Published:Updated:

பனை விதைகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.10 கோடி... இழந்த நீர்வளத்தை மீட்டெடுப்பாரா எடப்பாடி?!

"பனைமரங்களை அதிக அளவில் வளர்ப்பதற்கு நடப்பாண்டில் ரூ.10 கோடி செலவில், 2.5 கோடி பனை விதைகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்” எனச் சட்டமன்றத்தில் அண்மையில் அறிவித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இது எந்த அளவுக்கு பயனளிக்கும்?

'உச்சி முதல் வேர் வரை' அனைத்துப் பாகங்களிலும் மனிதனின் வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய வளங்களைக் கொண்டு ‘கற்பகத் தரு’ என்னும் சிறப்பைக் கொண்டது பனைமரம். இந்தியாவில் உள்ள மொத்தப் பனைமரங்களின் எண்ணிக்கையில் 50 சதவிகிதம் தமிழகத்திலும், அதிலும் குறிப்பாக தென்மாவட்டங்களிலும் இருந்தன. கடும் வறட்சியையும் தாங்கி நெடிது வளர்ந்து நிலத்தடிநீரைப் பாதுகாக்க வல்லது இம்மரம். தமிழகத்தின் மாநில மரமும்கூட. இதன் முழு பனம்பழத்தை நெருப்பிலிட்டு சுட்டாலும்கூட ஃபீனிக்ஸ் பறவையாகத் துளிர்விட்டு முளைக்கக்கூடிய விந்தையைக் கொண்டது. ஆனால் இன்றோ, இதன் எண்ணிக்கையில் பெரும்பகுதியை நாம் இழந்திருக்கிறோம்.

பனை மரம்
பனை மரம்
ம.அரவிந்த்

கட்டுமானத் தேவை, செங்கல் சூளைக்கான விறகுகளின் தேவை ஆகிய காரணங்களால் பனைமரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டன. இதனால் பனைகளை நம்பி வாழ்ந்த பனைத்தொழிலாளர்களும் வேலை இழந்து தவித்தனர். இதையடுத்து பனைமரங்களின் அழிவைத் தடுத்து அதன் எண்ணிக்கையைப் பெருக்க வேண்டியதன் அவசியத்தை பனை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், ``வறட்சி மிகுந்த மானாவாரி மற்றும் கடற்கரைப் பகுதிகளில் பனைமரங்களை அதிக அளவில் வளர்ப்பதற்கு முதற்கட்டமாக நடப்பாண்டில் ரூ.10 கோடி செலவில் 2.5 கோடி பனை விதைகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்படும். இப்பணி வருங்காலங்களிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” எனச் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் கடந்த 16-ம் தேதி அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது எந்த அளவுக்குப் பயனளிக்கும்? நீர்வளத்துக்கு பனை எந்த அளவுக்கு உதவும்?

பேராசிரியர் முனைவர். அருள்மொழியான்
பேராசிரியர் முனைவர். அருள்மொழியான்

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிக்குளம், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தோட்டக்கலைத்துறை பேராசிரியர் முனைவர். அருள்மொழியானிடம் பேசினோம். ``கஜா புயலின்போது ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்த போதிலும், பனைமரங்கள்தான் உறுதியாக நின்றன. மண்ணை இறுகப்பிடித்துக் கொள்ளும் இதன் வேர் அமைப்பே இதற்குக் காரணம். இதனால் மண் அரிப்பும் தடுக்கப்படுகிறது. பூமியின் கீழ்மட்டத்தில் உள்ள நீரை உறிஞ்சி மேற்பரப்புக்குக் கொண்டுவரும் தன்மை கொண்ட இதன் வேர்களால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மண் இறுக்கமடையாமல் பாதுகாப்பதோடு மழைக்காலங்களில் மழைநீர் நேரடியாக மண்ணுக்குள் ஊடுருவிச் செல்லவும் இதன் வேர்கள் உதவுகின்றன.

கஜா புயலின்போது ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்த போதிலும், பனைமரங்கள்தான் உறுதியாக நின்றன. மண்ணை இறுகப்பிடித்துக் கொள்ளும் இதன் வேர் அமைப்பே இதற்குக் காரணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே இம்மரங்கள் உள்ள இடங்களில் நீர்த்தட்டுப்பாடு குறைவாகவே இருக்கும். இதுமட்டுமல்லாமல் முற்காலத்தில் வீடுகள் கட்டும்போது மூங்கிலுக்குப் பதிலாக பனைமரத்தின் நடுமரம் குறுக்குக் கட்டையாகவும் நிலை அமைக்கவும் பயன்பட்டிருக்கின்றன. மேலும், பனை ஓலைகளால் பின்னப்பட்ட குடை, வீட்டின் மேற்கூரை ஆகியவை மனிதர்களை மழை, வெயில் ஆகியவற்றிலிருந்து காத்திருக்கிறது. அரசின் இத்திட்டம் நாம் தொலைத்துக்கொண்டிருக்கிற ஒரு பெரும்பொக்கிஷத்தை மீட்டெடுக்கவும், மறந்ததை மீண்டும் நினைவூட்டவும் வழிவகுக்கிறது. நாம் இப்போது நடுகிற பனைகள் மூலம் நம் அடுத்த தலைமுறை கண்டிப்பாகப் பெரும்பலனடையும்” என்றார்.

ஆய்வாளர் சிவசுப்பிரமணியன்
ஆய்வாளர் சிவசுப்பிரமணியன்

'பனை மரமே பனை மரமே' நூலின் ஆசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான சிவசுப்பிரமணியனைத் தொடர்புகொண்டு பேசினோம், ``தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத பங்காற்றிய மரம் பனை மட்டும்தான். தமிழை வளர்த்தெடுத்த காப்பியங்களும் இலக்கணங்களும் இலக்கியங்களும் பனைமர ஓலைகளிலேயே எழுதப்பட்டிருக்கின்றன. மக்களின் பொருளாதாரம் செழித்தோங்கும் வகையிலான பல தொழில்கள் பனையை நம்பியே இருந்திருக்கின்றன. அதனால்தான், ஊரின் எல்லையில் பனையை வளர்ப்பதற்கான உரிமையை சோழ மன்னர்கள் வழங்கியுள்ளனர். நிலத்தில் புல் கருகிவிடும் கோடைக்காலத்திலும் நமக்குப் பானை முழுக்க சுவையான பதநீரைக் கொடுக்கின்ற மரம். 20 ஆண்டுகள் வரை தன் மீது எவ்வித அக்கறையும் காட்டாத உரிமையாளருக்குக்கூட பலன் தரும் ஈகைக் குணம் கொண்ட அற்புத மரம்தான் பனை. அதுமட்டுமல்லாமல் தன் அனைத்துப் பாகங்களின் வழியாகச் சுமார் 800 வகையான பலன்களை இம்மரம் நமக்குத் தருகிறது. உலகின் ஒவ்வொரு பகுதியின் தனித்தன்மைக்கேற்ப, ஏதாவதொரு வகையில் மனிதருக்குத் தேவையான வாழ்வாதாரத்தை இயற்கை எப்படித் தருகிறதென்பதற்கு, இப்பனை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

பலவருடங்களாக நீடித்திருக்கும் கடும் வறட்சியால் பனைமரம் பட்டுப்போகத் தொடங்கினால் ‘பனை மரமே பட்டுப்போச்சு’ என்பார்கள். ஆக, கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்தை உணர்த்தும் குறியீடாக பனைமரம் பட்டுப்போவதை வரையறுத்துக் கொண்டனர் நம் முன்னோர். பொதுவாக பனை அனைத்துவகை மண்ணிலும் வளரக்கூடியது. கடற்கரை ஓரத்தில்கூட வளரும் தன்மை கொண்டது. எனவே ஆறு, குளம், ஏரி ஆகியவற்றின் கரைகளிலும் கடற்கரை ஓரங்களிலும் பனைமரங்களை வளர்த்தெடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவில் காணப்பட்ட இம்மரத்தின் எண்ணிக்கை நகரமயமாக்கலின் காரணமாகத் தற்போது கணிசமாகக் குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. அரசின் இத்திட்டம் மகிழ்ச்சிக்குரியது. மேலும், குட்டைப்பனை போன்ற பனை சார்ந்த ஆராய்ச்சிகள் இன்னும் அதிகமாக ஊக்குவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தால் இம்மரத்தின் எண்ணிக்கையை எளிதாக அதிகரிக்க முடியும். இதன்மூலம் பனைத்தொழிலாளர்களும் பயனடைவர்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு