Published:Updated:

தேயிலை, செளசெள, பழ மரங்கள்... நிலையான வருமானம்... மட்டற்ற மகிழ்ச்சி!

பசுமைக்குடிலில் குமரகுரு
பிரீமியம் ஸ்டோரி
பசுமைக்குடிலில் குமரகுரு

இயற்கை

தேயிலை, செளசெள, பழ மரங்கள்... நிலையான வருமானம்... மட்டற்ற மகிழ்ச்சி!

இயற்கை

Published:Updated:
பசுமைக்குடிலில் குமரகுரு
பிரீமியம் ஸ்டோரி
பசுமைக்குடிலில் குமரகுரு

விவசாயம் பத்தின எந்த முன் அனுபவமும் இல்லை. மனசு சொல்றதைக் கேட்கலாம்னு விவசாயம் செய்யுற முடிவைத் துணிஞ்சு எடுத்தேன். ‘நேற்றுபோல் இன்று இல்லை; இன்றுபோல் நாளை இல்லை’ங்கிற சினிமா பாடல் வரிகளைப் போலவே, ஒவ்வொரு நாளும் பாடம் கத்துக்கப் புதுப்புது அனுபவங்கள் கிடைக்குது. லாப நோக்கங்களைத் தாண்டி, நஞ்சில்லாத உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யுற திருப்தியும், இயற்கைச் சூழ்ந்த இந்த அமைதியான வாழ்க்கை முறையும்

மனசை எப்போதும் பசுமையா வெச்சிருக்கு. ‘இது போதும் எனக்கு’ன்னு மகிழ்ச்சியா வேளாண் தொழிலைச் செய்துட்டிருக்கேன்” உற்சாகமாகப் பேசுகிறார் குமரகுரு மாணிக்கவாசகம்.

வெளிநாட்டு வேலையைத் துறந்து, நகர வாழ்க்கையிலிருந்து விலகி, இயற்கை விவசாயியாகப் பயணித்துக்கொண்டிருக்கும் இவரது தோட்டம், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹலியூர் கிராமத்தில் அமைந்திருக்கிறது. சுற்றிலும் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே செழிப்பாகக் காட்சியளிக்கும் தனது தோட்டத்தில் விவசாயப் பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்த குமரகுருவை, ஒரு காலைவேளையில் சந்தித்தோம்.

பசுமைக்குடிலில் குமரகுரு
பசுமைக்குடிலில் குமரகுரு

“என் பூர்வீகம் ஈரோடு மாவட்டம். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, வேலைக்காக வெளியூர் போனார். அதிலிருந்து விவசாயத்துக்கும் எங்களுக்குமான பந்தம் குறைஞ்சுடுச்சு. என் அப்பா வங்கி அதிகாரி. கோயம் புத்தூர்ல வளர்ந்த நான், ராஜஸ்தான்ல இன்ஜினீயரிங் முடிச்சேன். பிறகு, வெளிநாடுகள்ல வேலை செஞ்ச நிலையில, கோழிக்கோடு ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்துல எம்.பி.ஏ படிச்சேன். பிறகு, தமிழகம் வந்து சில இடங்கள்ல வேலை செஞ்சேன். அந்த நேரத்துல வேலையி லிருந்து ஓய்வுபெற்ற அப்பாவின் ஓய்வூதியப் பணம் (பி.எஃப்), என்னோட சேமிப்புப் பணத்தை நிலத்துல முதலீடு செய்யலாம்னு திட்டமிட்டோம்.

நண்பர் ஒருத்தர் மூலமா கோத்தகிரியில இந்த நிலத்தைப் பார்த்தோம். குளிரும் வெயிலும் சரிவிகிதத்துல இருக்கும் வித்தியாசமான பருவநிலையும், இந்தப் பகுதியும் எங்களுக்கு ரொம்பவே பிடிச்சிருந்துச்சு. இந்த 19 ஏக்கர் நிலத்தையும் வாங்கிட்டோம். பிறகு, அமைதியான சூழல்ல தங்கி, விவசாய வேலைகளைச் செய்யலாம்னு வேலையிலிருந்து விலகினேன். குடும்பத் தினரும் ஊக்கம் கொடுக்கவே, வெளிநாட்டு வேலையை உதறிட்டு, 2016-ம் வருஷம் கோயம்புத்தூரிலிருந்து இங்க வந்தேன்.

பழமரங்கள் சாகுபடி
பழமரங்கள் சாகுபடி

‘பெர்மாகல்ச்சர்’ பயிற்சி

வாடகைக்கு வீடு பிடிச்சு தங்கி, இந்த நிலத்தைச் சீர்படுத்தினேன். சாலை வசதி, மின்சார வசதி, விலங்குகள் ஊடுருவலைத் தடுக்க மின்வேலி அமைச்சோம். பாழடைஞ்சுப்போய் இருந்த ரெண்டு கிணறுகளைத் தூர்வாரினோம். நிரந்தர வேளாண் முறைனு சொல்லப்படுற ‘பெர்மாகல்ச்சர்’ பத்தி கோவாவுல போய்ப் பயிற்சி எடுத்துகிட்டேன். பிறகு, படிப்படியா விவசாய வேலைகளை ஆரம்பிச்சேன்” என்று முன்கதையைப் பகிர்ந்தவர், தோட்டத்தைச் சுற்றிக்காட்டியபடியே தொடர்ந்தார்.

ஃபேஷன் ஃப்ரூட்
ஃபேஷன் ஃப்ரூட்

“இயற்கை விவசாயம் மட்டுமே செய்யுறதுனு உறுதியா இருந்ததால, தொழுவுரம், மண்புழு உரத்தை நிலத்துல கொட்டி மண்ணை வளப்படுத்தினோம். அப்புறமா, தலா 25 சென்ட்டுல நாலஞ்சு காய்கறிப் பயிர்களைச் சாகுபடி செஞ்சோம். ஆனா, நோய் பாதிப்பு, அதிக மழையால வேர் அழுகிப்போனது, விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததுனு பல சவால்களைச் சந்திச்சோம். விவசாயம் செய்யுறது அவ்வளவு சுலபமான வேலையில்லைனு புரிஞ்சுது. முதல் வருஷம் நஷ்டம்தான் மிஞ்சியது. தோட்டக்கலைத் துறையில உதவி கேட்டேன். என் தோட்டத்துக்கே வந்து ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு சொன்னாங்க. அவங்க வழிகாட்டுதல்ல சிக்கிம் போனேன். அங்குள்ள விவசாயிகளைச் சந்திச்சு, இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள், மதிப்புக்கூட்டல், விற்பனை வாய்ப்புகளுக்கான பயிற்சிகளைப் பெற்றது பயனுள்ளதா அமைஞ்சது. பிறகு, நீலகிரி மாவட்டத்திலுள்ள சில இயற்கை விவசாயிகளைச் சந்திச்சும் அனுபவங்களைக் கத்துக்கிட்டேன். விவசாய வேலைகளுக்கு நடுவே, இந்தத் தோட்டத்துலேயே வீடு கட்டி குடியேறினேன்.

தேயிலைத் தோட்டத்தில்
தேயிலைத் தோட்டத்தில்

பாடம் சொன்ன பசுமைக் குடில்

ஓரளவுக்கு அனுபவம் கிடைச்ச பிறகு வாரம், மாதம், வருடம், பல வருடங்களுக்கு விவசாயத்துல வருமானம் கிடைக்கும் வகையில திட்டுமிட்டுப் பயிர் செஞ்சேன். சாய்வான பகுதிகள்ல தேயிலையைச் சாகுபடி செஞ்சோம். அதிக மழையாலும் பனியாலும் பயிர்கள் பாதிக்கப்பட்டதால, முதல்ல 25 சென்ட்டுல மட்டும் பசுமைக் குடில் அமைச்சு அதுக்கு உள்ளேயும் வெளியேயும் சோதனை முயற்சியா சில காய்கறிப் பயிர்களைச் சாகுபடி செய்தேன். குடிலுக்கு உள்ளே இருந்த செடிகளின் வளர்ச்சி நல்லா இருந்துச்சு. அதனால, தலா 25 சென்ட் பரப்புல ரெண்டு குடில்களை அமைச்சேன். அந்த ரெண்டு குடில்களிலும் இப்போ ஃபேஷன் ஃப்ரூட் செடிகள் பிரதான பயிரா இருக்கு. இதுக்கு ஊடுபயிரா பச்சைமிளகாய், தக்காளி, முள்ளங்கி, பச்சைப்பட்டாணி போன்ற பயிர்களைப் போட்டிருக்கேன்’’ என்றவர் பசுமைக் குடிலுக்குள் அழைத்துச் சென்று பயிர்களைக் காட்டினார்.

பணியாளர்களுடன்
பணியாளர்களுடன்

‘‘ஏற்கெனவே 3 குடில்கள் இருக்கும்போதே அடுத்ததா, தலா 25 சென்ட் பரப்பளவுல இன்னும் ரெண்டு பசுமைக் குடில்களை அமைச்சேன். அதுல ஒரு குடில்ல பிரதான பயிரா செளசெள இருக்குது. இன்னொரு குடில்ல கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், புரக்கோலி இருக்குது. நாற்று உற்பத்திக்காக 10 சென்ட்ல தனியா ஒரு பசுமைக்குடில் இருக்குது.

இயற்கைச் சீற்றங்களின் பாதிப்புகள் எப்படி இருந்தாலும், விளைச்சலும் வருமான வாய்ப்புகளும் தடைபடக் கூடாதுனு, பழைய உபகரணங்களைக் கொண்டே இந்த ஆறு குடில்களையும் அமைச்சதால, இதுக்கான செலவுகளை ஓரளவுக்குக் கட்டுக்குள் வெச்சுக்க முடிஞ்சுது’’ என்றவர் திறந்த வெளியில் செய்யும் சாகுபடி பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

20 வகைப் பழ மரங்கள்

‘‘திறந்தவெளியில 2 ஏக்கர்ல கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், புரக்கோலி, நூல்கோல், காலிஃப்ளவர், பஜ்ஜி மிளகாய், பாகல், பீர்க்கன், பீன்ஸ்னு பல்வேறு பயிர்களையும் நடவு செஞ்சிருக்கேன். 4 ஏக்கர்ல எலுமிச்சை, கொய்யா, ஆரஞ்சு, பட்டர் ஃப்ரூட், ரம்புட்டான், வெல்வெட் ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, சீதா, மாதுளை, செர்ரி, பிளம்ஸ், லிச்சி, அத்தி, சப்போட்டா, வாழை உள்பட 20 வகையான பழமரங்கள் 1,500 இருக்கு. நடைபாதை, மேடான இடங்கள்ல மொத்தமா 1,000 வணிகரீதியான மரங்களை வெச்சிருக்கோம். ஜெர்சி ரகக் கலப்பின மாடு ஒண்ணு இருக்கு. எங்க தேவைக்காக 10 வெள்ளாடுகள், 50 பெருவிடை நாட்டுக்கோழிகளையும் வளர்க்கிறோம்’’ பேசிக்கொண்டே வந்ததில் தேயிலைத் தோட்டத்தில் வந்து நின்றோம்.

தோட்டத்தில்
தோட்டத்தில்

‘‘தேயிலைச் செடிகள்ல 20 நாள்களுக்கு ஒருமுறை இலைகளைப் பறிச்ச பிறகு, ஜீவாமிர்தக்கரைசலை இலைவழி தெளிப்பா கொடுப்போம். தேயிலைச் செடிகளுக்கு 3 மாசத்துக்கு ஒரு தடவை சுழற்சி முறையில தொழுவுரம், மண்புழு உரம் கொடுப்போம். மட்க வைத்த காய்கறிக்கழிவுகள், வேப்பம் பிண்ணாக்கு, மண்புழு உரம், தொழுவுரம் எல்லாத்தையும் மண்ணுல கலந்துதான் காய்கறிப் பயிர்களை நடவு செய்வோம். அதனால, பயிர்களின் வளர்ச்சி சிறப்பா இருக்குது.

காய்கறி, பழவகைப் பயிர்கள்ல நோய்த் தாக்குதல் இருந்தா, வேப்ப எண்ணெயை 10 லிட்டர் தண்ணீருக்கு 35 மி.லி என்ற அளவுல கலந்து தெளிப்போம். வாரம் ஒரு தடவை ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைக் கொடுப்போம். பூ பூக்கும் தருணங்கள்ல 15 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் தேமோர் கரைசலைக் கலந்து தெளிப்பேன். அவ்வப்போது பஞ்சகவ்யா, மீன் அமிலக்கரைசலையும் கொடுப்போம்” என்று விவசாய முறைகளைப் பகிர்ந்தவர், அறுவடை பணிகளை முடித்துவிட்டு வந்து வருமான வாய்ப்புகள் குறித்துப் பேசினார்.

கம்ப்யூட்டர், செல்போன்னு எந்நேரமும் இயந்திரமயமா இருந்த நான், இன்னைக்கு அந்த வாழ்க்கை முறையிலிருந்து விலகி, மனசுக்குப் பிடிச்ச விவசாய வேலையை செய்துகிட்டிருக்கேன்.

நிலையான வருமானம் தரும் தேயிலை

“இந்தப் பகுதியைச் சுத்தியும் தேயிலைத் தோட்டங்கள்தான் அதிகமிருக்கு. அதனால, சுழற்சி முறையில எப்பவும் தேயிலைப் பறிப்பு நடக்குறதால, வேலையாள்களுக்கான பற்றாக்குறை இருக்கும். ஆனா, என் தோட்டத்துல வேலை செய்றதுக்குனு 8 குடும்பங்களுக்குத் தங்கும் வசதியை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கேன். ஏக்கருக்கு 700 கிலோ தேயிலை வீதம், மொத்தமுள்ள 11 ஏக்கர் தேயிலைச் செடிகளிலிருந்து சுழற்சி முறையில மாசம் சராசரியா 7,700 கிலோ தேயிலைப் பறிப்போம். அதைப் பக்கத்துல இருக்க ஆலைக்கு அனுப்பிடுவோம். கிலோவுக்குச் சராசரியா 20 ரூபாய் வீதம், 7,700 கிலோவுக்கு 1,54,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

ஆடுகளுடன்
ஆடுகளுடன்

செளசெளல வாரம் சராசரியா 1,000 கிலோ மகசூல் எடுத்துகிட்டிருக்கோம். இப்போ ஒரு கிலோ சராசரியா 10 ரூபாய்னு மேட்டுப் பாளையம் மண்டியில கொண்டுபோய்க் கொடுத்திடுவோம். இதன் மூலம் வாரம் 10,000 ரூபாய் வீதம், மாசத்துக்கு 40,000 ரூபாய் வருமானம் கிடைக்குது.

நிலையான வருமானம் கொடுக்கும் இந்த ரெண்டு பயிர்களிலிருந்து 1,94,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதுல, தேயிலைப் பறிப்புக்கூலி, பணியாளர்களுக்கான ஊதியம், பராமரிப்புச் செலவு, போக்குவரத்து, இடுபொருள்கள் செலவு வகையில 60 சதவிகிதம் செலவு ஆகிடும். அந்த வகையில 1,16,400 ரூபாய்ச் செலவாகும். இந்தச் செலவுகள் போக, மாசத்துக்கு 77,600 ரூபாய் லாபமா நிக்கும்’’ என்றவர் நிறைவாக,

‘‘வாட்ஸ்அப் மூலமா ஆர்டர் எடுத்து, கோயம்புத்தூரிலுள்ள சில வாடிக்கை யாளர்களுக்குக் காய்கறிகளை நேரடியா கொண்டுபோய் விற்பனை செய்யும் முயற்சியில இறங்கியிருக்கேன். பழ மரங்கள்ல இருந்து இன்னும் நாலு வருஷங்களுக்குப் பிறகு, மகசூல் கிடைக்கும். ஃபேஷன் ஃபுரூட் அக்டோபர் மாசத்துல அறுவடைக்குத் தயாராகிடும்” என்றார் நம்பிக்கையுடன்.

தொடர்புக்கு,

குமரகுரு,

செல்போன்: 87540 40033

ஜனாதிபதி சொல்லிய ஆலோசனை!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அண்மையில் ஊட்டிக்கு வந்திருந்தார். அப்போது அவரைச் சந்தித்திருக்கிறார் குமரகுரு மாணிக்கவாசகம். அந்தச் சந்திப்பு குறித்து பேசிய அவர், ‘‘தோட்டக்கலைத்துறை ஏற்பாட்டுல நீலகிரி மாவட்ட இயற்கை விவசாயிகள், ஜனாதிபதியைச் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதுல எனக்கும் வாய்ப்பு கிடைச்சது. எங்களுடைய இயற்கை விவசாய முறைகளை ஆர்வமா கேட்ட ஜனாதிபதி, ‘நீலகிரி மாவட்டம் முழுக்கவும் இயற்கை விவசாயம் விரிவடைய, உங்களுடைய அனுபவங்களை மற்ற விவசாயிகளிடமும் பகிர்ந்துக்கணும்’னு பல்வேறு பயனுள்ள ஆலோசனைகளைக் கொடுத்தார்.

ராம்நாத் கோவிந்த்
ராம்நாத் கோவிந்த்

ஜனாதிபதியின் உணவுக்கான ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, செவ்வாழை, செலரி, புரக்கோலி, காலிஃப்ளவர், பச்சைப்பட்டாணி உட்படச் சில காய்கறிகளையும் பழங்களையும் அவருக்குக் கொடுத்தனுப்ப வாய்ப்பு கிடைச்சது. கம்ப்யூட்டர், செல்போன்னு எந்நேரமும் இயந்திரமயமா இருந்த நான், இன்னைக்கு அந்த வாழ்க்கை முறையிலிருந்து ரொம்பவே விலகி, மனசுக்குப் பிடிச்ச விவசாய வேலையை நேசிச்சு செய்துகிட்டிருக்கேன். தோல்விகள், படிப்பினைகளை ஏத்துக்கவும், புது அனுபவங்களைக் கத்துக்கவும் தயாரா இருக்குறதால, ஒவ்வொருநாளும் சுவாரஸ்யமா இருக்குது. எதிர்காலத்துல ‘ஃபார்ம் ஸ்கூல்’ ஆரம்பிச்சு, விவசாயிகளுக்கு இலவசமா பயிற்சி கொடுக்கத் திட்டமிட்டிருக்கேன்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.