சது. அந்த அறிமுகம் என் வாழ்க்கையையே சொழட்டி போட்டிருச்சு” என்றவர் வரப்பில் அமர்ந்தார். நாமும் அமர்ந்தோம்.

தொடர்ந்து பேசியவர், “சுந்தரராமன் ஐயர் தோட்டத்துல நடந்த பயிற்சியில மண்புழு உரம், பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் தயாரிக்கிறது பத்தியும், அதை வைத்து மண்ணை மேம்படுத்துற முறையையும் கத்துக்கிட்டேன். பயிற்சி மூலமா நம்மாழ்வார் ஐயாவோடு நல்ல நெருக்கம் உண்டாச்சு. மூன்றரை ஏக்கர் நிலத்துல வேல செய்யறதுக்கு அம்மா-அப்பாவே போதுமானதாக இருக்க, எனக்கு நிறைய நேரம் கிடைச்சது. அந்தச் சமயத்துல தஞ்சை, நாகை, திருவாரூர்’னு நம்மாழ்வார் ஐயாகூட போயிடுவேன். ஐயாதான் என்னோட தோட்டத்துக்கு ‘திருமால் இருஞ்சோலை’னு பேர் வெச்சாங்க. என் கல்யாணத்தையும் அவர்தான் முன்ன நின்னு நடத்தி வெச்சாரு. என்னோட தோட்டத்துக்கு 10-20 தடவை வந்துருக்கார். முதன்முதலா ‘பவானி’ங்கிற பாரம்பர்ய நெல் ரகத்தை ஒரு ஏக்கர்ல நடவு பண்ணி இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சேன். வளர்ச்சி இருக்குமோ இருக்காதோன்னு கொஞ்சம் பயந்துக்கிட்டு இருந்தேன். பயிர் நெடுநெடுன்னு வளர்ந்து நின்னுச்சி. அப்பதான் இயற்கை விவசாயத்தோட முழுப் பலனைப் புரிஞ்சிக் கிட்டேன். கிட்டத்தட்ட 20 வருஷமா இந்த இயற்கை விவசாயத்தைக் கெட்டியா புடிச்சி செஞ்சுக்கிட்டு வாரேனுங்க’’ என்றவர் நிகழ்காலத்துக்கு வந்தார்.

நெல் வயலில் கண்ணன்
நெல் வயலில் கண்ணன்

‘‘இப்ப 4 ஏக்கர்ல கரும்பு, ஒரு ஏக்கர்ல சிவன் சம்பா போட்டிருக்கேன். கூடுதல் வருமானத்துக்காக மண்புழு வளர்ப்பு, பஞ்சகாவ்யா சோப்பு தயாரிப்பையும் செய்றேன். 60 சென்ட்ல தேக்கு, வேம்பு, மருதமரம், ஈட்டி, செஞ்சந்தனம், செம்மரம், மகோகனினு கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட மரங்கள் இருக்கு” என்றவர் கரும்புச் சாகுபடி பற்றிப் பேச ஆரம்பித்தார்.

‘‘ஆலைக்கரும்பைத்தான் நான் சாகுபடி செய்யுறேன். வெல்லம் தயாரிக்கிறவங்க தோட்டத்துக்கே வந்து வெட்டி எடுத்துக்கிட்டு போயிடுவாங்க. சராசரியா எனக்கு ஒரு ஏக்கருக்கு 43 டன் கரும்பு கிடைக்கிது. செலவு எல்லாம் போக ஏக்கருக்கு 40,000 ரூபாய் லாபமாகக் கிடைக்குது. 4 ஏக்கருக்கு 1,60,000 ரூபாய் கையில நிக்கும்.

கரும்புத் தோட்டம்
கரும்புத் தோட்டம்

சிவன் சம்பா

பரிசோதனை முயற்சியாக ஒரு ஏக்கர்ல சிவன் சம்பாவை போட்டிருக்கேன். இது 130 நாள்கள் பயிர். இந்த ரக அரிசி நல்ல சுவையாகவும் மணமாகவும் இருக்கும். விதை நெல்ல ஊற வைக்குறப்ப தண்ணியோட பஞ்சகவ்யாவும் சேர்த்து ஊற வைக்கணும். இதனால பூச்சித் தாக்குதல் இருக்காது, வளர்ச்சி நல்லா இருக்கும். ஏக்கருக்கு 5 கிலோ விதைநெல் தேவைப்படும். நெல்லை நாற்றுவிட்டு, 16-வது நாள் நடவு செய்யணும். ஒரு ஏக்கருக்கு 32 மூட்டை நெல் (60 கிலோ) கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்’’ என்றவர் மண்புழு உரம் தயாரிக்கும் இடத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

மண்புழு உரம்

‘‘இங்க வருஷத்துக்கு 90 டன் மண்புழு உரம் தயாரிக்கிறேன். இதை நர்சரி கார்டன்ஸ், டீ - காபி எஸ்டேட், கர்நாடகானு பல பகுதிகளுக்கும் கொடுக்கிறேன். ஆரம்பத்துல என்னோட தேவைக் காகத்தான் மண்புழு உரம் தயாரிச்சேன். அப்புறம் அக்கம் பக்கத்துல கேட்டாங்க. ஒரு கட்டத்துல இதுக்கு நல்ல மார்க்கெட் இருக்குங்கிறது புரிஞ்சது. பெரிய பராமரிப்புச் செலவு இருக்காது. நமக்கு வருமானமும் வருமுன்னு முழுசா செய்ய ஆரம்பிச்சிட்டோம். இன்றைய தேதியில் ஒரு டன் மண்புழு உரத்துக்கு 7,000 ரூபாய் வரை விலை கிடைக்கிது. அந்த வகையில் வருஷம் 90 டன் உரத்துக்கு 6,30,000 ரூபாய் கிடைக்கிது. தொழுவுரம், ஆள்கூலி செலவு 3,30,000 போனாலும், 3 லட்சம் ரூபாய் கையில் நிக்குது’’ என்றவர் பஞ்சகவ்யா சோப் குறித்து விளக்கினார்.

கோழிகளுடன்
கோழிகளுடன்

பஞ்சகவ்யா சோப்

“சேலத்துல இருக்க ஒரு கோசாலையில போய் 3 நாள்கள் தங்கியிருந்து பயிற்சி எடுத்துக்கிட்டு விபூதி, மூலிகை ஷாம்பு, பற்பொடி, சோப்பு தயாரிப்பதைக் கத்துக்கிட்டேன். எங்களோட சோப்புக்கு நல்ல மார்க்கெட் இருக்கு. சென்னையில் இருக்க இயற்கை அங்காடிகள் எங்ககிட்ட இருந்து சோப்பை வாங்கி விற்பனை செய்றாங்க. மாசம் 1,000 சோப்புகள் விற்பனையாகுது. அது மூலமா சுமார் 25,000 ரூபாய் வருமானம் கிடைக்கிது.

இதுபோக 50 கோழிகள், 30 ஆடுகள், 60 புறாக்கள் வளர்க்கிறோம். இதிலிருந்து வருஷத்துக்கு 2 லட்சம் ரூபாய் வருமானம் வருது. மாசம் 50 லிட்டர் பஞ்சகவ்யாவும் விற்பனை செய்றோம்’’ என்றார். நிறைவாகப் பேசிய கண்ணன்,

‘‘எல்லா உயிரினங்களோட சேர்ந்து ஒருங்கிணைஞ்சு வாழ்றதுதான் உண்மையான இயற்கை விவசாயம். இயற்கையைப் புரிஞ்சிக்கிட்டுச் செய்றது மட்டுமல்லாம, பொருளாதாரத்தை மேம்படுத்த மதிப்புக் கூட்டப்பட்ட உப பொருள்களையும் செய்யணும். விளைபொருள்களுக்கு உரிய விலையில்லன்னு விரக்தியில இருக்க விவசாயிங்க மத்தியில, மண் மேல உள்ள அக்கறையால பலரும் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்ந்துகிட்டுத்தான் இருக்காங்க” என்றபடி விடைகொடுத்தார்.

சிவன் சம்பா நெல் சாகுபடி

நடவுக்கு முன்பு ஒரு ஏக்கர் நிலத்தில் 5 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி நிலத்தைப் பக்குவப் படுத்த வேண்டும். நடவுக்குப் பிறகு, காய்ச்சலும் பாய்ச்சலுமாகத்தான் தண்ணீர் கொடுக்க வேண்டும். 15-ம் நாள் களையெடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால் அடுத்த 15-ம் நாள் மேலே சொன்ன விகிதத்தில் இ.எம் கரைசல் தெளிக்கலாம். 30, 40-ம் நாள்களில் களையெடுக்க வேண்டும். 45-ம் நாள், பூ வருவதற்கு முன்பு தேமோர் கரைசல் தெளிக்க வேண்டும். இலைச்சுருட்டுப் புழுத் தாக்குதல் இருந்தால் வேம்பு, நொச்சி, ஆடாதொடை மாதிரியான கசப்பான இலைகளைக் கோமியத்தில் 10 நாள் ஊற வைத்து, அதோடு மாட்டுச் சிறுநீர் கலந்து, 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் கரைசல் வீதம் கலந்து தெளிக்கலாம். 125-ம் நாளுக்கு மேல் அறுவடை செய்யலாம்.

இயற்கைக் கரும்புச் சாகுபடி

நடவு செய்யும் ஒரு ஏக்கர் நிலத்தில் 10 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி, ஆழமாக உழவு செய்ய வேண்டும். நிலத்தை உரமேற்றப் பலதானியங்களை விதைத்து, வளரவிட்டு பூ எடுக்கும் நேரம் செடிகளை மடக்கி உழவு செய்ய வேண்டும். தொடர்ந்து, நான்கடி இடைவெளியில் பார் முறை பாத்திகள் அமைக்க வேண்டும். அரையடி இடைவெளியில் மூன்று பரு உள்ள கரணைகளை நடவு செய்ய வேண்டும். இலை வரும் வரை தண்ணீர் மட்டும் கொடுத்து வர வேண்டும். 15-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். அதே அளவில் 30-ம் நாள் இ.எம் கரைசலைத் தெளிக்க வேண்டும். இதனால் இலைப்பரப்பு அதிகமாகி, நன்றாகத் தூர் கட்டும்.

3-ம் மாதம் ஏக்கருக்கு 2 டன் மண்புழு உரம் வைக்க வேண்டும். தேவைப்பட்டால் ஏற்கெனவே சொன்ன அளவில் இ.எம் கரைசல் கொடுக்கலாம். குருத்து முளைத்து வரும்போது குருத்துப்புழு வரலாம். ஒட்டுண்ணியைப் பயன்படுத்தி அதைச் சரிசெய்யலாம். நிலத்தில் ஈரப்பதம் குறையக் குறையத் தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும். இடையில் இரண்டு முறை களை எடுக்க வேண்டும். 10-ம் மாதம் அறுவடைக்கு வந்துவிடும்.

பஞ்சகவ்யா சோப் தயாரிப்பு

முல்தானிமட்டி, நாட்டுப் பசுமாட்டு வறட்டி (தூளாக்கியது), வேப்பிலை, காவிக்கல், பச்ச கற்பூரம், தைமால் மூலிகை, நல்லெண்ணெய் போன்றவற்றைத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் களிமண் மாதிரி ஆக்கிக்கொள்ள வேண்டும். இதை அச்சில் வார்த்தெடுத்தால் பஞ்சகவ்யா சோப் தயாராகிடும். நுரை உண்டாக்கும் ‘சோடா மாதிரியான எதையும் சேர்க்கத் தேவையில்லை. அக்கி, தேமல் மாதிரியான தோல் சம்பந்தமான நோய்களுக்கு நல்ல பலன் கொடுக்கும்.