Published:Updated:

50 சென்ட்... ரூ. 34,000 வருமானம்! பேருந்து நடத்துநரின் நிலக்கடலை சாகுபடி!

நெல் சாகுபடி வயலில்
பிரீமியம் ஸ்டோரி
நெல் சாகுபடி வயலில்

மகசூல்

50 சென்ட்... ரூ. 34,000 வருமானம்! பேருந்து நடத்துநரின் நிலக்கடலை சாகுபடி!

மகசூல்

Published:Updated:
நெல் சாகுபடி வயலில்
பிரீமியம் ஸ்டோரி
நெல் சாகுபடி வயலில்
ஞ்சாவூர் மாவட்டம், அகரம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த வீரமணி, நம்மாழ்வார் பிறந்த ஊரான இளங்காடு கிராமத்துக்கு அருகில் உள்ள ஊரைச் சேர்ந்தவர். அரசு போக்குவரத்துக்கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். இயற்கை விவசாயம் மீதான ஆர்வம் காரணமாகப் பேருந்தில் பயணம் செய்யும் விவசாயிகளிடம் இயற்கை விவசாயத்தைப் பிரசாரம் செய்து வருகிறார். தனது நிலத்தில் இயற்கை விவசாய முறையில் உளுந்து, நிலக்கடலைச் சாகுபடி செய்து வருகிறார்.
50 சென்ட்... ரூ. 34,000 வருமானம்! பேருந்து நடத்துநரின் நிலக்கடலை சாகுபடி!

நம்மாழ்வார் சிறப்பிதழுக்காக ஒரு பகல் பொழுதில் அவரைச் சந்திக்கச் சென்றோம். பண்ணையின் முகப்பில் கட்டப்பட்டிருந்த பதாகையில் புன்னகைத்துக் கொண்டிருந்தார் நம்மாழ்வார். நெல் வயலில் தேங்கிய மழைநீரை வடித்துக்கொண்டிருந்த வீரமணி, மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

மனைவியுடன் வீரமணி
மனைவியுடன் வீரமணி

‘‘நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எங்களுக்கு 2 ஏக்கர் நஞ்சை, அரை ஏக்கர் புஞ்சை நிலம் இருக்கு. எங்க அப்பா ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லியெல்லாம் பயன்படுத்தினதே இல்லை. வயல்ல எருக்கன் செடி, கொழிஞ்சி தழைகளைப் போட்டு, தண்ணீர் கட்டி, மட்க விட்டு நெல் சாகுபடி செய்வாங்க. அடியுரமா எருவும் அதிகமா பயன்படுத்துவாங்க. தங்கச் சம்பா, கொடி வெள்ளைனு பாரம்பர்ய நெல் ரகங்கள் மட்டும்தான் பயிர் செஞ்சாங்க. நான் பி.காம் படிச்சிட்டு, அரசு போக்குவரத்துக்கழகத்துல நடத்துனராக வேலைப் பார்த்துக்கிட்டு இருக்கிறேன். எங்க அப்பாவோட மறைவுக்குப் பிறகு, நான் விவசாயத்தைக் கையில் எடுத்தேன். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளைத்தான் அதிகமாகப் பயன்படுத்திக்கிட்டு இருந்தேன். இதுக்கிடையிலதான் பசுமை விகடன் மூலமா நம்மாழ்வாரோட கருத்துகள் என் மனசுல பெரிய தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பிச்சது’’ என்று அறிமுகம் சொன்னவர், வயலைச் சுற்றிக்காட்ட நம்மை அழைத்துச் சென்றார். வரப்பில் நடந்துகொண்டே பேசியவர்,

நெல் சாகுபடி வயலில்
நெல் சாகுபடி வயலில்

‘‘உங்களுக்கு ஒரு ஆச்சர்யமான விஷயத்தைச் சொல்றேன். எங்க ஊருக்குப் பக்கத்துலதான் நம்மாழ்வார் ஐயாவோட சொந்த ஊரான இளங்காடு இருந்தாலும், பசுமை விகடன் மூலமாதான் நம்மாழ்வார்னு ஒருத்தர் இருக்காருங்கறதை தெரிஞ்சிகிட்டேன். உலகமே போற்றக்கூடியவர், எங்க மண்ணைச் சேர்ந்தவர்னு தெரிய வந்தப்ப, ரொம்பவே பெருமையா இருந்துச்சு. நம்மாழ்வாரைக் கண்டு உலகமே வியக்குது. அவரோட வழிகாட்டுதலைப் பின்பற்றி, எங்கெங்கயோ இருக்க விவசாயிகளெல்லாம் இயற்கை விவசாயம் செஞ்சிக்கிட்டு இருக்காங்க... அவர் பிறந்து வளர்ந்த இளங்காட்டுக்குப் பக்கத்துல இருக்கக்கூடிய நாம ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி பயன்படுத்தி விவசாயம் செய்றோமேனு மனசாட்சி உறுத்த ஆரம்பிச்சது.

தேங்காய்களுடன்
தேங்காய்களுடன்

கடந்த மூணு வருஷமா நெல்லுக்குப் பூச்சிக்கொல்லியே அடிக்கிறதில்லை. ரசாயன உரங்களையும் 50 சதவிகிதம் குறைச்சிட்டேன். வேப்பம் பிண்ணாக்கு, எரு, பஞ்சகவ்யா, வேப்பெண்ணெய்-புங்கெண்ணெய்-இலுப்பை எண்ணெய்க் கரைசல் அதிகமா பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். தென்னைக்குக் கொஞ்சம்கூட ரசாயன உரங்களே வைக்கிறதில்லை.

மாட்டுக் கொட்டகை
மாட்டுக் கொட்டகை

படிபடியா இயற்கை விவசாயத்துக்கு மாறலாம்னு ஒரு நாட்டு மாடு வாங்கினேன். அரை ஏக்கர் புஞ்சை நிலத்துல 100 சதவிகிதம் இயற்கை முறையில, உளுந்து சாகுபடி செஞ்சேன். இந்தத் தடவை குத்துக்கடலை இயற்கை முறையில பயிர் பண்ணி, அரை ஏக்கர்ல 12 மூட்டை (80 கிலோ மூட்டை) மகசூல் எடுத்திருக்கேன். கடலை நல்லா திரட்சியாவும், சுவையாவும் இருக்கு. ரசாயன நஞ்சு இல்லாம பயிர் பண்ணியிருக்கோம்னு ஒரு ஆத்ம திருப்தி’’ என்றவர் உளுந்து, நிலக்கடலைச் சாகுபடி விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

50 சென்ட்... ரூ. 34,000 வருமானம்! பேருந்து நடத்துநரின் நிலக்கடலை சாகுபடி!

‘‘பஞ்சகவ்யா, இ.எம், உயிர் உரங்கள், வேப்பெண்ணெய்-புங்கெண்ணெய்-இலுப்பை எண்ணெய்க் கரைசல் உள்ளிட்ட இயற்கை இடுபொருள்கள் பயன்படுத்தினதால, பயிர் நல்லா செழிப்பா ஆரோக்கியமா நோய் எதிர்ப்பு சக்தியோடு இருந்துச்சு. உளுந்து, நிலக்கடலை செடிகளைத் தாக்கக்கூடிய வேர்ப்பூச்சி, இலைச்சுருட்டுப்புழு, காய்ப்புழு தாக்குதல் கொஞ்சம்கூட இல்லை. உளுந்துல அரை ஏக்கர்ல 200 கிலோ மகசூல் கிடைச்சது. உளுந்து நல்லா திரட்சியா, அதிகமான மாவு சத்தோட இருந்துச்சு. கிலோவுக்கு 75 ரூபாய் வீதம் மொத்தம் 15,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. இடுபொருள்களுக்கு அதிகபட்சம் 500 ரூபாய்தான் செலவு பண்ணியிருப்பேன். ரசாயன முறையில உளுந்து சாகுபடி செஞ்சிருந்தா, 1,500 ரூபாய் செலவாகி இருக்கும்.

50 சென்ட்... ரூ. 34,000 வருமானம்! பேருந்து நடத்துநரின் நிலக்கடலை சாகுபடி!

உளுந்து அறுவடை முடிஞ்சதும் நாட்டு ரகக் குத்துக்கடலைச் சாகுபடி செஞ்சேன். 12 மூட்டை (ஒரு மூட்டை 80 கிலோ) மகசூல் கிடைச்சுது. மொத்தம் 960 கிலோ. இதுல 175 கிலோ கடலையை, எண்ணெய் பிழிய எடுத்துக்கிட்டோம். அதுல ஓடு நீக்கின பிறகு 75 கிலோ பருப்பு கிடைச்சது. இதை எண்ணெய்யாக ஆட்டினதுல, 34 லிட்டர் எண்ணெய், 40 கிலோ பிண்ணாக்கு கிடைச்சது. எண்ணெய் நல்லா சுவையா இருக்கு. அதை நாங்க வீட்டு சமையலுக்கு வெச்சிக்கிட்டோம். லிட்டருக்கு 300 ரூபாய் கணக்குல 10,200 ரூபாய் விலை மதிப்புள்ள எண்ணெய் கிடைச்சிருக்கு. கடலைப்பிண்ணாக்கை மாட்டுக்கு வெச்சிக்கிட்டோம். ஒரு கிலோ கடலைப் பிண்ணாக்கு 25 ரூபாய். 1,000 ரூபாய் விலை மதிப்புள்ள பிண்ணாக்குக் கிடைச்சிருக்கு. எண்ணெய்க்கு எடுத்தது போக, மீதியுள்ள 785 கிலோ (தோலுடன் கூடியது) கடலையை கிலோ 30 ரூபாய்னு விற்பனை செஞ்சேன். அது மூலமா 23,550 ரூபாய் வருமானம் கிடைச்சது. ஆக மொத்தம் அரை ஏக்கர் நாட்டுரகக் குத்துக்கடலை சாகுபடி மூலம், 34,750 ரூபாய் வருமானம். இதுல எல்லாம் செலவும் போக, 25,000 ரூபாய்க்கு மேல லாபம் கிடைச்சிருக்கு’’ என்றவரிடம், அவரது இயற்கை விவசாயப் பரப்புரை குறித்துக் கேட்டோம்.

50 சென்ட்... ரூ. 34,000 வருமானம்! பேருந்து நடத்துநரின் நிலக்கடலை சாகுபடி!

‘‘நான் நடத்துனரா வேலைப்பார்த்துக்கிட்டு இருக்க பஸ்ல, நிறைய விவசாயிகள், ஸ்பிரேயரையும் பூச்சிக்கொல்லி டப்பாவையும் கையில எடுத்துக்கிட்டு வருவாங்க. அதனால ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பத்தி அவங்கக்கிட்ட எடுத்துச் சொல்வேன். அதோட பசுமை விகடன்ல வெளிவரக்கூடிய இயற்கைப் பூச்சிவிரட்டியைப் பற்றியும் ஒரு பேப்பர்ல எழுதி அவங்ககிட்ட கொடுப்பேன். அதைச் செஞ்சு பார்த்துட்டு, ‘நல்ல பலன் கொடுத்துச்சு’னு அடுத்த முறை பார்க்குறப்ப நன்றி சொல்வாங்க. மத்த விவசாயிகளை முழுமையா இயற்கை விவசாயத்துக்கு மாத்துறதுல கொஞ்சம் சிரமம் இருந்தாலும், பூச்சிக்கொல்லியைத் தவிர்க்க வைக்கணுங்கறதுதான் என்னோட முதன்மையான நோக்கம்’’ என்றவர் நிறைவாக,

‘‘என்னோட நோக்கம் ஓரளவுக்கு நிறைவேறிக்கிட்டு இருக்கு. குறிப்பா, நம்மாழ்வார் பிறந்த பூமியில, பூச்சிக்கொல்லியே இல்லாம ஒழிக்கணும்ங்கறதுதான் லட்சியம். எங்க ஊர்ல இதுவரைக்கும் பத்து விவசாயிகளை மாத்தியிருக்கேன். அவங்களோட வயல்ல ரசாயன உரங்கள் போட்டாலும் பூச்சிக்கொல்லி கொஞ்சம்கூடப் பயன்படுத்துறதே இல்லை. வேப்பெண்ணெய் -புங்கெண்ணெய் கரைசல்தான் பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்துறாங்க. இது போதாது. இந்தப் பகுதி முழுக்கவே பூச்சிக்கொல்லியை விரட்டி அடிக்கணும்” என்றவர் குரலில் இருந்தது நம்பிக்கை.

அவரது நோக்கம் நிறைவேற வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்.

தொடர்புக்கு, வீரமணி, செல்போன்: 63798 51516

இப்படித்தான் குத்துக்கடலைச் சாகுபடி!

ரை ஏக்கரில் நாட்டுரகக் குத்துக்கடலைச் சாகுபடி செய்ய 15 கிலோ விதைத் தேவைப்படும். வேர்பூச்சி, நூற்புழுத் தாக்குதலைத் தடுக்கவும், முளைப்புத்திறனை அதிகப்படுத்தவும் விதைக்கடலையை விதைநேர்த்தி செய்ய வேண்டும். தலா 250 மி.லி பஞ்சகவ்யா, இ.எம், தலா 100 கிராம் அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி கலந்து, அதனுடன் 50 மி.லி தண்ணீர் சேர்க்க வேண்டும். (தண்ணீர் அதிகமா சேர்க்கக் கூடாது) இதில் 15 கிலோ விதைக்கடலையைப் போட்டுக் குலுக்க வேண்டும். கைகளைப் பயன்படுத்தினால், தோல் நீங்கி முளைப்புத்தறன் பாதிக்கப்படும், இரண்டு நிமிடங்கள் மட்டும் ஊறிய பிறகு, சணல் சாக்கில் உலர்த்தி விதைப்புச் செய்ய வேண்டும்.

அரை ஏக்கருக்கு ஒரு டன் எருவைப் பரப்பி, நன்கு புழுதி உழவு ஓட்டி, முக்கால் அடி இடைவெளியில் விதை ஊன்ற வேண்டும். அடுத்த 10 நாள்களில் விதை முளைக்கத் தொடங்கியிருக்கும். 20-ம் நாள் 50 லிட்டர் தண்ணீரில் தலா 1 லிட்டர் பஞ்சகவ்யா, இ.எம் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். 25 மற்றும் 45-ம் நாள்களில் 50 லிட்டர் தண்ணீரில் தலா 250 மி.லி வேப்பெண்ணெய், புங்கெண்ணெய், இலுப்பை எண்ணெயைக் கலக்க வேண்டும். இதனுடன் ஒரு நாள் முன்னதாக, அரை லிட்டர் தண்ணீரில் 100 கிராம் காதி சோப்பு கலந்து தயாராக வைத்துள்ள கரைசலை கலந்து தெளிக்க வேண்டும்(காதி சோப்பை, அப்படியே உடனே பயன்படுத்தினால், இலைகள் கருக வாய்ப்புள்ளது). 30-ம் நாள் 50 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி சூடோமோனஸ் கலந்து, வேர்கள் நனையும் அளவுக்கு நன்கு தெளிக்க வேண்டும். 40-ம் நாள் இதே அளவு கரைசலுடன் 100 மி.லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். வேர் பூச்சித்தாக்குதலைத் தடுக்க இது மிகவும் அவசியம். 45-ம் நாள் களையெடுத்து மண் அணைக்க வேண்டும். தேவைக்கு ஏற்பக் காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும். நாட்டுரகக் குத்துக்கடலை 90-100 நாளில் அறுவடைக்கு வந்துவிடும்.

காண்டாமிருக வண்டுக்கு ஆமணக்கு!

‘‘நெ
ல்லுக்கு மாசம் ஒரு தடவை 120 லிட்டர் தண்ணீர்ல 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து ஒரு ஏக்கருக்குத் தெளிக்குறேன். நடவுல இருந்து 40, 90-ம் நாள்கள்ல 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசனநீர்ல கலந்து விடுவேன். பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய், புங்கெண்ணெய், இலுப்பை எண்ணெய்க் கரைசல் பயன்படுத்துறேன். வரப்பு ஓரங்கள்ல 20 தென்னை மரங்கள் இருக்கு. மூணு வருசத்துக்கு முன்னாடி இதுல காய்ப்புச் சுமாராதான் இருந்துச்சு. அப்ப ரசாயனம்தான் கொடுத்துக்கிட்டு இருந்தேன். 6 மாசத்துக்கு ஒரு தடவை, ஒரு மரத்துக்கு 2 கிலோ வீதம் ரசாயன உரம் வைப்பேன். காண்டாமிருக வண்டு தாக்குதல்களைக் கட்டுப்படுத்த, மரத்தோட வேர் பகுதியில பூச்சிக்கொல்லி வைப்பேன். தென்னையில நிறைவான வருமானம் இல்லாமலே இருந்துச்சு.

இயற்கைக்கு மாறின பிறகு கண்கூடா மாற்றம் தெரிய ஆரம்பிச்சது. 15 நாள்களுக்கு ஒரு தடவை, ஒவ்வொரு மரத்துக்கும் 2 லிட்டர் ஜீவாமிர்தம் ஊத்திக்கிட்டு இருக்கோம். 20 மரங்கள்ல இருந்து மாசத்துக்கு 170 இளநீர் கிடைச்சிக்கிட்டு இருக்கு. இதுமூலம் மாசம் 2,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. காண்டாமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்த, ஒரு பானையில் பாதியளவு தண்ணீர் ஊற்றி, அதுல முக்கால் கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கு போட்டு, மண்ல புதைச்சி வைக்கிறேன். இது மாதிரி 4 இடங்கள்ல பானை வைப்போம். காண்டாமிருக வண்டுகள், ஆமணக்குப் பிண்ணாக்கு வாசனைக்கு ஈர்க்கப்பட்டுப் பானையில விழுந்து இறந்திடுது. வண்டுகளை மட்டும் எடுத்து அப்புறப்படுத்திடுவோம். பானையில ஆறு மாசத்துக்கு ஒரு தடவை புதுசா கரைசல் மாத்தினால் போதும்” என்கிறார் வீரமணி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism