நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கருத்தரங்கு: சிறுதானியச் சாகுபடியை அரசு விரிவுபடுத்தும்!

விழாவில் குத்துவிளக்கேற்றும் அமைச்சர் கே.பி.அன்பழகன்
பிரீமியம் ஸ்டோரி
News
விழாவில் குத்துவிளக்கேற்றும் அமைச்சர் கே.பி.அன்பழகன்

விதைத் திருவிழாவில் நம்பிக்கை விதைத்த அமைச்சர்!

மிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை, பசுமை விகடன் மற்றும் தருமபுரி மாவட்ட சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இணைந்து ‘சிறப்பான லாபம் தரும் சிறுதானியக் கருத்தரங்கு மற்றும் விதைத்திருவிழா’வை மார்ச் 8-ம் தேதி, தருமபுரி டி.என்.சி விஜய் மஹாலில் நடத்தின.

இந்தக் கருத்தரங்குக்குச் சிறப்பு விருந்தினர்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி இ.ஆ.ப ஆகியோர் கலந்துகொண்டனர். கொரானோ வைரஸ் இந்தியாவுக்குள் அதிகம் ஊடுருவாத நேரம் என்பதால் இந்த நிகழ்வில் குவிந்தனர் விவசாயிகள்.

பசுமை விகடன்
பசுமை விகடன்

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 900 பேர் கலந்துகொண்டனர். முன்கூட்டியே வந்திருந்த விவசாயிகளுக்குக் காலையிலேயே குதிரைவாலிப் பொங்கலும், சிறுதானிய சத்துமாவுக் கஞ்சியும் வழங்கப்பட்டன. தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண்துறை அலுவலர்கள் விவசாயிகளை வரவேற்க, விவசாயிகளிடம் சிறுதானியச் சாகுபடி பற்றிய வேளாண்துறை வழங்கிய துண்டுப் பிரசுரமும் பசுமை விகடன் சார்பில் இயற்கை வேளாண் வழிகாட்டிக் கையேடும் வழங்கப்பட்டன. கருத்தரங்கின் ஓர் அம்சமாக விதைத் திருவிழாவும் நடைபெற்றது. அதில் சிறுதானிய விதைகளும், உணவுப் பொருள்களும், வேளாண்துறையின் சிறுதானிய ஆராய்ச்சி விதைகளும், பட்டு வளர்ப்பு குறித்த தகவல்களும், வேஸ்ட் டீகம்போஸர் பாட்டில்களும் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன.

நிகழ்வில் வரவேற்புரை ஆற்றிய தருமபுரி மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ஷிவ் ஷங்கர் சிங், “தருமபுரி மாவட்டத்தை `வறட்சி நிறைந்த மாவட்டம்’ என்று சொல்கிறார்கள். ஆனால், இங்கே வளம் மிகுந்த செல்வம் என்றால் அது சிறுதானியங்கள்தான். வறட்சியில் விளைகிறது என்பதாலோ என்னவோ, இதன் சுவை இன்று தமிழகத்தைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. `இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட விவசாயிகள்தான் பெரும்பான்மையாக இருப்பார்கள்’ என்று நினைத்திருந்தேன். வந்திருக்கும் விவசாயிகளில் பெரும்பான்மையானோர் வெளி மாவட்டத்திலிருந்து வந்திருக்கிறார்கள் என்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது” என்றார். உயர்கல்வித்துறை அமைச்சரிடமிருந்து, “நான் மற்றொரு நிகழ்ச்சியில் இருப்பதால் நிகழ்ச்சியைத் தொடங்குங்கள் வந்து கலந்துகொள்கிறேன்” என்று தகவல் வர நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.

முதல் பேச்சாளராகப் பேசிய கிருஷ்ணகிரி மாவட்டம், பையூரிலுள்ள மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையத் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் தமிழ்ச்செல்வன், “தருமபுரி மாவட்டத்தில் பெருந்தானியத்தைவிட, சிறுதானியங்களுக்கு உகந்த மழைவளம் உள்ளது. சிறுதானியங்கள், தொடர்ந்து 20 நாள்களுக்கு மழையில்லையென்றாலும் தாக்குப்பிடித்து வளர்ந்துவிடும். சிறுதானியங்களை ஆடிப்பட்டத்தில் விதைத்தால் நல்ல மகசூல் எடுக்கலாம். தமிழக அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம்தான் சிறுதானிய உற்பத்தியில் முதன்மையாகத் திகழ்கிறது. மக்கள்தொகை அளவு கடந்து பெருகியிருக்கும் இந்தச் சூழலில், குறைந்த வயதுகொண்ட சிறுதானிய ரகங்களைப் பயிர் செய்வது அவசியம். பையூர்-2, கோ-4, அத்தியந்தல்-1 போன்ற சிறுதானிய ரகங்கள் சாகுபடி செய்ய ஏற்றவை. சிறுதானியங்களால் உடலுக்கு நிறைய நன்மை கிடைக்கிறது.

வரகு உண்பவர்களுக்கு இரும்புச்சத்துக்கெனத் தனியே மாத்திரை, மருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமே இருக்காது. அந்த அளவுக்குச் சத்துகள் நிறைந்தது” என்றார் முத்தாய்ப்பாக.
விழாவில் குத்துவிளக்கேற்றும் அமைச்சர் கே.பி.அன்பழகன்
விழாவில் குத்துவிளக்கேற்றும் அமைச்சர் கே.பி.அன்பழகன்

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சண்முகம், “இயற்கை விவசாயம் என்பது பூச்சி மருந்துக்கடைகளிலிருந்து எதையும் வாங்காமல், நிலத்தில் இருப்பதையும் கால்நடைகளிடமிருந்து பெறுவதையும்கொண்டே செய்யப்பட வேண்டும். சிறுதானியங்களைப் பொறுத்தவரை நீண்டகாலப் பராமரிப்புக்காக கெமிக்கல் போன்ற எதையும் பயன்படுத்தும் தேவையில்லை. விதைநேர்த்தி செய்யும் அவசியம்கூட இல்லை. விதைத்தால் போதும் நன்றாக விளையும். அதுவும் இடுபொருள் கொடுத்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும். சிறுதானியங்களை நேரடியாக உணவாக்காமல் ராகி நூடுல்ஸ், கம்பு நூடுல்ஸ் என்று மதிப்புக்கூட்டல் செய்யும்போது குழந்தைகளையும் இளைஞர்களையும் வெகுவாகக் கவர முடியும். சிறுதானியச் சாகுபடி தொடர்பான பயிற்சிகளுக்கும் ஆலோசனைகளுக்கும் பாப்பாரப்பட்டியிலுள்ள வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகலாம்” என்றார். தேநீர் இடைவேளையாக அனைவருக்கும் சிறுதானிய சத்து மாவுக் கஞ்சி வழங்கப்பட்டது. அதை அருந்தியவாறே வந்தமர்ந்தனர் விவசாயிகள்.

நிகழ்வில் கலந்துகொண்டோர்
நிகழ்வில் கலந்துகொண்டோர்

தொடர்ந்து பேசிய வேளாண் செயற்பொறியாளர் அறிவழகன், “கேட்பாரற்றுக் கிடந்த சிறுதானியத்தின் மகத்துவம் இன்று அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறது. எங்கள் துறை மூலமாகச் சிறுதானிய கல் நீக்கும் கருவி உள்ளிட்ட பல கருவிகளை வழங்கிவருகிறோம்” என்றவர், பண்ணைக் கருவிகளுக்கு அரசு வழங்கும் மானியங்கள் குறித்து விரிவாகப் பேசினார். அவரைத் தொடர்ந்து தோட்டக்கலைத்துறை மூலமாக முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்துப் பேசினார் தோட்டக்கலைத்துறையைச் சேர்ந்த சீனிவாசன்.

ஷிவ் ஷங்கர் சிங், சிவலிங்கம்
ஷிவ் ஷங்கர் சிங், சிவலிங்கம்

ஓய்வுபெற்ற வேளாண்துறை உதவி இயக்குநர் மதுபாலன், “நான் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவன். பணியில் இருந்தபோது ஆய்வுக்காகச் செல்லும் இடங்களில், இந்த மாவட்ட மக்கள்தான் சிறுதானிய உணவுகளைக் கொடுத்தார்கள். அரசுப் பணியிலிருக்கும்போதே மறைமுகமாக இயற்கை விவசாயப் பணிகளைத் தொடங்கிவிட்டேன். இப்போது முழுநேரமாக இயற்கை விவசாயம் செய்துவருகிறேன். இதன் தொடர்ச்சியாகச் சிக்கிம் மாநிலத்துக்கு விவசாயிகளை அழைத்துச் சென்று, அங்குள்ள இயற்கை விவசாய முறைகளைக் காட்டி திரும்பியிருக்கிறேன். இப்போது இயற்கை விவசாயம் பற்றி ஊர் ஊராகப் பிரசாரம் செய்துவருகிறேன்” என்று கலகலத்தார்.

ஆட்சியர் மலர்விழி, முனைவர் தமிழ்ச்செல்வன்
ஆட்சியர் மலர்விழி, முனைவர் தமிழ்ச்செல்வன்

தருமபுரி மாவட்ட சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிவலிங்கம் “பசுமை விகடன்தான் நாங்கள் இவ்வளவு பயணப்பட்டு வந்திருப்பதற்குக் காரணம். வெற்றிகரமாக, `உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ நடத்துவதற்கு நாங்கள் உதாரணமாக இருக்கிறோம். ஆயிரம் விவசாயிகளை ஒருங்கிணைத்து, குழு ஆரம்பிப்பது சாதாரண விஷயமல்ல. வேளாண்துறை, பசுமை விகடன், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், வேளாண் விற்பனைத்துறை எனப் பல அமைப்புகள் மற்றும் பலரின் ஒத்துழைப்பால்தான் இது சாத்தியமாகியிருக்கிறது. தருமபுரி மாவட்டத்தில் விளையும் சிறுதானியங்கள் இன்று தமிழகம் தாண்டிப் பல பகுதிகளுக்குப் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதே சமயம் காவிரி உபரி நீரை சேலம் மாவட்டத்துக்குக் கொடுத்ததுபோல, தருமபுரி மாவட்டத்துக்கும் கொடுத்தால் இந்த மாவட்டத்தில் மேலும் விவசாயம் வளரும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

வேஸ்ட் டீகம்போஸர் வழங்கும் பணி
வேஸ்ட் டீகம்போஸர் வழங்கும் பணி

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிறகு, உயர்கல்வித் துறை அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்ட ஆட்சியரும் தவிர்க்காமல் இந்த விழாவுக்கு வந்து சிறப்பித்தனர்.

முனைவர் சண்முகம், அறிவழகன்
முனைவர் சண்முகம், அறிவழகன்

தலைமையுரையாற்றிய மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி இ.ஆ.ப., “ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வறுமையின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட சிறுதானியங்கள் இன்று செல்வந்தர்கள் நாடிச்செல்லக்கூடியதாக மாற்றம் பெற்றுள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் அரிசிப் பயன்பாட்டின் காரணமாக, பள்ளி செல்லும் குழந்தைகூடச் சர்க்கரைநோய்க்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறுதானிய நுகர்வே இல்லாத ஒரு தலைமுறையே தோன்றியிருக்கிறது. இன்று நம்மிடையே நிலவும் அத்தனை நோய்களுக்கும் காரணம் நம் பாரம்பர்ய உணவை மறந்ததுதான். நம் பாரம்பர்ய உணவான சிறுதானியத்தைக் கையிலெடுக்க வேண்டிய நேரமிது” என்றார் உணர்ச்சி பொங்க.

மதுபாலன், ஸ்ரீனிவாசன்
மதுபாலன், ஸ்ரீனிவாசன்

விழா சிறப்புரையாற்றிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் “உங்களை (விவசாயிகளை) நீண்ட நேரம் காத்திருக்க வைத்துவிட்டேன். அதற்காக முதலில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஆரம்பித்தார். “நம் முன்னோர்கள் ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்று சொன்னது சிறுதானியத்தைத்தான். அந்த அளவுக்குச் சிறுதானியத்தில் சத்துகள் நிறைந்திருக்கின்றன. தற்போது அனைவரும் சிறுதானியத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். அரசும் சிறுதானியச் சாகுபடியை ஊக்குவிக்கத் திட்டங்கள் தீட்டி செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 10 லட்சம் ஹெக்டேரில் சிறுதானியச் சாகுபடி நடந்துவருகிறது. மேலும், சிறுதானியச் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மதிய உணவைச் சாப்பிடும் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்
மதிய உணவைச் சாப்பிடும் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்

தருமபுரி மாவட்டம் விவசாயத்தை பிரதானத் தொழிலாகக்கொண்ட ஒரு மாவட்டம். பருவமழையை நம்பியே மக்கள் வாழும் இடம். மானாவாரிப் பயிர்களான கேழ்வரகு, சாமை, தினை, துவரை, தட்டவரை, கொள்ளு, உளுந்து, கொண்டைக்கடலை... நெல், கரும்பு, மஞ்சள், கத்திரி, சம்பங்கி, சாமந்தி, தக்காளி, தென்னை என அனைத்துவகையான பயிர்களுக்கும் ஏற்ற தட்பவெப்பநிலைகொண்ட மாவட்டமாகத் திகழ்கிறது. சிறுதானியம் மற்றும் வேளாண் வளர்ச்சிக்காக அரசு பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. அரசின் உதவியையும் சலுகையையும் பயன்படுத்திக்கொண்டு உழவர்கள் சிறுதானிய உற்பத்தியை வெகுவாக அதிகரிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டவர், “பொன்னாடை, நினைவுப் பரிசு என எந்த வைபவங்களும் வேண்டாம். விவசாயிகளை முதலில் சாப்பிடச் சொல்லுங்கள். விவசாயிகளைக் காத்திருக்க வைத்தற்காக நானே உங்களோடு சிறுதானிய உணவைச் சாப்பிடுகிறேன்” என்று கூறியதோடு அமர்ந்தும் சாப்பிட்டார்.

உணவு பரிமாறும் பணியில்
உணவு பரிமாறும் பணியில்

மதிய உணவாகத் தயாராகியிருந்த குதிரைவாலி பிரியாணி, ராகிப் புட்டு மிக்ஸ், சாமை தயிர் சாதம், பருப்பு வடை, காய்கறிப் பொரியல், பொன்னி அரிசிச் சோறு, சாம்பார், ரசம் பரிமாறப்பட்டன.

குதிரைவாலி பிரியாணி, ராகி மிக்ஸ், சாமை தயிர் சாதம், வடை... என சிறுதானிய விருந்தில் இடம்பெற்றன. தமிழகம் முழுவதும் 10 லட்சம் ஹெக்டேரில் சிறுதானியச் சாகுபடி நடந்துவருகிறது.

கேள்வி-பதில்களுக்குப் பிறகு நிறைவாக நன்றியுரை ஆற்றிய வேளாண் உதவி இயக்குநர் மு.இளங்கோவன், “இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய வேளாண்மைத்துறைச் செயலாளர், இயக்குநர், தருமபுரி மாவட்ட வேளாண்துறை அலுவலர்கள், இதர துறை அதிகாரிகள், அலுவலர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பசுமை விகடனுடன் இணைந்து நடத்தும் முதல் நிகழ்ச்சி இது. அது இவ்வளவு சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கவில்லை. வந்திருந்த அனைத்து விவசாயிகளுக்கும் வேளாண்துறை சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த மண்டபத்தை இந்த நிகழ்ச்சிக்காக வழங்கிய டி.என்.சி விஜய் மஹால் நிர்வாகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார் தன்னடக்கத்துடன்.

கருத்தரங்கு: சிறுதானியச் சாகுபடியை அரசு விரிவுபடுத்தும்!

சிறுதானியத்துக்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பென்னாகரம் வாசகர் ரவி என்பவர், “இந்த நல்ல பணியில் நானும் இணைந்து கொள்கிறேன்” என்று கூறி ரூ.10,000த்தை நன்கொடையாக வழங்கினார். நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவருக்கும் வேஸ்ட் டீகம்போஸர் பாட்டில்கள் விலைக்கு வழங்கப்பட்டன. சிறப்பான ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட மகிழ்ச்சியுடன் விடைபெற்றனர் விவசாயிகள். மேலும் பசுமை விகடன் இதழ்கள் மற்றும் வெளியீடுகள், சிறுதானிய விதைகள், பட்டு வளர்ப்பு நுட்பங்கள், வேளாண்மைக்கு உதவும் உபகரணங்கள் என நிறைய அரங்கங்கள் விவசாயிகளின் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. மாலையில் மனநிறைவுடன் விவசாயிகள் வீடுகளுக்குத் திரும்பினார்கள்.

ருசிக்கவைத்த சிறுதானியம்

கருத்தரங்கு: சிறுதானியச் சாகுபடியை அரசு விரிவுபடுத்தும்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையைச் சேர்ந்த ராஜசேகரி, “கருத்தரங்கில் சொல்லப்பட்டவை அனைத்தும் ரத்தினங்கள். இவற்றை மனதில் வைத்து நம் விவசாயத்தில் சிறுதானியத்தையும் சேர்க்க வேண்டும். அதுவே இது போன்ற கருத்தரங்குகளுக்கு நாம் செய்ய வேண்டிய மரியாதை. மதிய உணவாக வழங்கிய சிறுதானிய உணவு பிரமாதம். அதுவும் கேழ்வரகில் செய்யப்பட்ட ராகி புட்டு மிக்ஸ் அருமை. இது போன்ற நிகழ்ச்சிகளை அடிக்கடி நடத்துங்கள்” என்றார் உற்சாகமாக.

கருத்தரங்கு: சிறுதானியச் சாகுபடியை அரசு விரிவுபடுத்தும்!
கருத்தரங்கு: சிறுதானியச் சாகுபடியை அரசு விரிவுபடுத்தும்!

நிகழ்வில் சிறுதானிய உணவுப் பொருள்கள் வாங்க வந்திருந்த தருமபுரியைச் சேர்ந்த சர்மிளா - நசிமுதீன் தம்பதி, “நான் ஆசிரியையாக வேலை செய்யறேன். ஆறு வருஷமா ராகி, கம்பு, சாமை, குதிரைவாலி அரிசியைச் சாப்பிட்டுவர்றோம். வழக்கமாக, தருமபுரி உழவர் சந்தையில வாங்கிட்டிருப்போம். இப்போ இந்த நிகழ்விலேயே வாங்கிக்க முடிஞ்சுது. தருமபுரி மாவட்ட வேளாண்துறை அடிக்கடி இது போன்ற நிகழ்ச்சியைத் தருமபுரி மாவட்ட மக்களுக்காக நடத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தனர்.

ராஜசேகரி
ராஜசேகரி

காவல்துறையில் பணிபுரிந்துவரும் பன்னீர்செல்வம் தம்பதி, “பசுமை விகடன் நடத்தும் நிகழ்ச்சிகளில் எப்போதும் ஆர்வத்துடன் கலந்துகொள்வோம். சிறுதானியத்தைப் பத்தி இதுவரைக்கும் கேள்விப்படாத தகவல்களெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன். மதிய விருந்தில் வழங்கிய சிறுதானிய உணவின் சுவையும் அதில் இடம்பெற்ற கறுப்புக்கொள்ளு ரசமும் இதுவரை நாங்கள் சுவைத்துப் பார்க்காதவை. அதைச் சுவைத்து பார்க்க வாய்ப்பளித்த பசுமை விகடனுக்கு நன்றி” என்றனர்.

இயற்கை விவசாயிகளுக்குப் பரிசு!

சேலம் மாவட்டம், ஆத்துரைச் சேர்ந்த வேளாண் அலுவலர் க.வேல்முருகன், “குஜராத் மாநிலத்தில் உள்ளவர்கள், ஒரு நாளைக்குச் சராசரியாக 184 கிராம் அளவு சிறுதானியத்தை சாப்பிடுகிறார்கள். இரண்டாவதாக, கர்நாடகத்தில் சராசரியாக 93 கிராம் அளவு சிறுதானியத்தைச் சாப்பிடுகிறார்கள். இதில் தமிழகத்தின் நிலை மோசமாக உள்ளது. ஒரு நாளைக்குச் சராசரியாக 4 கிராம் என்ற அளவில்தான் சாப்பிட்டுவருகிறோம். `உடல் ஆரோக்கியத்துக்கு சிறுதானியம் மிகவும் அவசியம்’ என்று மருத்துவ ஆய்வறிக்கைகளே வலியுறுத்துகின்றன.

வேல்முருகன், அம்மாசையப்பன்
வேல்முருகன், அம்மாசையப்பன்

அதேபோல இயற்கை இடுபொருள்களில் புதிதாக வந்திருக்கும் வேஸ்ட் டீகம்போஸர் சிறப்பு வாய்ந்தது. பஞ்சகவ்யா தயாராவதற்கு 21 நாள்கள் பிடிக்கும். ஆனால், இந்த வேஸ்ட் டீகம்போஸர் 5-7 நாள்களில் தயாராகிவிடும். அதனால், இயற்கை விவசாயம் செய்பவர்கள் இதைக் கண்டிப்பாக ஒரு முறை பயன்படுத்திப் பார்க்க வேண்டும். நிச்சயம் நல்ல விளைச்சல் கிடைக்கும். இது இயற்கை விவசாயிகளுக்குக் கிடைத்த பரிசு. எனவே, அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று அழைப்பு விடுத்தார்.

வேஸ்ட் டீகம்போஸர் தயாரிப்பு பற்றிப் பேசிய இயற்கை விவசாயி கூ.ரா.அம்மாசையப்பன், “ஒரு வேஸ்ட் டீகம்போஸர் பாட்டில், இரண்டு கிலோ வெல்லம், 200 லிட்டர் தண்ணீர் இருந்தால் போதும். 5-7 நாள்களில் வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் தயார் செய்துவிடலாம். அதிலிருந்து வாழ்நாள் முழுவதும் தாய் திரவத்தைக்கொண்டு கரைசல் தயாரித்துக்கொண்டே பயன்படுத்தலாம். நான் இதுவரை என் தோட்டத்துக்கு 9 ஆயிரம் லிட்டர் கரைசலைப் பயன்படுத்தி, காய்கறிச் சாகுபடி செய்துவருகிறேன்” என்று தன்னுடைய சாகுபடி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.