கட்டுரைகள்
ஆன்மிகம்
சினிமா
பேட்டிகள்
Published:Updated:

உலகின் சமையற்கூடம்! தாய்லாந்தின் ‘பசுமை’ முகம்!

உணவு
பிரீமியம் ஸ்டோரி
News
உணவு

உணவு

ரு சுபயோக சுப தினத்தில், தாய்லாந்து செல்வதற்கான அழைப்பு வந்தது. அது என் முதல் வெளிநாட்டுப் பயணம். எனவே, பார்ப்பவர்களிடமெல்லாம் விஷயத்தைச் சொன்னேன். கேட்டவர்களில் சிலர் என்னை அசூயையாகப் பார்த்தார்கள். சிலர் `தாய்லாந்துக்கா...’ என்ற கேள்வி விழிகளில் தொக்கி நிற்க, என்னை ஏற இறங்க பார்த்தார்கள். `தாய்லாந்து’ என்றதும் ஏன் எல்லோரும் இப்படி எதிர்வினைபுரிகிறார்கள்? ஒருகட்டத்தில், `இந்தப் பயணத்தைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது’ என்று முடிவெடுக்கும் நிலை. அந்த அளவுக்கு அந்த நாட்டைப் பற்றி உயர்ந்த எண்ணத்தில் இருந்தார்கள்! ஆனாலும், நான் பயணம் மேற்கொள்வதில் உறுதியாக இருந்தேன்.

சென்னையிலிருந்து மூன்று மணி நேர விமானப் பயண தூரத்தில் இருக்கிறது தாய்லாந்து. அதன் தலைநகரான பாங்காக் செல்ல, நள்ளிரவு நேரத்தில் புறப்படும் ஒரு சல்லிசான விமானத்தில் முன்பதிவு செய்திருந்தேன். செயற்கைப் புன்னகையுடன் வரவேற்ற விமான பணிப்பெண்கள் கொடுத்த சாக்லேட்டை வாயில் போட்டுக்கொண்டு, விமானத்தில் ஏறினேன். விமானத்துக்குள் நுழையும்போதே ஆசை, குறுகுறுப்பு, எதிர்பார்ப்பு... எல்லாம் கலந்த ஓர் உணர்வு என்னை ஆட்கொண்டி ருந்தது. உள்ளே இருந்த அனைத்தும் தமிழ்நாட்டு முகங்கள். ஆனால், யாரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளக்கூட இல்லை. சிலர் தூங்குவதுபோல நடித்தார்கள்.

சிலர் முகத்தைக் கைக்குட்டையால் மறைத்தபடி உட்கார்ந்திருந்தார்கள்.

உலகின் சமையற்கூடம்! தாய்லாந்தின் ‘பசுமை’ முகம்!

விமானம் முழுக்க ஆண்களே நிறைந்திருந்தார்கள். மூன்று மணி நேர பயணத்துக்குப் பிறகு, சொர்க்கம்போல இருந்த `ஸ்வர்ணபுரி’ விமான நிலையத்தில் இறங்கினோம். தாய்லாந்து கலாசாரம், இந்தியாவுடன் பின்னிப் பிணைந்தது. அந்த நாட்டு மன்னரை `ராமரின் வழித்தோன்றல்’ என்றுதான் சொல்லிக்கொள் கிறார்கள். அதனாலேயே, தாய்லாந்து முழுக்க ராம்புரி, லட்சுமணபுரி, பிரம்மபுரி… என்று ஊர்ப் பெயர்கள் இருக்கின்றன.

`உலகின் உல்லாசபுரி’ என்று அழைக்கப்படும் தாய்லாந்து மண்ணில் கால் வைத்தவுடனேயே, சினிமா நடிகைள்போல பளபள மேக்கப்பில் இருந்த பெண்கள், `தாய் மசாஜ் செய்துகொள்ளலாம் வாருங்கள்…’ என்று அழைப்பு விடுக்கிறார்கள்.

இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே, என் பெயர் எழுதியிருந்த ஓர் அட்டையைப் பிடித்தபடி ஒருவர் ஓடிவந்து என் அருகே நின்றார். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். உடனே, அவர் தான் கொண்டு வந்திருந்த காரில் என்னை ஏற்றிக் கொண்டார். அந்த அதிகாலை 3 மணிக்கே பளீரெனத் துலங்கும் விளக்கு வெளிச்சத்தில், ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது அந்த நகரம். அந்த அதிகால வேளையிலும், சாலையில் பெண்களின் நடமாட்டம் அதிகமிருந்தது.

உலகின் சமையற்கூடம்! தாய்லாந்தின் ‘பசுமை’ முகம்!

நான் தங்கவிருந்த நட்சத்திர விடுதிக்குள் நுழைந்தேன். என்னைப் போலவே பல நாடுகளிலிருந்தும், `இயற்கை விவசாயம்’ தொடர்பான பயிற்சியில் பங்கேற்க பலர் அங்கே வந்திருந்தார்கள். இந்தியா, இலங்கை, மலேசியா, பூட்டான், வியட்நாம்... என தெற்காசிய நாடுகளிலிருந்து 50-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தார்கள்.

இந்தியாவுக்கு இலங்கை பக்கத்து நாடு என்பதால், என்னோடு இலங்கையைச் சேர்ந்த சிங்களர் ஒருவரை தங்கச் சொன்னார்கள். ``நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறேன்’’ என்று அவரிடம் சொன்னேன். அவர், `‘இலங்கை அரசுதான் தமிழர்களுக்கு எதிராக இருக்கிறது. என்னைப் போன்ற சில சிங்களர்கள் தமிழர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறோம்’’ என்று என்னை வரவேற்க பச்சைக்கொடி காட்டுவதுபோலச் சொன்னார். வேறொன்றுமில்லை... அடுத்த ஒரு வார காலத்துக்கு அவர் என்னோடுதான் இருந்தாக வேண்டும்.

உலகின் சமையற்கூடம்! தாய்லாந்தின் ‘பசுமை’ முகம்!

`தாய்லாந்து’ என்றவுடனேயே, உல்லாச உலகம் என்ற எண்ணம்தான் எல்லோரின் மனதிலும் எழுகிறது. ஆனால், தாய்லாந்துக்கு வேறு சில முகங்கள் உண்டு. `உலகின் சமையற்கூடம்’

(Kitchen Of the World) என்று புகழ்பெற்றது தாய்லாந்து. இந்தப் பெயரில்தான் தாய்லாந்து சுற்றுலாத்துறை விளம்பரமே கொடுக்கிறது. இயற்கை வேளாண்மையில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளிலும் இதுவும் ஒன்று. தாய்லாந்து அரசின் உதவியுடன் நடைபெற்ற `அப்னான்’ (Asia Pacific Natural Agriculture Network- APNAN) `இயற்கை வேளாண்மைப் பயிற்சி’க் காகத்தான் நான் அங்கு சென்றிருந்தேன்.

நம்புங்கள்... இந்தியாபோலவே தாய்லாந்தும் விவசாய நாடுதான். ஒவ்வோர் ஆண்டும், அந்த நாட்டு மன்னர் பொன்னேர் கட்டி உழவு செய்வது அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

உலகின் சமையற்கூடம்! தாய்லாந்தின் ‘பசுமை’ முகம்!

உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் இந்தியாவுடன் போட்டிபோடுவது, சீனா அல்ல, தாய்லாந்துதான். அரிசி ஏற்றுமதியில் இந்தியாவுக்கு அடுத்த இடம் தாய்லாந்துக்குத் தான். ஆசியாவில் வேகமாக வளரும் நாடுகளில் இதுவும் ஒன்று.

உழைப்புக்குப் பெயர் பெற்ற தாய்லாந்து விவசாயிகள், அரிசியில் மட்டுமல்ல... காய்கறிகள், பழங்கள் எனப் பலவிதமான சாகுபடிகளில் மகசூலை அள்ளிக் குவிக்கிறார்கள். சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா, இங்கிலாந்து… எனத் தாய்லாந்து விளைபொருள்களின் சந்தை விரிந்துகிடக்கிறது. ஆனால், இந்தத் தகவல்களில் எதுவும் உலகின் வெகுஜன கவனத்துக்கு இன்னும்கூடச் சென்று சேரவில்லை.

பாங்காக்கிலிருந்து சுமார் 250 கி.மீ தூரத்திலுள்ள `சாராபுரி’ என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பரந்து விரிந்திருந்த இயற்கை வேளாண்மைக் கல்லூரியில்தான் (Arehivakasetsongkroh Saraburi College)எங்களுக்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தப் பயிற்சியில் முக்கியமாக `இ.எம்’ என்று அழைக்கப்படும் நுட்பத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்.

`எஃபெக்டிவ் மைக்ரோ ஆர்கானிசம்ஸ்’ (Effective Micro-Organisms) என்பதன் சுருக்கம்தான் இ.எம் (E.M.). தமிழில், `திறன்மிகு நுண்ணுயிர்’ என்று இது அழைக்கப்படுகிறது. இந்தத் திரவத்தில் நுண்ணுயிர்கள், உறக்க நிலையிலிருக்கும். இ.எம், பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது. இதைப் பயிர்களுக்குத் தெளித்தால், நல்ல மகசூல் கிடைக்கிறது. காய்கறி, பழங்களின் சுவை அற்புதமாக இருக்கிறது. கோழித் தீவனத்தில் இதைக் கலந்து கொடுத்தால், முட்டைகள் அதிகமாகக் கிடைக்கின்றன. மீன்களுக்குக் கொடுத்தால், அவை கொழுத்து வளர்கின்றன. மாட்டுத்தீவனத்தில் கலந்து கொடுத்தால், கூடுதலாகப் பால் கிடைக்கிறது… இப்படி இ.எம் எங்கே பயன்படுத்தப்படுகிறதோ அந்த இடமே செழிப்பாகிவிடுகிறது.

உலகின் சமையற்கூடம்! தாய்லாந்தின் ‘பசுமை’ முகம்!

சாக்கடைகளால் நிரம்பி வழியும் குளத்தில் இ.எம் ஊற்றினால், சில மாதங்களில் அந்தக் குளத்தின் நீர் தெளிந்துவிடுகிறது. தரையைத் துடைக்க, கழிவறையைச் சுத்தம் செய்ய, துணி துவைக்க... என எங்கெங்கு காணினும் இ,எம்!

ஒவ்வொரு நாளும் காய்கறி, காளான், மீன் வளர்ப்பு… என விரிவான, விளக்கமான களப்பயிற்சி களைக் கொடுத்தார்கள். ``இன்னும் சில ஆண்டுகளில் இ.எம்-தான் உலகை ஆளப்போகிறது...’’ என்று எங்களுக்குப் பயிற்சி கொடுத்த பேராசிரியர் அடித்துச் சொன்னார். `அப்படி என்னதான் அதில் இருக்கிறது...’ என்று பூதக்கண்ணாடி (மைக்ரோஸ் கோப்) வைத்து பார்த்தால், தயிரிலுள்ள லேக்ட்டோஸ் பாசில்லஸ் போன்ற நன்மை செய்யும் உயிரிகள் தெரிந்தன.

ஒவ்வொரு நாள் இரவும், அன்றைக்கு நாம் என்ன கற்றுக் கொண்டோம் என்பதை விளக்கிச் சொல்ல வேண்டும். ஒருநாள் இரவு, ``எங்கள் தமிழ்நாட்டில் கொடுமுடியைச் சேர்ந்த டாக்டர் நடராஜன் என்பவர் பயிர்களுக்கான `பஞ்சகவ்யா’-வை உருவாக்கி யிருக்கிறார். அதிலும்கூட, பசுமாட்டின் பால், தயிர் போன்றவற்றைப் பயன்படுத்தி, பயிர்களுக்குத் தெளிக்கிறோம். இதை இ.எம்-போல ஒவ்வொரு முறையும் கடையில் சென்று வாங்க வேண்டியதில்லை. விவசாயிகளே தயாரித்துக்கொள்ளலாம். இதன் மூலம் நல்ல விளைச்சல் கிடைக்கிறது என ஒரு பல்கலைக்கழகமே சொல்லியிருக்கிறது. பயன்படுத்திய எங்கள் விவசாயிகளும் அதை உறுதிபடச் சொல்லிவருகிறார்கள்’’ என்றேன்.

பிலிப்பைன்ஸ், வியாட்நாம் நாட்டிலிருந்து வந்தவர்கள். `அப்படி ஒன்று இருக்கிறதா என்ன...’ என்று ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். மலேசியாவிலிருந்து வந்திருந்த பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தைச் சேர்ந்த தீபன், கன்னியப்பன் ஆகியோரும், ``எங்கள் நாட்டிலும் பஞ்சகவ்யாவைப் பயன்படுத்துகிறோம். இதோ பஞ்சகவ்யா தெளித்த சுரைக்காய்’’ என்று ஒரு படத்தைப் போட்டுக் காட்டினார்கள். அதற்குள் கூகுள் மூலம் அங்கிருந்த ஒவ்வொருவரும் பஞ்சகவ்யா பற்றித் தேடிப் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

உலகின் சமையற்கூடம்! தாய்லாந்தின் ‘பசுமை’ முகம்!

அடுத்த நாள் நாங்கள் பேராசிரி யர்களாக மாறி, பஞ்சகவ்யா தயாரிப்பு, அதன் பயன்பாடு பற்றிப் பாடம் எடுத்தோம். ஏழு நாடு களிலிருந்து வந்தவர்களும் எங்களின் இமெயில் முகவரியை வாங்கி வைத்துக்கொண்டு, ``எங்கள் நாட்டுக்கு நீங்கள் விருந்தினராக வர வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்தார்கள். `கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்ற ஔவைப் பாட்டியின் அமுத மொழி தாய்லாந்து மண்ணில் நினைவுக்கு வந்தது.

பயிற்சியின் முடிவில், அந்த நாட்டின் சிறந்த பண்ணைகளுக்கு எங்களை அழைத்துச் சென்றார்கள். எங்கு பார்த்தாலும் பசுமை, பசுமை, பசுமை! ஒன்பது மாதங்களுக்கு அங்கே மழை பொழிந்தபடியே இருக்கிறது. அதனால் அங்கே தண்ணீர்ப் பஞ்சம் என்பதே இல்லை.

ஒரு பண்ணையில் மஞ்சள் பயிரிட்டிருந்தார்கள். விசாரித்த போது, தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு பகுதியிலிருந்து மஞ்சள் வாங்கி வந்து சாகுபடி செய்திருப்பதாகச் சொன்னார்கள். இன்னும் சில ஆண்டுகளில் மஞ்சள் ஏற்றுமதியிலும் தாய்லாந்து நமக்குப் போட்டியாக வந்தால் ஆச்சர்யப்பட வேண்டாம்.

இந்தியாவின் முதல் இயற்கை வேளாண்மை மாநிலம் சிக்கிம். நாங்கள் சென்ற ஹார்மனி லைஃப் பண்ணையின் (Harmony Life Farm) விவசாயியை, சிக்கிம் மாநில அரசு, இயற்கை வேளாண்மை ஆலோசனை வழங்க அழைப்பு விடுத்திருந்தது. அந்தத் தகவலை பெருமையுடன் எல்லோரிடமும் சொன்னார்.

``நான் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன்’’ என்றவுடன், என்னைக் கட்டியணைத்துக் கொண்டார். ``நீங்கள் எங்களின் `கேக்’ (தாய்மொழியில் `விருந்தினர்’ என்று பொருள். இந்தியாவிலிருந்து யார் சென்றாலும் இப்படி மரியாதையாக அழைக்கிறார்கள்) புத்தர் வாழ்ந்த தேசத்திலிருந்து வந்த உங்களைக் கறுப்பு புத்தராகவே பார்க்கிறேன்...’’ என்றவர், மதிய விருந்தின்போது, அவர் பண்ணையில் விளைந்த விதவிதமான காய்கறி, பழங்களைப் பரிமாறினார். மல்லிகைப்பூ மணம் (இதற்கு `ஜாஸ்மின் ரைஸ்’ என்று பெயர்) வீசும் பாரம்பர்ய அரிசிச் சோற்றை அன்புடன் அள்ளிவைத்தார்.

உலகின் சமையற்கூடம்! தாய்லாந்தின் ‘பசுமை’ முகம்!

சர்க்கரைபோல இனித்தது வெறும் சோறு. கூடவே, விதவிதமான காய்கறி வறுவல்... மருத்துவ குணம்கொண்ட கீரையும் மதுரமாக இருந்தது. நம்மைப்போல, தாய்லாந்திலும் அரிசிதான் பிரதான உணவு. காய்கறியும் பழங்களும் அதிகமாக உண்கிறார்கள். புத்தமத நாடு என்றாலும், மாமிச உணவையும் வெளுத்து வாங்குகிறார்கள்.

பயிற்சியின் முடிவில், அரசு சார்பில் விருந்து கொடுத்து, சான்றிதழ் வழங்கி, பாராட்டுவிழா நடத்தினார்கள். எங்களுடன் தாய்லாந்து பெண் ஒருவரும் பயிற்சியில் இருந்தார். கடைசி நாளில்தான், அவர் அந்த நாட்டின் சினிமா நடிகை என்று அடக்கமாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். மீண்டும் பாங்காக் நகரிலுள்ள நட்சத்திர விடுதிக்கு வந்து சேர்ந்தோம். அன்று இரவு நகர்வலம் வந்து, சிரிக்கும் புத்தர் சிலையை வாங்கிக்கொண்டு விமானத்தில் ஏறினேன்.

பசுமை பொங்கும் தாய்லாந்து நிலங்களும், மஞ்சள் நிற விவசாயிகளின் முகங்களும் இன்றும்கூட நினைவில் நின்று நிழலாடுகின்றன!

ஊர் பெயர் கின்னஸ் சாதனை!

`பாங்காக்’ என்பது தாய்லாந்து தலைநகரின் ஆங்கிலப் பெயர். `க்ருங்தேப்’ அல்லது `க்ருங்க்தேப் மகானகோன்’ என்று `தாய்’ மொழியில் சுருக்கமாகச் சொல்கிறார்கள்.

`என்ன சுருக்கமாகவா?’ ஆமாம். முழுப் பெயர் என்னவென்று தெரியுமா?

`க்ருங்தேப் மகானகோன் அமோன் ரட்னாகோசின் மகிந்தாரா அயூத்தியா மகாதிலோக் போப் நொபராட் ரட்சதானி புரிரோம் உடோம்ரட்சனிவேட் மகசாதான் அமோன் பிமான் அவதான் சதிட் சகதாதியா விட்சனுகம் பிரசிட்...’

அட, மூச்சுமுட்டுகிறதா... உலகில் ஊரின் பெயர் இவ்வளவு நீளமாக இருப்பது இங்கே மட்டும்தான். இதனால் `கின்னஸ்’ சாதனை புத்தகத்திலும் இது இடம்பெற்றிருக்கிறது.

கீழே விழுந்த சுற்றுலா... தூக்கிப்பிடித்த விவசாயம்!

தாய்லாந்து நாட்டில் ஒன்பது மாதம் மழை பொழிகிறது. இதனால், எங்கு பார்த்தாலும் பசுமை, பசுமை. விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அந்நாட்டு அரசு நிறைய திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. குறிப்பாக, ரசாயனம் இல்லாத இயற்கை வேளாண்மையை நாடு முழுக்கப் பரப்பும் பணியில் அரசு அலுவலர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பக்கத்து நாடுகளுடன் நல்லுறவில் இருப்பதால், எல்லையைக் காவல் காக்கும் பணி ராணுவத்துக்குக் குறைவே. இதனால், ஊர், ஊராகச் சென்று இயற்கை உரம் தயாரிப்பு, வளர்ச்சி ஊக்கியை உற்பத்தி செய்வது எப்படி எனச் செயல் விளக்கம் காட்டுகிறார்கள் ராணுவ வீரர்கள். சுமார் 20.4 மில்லியன் ஹெக்டேர் (50.4 மில்லியன் ஏக்கர்) விவசாய நிலங்கள் இருக்கின்றன. அவற்றில் சுமார் 10 மில்லியன் ஹெக்டேர் (24.7 மில்லியன் ஏக்கர்) நெல் சாகுபடியில் உள்ளன.

உலகின் சமையற்கூடம்! தாய்லாந்தின் ‘பசுமை’ முகம்!

உலகில் 30 சதவிகித அரிசி, தாய்லாந்தில்தான் உற்பத்தியாகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் முதலிடத்தில் இருந்தது. அந்த இடத்தைத் தட்டிச்சென்றது வேறு யாருமல்ல, நம் இந்தியாதான். மீண்டும் முதலிடத்தைப் பிடிக்க, அரிசி ஏற்றுமதிக்கு ஏராளமான சலுகைகளை அள்ளிக் கொடுக்கிறது அரசாங்கம்.

மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி உலக அளவில் 95 சதவிகிதம், தாய்லாந்து நாட்டில்தான் நடக்கிறது. மரவள்ளிக்கிழங்கு மாவு மூலம் உற்பத்தியாகும் ஸ்டார்ச் பொருள் உணவு, காகிதம், துணி... போன்றவற்றுக்கு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

மரள்ளிக்கிழங்கு மூலம் உருவாக்கப்படும் மாட்டுத் தீவனத்தை ஐரோப்பிய நாடுகள் போட்டி, போட்டுக் கொண்டு வாங்குகின்றன. பிற தீவனங்களைவிட, மரவள்ளி கிழங்கு தீவனம் கொடுத்தால் மாடுகள் ஆரோக்கியமாகவும் இருக்கும். கூடுதலாகவும் பால் கிடைக்கும். காய்கறி, பழங்கள், வாசனைப் பொருள்கள் போன்றவையும் உள்நாட்டு தேவை போக, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. விவசாயம்தான், நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான ஆதாரம் என்பதால், அதுசார்ந்த தொழில்கள் தொடங்க, மற்ற நாடுகளுக்கு அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளார்கள். தாய்லாந்து நாட்டின் வருவாயில் முக்கியப் பங்கு வகித்த சுற்றுலாத்துறை, கொரோனா பெருந்தொற்று மூலம் பாதாளத்தில் விழுந்துவிட்டது. ஆனால், இந்தியாவைப் போலவே, இங்கும் விவசாயத்துறைதான் வளர்ச்சியில் உள்ளது;இதனால், தாய்லாந்து நாடு சமாளித்து நிற்கிறது.

இதுதான் இ.எம்!

ஃபெக்டிவ் மைக்ரோ ஆர்கானிசம்ஸ் (Effective Micro-Organisms) என்ற இந்தக் கரைசலை ஜப்பானிய தோட்டக்கலை விஞ்ஞானி டீரோ ஹைகா (Teruo Higa) கண்டுபிடித்தார். இந்தத் திரவம் ஜப்பான் நாட்டு தொழில்நுட்பம். இதை இந்தியாவிலும் தயாரிக்கிறார்கள். ஏரி, குளங்களிலுள்ள கழிவுகளைச் சுத்திகரிக்கவும், கழிவுநீர் சுத்திகரிப்பு, கழிவறையைச் சுத்தம் செய்ய, பாத்திரம் தேய்க்க, வீட்டின் தரையைத் தூய்மைப்படுத்த... எனப் பலவிதங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. பண்ணைக் கழிவுகளை விரைவாக மட்கவைத்து உரமாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி விரட்டியாகவும்கூடப் பயன்படுகிறது. இது இயற்கையான பொருள் என்பதால், சூழல் கேடு ஏற்படாது.

சரி, இதை எப்படித் தயாரிப்பது என்று பார்ப்போம். ஒரு கிலோ வெல்லத்தை நீரில் கரைத்து, மூடியுடன்கூடிய ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் ஊற்றவும். இதனுடன் குளோரின் கலக்கப்படாத சுத்தமான தண்ணீர் 20 லிட்டர், இ.எம் திரவம் ஒரு லிட்டர் ஆகியவற்றையும் சேர்த்து, தொட்டியை மூடிவைக்கவும். தினமும், ஒரு முறை ஒரு விநாடி மட்டும் மூடியைத் திறந்து மூடி, உள்ளே உற்பத்தியாகும் வாயுவை வெளியேற்ற வேண்டும். ஒரு வாரத்தில் இந்தக் கலவை, இனிய மணம், புளிப்புச்சுவையுடன் வெண்நுரையுடன் காணப்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் மட்டும்தான் இ.எம் சரியான முறையில் தயாராகியிருக்கிறது என்று அர்த்தம். இப்படித் தயாரிக்கப்பட்ட கலவையை மூன்று மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும். மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடை கலக்கும் இடங்கள், அதிகமாகக் கொசு இருக்கும் இடங்களில் 20 லிட்டர் தண்ணீரில் பெருக்கப்பட்ட இ.எம் கரைசல் 100 மி.லி வீதம் கலந்து தெளிக்கலாம். இப்படி 15 நாள்கள் இடைவெளியில் தேவைக்குத் தக்கபடி தெளிக்கலாம். ஒரு வாரத்தில் துர்நாற்றம் குறைந்துவிடும். ஒரு மாதத்தில் ஆகாயத்தாமரை உள்ளிட்ட தாவரங்கள் பட்டுப்போய்விடும். ஒருகட்டத்தில் மாசுபட்ட ஏரி, குளத்திலிருந்த வேதித்தன்மை மாறி, தலைப்பிரட்டை, தவளை உருவாகும். கொசுக்களின் முட்டைகளைத் தலைப்பிரட்டையும் தவளையும் பிடித்து உண்ணும். இதனால், அந்தப் பகுதியில் கொசுக்களும் கட்டுப்படும். இப்படி இ.எம் மூலம் பலவிதமான நன்மைகள் ஏற்படும். இது நம்ம ஊர் இயற்கை இடுபொருள் அங்காடிகளில் கிடைக்கிறது.

விவசாயிகளுக்காக உருவான `மசாஜ்’ உருமாறிவிட்டது!

`சிவாகோ கமர்பாஜ்’ என்ற புத்த துறவிதான் தாய் மசாஜின் தந்தை. 2,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது தாய் மசாஜ். `நுஅட் போரான்’ என்று தாய் மொழியில் அழைக்கப்படும் மசாஜுக்கு `பழைமையான வகையில் அழுத்தம் தருவது’ என்று பொருள். ஆரம்பத்தில் விவசாயிகளுக்குத்தான் புத்த துறவிகள் மசாஜ் செய்தார்கள். காரணம், வயலில் கடுமையாக உழைக்கும் விவசாயிகளுக்கு உடல் இறுகிவிடும். அவர்களின் உடலையும் மனதையும் உற்சாகப்படுத்த ஊர், ஊராகச் சென்று தாய் மசாஜ் செய்துவிட்டார்கள். தாய் மசாஜ் என்பது தியானம்போல இசையுடன் செய்யப்படுகிறது. ஒருகட்டத்தில் புத்த துறவிகளிடமிருந்து பொது மக்களும் இந்தக் கலையைக் கற்றுக்கொண்டார்கள். அதன் பிறகு மசாஜ் செய்வது, சேவையிலிருந்து தொழிலாக மாறத் தொடங்கியது. தாய்லாந்தில் 15-ம் நூற்றாண்டு முதல் பாலியல் தொழில் உள்ளூர் அளவில் நடந்துவந்தது. 1965-ம் ஆண்டு வியட்நாம் போரின்போது அமெரிக்கப் படையினர் அடி வாங்கிக்கொண்டு, தாய்லாந்தில் வந்து தஞ்சம் புகுந்தார்கள். உடலைத் தேற்றிக்கொள்ளவும் பாலியல் இச்சைக்கும் மசாஜ் செய்யும் பெண்களை பயன்படுத்திக்கொண்டார்கள். இதன் மூலம் சாதாரண மீனவ கிராமமாக இருந்த `பட்டையா’ பார் முழுக்க பிரபலமாகி, உலக பாலியல் தொழிலின் தலைநகராக மாறிவிட்டது என்பது வரலாறு.