Published:Updated:

பதுக்கி வைக்கப்பட்ட ₹2 கோடி மதிப்புள்ள நெல் மூட்டைகள்; அதிரடியாகப் பறிமுதல் செய்த அதிகாரிகள்!

பறிமுதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள்
பறிமுதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள்

வியாபாரிகள் மூலமாக வெளி மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.

தஞ்சாவூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் தொடர்ச்சியாகப் புகார் கூறி வரும் நிலையில் தஞ்சாவூரில் தனியாருக்குச் சொந்தமான அரிசி அரவை மில் ஒன்றில் 25,000 நெல் மூட்டைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான 330 சாக்குகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

நெல் மூட்டைகள் பதுக்கப்பட்டிருந்த தனியார் குடேன்
நெல் மூட்டைகள் பதுக்கப்பட்டிருந்த தனியார் குடேன்
நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்ட அதிகாரி; சாமர்த்தியமாக சிக்கவைத்த விவசாயிகள்!

தஞ்சாவூர் அருகே ஒரத்தநாடு-வல்லம் சாலையில் உள்ள மருங்குளம் என்ற கிராமத்தில் தனியார் அரிசி ஆலை ஒன்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படாமல் உள்ளது. இது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த அரிசி ஆலையில் உள்ள கிடங்குகளில் லாரிகளில் அடிக்கடி நெல் மூட்டைகள் வந்து இறங்கியுள்ளன. `செயல்படாமல் இருக்கும் ஆலையில் எங்கிருந்து, எதற்கு நெல் மூட்டைகள் கொண்டுவரப்படுகின்றன' என விவசாயிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரியின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.

இதையடுத்து உடனடியாக மேலாளர் உமாமகேஸ்வரி, குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீஸார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சென்று குறிப்பிட்ட அந்த மில்லில் ஆய்வு மேற்கொண்டார். அதில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். சுமார் 25,000 நெல் மூட்டைகள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பயன்படுத்தக்கூடிய முத்திரை பதிக்கப்பட்ட 330 சாக்குகள் அந்த குடோனில் இருந்ததும் தெரிய வந்தது.

நெல் மூட்டைகள்
நெல் மூட்டைகள்

பின்னர் அவற்றைப் பறிமுதல் செய்து லாரிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் குடோன்களுக்கு மாற்ற உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நெல் மூட்டைகள் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. இதுகுறித்து உமாமகேஸ்வரி கூறுகையில், ``இந்த குடோனுக்கு எப்படி நெல் மூட்டைகள் வந்தது என்பது தெரியவில்லை. எவ்வித ஆவணங்களும் இல்லாததால் இந்த நெல் மூட்டைகளைப் பறிமுதல் செய்துள்ளோம். ஒரு கிடங்கில் நெல் மூட்டைகளாகவும், மற்ற கிடங்குகளில் நெல் குவியலாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதை மூட்டைகளில் நிரப்பி குடோனுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அத்துடன் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பயன் படுத்தப்படும் 330 சாக்குகள் உள்ளன. இதில் லாட் எண்கள் இல்லாததால், எந்த கொள்முதல் நிலையத்திலிருந்து எடுத்து வரப்பட்ட சாக்குகள் எனத் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும். இங்கு நெல் மூட்டைகளைப் பதுக்கி வைத்தது தொடர்பாகக் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல் பதுக்கி வைத்தவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். கொள்முதல் நிலையம் என்பது விவசாயிகளின் நலனுக்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் வியாபாரிகள் நெல்லைக் கொண்டு வந்து கள்ளத்தனமாக விற்பனை செய்வது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ''என்றார்.

சாக்குகள்
சாக்குகள்
நெல் கொள்முதல் விலை: `தேர்தல் அறிக்கையில் சொன்னது ஒண்ணு; இப்போ செய்றது ஒண்ணு!' - விவசாயிகள் ஏமாற்றம்

இதுகுறித்து விவசாயிகள் சிலரிடம் பேசினோம், ``அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் புரோக்கர்களாகச் செயல்படும் வியாபாரிகள் மூலமாக வெளி மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப் படுவதாகத் தொடர்ந்து புகார் கூறி வருவதுடன், இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வருகிறோம். அத்துடன் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை போடுவதற்கு கொள்முதல் நிலையத்தில் சாக்கு கேட்டால் சாக்கு பற்றாக்குறை எனச் சொல்வார்கள்.

ஆனால், ஒரு தனியார் ஆலையில் கொள்முதல் நிலையத்துக்கு சொந்தமான 330 சாக்குகள் எப்படி வந்தது. கொள்முதல் நிலையங்கள் திறக்கும்போது விற்பனை செய்வதற்காகவே நெல் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. பதுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளின் மதிப்பு ரூ.2 கோடிக்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. கொள் முதல் நிலையங்களில் விவசாயிகள் விளைவித்த நெல்லை போடுவதற்குள் பெரும் பாடு பட வேண்டியுள்ளது. ஆனால், அதில் பணிபுரியும் ஊழியர்கள், வியாபாரிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று முறைகேட்டில் ஈடுபடுகின்றனர் என்பதற்கு கொள்முதல் நிலைய சாக்குகளுடன் நெல் மூட்டைகள் கைப்பற்றப்பட்டிருப்பதே சான்றாக அமைந்துள்ளது. எனவே, அவற்றைத் தடுக்க இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்'' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு