`மதிப்புக்கூட்டு இயந்திரம் வாங்கப்போறீங்களா; மானியம் இருக்கு!' - வேளாண்மைப் பொறியியல் துறை
ஒரு தொகுப்பிலேயே ஆர்வமுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்/ உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் முன்வரும் பட்சத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புக் கூட்டு மையங்கள் அமைத்திடலாம்.
தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை, நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம் மூலம் மதிப்புக் கூட்டும் இயந்திர மையங்கள் அமைக்க மானியங்களை அறிவித்துள்ளது.
மானாவாரி நிலங்களில் விளையும் பல்வேறு வகையான எண்ணெய் வித்துகள், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள் ஆகியவற்றிலிருந்து முறையே மரச்செக்கு, இரும்புச் செக்கு மூலம் எண்ணெய் பிழிந்தெடுத்தல், சிறுதானியத்தைச் சுத்தம் செய்து தரம் பிரித்தல் மற்றும் மாவாக்குதல், பயறுவகைகளைத் தரம் பிரித்தல், மற்றும் தோல் நீக்குதல், மாட்டுத் தீவனம் தயார் செய்தல் ஆகியவற்றின் மூலம் மானாவாரி பயிர்களின் விளைபொருள்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தி, விவசாயிகள் அதிக வருவாய் பெறும் வகையில் மானாவாரி தொகுப்புகளில் மதிப்புக் கூட்டும் இயந்திர மையங்கள் மானியத்துடன் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அமைத்துக் கொடுக்கப்படுகிறது.
மொத்த திட்ட மதிப்பீட்டில் இயந்திர விலை (வரிகள் உட்பட) 75 சதவிகித மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூபாய் பத்து லட்சம் வரை வழங்கப்படுகிறது.
மதிப்புக்கூட்டும் இயந்திர மையங்களை நிறுவுவதற்கான பயனாளிகளைத் தேர்வு செய்தல்!
மானாவாரி தொகுப்பில் அல்லது தொகுப்புப் பகுதியின் அருகில் முனைப்புடனும், விருப்பமுடனும் செயல்படுகின்ற உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் அல்லது கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுச் சிறப்பாகச் செயல்படுகின்ற உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அல்லது மானாவாரி தொகுப்பிற்கான உழவர் சங்கம் ஆகியோருக்கு மதிப்புக் கூட்டும் இயந்திர மையம் அமைத்துத்தரப்படுகிறது. பயனாளிகள், மானாவாரி தொகுப்பு மேம்பாட்டுக் குழுவின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
மானிய விவரம்
ஒரு மானாவாரி தொகுப்பிற்கு மதிப்புக் கூட்டும் இயந்திர மையம் ஏற்படுத்துவதற்கான மொத்த திட்ட மதிப்பீட்டில் இயந்திர விலை (வரிகள் உட்பட) 75 சதவிகித மானியம் என்ற அடிப்படையில் அதிக பட்சமாக ரூபாய் பத்து லட்சம் வரை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
மதிப்புக் கூட்டும் இயந்திர மையம் அமைப்பதற்கு ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது உழவர் உற்பத்தியாளர் குழு தங்கள் விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட மானாவாரித் தொகுப்பு மேம்பாட்டுக் குழுவின் மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அவர்களிடம் வழங்க வேண்டும்.
உட்கட்டமைப்பு வசதி
தெரிவு செய்யப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழு/ உழவர் உற்பத்தியாளர் அமைப்பிற்கு மதிப்புக் கூட்டும் இயந்திர மையம் அமைக்கத் தேவையான போதிய இடவசதி கொண்ட கட்டடம், மூலப்பொருள்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட மதிப்புக் கூட்டிய பொருள்களைச் சேமித்துவைக்க போதுமான பாதுகாப்பான இட அமைப்பு, இயந்திரங்களை இயக்க தேவையான திறன் கொண்ட மும்முனை மின்சார இணைப்பு வசதிகள் கொண்ட சொந்தக் கட்டடம் அல்லது வாடகை கட்டடம் இருக்கவேண்டும்.
இயந்திரங்கள் தேர்வு செய்தல்
வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலர்கள் உதவியுடன் அத்துறையின் மூலம் பட்டியலில் சேர்க்கப்பட்ட மற்றும் விலை நிர்ணயம் செய்து ஒப்புதல் அளிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியலிலிருந்து உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மதிப்புக்கூட்டும் இயந்திரங்களைத் தேர்வுசெய்ய வேண்டும்.
தேர்வு செய்யப்பட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்பு / உழவர் உற்பத்தியாளர் குழு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மதிப்புக் கூட்டும் மையம் அமைத்திட ஏதுவாக, விரிவான திட்ட அறிக்கை ஒன்றினை வேளாண்மைப் பொறியியல் துறை உதவியுடன் தயார் செய்தல் வேண்டும்.
உழவர் உற்பத்தியாளர் அமைப்பு / உழவர் உற்பத்தியாளர் குழு விரிவான அறிக்கையின் மொத்த திட்ட மதிப்பீட்டில் 75 சதவிகித மானியம் (அதிக பட்சமாக 10,00,000) போக, மீதம் 25 சதவிகிதத்தினை தங்கள் பங்களிப்பாக அளித்து மதிப்புக்கூட்டும் இயந்திர மையம் அமைத்திட முன் வரவேண்டும்.
நடைமுறை மூலதனமானது விரிவான திட்ட அறிக்கையின் மொத்த மதிப்பீட்டில் 20 சதவிகிதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விரிவான திட்ட விண்ணப்பத்துக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவின் ஒப்புதல் பெறப்படும். பின்னர், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்ட நிறுவனங்களுக்கு உதவி செயற் பொறியாளர் அவர்களால் மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள் வழங்கிடப் பணி ஆணை வழங்கப்படும்.
அமையப் பெறவுள்ள இயந்திர மையத்திற்கான செலவு ரூ.10 இலட்சத்திற்கு மேற்படுமாயின், அண்டைத் தொகுப்புகளிலுள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்பு, உழவர் உற்பத்தியாளர் குழுவினை ஒன்றிணைத்து பெரிய அளவிலான மதிப்புக் கூட்டும் இயந்திர மையங்கள் அமைத்திடலாம்.
ஒரு தொகுப்பிலேயே ஆர்வமுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் / உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் முன்வரும் பட்சத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புக் கூட்டு மையங்கள் அமைத்திடலாம்.
எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு தங்கள் விண்ணப்பத்தினை அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தில் அளித்திடலாம்.
தொடர்புக்கு,
தலைமைப் பொறியாளர் (வே.பொ),
வேளாண்மைப் பொறியியல் துறை,
எண்.487, அண்ணாசாலை,
நந்தனம், சென்னை - 600 035,
தொலைபேசி எண் - 044 2435 2686
மின்னஞ்சல்-aedcewrm@gmail.com