Published:Updated:

500 சதுரடியில் மாதம் ரூ.30,000... மொட்டை மாடியில் காளான் வளர்ப்பு!

காளான் வளர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
காளான் வளர்ப்பு

முயற்சி

500 சதுரடியில் மாதம் ரூ.30,000... மொட்டை மாடியில் காளான் வளர்ப்பு!

முயற்சி

Published:Updated:
காளான் வளர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
காளான் வளர்ப்பு

கிராமப் பகுதியில் மட்டுமே நடைபெற்று வந்த விவசாயம், இன்றைக்கு மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம், மொட்டை மாடியில் கோழி வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் நகரங்களிலும் முன்னெடுக்கப் பட்டு வருகிறது. அந்த வரிசையில், விழுப்புரம் நகர்ப் பகுதியில் பட்டதாரிகள் இரண்டு பேர் மாடியில் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விழுப்புரம், தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த இளைஞர்கள் சதீஷ் மற்றும் ஶ்ரீகணேஷ்தான் அவர்கள். அவர்களைச் சந்திப்பதற்காக வீட்டுக்குச் சென்றோம். இன்முகத்தோடு வரவேற்றவர்கள் மாடிக்கு அழைத்துச் சென்றார்கள்.

“என் பெயர் சதீஷ். இவரு என்னோட அண்ணன் (சகலை) ஶ்ரீகணேஷ். ரெண்டு பேரும் சேர்ந்துதான் காளான் உற்பத்தி செய்றோம். நான் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் படிச்சிருக்கேன். படிப்பை முடிச்சுட்டு குவைத்ல ஒரு கம்பெனியில வேலை பார்த்தேன். மாசம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிட்டு இருந்தேன். அண்ணன் பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சவரு. பல இடங்கள்ல வேலை பார்த்துட்டுக் கடைசியா சிங்கப்பூர்ல இருக்க ஒரு கம்பெனியில வேலை பார்த்தார். அவருக்கு மாசம் 1.5 லட்சம் ரூபாய் சம்பளம்.

காளான் வளர்ப்பு கொட்டகைக்குள் சதீஷ், ஶ்ரீகணேஷ்
காளான் வளர்ப்பு கொட்டகைக்குள் சதீஷ், ஶ்ரீகணேஷ்

வாழ்க்கை நல்லபடியா போய்கிட்டு இருந்த சமயத்துல போன வருஷம் கொரோனா பாதிப்பு காரணமா உலகமே ஸ்தம்பிச்சு போச்சு. இனி விவசாயம்தான் எதிர்காலமாக இருக்கும்னு ரெண்டு பேரும் உணர்ந்தோம். அதனால தற்சார்பு வாழ்க்கை வாழணும்னு ஆசைப்பட்டோம். 6 மாசத்துக்கு முன்ன வேலையை விட்டுட்டு வந்துட்டோம். என்ன செய்யலாம்னு யோசிச்சோம். நான் சின்ன வயசுல இருந்தே நகரப்பகுதியிலதான் வசிக் கிறேன். விவசாயம் பத்தி எதுவும் தெரியாது. எங்க அப்பாவும் விவசாயம் பண்ணல.

பிறகுதான் விவசாயம் தொடர்பாகச் சில வீடியோக்களைப் பார்க்க ஆரம்பிச்சேன். முதல்ல ஹைட்ரோ ஃபார்மிங் (Hydro farming) பண்ணலாம்னு தோணுச்சு. பிறகு, சிறிய முதலீட்டுல ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணிக் காளான் வளர்ப்புல ஈடுபட்டோம்’’ என்றவர் சற்று இடைவெளி விட, ஶ்ரீகணேஷ் தொடர்ந்தார்.

‘‘இந்த வீட்டு மொட்டைமாடி சுமார் 500 சதுரஅடி. அதுல 15 அடிக்கு 24 அடி அளவுல கூரைக் கொட்டகை அமைச்சு காளான் வளர்ப்பதற்கான அமைப்புகளை ஏற்படுத்தினோம். கொட்டகை அமைக்க மட்டுமே வெளியாட்களைப் பயன் படுத்தினோம். மத்த வேலைகளை நாங்களே பார்த்துகிட்டோம்.

போன வருஷம் டிசம்பர் 3-ம் தேதி தொடங்கினோம். இந்த முழு அமைப்பைச் செய்றதுக்குச் சுமார் 80,000 ரூபாய் வரை செலவாச்சு. இனிமே விதை, வைக்கோல் மாதிரியான சின்னச் சின்ன முதலீடுதான் இருக்கும். இந்த இடத்தில 450 படுக்கைகள்வரை அமைக்கலாம். நாங்க 350 படுக்கைகளை அமைச்சு சிப்பிக் காளான் உற்பத்தி செஞ்சுகிட்டு வர்றோம். ஒரு படுக்கை யிலிருந்து 1 முதல் 1.5 கிலோ காளானை அறுவடை செய்யலாம். ஒரு படுக்கை அமைக்கிறதுக்கு 80 முதல் 100 ரூபாய் வரை செலவாகும்.

காளான் படுக்கைகள்
காளான் படுக்கைகள்

ஒரு படுக்கையில் இருந்து 225 ரூபாய்க்கு காளானை விற்பனை செய்யலாம். ஆரம்பத்துல நேரடியாக விற்பனை பண்ணினோம். இப்ப பக்கத்துல இருக்கச் சில பல்பொருள் அங்காடிகள்லயும் விற்பனைக்குக் கொடுக்க ஆரம்பிச்சிருக்கோம். அதோட மக்களுக்குக் காளான் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துற மாதிரி, அதில் இருக்கும் நன்மைகள் பத்திச் சிறிய பதாகையில் குறிப்பிட்டு, மாலை நேரங்கள்ல சாலையோரமாகக் காளான் சூப் விற்பனை செய்றோம். தினமும் சராசரியா 10 கிலோ அறுவடை செய்றோம். ஒரு கிலோ 150 ரூபாய் விலையில 1,500 ரூபாய் என்ற கணக்குல மாசத்துக்கு 45,000 ரூபாய் கிடைக்கும். இதுல மாசத்துக்கு 15,000 முதல் 20,000 ரூபாய்ச் செலவாகும். அதைக் கழிச்சுட்டா மாசம் 25,000- 30,000 ரூபாய் வரை லாபம் கிடைக்குது. இனிமேல் இது அதிகமாகும்னு நம்புறோம்’’ என்றார்.

‘‘வாங்க கொட்டகைக்குள்ள போகலாம்’’ எனக் காளான் குடிலுக்குள் நம்மை அழைத்துச் சென்றனர். காளான் வளர்ப்பு பற்றிப் பேசிய சதீஷ், “இடத்தைச் சுத்தமா பராமரிச்சுட்டு வந்தாலே போதும். நஷ்டம் என்பதே இருக்காது. அப்பப்ப பூஞ்சை தொற்று ஏற்படும். அந்த இடத்தில மட்டும் பச்சை, கறுப்பு, ஆரஞ்சு நிறங்கள்ல மாறுதல் தெரியும். தொற்று இருக்குற இடத்தை மட்டும் அறுத்து எடுத்துட்டு கிருமிநாசினி மூலமா துடைக்கணும். அறுத்த இடத்துல ‘டேப்’ ஒட்டினா போதும். நல்ல பலன் கிடைக்கும். நல்ல வருமானமும் பார்க்கலாம். 90 நாள்களுக்குப் பிறகு, அந்தக் கழிவுகளைக் கால்நடைகளுக்குக் கொடுக்கலாம். இதில் எதுவுமே வீணாகாது" என்று விடைகொடுத்தார்.


தொடர்புக்கு,
சதீஷ், செல்போன்: 95976 64266

சிப்பிக் காளான்
சிப்பிக் காளான்

இப்படித்தான் காளான் வளர்ப்பு

காளான் படுக்கை அமைப்பது பற்றி சதீஷ் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே பாடமாக...

கொட்டகையின் நீள, அகலத்தை இட வசதியைப் பொறுத்து அமைத்துக்கொள்ளலாம். தென்னங்கீற்று மூலமாகக் கொட்டகை அமைக்க வேண்டும். கொட்டகையின் உயரம் 10 முதல் 15 அடி அளவு இருக்க வேண்டும். கொட்டகைக்கு உட்புறம், கூரைக்குக் கீழே காளான் படுக்கைகளைத் தொங்க விடுவதற்குக் கயிறுமூலம் உறி போன்ற அமைப்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

காளான் உற்பத்தி செய்யப் பயன்படுத்தும் வைக்கோல் சுத்தமானதாகவும், பூஞ்சணத்தாக்குதல் இல்லாததாகவும், நன்கு உலர்ந்த வைக்கோலாகவும் இருக்க வேண்டும். அதேபோலக் காளான் வித்துகளும் தரமானதாக இருக்க வேண்டும். 350 கிராம் அளவு பாக்கெட்களாக வித்துகள் கிடைக்கின்றன. ஒரு வித்து பாக்கெட் மூலமாக 2 படுக்கைகள் தயார் செய்யலாம். 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டிரம்மில் 100 லிட்டர் அளவுக்குத் தண்ணீர் நிரப்பி அதில் பூஞ்சணங்களை அழிப்பதற்கான திரவங்களைக் கலந்து வைக்கோலை ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய பிறகு, வைக்கோலை எடுத்து உலர்த்த வேண்டும். பிழிந்தால் தண்ணீர் சொட்டாத அளவு ஈரப்பதம் இருக்க வேண்டும். இதுதான் சரியான பதம்.

பிறகு, 12 இன்ச்சுக்கு 24 இன்ச் பாலித்தீன் பையில் கொஞ்சம் காளான் வித்துக்களைத் தூவி அதன் மீது உலர்த்திய வைக்கோலைச் சுருட்டி 2 இன்ச் உயரம் வரை வைக்க வேண்டும். பிறகு அதன் மீது கொஞ்சம் காளான் வித்துக்களைத் தூவி மீண்டும் வைக்கோலைச் சுருட்டி வைக்க வேண்டும். இதுபோல 5 அல்லது 6 அடுக்குகள்வரை வைத்து மேற்புறம் ஒரு நூலைக்கொண்டு முடிச்சுப் போட்டு கட்டி விட வேண்டும். பிறகு, விதைகள் இருக்கும் இடத்தில் பெட்டைச் சுற்றி கூர்மையான மரக்குச்சி மூலம் 12 துளைகள் இட வேண்டும் இதுபோல படுக்கைகளைத் தயார் செய்து கொட்டகைக்குள் வரிசையாகத் தொங்க விட வேண்டும். ஒரு உறியில் 4 படுக்கைகளைத் தொங்கவிடலாம். ஒரு படுக்கைக்குச் சுமார் 3 கிலோ அளவு வைக்கோலும், 175 கிராம் வித்தும் தேவைப்படும்.

காளான்
காளான்

கொட்டகையின் உட்புறத்தில் பழைய சாக்கு களைத் தொங்கவிட்டு அவற்றின் மீது தண்ணீர் ஊற்றிவந்தால் கொட்டகையில் காளானுக்குத் தேவையான வெப்பநிலையும் ஈரப்பதமும் சரியாக இருக்கும். கொட்டகைக்குள் 25 முதல் 28 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் வெப்பநிலையும், காற்றின் ஈரப்பதம் 85% என்ற அளவிலும் இருக்க வேண்டும்.

கொட்டகைக்குள் சரியான அளவு வெப்ப நிலையையும் ஈரப்பதத்தையும் பராமரித்து வந்தால், 15 நாள்களில் படுக்கைகளின் உட்புறம் முழுவதும் காளான் பூஞ்சண இழைகள் பரவிவிடும். பிறகு, தினமும் படுக்கைகள்மீது தண்ணீர் தெளித்து வர வேண்டும். கொட்டகைக்குள் படுக்கைகள் வைத்த 20-ம் நாளுக்கு மேல் காளான் மொட்டுகள் தென்படும். 25-ம் நாளுக்கு மேல் முழு வளர்ச்சி அடைந்து அறுவடைக்குத் தயாராகிவிடும். அறுவடை செய்த 10 நாள்களில் மீண்டும் மொட்டுகள் தோன்றும். ஒரு படுக்கையிலிருந்து 2 மாதங்கள்வரை காளான் கிடைக்கும். ஒரு படுக்கையிலிருந்து ஒன்றரை கிலோ வரை காளான் கிடைக்கும்.