Published:Updated:

செடியிலேயே பழுத்து வீணாகும் பச்சைமிளகாய்! - வேதனையில் பெரியகுளம் விவசாயிகள்

மிளகாய்
மிளகாய்

கொரோனா ஊரடங்கு காரணமாகப் பச்சை மிளகாய்களைப் பறிக்க ஆட்கள் வராததால், செடியிலேயே பழுத்து வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம், சில்வார்பட்டி, குள்ளப்புரம், தேவதானப்பட்டி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பச்சைமிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. ஊரடங்கு காரணமாக, வேலைக்கு ஆட்கள் வராத நிலையில், பச்சை மிளகாய் சாகுபடி செய்த விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மிளகாய்
மிளகாய்

நம்மிடையே பேசிய ஜெயமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், ``தேனி மாவட்டத்தில் இப்பகுதி பச்சை மிளகாய் சாகுபடிக்கு பிரபலம். இங்கே விளைவிக்கப்படும் பச்சை மிளகாய், தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், வத்தலக்குண்டு ஆகிய இடங்களில் உள்ள கமிஷன் மண்டிகளுக்குச் செல்லும். ஊரடங்கு ஆரம்பித்தது முதல், வேலைக்கு ஆட்கள் வருவதே இல்லை. இதனால், அறுவடை காலம் தாண்டி, மிளகாயைப் பறிக்க முடியாமல், செடியிலேயே பழுத்துவிட்டது. போட்ட காசெல்லாம் வீணா போச்சு. சரி, நாமாகப் பறித்து கமிஷன் மண்டிக்கு கொண்டு போகலாம் என்று பார்த்தால், வாகன வசதி ஏதும் இல்லை. இப்படியே நிலைமை சென்றால், மிளகாய் சாகுபடியைக் கைவிட வேண்டிய நிலைதான் ஏற்படும்” என்றார் வேதனையோடு.

`இதே நிலை நீடித்தால், மருந்துகள் தீர்ந்துவிடும்!' - புலம்பும் தேனி தனியார் மருந்தக உரிமையாளர்கள்

மற்றொரு விவசாயி கூறும்போது, “``அத்யாவசியப் பொருள்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்கின்றார்கள். ஆனால், வாடகை வாகனம் ஏதும் வருவதில்லை. டிரைவர்களிடம் கேட்டால், ’எங்களுக்கு கொரோனா வந்துவிட்டால் நீங்களா காப்பாத்துவீங்க?’ எனக் கேட்கிறார்கள். நாங்கள் ஏதோ கொரோனாவை பையில் வைத்துக்கொண்டு சுற்றுவதுபோல பேசுகிறார்கள். நாங்க சாதாரண விவசாயிகள். எங்களால் என்ன செய்ய முடியும்? இதோ பழுத்த பச்சை மிளகாயைப் பார்த்துவிட்டு அமைதியாக உட்காரதான் முடியும்” என்றார்.

மிளகாய்
மிளகாய்
தேனி ஆண்டிபட்டியில் தலைதூக்கும் கள்ளச்சாராயம்..! - இரண்டே நாளில் 11 பேர் கைது

தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், காய்கறி மற்றும் பழ விவசாயிகளுக்கு இதே நிலைதான். பெரிய விவசாயிகள் தங்களது சொந்த வாகனத்தில், விளை பொருள்களைச் சந்தைக்கு கொண்டுவந்து சேர்த்துவிடுகிறார்கள். ஆனால், சிறிய விவசாயிகளோ, பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர் என்பதே கள நிலவரமாக உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு