Published:Updated:

27 பூச்சிக்கொல்லிகளைத் தடைசெய்த மத்திய அரசு... பின்வாங்கியது ஏன்?

பூச்சிக்கொல்லிகள் (மாதிரி படம்) ( Photo courtesy: Dhilipkumar )

மத்திய வேளாண் அமைச்சகம் 27 பூச்சிக்கொல்லிகளுக்குத் தடை விதிக்க மே 18-ம் தேதி கொண்டு வந்த வரைவு உத்தரவை, ஜூன் 10-ம் தேதி மீண்டும் திரும்பப் பெற்றுள்ளது.

27 பூச்சிக்கொல்லிகளைத் தடைசெய்த மத்திய அரசு... பின்வாங்கியது ஏன்?

மத்திய வேளாண் அமைச்சகம் 27 பூச்சிக்கொல்லிகளுக்குத் தடை விதிக்க மே 18-ம் தேதி கொண்டு வந்த வரைவு உத்தரவை, ஜூன் 10-ம் தேதி மீண்டும் திரும்பப் பெற்றுள்ளது.

Published:Updated:
பூச்சிக்கொல்லிகள் (மாதிரி படம்) ( Photo courtesy: Dhilipkumar )

கடந்த மே 18-ம் தேதி, 27 பூச்சிக்கொல்லிகளுக்குத் தடை விதிக்கப் போவதாக அறிவித்தது மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலவாழ்வு அமைச்சகம். ஆனால், ஜூன் 10-ம் தேதி அந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்றுள்ளது.

இது தொடர்பாக, இந்தியாவில் பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் பாதிப்புகள், மரணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வரும் பேன் இந்தியா (Pesticide Action Network (PAN) India) அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

திலீப்குமார்
திலீப்குமார்

அந்த அமைப்பின் உதவி இயக்குநர் திலீப்குமார், ``பட்டியலில் உள்ள 27 பூச்சிக்கொல்லிகளில் சில ஏற்கெனவே மாநில அளவில் தடைசெய்யப்பட்டவைதான். பட்டியலில் உள்ள பூச்சிக்கொல்லிகளில் மிக அதிக அளவில் தீங்கு விளைவிக்கக்கூடிய பென்ஃபுரகார்ப், டிகோஃபோல், மெத்தோமில், மோனோகுரோட்டபாஸ் ஆகிய பூச்சிக்கொல்லிகளை விற்க உரிமம் வழங்கப்படவில்லை. கேரளாவில் 2011 முதல் மோனோ குரோட்டபாஸ், கார்போபுரான், அட்ராசைன் ஆகிய பூச்சிக்கொல்லிகள் தடை செய்யப்பட்டுள்ளன. எனவே, இதை உணர்ந்து விவசாயிகள், இத்தகைய பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் சரோஜினி ரெங்கம், ``ஆரம்பத்தில் பூச்சிக்கொல்லிகளைத் தடை செய்ய முன்வந்த அரசைப் பாராட்டுகிறோம். அதேசமயம் இந்தத் தடையை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியும் நடந்துவருகிறது. ரசாயனத் தொழில் துறையின் லாப நோக்கத்தைக் காரணமாகக் கொண்டு அரசு தடையை முழுமையாகத் திரும்பப் பெறப்போகிறது. மே 18-ம் தேதி வரைவு உத்தரவைக் கொண்டு வந்த அரசு, இப்போது ஏற்றுமதி நோக்கங்களுக்காக இந்தப் பூச்சிக்கொல்லிகளை அனுமதிக்க உள்ளது. பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்வதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் அனுமதிப்பது, பூச்சிக்கொல்லி வர்த்தகத்தில் மத்திய அரசு பின்பற்றும் இரட்டை நிலைப்பாட்டினைக் காட்டுகிறது. ஆரோக்கியம், நலவாழ்வு என்று பேசியவரும் இந்தியா, பூச்சிக்கொல்லி விஷயத்தில் பின்பற்றி வரும் இந்த நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ள வேண்டும். தடை செய்யப்பட்ட 27 பூச்சிக்கொல்லிகளில் 20 பூச்சிக்கொல்லிகள் மிகவும் அபாயகரமானவையெனக் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் கொரோனா காலத்தில் ஆரோக்கியம் குறித்துப் பேசப்பட்டு வரும் நிலையில் பூச்சிக்கொல்லிகளை எந்தச் சமரசமின்றி தடை செய்வதே சிறந்த வழி” எனத் தெரிவித்துள்ளார்.

ஜெயகுமார் செலேட்டன்
ஜெயகுமார் செலேட்டன்

பேன் இந்தியா அமைப்பின் இயக்குநர் ஜெயகுமார் செலேட்டன், ``தற்போது இந்தியாவில் 282 பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்த பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தடை செய்யப்பட்ட 27 பூச்சிக்கொல்லிகள் என்பது 10 சதவிகிதத்துக்கும் குறைவு. இந்தத் தடை காரணமாக, உணவு உற்பத்தி பாதிக்காது. மாறாக, நுகர்வோர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி நச்சு என்ற சுமை குறையும். இந்தத் தடையால் விவசாயத்தில் நச்சுத்தன்மை குறைவதோடு, நஞ்சு இல்லாத வேளாண்மை அதிகரிக்கும். பூச்சிக்கொல்லிகளைத் தடை செய்தால்தான் இந்திய விவசாயத்தில் சூழல் சார்ந்த வேளாண் முறையை முன்னெடுக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பேன் இந்தியா அமைப்பின் ஆலோசகர் டாக்டர் நரசிம்ம ரெட்டி, ``27 பூச்சிக்கொல்லிகளில் அட்ராசைன், கார்போபுரான், குளோர்பைரிஃபோஸ், மாலதியான், மேன்கோசெப், மோனோ குரோட்டாபாஸ் ஆகிய 6 பூச்சிக்கொல்லிகள் குழந்தைகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியவை. பிறப்பு குறைபாடு, மூளை வளர்ச்சி குறைவு, அறிவுத்திறன் குறைவு (ஐ.கியூ) போன்ற விளைவுகளைக் குழந்தைகளிடம் ஏற்படுத்துகிறது. 2013-ம் ஆண்டு, பீகாரில் மோனோகுரோட்டாபாஸ் பயன்படுத்திய காலி டப்பாக்களால் 23 குழந்தைகள் இறந்த சோகம் இந்தியாவையே உலுக்கியது.

இதனால் 27 பூச்சிக்கொல்லிகளை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் அதே விதிமுறைகளைப் பயன்படுத்தி, பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து பூச்சிக்கொல்லிகளை மறு ஆய்வு செய்ய வேளாண் அமைச்சகத்தை வலியுறுத்துகிறோம். தற்போதைய பூச்சி மேலாண்மை சட்ட மசோதா 2020-ல் பல குறைபாடுகள் இருப்பதால், அதில் மேலும் திருத்தத்தைக் கொண்டு வர அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.

நரசிம்ம ரெட்டி தோந்தி
நரசிம்ம ரெட்டி தோந்தி

27 பூச்சிக்கொல்லிகள் தடை மூலம் இந்திய அரசு, மக்கள் நலனை ஆதரிக்குமா அல்லது தொழில்துறை அழுத்தத்துக்குச் செவி சாய்க்குமா என்பதைச் சர்வதேச சமூகமே உற்றுக் கவனித்து வருகிறது. எனவே, இதில் நிபுணர் குழு ஆய்வு, விஞ்ஞானிகளின் விளக்கங்கள், விவசாயிகளின் அனுபவங்கள் சார்ந்து முடிவெடிக்க வேண்டும். அப்போதுதான், அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதை விடுத்து சொந்த லாபத்தையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் ரசாயன உற்பத்தி நிறுவனங்களின் அறிக்கைகளுக்குச் செவிசாய்த்தால் பெரிய பாதகம் ஏற்படும். எனவே, மத்திய அரசு சுயமாகச் சிந்தித்து, ஒரு நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையாவிடம் பேசியபோது, ``முதலில் 27 பூச்சிக்கொல்லிகளைத் தடை விதிக்க முன்வந்தது மத்திய அரசு. ஆனால், பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் லாபி காரணமாக அந்த முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளது. பூச்சிக்கொல்லி தயாரிக்கும் நிறுவனங்கள், `நாங்களே ஆய்வு செய்கிறோம். திடீரென தடை விதித்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும். இதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொள்கிறோம்' என்று கூறுகின்றன. இதற்கு மத்திய அரசு பணிந்துவிடக் கூடாது.

ரமேஷ் கருப்பையா
ரமேஷ் கருப்பையா

பூச்சிக்கொல்லி மரணங்களால் தமிழகம் உட்பட இந்தியாவில் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 2017-ல் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பூச்சிக்கொல்லி மரணங்களை நாடே அறியும். தமிழகத்திலும் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் பருத்தி, நெல், காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசு பூச்சிக்கொல்லி தயாரிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை மாற்றிக்கொள்ள வலியுறுத்த வேண்டும். தமிழகத்திலும் பூச்சிக்கொல்லி விஷப் பயன்பாட்டை தடை செய்ய முன்வர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism