Published:Updated:

`நாங்க இயற்கை விவசாயத்துல சாதிச்சுட்டோம்!' -மாப்பிள்ளை சம்பா சாகுபடி செய்த அரசுப் பள்ளி மாணவர்கள்

மாணவர்கள் அறுவடை செய்த நெல்
மாணவர்கள் அறுவடை செய்த நெல் ( நா.ராஜமுருகன் )

தங்கள் பள்ளியில் இருந்த சிறிய இடத்தில் இயற்கை முறையில் மாப்பிள்ளை சம்பா என்ற பாரம்பர்ய நெல் ரகத்தை விளைவித்து, வெற்றிகரமாக அறுவடை செய்து, கிராம மக்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்கள், கரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளி மாணவர்கள்.

`149 மாணவர்களுக்கு சுரை விதை; முதல் அறுவடையைச் செய்து பரிசு பெற்ற மாணவி' - அரசுப் பள்ளியில் அசத்தல்!

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது. தே.இடையப்பட்டி. இந்தக் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் பொன்னுசாமி, இயற்கை மீது அதீத காதல் கொண்டவர். தே.இடையப்பட்டிக்கு அருகில்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நிரந்தரமாகத் துயில் கொள்ளும் வானகம் இருக்கிறது. அங்கே நடைபெறும் நம்மாழ்வார் பிறந்தநாள், நினைவுநாள் நிகழ்ச்சிகளின்போது, தங்கள் பள்ளி மாணவர்களையும் அழைத்துப் போய், அவர்களுக்கும் இயற்கை மீதான ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறார் பொன்னுசாமி.

மாணவர்கள் அறுவடை செய்த நெல்
மாணவர்கள் அறுவடை செய்த நெல்

அதனால், ஒவ்வொரு மாணவனும் தங்கள் வீட்டில் இயற்கை முறையில் காய்கறித் தோட்டம் அமைத்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான், மாணவர்களுக்கு நமது பாரம்பர்ய விதைகளின் மேன்மையை உணர வைக்க நினைத்தார், பொன்னுசாமி. பள்ளியில் காலியாக இருந்த 100 சதுர அடி இடத்தில் 178 நாள்களுக்கு முன்பு மாணவர்களைக் கொண்டே உழ வைத்தார். அவர்களைக் கொண்டே ஏற்கெனவே தயார் நிலையில் இருந்த மாப்பிள்ளை சம்பா நாற்றுகளை நட வைத்தார்.

கடந்த 178 நாள்களாக மாணவர்களும் அந்த நடவு செய்யப்பட்ட இடத்தைக் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார்கள். பைப்புகளில் வீணாகும் தண்ணீர், சமையலறையில் வீணாகும் நீரை, அந்தப் பயிர்களுக்குப் பாய்ச்சினார்கள். மாணவர்களே களைகளைப் பறித்தார்கள். ஆனால், இலை சருகுகளை மட்டுமே உரமாகப் போட்டார்கள். வேறு எதையும் பயன்படுத்தவில்லை.

இந்த நிலையில், மாணவர்களின் கவனிப்பால் பயிர்களில் பூச்சி எதுவும் தாக்கவில்லை. இதைக் கேள்விப்பட்ட கிராம மக்களும் தங்கள் பிள்ளைகள் விளைவித்த வெள்ளாமையை வந்து வியப்போடு பார்த்துச் சென்றனர். 178 நாள்களில் மாப்பிள்ளை சம்பா நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து, அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்தது.

மாணவர்கள்
மாணவர்கள்

தலைமை ஆசிரியர் பொன்னுசாமி கிராம மக்களை அழைத்து, `அறுவடை'யை திருவிழாவாக கொண்டாட முடிவெடுத்தார். அதன்படி கிராம மக்களும் அங்கே வந்து சேர, மாணவர்கள் தங்கள் கைகளால் அதை அறுவடை செய்தனர். நெற்கதிர்களை சிறிய அளவிலான கட்டுகளாக கட்டி, அதை மாணவர்கள் தங்கள் தலையில் வைத்துக்கொண்டு வரிசையாகப் பள்ளி அறைக்குச் சென்றனர். அங்கே வைத்து, கைகளால் தரையில் அடித்து, நெல்லை வைக்கோலில் இருந்து தனியாகப் பிரித்தனர். அதோடு, முறத்தில் வைத்து புடைத்து, அதில் இருந்த கருக்காவை அப்புறப்படுத்தினர். இறுதியில், ஐந்து கிலோ நெல் கிடைக்க, `நாங்க இயற்கை விவசாயத்துல ஜெயிச்சுட்டோம். அடுத்தடுத்து இன்னும் சாதிப்போம்' என்று உற்சாகமாகச் சொன்னார்கள்.

இதுகுறித்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னுசாமியிடம் பேசினோம். ``மாணவர்களுக்கு வெறுமனே ஏட்டுக்கல்வியை மட்டும் கொடுக்காமல், இதுபோன்ற வாழ்வியல் கல்வியையும் கொடுக்கணும்னு நினைச்சுதான், மாணவர்களை இயற்கை சார்ந்த விஷயங்களில் தொடர்ந்து ஈடுபடுத்திகிட்டு வர்றேன். அந்த வகையில்தான், மாணவர்களை வைத்தே நமது பாரம்பர்ய நெல் ரகமான மாப்பிள்ளைச் சம்பாவை பயிர் செய்ய வைத்தேன். `சிறு பிள்ளை செய்த விவசாயம் வீடு வந்து சேராது'னு சொல்வாங்க.

பொன்னுசாமி (தலைமை ஆசிரியர்)
பொன்னுசாமி (தலைமை ஆசிரியர்)

ஆனால், எங்க பிள்ளைகள் செய்த விவசாயம் வெற்றியடைஞ்சுட்டு. அஞ்சு கிலோ வரை கிடைச்சுருக்கு. அதுல கொஞ்சம் விதைக்கு எடுத்து வச்சுக்கிட்டு, மீதி உள்ள நெல்லை அரிசியாக்கி, அதில் சர்க்கரைப் பொங்கல் செய்து மாணவர்களுக்குக் கொடுக்க இருக்கிறோம்" என்றார், மகிழ்ச்சியாக!

அடுத்த கட்டுரைக்கு