Published:Updated:

இனிப்பான வருமானம் தரும் ஸ்ட்ராபெர்ரி! - 10 சென்ட்... தினமும் ரூ.15,000

ஸ்ட்ராபெர்ரி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ட்ராபெர்ரி

மகசூல்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே உள்ளது வட்டவடை. பீட்ரூட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், வெள்ளைப்பூண்டு, கேரட் போன்ற காய்கறிகளைப் பயிர் செய்யும் வட்டவடை விவசாயிகள், தற்போது ஸ்ட்ராபெர்ரிச் சாகுபடியில் தீவிரம் காட்டிவருகிறார்கள் என்ற தகவலின் அடிப்படையில் வட்டவடை செல்லத் தயாரானோம்.

 ஸ்ட்ராபெர்ரிச் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலில் பரதன்
ஸ்ட்ராபெர்ரிச் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலில் பரதன்

தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மூணாறு செல்லும் பேருந்தில் ஏறினோம். ஜன்னலோர இருக்கை, குளுகுளு காற்று எனப் பயணம் தொடங்கியது. போடி, போடிமெட்டு வழியாகச் சுமார் மூன்றரை மணி நேர மலைச் சாலைப் பயணத்தில் மூணாறு வந்தடைந்தோம். அங்கிருந்து வட்டவடை செல்லப் பேருந்து இல்லை. ‘சாலை சரியில்லாத காரணத்தால் ஜீப் மூலமாகத்தான் வட்டவடை செல்ல முடியும்’ என்றனர் மூணாறுவாசிகள். நம்ம ஊர் ஆட்டோ ஸ்டாண்டுபோல அங்கே ஜீப் ஸ்டாண்டு இருக்கிறது. வாடகைக்கு ஒரு ஜீப்பை அமர்த்திக்கொண்டு வட்டவடை புறப்பட்டோம். வழியெங்கும் தேயிலைத் தோட்டங்கள், அடர் வனம் என மாறி மாறி வந்துகொண்டிருந்தன. நிலச்சரிவு ஏற்பட்ட சில இடங்களில் சாலையைச் சீரமைக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்தன. ஒன்றரை மணி நேரப் பயணத்தில் வட்டவடையை அடைந்தோம். அங்கே இறங்கி, ஸ்ட்ராபெர்ரி தோட்டம் குறித்து விசாரித்தோம். ‘மேற்கே கொஞ்ச தூரம் நடந்து செல்லுங்கள். உங்களுக்கே தெரியும்’ என்றனர் உள்ளூர்வாசிகள். நடந்தோம். கொடைக்கானல் மன்னவனூர்போலக் கண்களுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துகிடந்தன காய்கறித் தோட்டங்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அங்கே ஸ்ட்ராபெர்ரிச் சாகுபடி செய்யும் பரதன் என்பவரைச் சந்தித்தோம். நம்மை அவருடைய ஸ்ட்ராபெர்ரித் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். “2013-ம் வருஷம் ஸ்ட்ராபெர்ரிச் சாகுபடி இங்கு தொடங்கியது. ஆனால், விவசாயிகள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. சாகுபடி செய்த சிலரும் ஒரு கட்டத்தில் விட்டுவிட்டார்கள். அதன் பிறகு வட்டவடையில் ஸ்ட்ராபெர்ரிச் சாகுபடி இல்லாமல் போய்விட்டது.

 ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரி
கேரள வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக ஸ்ட்ராபெர்ரி நாற்றுக் கொடுக்கிறார்கள். 400 கிராம் பாட்டில் 350 ரூபாய்க்கு விற்கிறோம். ஸ்ட்ராபெர்ரி ஜாமில் நல்ல லாபம் கிடைக்கிறது.

தற்போது மறுபடியும் ஸ்ட்ராபெர்ரிச் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்கு நானும் ஒரு காரணம். கடந்த ஒரு வருடமாக இரண்டு ஏக்கரில் ஸ்ட்ராபெர்ரி பயிர் செய்கிறேன். புனே நகரிலிருக்கும் வேளாண்மைத்துறையிலிருந்து ஸ்ட்ராபெர்ரி நாற்றுகளை வாங்கி வந்தேன். ஒரு நாற்று 12 ரூபாய். அங்கேயிருந்து கொச்சி நகரத்துக்கு நாற்றுகள் வரும். கொச்சியிலிருந்து இங்கே கொண்டுவரச் செலவாகும். எல்லாம் சேர்த்துக் கணக்குப் பார்த்தால், ஒரு நாற்றுக்கான செலவு 15 ரூபாய். கேரள வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக ஸ்ட்ராபெர்ரி நாற்றுக் கொடுக்கிறார்கள். அதனால் பலரும் ஸ்ட்ராபெர்ரி விவசாயத்துக்கு வந்துவிட்டார்கள்” என்ற பரதன், ஸ்ட்ராபெர்ரிச் சாகுபடி முறைகள் குறித்துப் பேசினார்.

இயற்கை முறையில்தான் சாகுபடி செய்ய முடியும்!

‘‘இங்கே பெரும்பாலும் 10 சென்ட் இடமாகத் தனித்தனியாக இருக்கும். எனவே 10 சென்ட் இடம் என்றே வைத்துக்கொள்வோம். இரண்டடி அகலத்துக்கு மண்ணை வரப்புபோல வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். நர்சரி பாய் அல்லது மல்சிங் ஷீட்டை வாங்கி அதன் மேலே போட்டு, நன்றாக மூடிவிட வேண்டும்.

 ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தில் சிவசங்கர்
ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தில் சிவசங்கர்

10 சென்ட்டில் 42 வரப்பு. ஒரு வரப்பில் 40 முதல் 44 துளைகள். இதுதான் கணக்கு. ஒவ்வொரு துளையிலும் ஒரு நாற்று நட்டுவைக்க வேண்டும். 60 நாள்களில் பூ வந்துவிடும். 90 நாள்களில் பழம் அறுவடை செய்துவிடலாம். ஒரு வருடத்திலிருந்து இரண்டு வருடங்கள் வரை தினமும் பழங்கள் எடுக்க முடியும். 10 சென்ட்டில் தினமும் 50 கிலோ பழம் எடுக்கிறேன். சீசன் நேரத்தில் ஒரு கிலோ ரூபாய் 400 வரை விற்பனையாகும். மற்ற நேரங்களில் 500 முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகும். தினமும் 10,000 முதல் 20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். சராசரியாக 15,000 ரூபாய் கிடைக்கும். இரண்டு வருடங்கள் முடிந்த பிறகு செடியை அகற்றிவிட்டு, புதிய நாற்றை நட வேண்டும். இதற்கு உரம், ரசாயன மருந்து என எதுவும் கிடையாது. வரப்பிலுள்ள துளையில் சிறிதளவு மாட்டுச்சாணம் போட்டால் போதும். அவ்வப்போது களைகளை அகற்ற வேண்டும். வெயில் நேரத்தில் காலை, மாலை செடியின் மீது தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மழை மற்றும் குளிர் காலத்தில் அதுவும் தேவையில்லை. நான் மாடு வைத்திருப்பதால் மாட்டுச்சாணம் உள்ளது. நர்சரி பாய்க்கு மட்டும் செலவு செய்தேன். வேறு செலவே இல்லை. இயற்கையாக விளையக்கூடிய வட்டவடை ஸ்ட்ராபெர்ரிக்கு இப்போது மவுசு கூடியிருக்கிறது’’ என்று பெருமையுடன் சொன்னார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தினமும் 3,000 ரூபாய் வருமானம்

பரதனின் தோட்டத்துக்கு அருகேயுள்ள சிவசங்கர் என்பவரின் தோட்டத்துக்குச் சென்றோம். “கேரட், பீன்ஸ் பயிரிட்டு வந்தேன். இப்போது மூன்று மாதங்களாக ஸ்ட்ராபெர்ரிக்கு மாறிவிட்டேன். இதில், ரெட் சில்லி, ஸ்வீட் சார்லி, ஹேம்ரோஸ், வின்டர்டோன் போன்ற வகைகள் உண்டு. நான் ரெட் சில்லியும் வின்டர்டோனும் பயிர் செய்திருக்கிறேன். வின்டர்டோன் பழம் பெரியதாக இருக்கும். ஜாம் தயாரிக்க ஏற்றது. ரெட் சில்லிப் பழம் சிறியதாக, சிவப்பாக இருக்கும். இனிப்புச் சுவை அதிகம். ஒயின் தயாரிக்க ஏற்றது. வின்டர்டோன் கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையாகும். ஆனால், ரெட் சில்லி கிலோ 300 ரூபாய்க்குத்தான் விற்பனையாகும். சிறிய அளவில் இருப்பதால் இதை மக்கள் விரும்புவதில்லை. ஆனால், இதில்தான் சுவை அதிகம். 10 சென்ட் ஸ்ட்ராபெர்ரி தோட்டம் வைத்திருக்கிறேன். தினமும் குறைந்தது 10 முதல் 15 கிலோ பழம் எடுத்துவிடுவேன். நேரடியாகத் தோட்டத்துக்கே சென்று ஸ்ட்ராபெர்ரி பழத்தை வாங்க முடியும் என்பதால், மூணாறு வரும் சுற்றுலாப்பயணிகள் வட்டவடை வருகிறார்கள். அவர்களுக்கு விற்பனை செய்யவே சரியாக இருக்கிறது. மீதமுள்ள பழங்களை எடுத்து, பாத்திரத்தில் போட்டு, இளம் சூட்டில் வேகவைத்து, சீனி சேர்த்து ஜாம் தயாரிப்போம். ஒரு கிலோ ஸ்ட்ராபெர்ரிக்கு 400 கிராம் சீனி, சிறிதளவு தேன். அவ்வளவுதான். அரை மணி நேரத்தில் ஸ்ட்ராபெர்ரி ஜாம் ரெடி. 400 கிராம் பாட்டில் 350 ரூபாய்க்கு விற்கிறோம். ஸ்ட்ராபெர்ரி ஜாமில் நல்ல லாபம் கிடைக்கிறது. ஒயின் தயாரிக்க அரசுத் தடை இருப்பதால் ஒயின் தயாரிப்பதில்லை.

 ஸ்ட்ராபெர்ரி பழங்கள்
ஸ்ட்ராபெர்ரி பழங்கள்
‘‘ஸ்ட்ராபெர்ரி நடவு செய்த 60 நாள்களில் பூ வந்துவிடும். 90 நாள்களில் பழம் அறுவடை செய்துவிடலாம். ஒரு வருடத்திலிருந்து இரண்டு வருடங்கள் வரை தினமும் பழங்கள் எடுக்க முடியும்.’’

ஸ்ட்ராபெர்ரிச் சாகுபடியில் பெரிய செலவு இல்லை. பூச்சிகளின் தொந்தரவும் இல்லை. அப்படியே இருந்தாலும் வெள்ளைப்பூண்டு, வேப்ப எண்ணெய், வசம்பு ஆகியவற்றைத் தண்ணீர்விட்டு அரைத்து, 15 லிட்டர் தண்ணீரில் 100 மி.லி அளவு கலந்து தெளித்தால் போதும். களைகளை எடுப்பதைத் தவிரப் பராமரிப்பும் இல்லை. தினமும் நல்ல லாபம் கொடுப்பதால் இங்குள்ள காய்கறி விவசாயிகள் பலர் ஸ்ட்ராபெர்ரிக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். அரசும் உதவி செய்கிறது. இன்னும் சிறிது காலத்தில் வட்டவடை ஸ்ட்ராபெர்ரி பூமியாக மாறிவிடும்” என்றார்.

 சோலார் விளக்குப் பொறி
சோலார் விளக்குப் பொறி

வெண்பனி மேகம், அதைக் கொண்டுவரும் குளிர்க் காற்று, லேசான சாரல் என இருந்த வட்டவடை ஸ்ட்ராபெர்ரித் தோட்டத்தில் இரண்டு ஸ்ட்ராபெர்ரிப் பழங்களைப் பறித்துச் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து விடைபெற்றோம்.

தொடர்புக்கு,

பரதன்,

செல்போன்: 94958 79541.

தடுப்பணை கட்டினால் ஆண்டு முழுவதும் சாகுபடி!

இனிப்பான வருமானம் தரும் ஸ்ட்ராபெர்ரி! - 10 சென்ட்... தினமும் ரூ.15,000

நாம் வந்திருக்கும் செய்தி அறிந்து நம்மைச் சந்திக்க வந்த வட்டவடை குளிர்காலக் காய்கறி சங்கத் தலைவர் ஜெயபிரகாஷ், “வட்டவடையில் 2,185 காய்கறி விவசாயிகள் இருக்கிறோம். இவர்களில் பலர் ஸ்ட்ராபெர்ரிக்கு மாறிவிட்டனர். கேரள வேளாண்துறை முதற்கட்டமாக 1,50,000 இலவச ஸ்ட்ராபெர்ரி நாற்றுகள் கொடுக்கத் திட்டமிட்டது. அதன்படி கொடுத்துக்கொண்டிருக்கிறது. மேலும், ஸ்ட்ராபெர்ரி மதிப்புக்கூட்டும் மையத்தை மூணாறில் அமைத்திருக்கிறது கேரள அரசு. இதனால், பெரும்பாலான விவசாயிகளுக்கு ஸ்ட்ராபெர்ரிச் சாகுபடி மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. மழை, குளிர் காலத்தில் சாகுபடிப் பிரச்னை இல்லை. வெயில் காலத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும். செடி கருகிவிடும். ஒத்தமரம், மேசோலை, மனத்தலமேடு, நெடுமார்பு, நண்டுசுட்டான்பாறை, ஒழுக்கழஞ்சி, பிள்ளையார் அடி சோலை ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டினால், வெயில் காலத்திலும் விவசாயிகள் கவலை இல்லாமல் இருப்பார்கள்” என்றார்.

மலைப்பகுதியில் மட்டுமே வளரும்!

ஸ்ட்ராபெர்ரி பற்றிப் பேசிய உதகமண்டலம் (ஊட்டி) தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன், “ஸ்ட்ராபெர்ரியில் சுமார் 100 வகைகளுக்கு மேல் உள்ளன. இவற்றில் இந்தியாவில் பிரதானமாக 15 ரகங்கள்தான் பயிரிடப்பட்டுவருகின்றன. தமிழகம் மற்றும் கேரளப் பகுதிகளில் ஸ்வீட் சார்லி, ஹேம்ரோஸ், வின்டர்டோன் ஆகிய ரகங்கள்தான் பெரும்பாலும் பயிரிடப்படுகின்றன. ஸ்ட்ராபெர்ரி குளிர்ப் பகுதிகளில் மட்டுமே வளரும். தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற பகுதிகள் ஸ்ட்ராபெர்ரிர்ச் சாகுபடி செய்ய ஏற்றவை” என்றார்.

ஸ்ட்ராபெர்ரி மதிப்புக்கூட்டல் மையம்!

வட்டவடை பஞ்சாயத்து வேளாண் அலுவலர் முருகனிடம் பேசினோம். “2013-ம் ஆண்டு வட்டவடை பகுதிக்கு ஸ்ட்ராபெர்ரி கொண்டுவரப்பட்டது. இங்குள்ள தட்பவெப்பநிலை, மண் வளம், விவசாயிகள் சிலரின் ஆர்வம் ஆகியவற்றால்தான் இது சாத்தியமானது. ஸ்ட்ராபெர்ரி விவசாயிகளை ஊக்கப்படுத்த கேரள அரசு பல திட்டங்களைத் தயார் செய்து கொண்டிருக்கிறது. அதன் முதல்படிதான் இலவச ஸ்ட்ராபெர்ரி நாற்றுகள் கொடுக்கும் திட்டம். மூணாறில் உள்ள ஸ்ட்ராபெர்ரி மையம் செயல்படத் துவங்கியுள்ளது. இதன் மூலம் ஸ்ட்ராபெர்ரியிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் செய்ய முடியும். ஜாம், ஒயின், கேக், சாக்லேட் போன்றவை. இது விவசாயிகளுக்கு உதவியாகவும், பக்க பலமாகவும் இருக்கும்” என்றார்.