கங்கைப் பகுதிகளில் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் மத்திய அரசு... லோகோ டிசைன் செய்ய அழைப்பு!

இந்த லோகோவைப் பயன்படுத்தி மக்களிடம் இயற்கை விவசாயம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவிருக்கிறது அரசு.
இயற்கை விவசாயமே நிலைத்த நீடித்த விவசாயத்துக்கான அடிப்படை. இதைப் புரிந்துகொண்ட மத்திய அரசு கங்கை நதி ஓடும் பகுதிகளில் இயற்கை விவசாயத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கெனவே உத்திரகாண்ட் மாநிலம் முதல் கங்கை நதி கடலில் கலக்கும் மேற்கு வங்காளம் வரை இயற்கை விவசாய பசுமை பகுதி திட்டம் (Organic farming Corridor) ஒன்றை அறிவித்திருந்தது.

இதன்மூலம் அடுத்து வருகிற 5 ஆண்டுகளில் இந்தப் பகுதியை இயற்கை விவசாயம் செய்யப்படும் பகுதியாக மாற்ற முனைந்துள்ளது. 2,225 கி.மீ நீளமுள்ள கங்கை நதி பாயும் பகுதிகளில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி பயன்பாடுகளால் கங்கை நதி மாசடைவதாக தகவல் வெளிவந்தது. அதனால் அந்தப் பகுதிகளில் இயற்கை விவசாயத்தைப் பரப்பும் பணியில் இறங்கியுள்ளது மத்திய வேளாண்துறை.
இதையொட்டி மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் சார்பில் லோகோ போட்டி ஒன்று நடத்தப்படுகிறது. இதில் இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை விவசாய விளைபொருள்கள் சம்பந்தமாக `நமாமி கங்கே’ (Namami Gange) என்ற பெயரில் லோகோ ஒன்றை உருவாக்கி அதை அப்லோட் செய்ய வேண்டும். இந்த லோகோவைப் பயன்படுத்தி மக்களிடம் இயற்கை விவசாயம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவிருக்கிறது அரசு. அதேசமயம் கங்கை நதியை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் இயற்கை விவசாயம் விழிப்புணர்வு பெருகும்.

நமாமி கங்கே (Namami Gange) என்ற பெயரில் இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை விவசாயப் பொருள்களைக் கொண்டு லோகோ டிசைன் செய்து இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் இந்தப் போட்டியில் பங்கு பெறலாம். இதை https://auth.mygov.in/user/login?desti=message என்ற இணையதளத்தில் மெயில் ஐ.டி, செல்போன் எண்ணைப் பதிவு செய்துகொண்டு லோகோவை அப்டேட் செய்ய வேண்டும். பி.டி.எஃப் அல்லது ஜேப்பக் பார்மேட்டில் 2 எம்.பி இருக்குமாறு ஏற்ற வேண்டும். இந்த லோகோ டிசைன் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று தேர்ந்தெடுப்பவர்களுக்குப் பணப்பரிசு எதுவும் கிடையாது. ஆனால், மத்திய வேளாண்துறையின் அங்கீகாரமும் பாராட்டுப் பத்திரமும் கிடைக்கும்.
இந்த லோகோ டிசைன் போட்டியில் டிசைனை அப்லோட் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15 ஆகும். இயற்கை விவசாயம் சம்பந்தமான ஆர்வமுள்ளவர்கள் இப்போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது மத்திய அரசு.
பதிவு செய்வதற்கான லிங்க்: https://www.mygov.in/task/logo-design-contest-promotion-organic-farming-and-organic-products-under-namami-gange/