Published:Updated:

6 ஏக்கர்... ரூ. 4,50,000... நிச்சய வருமானம் கொடுக்கும் நிலக்கடலை!

நிலக்கடலை
பிரீமியம் ஸ்டோரி
நிலக்கடலை

மகசூல்

6 ஏக்கர்... ரூ. 4,50,000... நிச்சய வருமானம் கொடுக்கும் நிலக்கடலை!

மகசூல்

Published:Updated:
நிலக்கடலை
பிரீமியம் ஸ்டோரி
நிலக்கடலை
தேனி மாவட்டம், தேவாரத்தில் ஆறு ஏக்கர் பரப்பளவில், செவ்விளநீர்த் தோட்டத்தில் ஊடுபயிராக நிலக்கடலையைப் பயிர் செய்திருக்கிறார் சாந்திகுமார்.

அவரைச் சந்திக்கத் தேவாரம் புறப்பட்டோம். மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரப் பகுதி... ஒற்றை யானையின் அச்சுறுத்தல்கள் மிகுந்த பகுதியும்கூட. காற்றாலை மின்சாரம் தயாரிக்கவே தேவாரம் மலையடிவாரத்தில் நிலம் வாங்கியிருக்கிறார் சாந்திகுமார். ஆனால், அந்தத் திட்டம் கைகூடாததால், விவசாயம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

செவ்விளநீர்த் தோட்டத்தில் ஊடுபயிராக நிலக்கடலை
செவ்விளநீர்த் தோட்டத்தில் ஊடுபயிராக நிலக்கடலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுற்றிலும் மலைகள். பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் பயிர்கள். அந்தப் பகுதியே பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. தோட்டத்திலிருந்த அவரைச் சந்தித்தோம். “நான் கர்நாடகாவில் காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் தொழில் செஞ்சுக்கிட்டு இருக்கேன். அந்தத் துறையில 17 வருஷம் அனுபவம் இருக்கு. அதே காற்றாலை மின்சாரத்தைத் தமிழ்நாட்டுலயும் தயாரிக்கணும்னு நினைச்சேன். அதுக்கு ஏற்ற மாதிரி இருந்த தேவாரம் மலையடிவாரத்துல 2010-ம் வருஷம் நிலம் வாங்கினேன். காற்றாடி அமைச்சு, மின்சாரம் தயாரிச்சாலும் அதைக் கொண்டு போக முடியாத நிலைமை. அதனால நிலம் அப்படியே இருந்துச்சு. நான் பசுமை விகடனைத் தொடர்ந்து படிப்பேன். விவசாயத்துல ரொம்ப ஆர்வம்.

நிலம் சும்மா இருக்கறது எனக்குப் பிடிக்கலை. அதுல விவசாயம் செய்யலாமானு யோசிச்சேன். இந்தப் பக்கம் தென்னை நல்லா வரும். பலரும் தென்னை மரங்கள் வெச்சிருக்காங்க. அதனால நானும் இளநீர்த் தென்னை வெக்கலாம்னு முடிவு செஞ்சேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நிலத்தைச் சீர்ப்படுத்தினேன். 28 ஏக்கர்ல செவ்விளநீர் நடவு செய்யத் திட்டமிட்டேன். முழுக்க முழுக்க இயற்கை முறையில் நடவு செய்ய நினைச்சேன். 2,000 செவ்விளநீர்த் தென்னை நாற்றுகளை வாங்கிட்டு வந்து 25 அடிக்கு 25 அடி இடைவெளியில நடவு செஞ்சேன்.

நிலக்கடலை
நிலக்கடலை

இந்தப் பக்கத்து விவசாயிங்க சிலர், ‘ஊடுபயிர் செய்யலாமே’னு யோசனை சொன்னாங்க. அதனால கொத்தமல்லி, கப்பைக் கிழங்கு, சேப்பைக் கிழங்குகளை நடவு பண்ணினேன். எல்லாமே இயற்கை வழி விவசாயம்தான். என்கிட்ட 14 மாடுகள் இருக்கு. அதனால சாணம், கோமியத்துக்குப் பிரச்னையே இல்லை. ஆனா, இயற்கை விவசாயத்துல எனக்குப் போதுமான அனுபவம் இல்லை.

ஆரம்பத்துல ஊடுபயிர்கள்ல சொல்லிக்கிற மாதிரி பெருசா லாபம் ஒண்ணும் இல்லை. இருந்தாலும் நான் விடுற மாதிரி இல்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
6 ஏக்கர்... ரூ. 4,50,000... நிச்சய வருமானம் கொடுக்கும் நிலக்கடலை!

பிறகு, நிலக்கடலை விதைக்கலாம்னு யோசிச்சேன். விதைக்கடலை வாங்கிட்டு வந்து, ஆறு ஏக்கர்ல மட்டும் இளநீர் தென்னைக்கு ஊடுபயிரா கடலையை விதைச்சேன். இந்தப் பகுதியில பெரும்பாலும் இயற்கை முறையில விவசாயம் செய்யறதில்லை. இது சரியா வராதுனு சுற்றியிருக்கும் விவசாயிங்க எச்சரிக்கை கொடுத்துகிட்டே இருந்தாங்க. பசுமை விகடன்ல படிச்ச விவசாயிகளின் கதையெல்லாம் மனசுக்குள்ள ஓடிச்சு. முயற்சி செஞ்சுதான் பார்ப்போமேனு இயற்கை முறையிலேயே சாகுபடி செஞ்சேன். அவங்க பயமுறுத்தின மாதிரி நஷ்டம் ஆகலை. அதே நேரம் லாபமும் பெருசா இல்லை. ஆனா, அதுல சில அனுபவங்களையும் நுணுக்கங்களையும் கத்துக்கிட்டேன். அந்த அனுபவங்களை வெச்சு, ரெண்டாவது தடவை கடலைச் சாகுபடி பண்ணியிருக்கேன். இதனோட வளர்ச்சி நான் நினைச்சுப் பார்க்காத அளவுக்கு அற்புதமாக இருக்கு. ஜனவரி மாசம் விதைச்சேன். ஒரு ஏக்கருக்கு 42 கிலோ விதை வீதம் ஆறு ஏக்கருக்கு 252 கிலோ விதையை விதைச்சேன். இப்ப 70 நாள்கள் ஆகுது. எப்படிக் காய்ச்சிருக்கு பாருங்க’’ என்று ஒரு கடலைச் செடியைப் பறித்துக் காட்டினார். நன்றாகக் காய்கள் பிடித்திருந்தன. தொடர்ந்து பேசியவர். “நல்லா காய் பிடிச்சிருக்கு. இது 90 நாள்ல வர்ற வளர்ச்சி. இப்பவே அது மாதிரி வளர்ந்திருக்கு. 90 முதல் 100 நாள்ல அறுவடை செய்யலாம்னு இருக்கேன்.

நிலக்கடலை 120 நாள் பயிர். ஆனா, முழுவதும் இயற்கை விவசாயத்துல சாகுபடி செய்யறதால, 20 நாளுக்கு முன்னாடியே அறுவடை செய்யுற அளவுக்கு வளர்ச்சி இருக்கு.
இதைப் பக்கத்துத் தோட்டத்துக்காரங்க ஆச்சர்யமாப் பார்க்குறாங்க” என்றவர்,
நிலக்கடலைத் தோட்டத்தில் சாந்திகுமார்
நிலக்கடலைத் தோட்டத்தில் சாந்திகுமார்

‘‘மானாவாரி நிலத்துல விதைக்குற மாதிரியே ஊடுபயிர்லயும் விதைச்சேன். ரெண்டரை அடி இடைவெளியில் தண்ணி பாயுற மாதிரி சொட்டுநீர்க் குழாயை நிலத்துல போட்டேன். விதைச்சதும் உயிர்த் தண்ணி கொடுத்தேன். அவ்வளவுதான். அதுக்குப் பிறகு, ஒரு மாசம் கழிச்சுதான் தண்ணி பாய்ச்சினேன். தொடர்ந்து, அஞ்சு நாளுக்கு ஒரு முறை தண்ணீர்விட்டேன். இந்தப் பக்கம் மலையடிவாரம்ங்கிறதால, சூழ்நிலை நல்லா இருக்கும். பொதுவா இந்தப் பக்கம் மானாவாரியிலதான் நிலக்கடலைச் சாகுபடி செய்வாங்க. இறவையில செய்யறவங்க உயிர்த் தண்ணி கொடுத்து, 40 நாள் கழிச்சுதான் அடுத்த தண்ணி பாய்ச்சுவாங்க. நான் இயற்கை முறையில சாகுபடி செய்யறதால இதுவரைக்கும் பூச்சி, நோய்த் தாக்குதல் இல்லை. ஆனா, முன்னெச்சரிக்கையா அக்னி அஸ்திரம் தயாரிச்சுவெச்சிருக்கேன். தலா அரைக்கிலோ பச்சை மிளகாய், நாட்டுப்பூண்டு, புகையிலை. அதோட தலா ரெண்டரை கிலோ வேப்பிலை, எருக்கு இலை சேர்த்து அரைப்போம். அதோடு 15 லிட்டர் கோமியத்தைக் கலந்து காய்ச்சி, சுத்தமான துணியில வடிகட்டி எடுத்துவெச்சிருக்கோம். பொதுவா, அக்னி அஸ்திரத்துல எருக்க இலை போட மாட்டாங்க. ஆனா, எருக்க இலை போட்டா பலன் நல்லா இருக்குறதை என் அனுபவத்துல கண்டிருக்கேன்’’ என்றவர், வருமானக் கணக்குப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

‘‘ஆறு ஏக்கருக்கும் சேர்த்து இதுவரைக்கும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் செலவாகிடுச்சு. இந்த தடவை காய்ப்பு நல்லா இருக்கு. ஒரு ஏக்கருக்கு 50 மூட்டை (50 கிலோ மூட்டை) கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். ஆறு ஏக்கருக்கும் சேர்த்து மொத்தம் 15,000 கிலோ கிடைக்கும். உடைக்காத கடலை ஒரு கிலோ 30 ரூபாய் விலை போகுது. அந்தக் கணக்குவெச்சா, 4,50,000 ரூபாய் கிடைக்கணும். அதுல செலவு ஒரு லட்சம் போனாலும் 3,50,000 ரூபாய் லாபமா கிடைக்கும்னு நம்புறேன்’’ என்றவர் நிறைவாக,

‘‘நான் மாடுவெச்சிருக்கேன். போன தடவை விளைஞ்ச கடலையை அரைச்சு, மாவு எடுத்துவெச்சிருக்கேன். அதனால ஜீவாமிர்தம் தயாரிக்க நாட்டுச்சர்க்கரை, ஆட்கள் கூலி தவிர பெருசா செலவு எதுவும் இல்லை. என்னோட மரபு சாரா மின்சாரத்துறையும், இப்போ கையில எடுத்திருக்கிற சுயசார்பு வேளாண்மையும் என்னை மகிழ்ச்சியாக வெச்சிருக்கு” என்றார் புன்னகையுடன்.

தொடர்புக்கு, சாந்திகுமார், செல்போன்: 94453 90314.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிலக்கடலைச் சாகுபடி!

நிலக்கடலையை இயற்கை முறையில் சாகுபடி செய்வது குறித்து சாந்திகுமார் சொன்னவை பாடமாக...

விதைப்புக்கு முன்பாக, நிலத்தை நன்றாக உழவு செய்ய வேண்டும். தொடர்ந்து ரோட்டவேட்டர் மூலம் நிலத்தை உழுது, ஏக்கருக்கு 100 கிலோ ‘கனஜீவாமிர்தம்’ இட வேண்டும். ஊடுபயிராக விதைப்பதால், மானாவாரி நிலத்தில் விதைப்பதுபோல் விதைத்தால், ஒரு ஏக்கருக்கு 42 கிலோ விதை தேவைப்படும். விதைத்தவுடன், உயிர்த் தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து பயிர் காயாதவாறு பாசனம் செய்ய வேண்டும். இரண்டாவது தண்ணீர் கொடுக்கும்போது, ஒரு ஏக்கர் நிலத்துக்கு 800 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து கொடுக்கலாம். இரண்டு முறை களை எடுக்க வேண்டும்.

50-ம் நாள், மீன் அமிலம் கொடுக்க வேண்டும். 200 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் மீன் அமிலம் என்ற கணக்கில், ஒரு ஏக்கருக்குக் கலந்து கொடுக்க வேண்டும். 75-ம் நாள் மீண்டும் ஒரு முறை அதே அளவு மீன் அமிலம் தெளிக்க வேண்டும். பூச்சி, நோய்த் தாக்குதல் இருந்தால் அக்னி அஸ்திரம் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். விளைச்சலைப் பொறுத்து 100 முதல் 120 நாளில் அறுவடை செய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism