Published:Updated:

மாம்பழம் விளைச்சல் விலை குறைவைச் சமாளிக்கலாம்... அறுவடையைத் தள்ளிப்போடலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நானோ திரவத்தின் உபயத்தில் பளபளப்பாக இருக்கும் மா
நானோ திரவத்தின் உபயத்தில் பளபளப்பாக இருக்கும் மா

தொழில்நுட்பம்

பிரீமியம் ஸ்டோரி
மாசாகுபடியைப் பொறுத்த வரை விளைச்சல் ஒரே நேரத்தில் வந்துவிடும். அதிக வரத்து இருக்கும் போது, விலை இருக்காது. ‘10 நாள் தள்ளி அறுவடை செய்திருந்தால் நல்ல விலை கிடைத்திருக்கும்’ என்று புலம்பும் விவசாயிகள் அதிகம்.

அப்படிப் பட்டவர்களுக்காகவே ஒரு மாதம்வரை தள்ளி அறுவடை செய்யும் வகையில் ஒரு தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கிறார் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் கே.எஸ்.சுப்பிரமணியன். அவரிடம் பேசினோம்.

மாம்பழம் விளைச்சல் விலை குறைவைச் சமாளிக்கலாம்... அறுவடையைத் தள்ளிப்போடலாம்!

“ஆண்டுக்குச் சராசரியாக 310 மில்லியன் டன் காய்கறிகள், பழங்கள் இந்தியாவில் உற்பத்தியாகின்றன. உலக அளவில் காய்கறிகள், பழங்கள் உற்பத்தியில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா இரண்டாம் இடத்தில் இருந்துவருகிறது. `தினமும் சராசரியாக 150 கிராம் பழங்களையும், 300 கிராம் காய்கறிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று இந்திய சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது. ஆனால், உற்பத்தி அதிகமாக இருந்தாலும், மக்களுக்குப் பற்றாக்குறையாகத்தான் இருந்துவருகிறது. இதற்கு முக்கியக் காரணம், அறுவடைக்குப் பிறகான இழப்புகள்தான். அதோடு மகசூல் இழப்புகள் குறித்தும் நிறைய ஆராய்ந்தோம்.

அதில் மாங்காய் அறுவடையின் போது ஆட்கள் பற்றாக்குறையால் மரத்தை உலுக்குவது, கீழே விழும் பழங்களைச் சேகரித்து அப்படியே லாரியில் ஏற்றிக்கொண்டு செல்வது என வழக்கமாகக் கடைப்பிடித்துவரும் முறைகளால் எட்டு சதவிகித மகசூல் இழப்பு ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்தோம். மா அறுவடையின்போது வலை போன்ற ஊக்குகளையே பயன்படுத்த அறிவுறுத்துகிறோம். ஆனால் ஆட்கள் பற்றாக்குறையால் பெரும்பான்மையோர் பின்பற்றுவதில்லை. அதேபோலக் காய்களைக் காம்போடு அறுவடை செய்ய வேண்டும். ஆனால், பெரும்பாலும் அப்படிச் செய்வதில்லை. இதனால் அறுவடை செய்யும்போது காயிலிருந்து வடியும் பால், மற்ற காய்களில் படும்போது அந்த இடம் கறுப்பாகிவிடுகிறது. இதனால் சந்தையில் இந்தக் காய்களைக் குறைந்த விலைக்கு எடுக்கிறார்கள்.

இந்த நானோ தொழில்நுட்பம் (Hexanal Formulation) ரசாயனம் இல்லை. ஆய்வுக்காகப் பயன்படுத்த விரும்பும் விவசாயிகளுக்கு இலவசமாவே கொடுக்கிறாங்க.

அதே நேரத்தில் இந்தியச் சாலைகளில் காய்கள், பழங்களைக் கொண்டு செல்லும்போது அலுங்கிக் குலுங்குவதாலும் இழப்பு ஏற்படுகிறது. இவற்றை அட்டைப்பெட்டிகள், டிரேக்களில் கொண்டு செல்ல வேண்டும். பாதுகாப்பில்லாத, முறையான குளிர்ப்பதன வசதியில்லாத சேமிப்புக் கிடங்குகளில் மா சேமிக்கப்படுகிறது. அங்கும் ஓர் இழப்பு ஏற்படுகிறது. இப்படிப் பல இழப்புகளுக்குப் பிறகே நுகர்வோர் கைகளுக்குச் சென்று சேர்கிறது. காய்கறிகள், பழங்கள் போன்ற மதிப்பு வாய்ந்த பொருள்கள் மூன்று கை மாறியே நுகர்வோரைச் சென்றடைகின்றன. இதற்காகத்தான் கனடா நாட்டு அரசின் நிதியுதவியுடன் இந்த நானோ தொழில்நுட்பம் (Hexanal Formulation), ஆறு ஆண்டுகள் மா, வாழையில் களப் பரிசோதனை செய்து பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

தனது தோட்டத்தில் நானோ திரவ பாட்டிலுடன் சாந்தகுமார்
தனது தோட்டத்தில் நானோ திரவ பாட்டிலுடன் சாந்தகுமார்

இந்தத் தொழில்நுட்பத்தில் பயோ மூலக்கூறுகள் கொண்ட நானோ திரவத்தை மாங்காய் அறுவடை செய்வதற்கு 30 நாள்களுக்கு முன்னர் தெளித்தால், அறுவடையை 21 நாள்களுக்குத் தள்ளிப்போடலாம். இதைத் தெளிக்கும்போது காய், பழமாக மாறியிருக்கக் கூடாது. அதாவது 80 சதவிகித முதிர்ச்சி அல்லது அதற்குக் குறைந்த நிலையில் காய் இருக்க வேண்டும். விலை குறைவு, கொரோனோ போன்ற காலங்களில் தாமதமாக அறுவடை செய்யலாம். ஒரு லிட்டர் நானோ ஹெக்ஸனல் ஃபார்முலேஷனை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து ஐந்து மாமரங்களுக்குத் தெளிக்க முடியும். இது ரசாயனம் அல்ல. வெள்ளரிக்காயின் வெளிப்புறத்தில் இருக்கும் ஒருவிதமான கசப்புத்தன்மையை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. அமெரிக்காவில் மாடுகள் தீவனங்களை எடுக்க ஊக்குவிக்கும் பொருளாகப் பயன்படுகிறது.

நானோ திரவத்தின் உபயத்தில் பளபளப்பாக இருக்கும் மா, வாழைப்பழங்கள்...
நானோ திரவத்தின் உபயத்தில் பளபளப்பாக இருக்கும் மா, வாழைப்பழங்கள்...

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள மா மரங்களின் மீது இதைத் தெளித்து, பரிசோதித்துப் பார்த்தோம். மாம்பழங்களில் கறுப்பு கறுப்பாகப் புள்ளிகள் உருவாகும். இதைப் ‘பறவைக்கண் நோய்’ என்பார்கள். இதை குணப்படுத்தும் ஆற்றல் நானோ ஹெக்ஸனல் ஃபார்முலேஷனுக்கு இருக்கிறது. இதேபோலப் பழ நுனிக்கருகல் நோயையும் இது குணப்படுத்துகிறது. எனவே, இது பூச்சிவிரட்டியாகவும் செயல்படுகிறது. மொத்தத்தில் இதைத் தெளிப்பதால் மரத்தில் பழங்கள் நீண்டநாள் இருக்கும். ஒரு மரத்துக்கு 10 லிட்டர் என்ற கணக்கில், 50 லிட்டரை ஐந்து மரங்களுக்குத் தெளிக்கலாம். இந்தத் தொழில்நுட்பம் விவசாயிகளுக்குக் கிடைக்க, பல்கலைக்கழகம் ஆவன செய்துவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எல்லோராலும் இந்தத் தெளிக்கும் முறையைப் பின்பற்றிவிட முடியாது. அப்படிப்பட்டவர்கள், இந்த நானோ திரவம் கலந்த தண்ணீரில் மாங்காய்களை முக்கியெடுத்து விற்பனைக்கு அனுப்பலாம். இதற்காக பேக்கிங் ஹவுஸஸ் நிறைய இருக்கின்றன. அங்கே வெந்நீர், உப்பு நீரில் பழங்களை அமுக்கி, பிறகு இந்தப் ஃபார்முலேஷன் (2 சதவிகிதம்) தண்ணீரில் கலந்து, 5 நிமிடங்கள் மூழ்கச் செய்து எடுத்தால் இரண்டிலிருந்து மூன்று வாரங்களுக்குத் தாங்கும். பழங்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதியாகும் பங்கனப்பள்ளி, அல்போன்சா, இமாம்பசந்த் போன்ற ரகங்களில் சோதனை மேற்கொண்டோம். நல்ல முடிவுகள் வந்துள்ளன. முக்கி எடுக்கும் தொழில்நுட்பத்தில் இதைச் செய்வதற்கு ஒரு கிலோவுக்கு 50 பைசாதான் செலவாகும்.

மாம்பழம் விளைச்சல் விலை குறைவைச் சமாளிக்கலாம்... அறுவடையைத் தள்ளிப்போடலாம்!

மாங்காய்களைக் கூடை, அட்டைப் பெட்டிகளில் கொண்டு செல்வதற்கு, ஸ்டிக்கர், லாரிகளில் கொண்டு செல்வதற்கு பெல்லட்ஸ் எனப் பல வடிவங்களில் இது கிடைக்கிறது. விவசாயிகள், வியாபாரிகள் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு வாங்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதேபோல கன்டெய்னர் லாரிகள், ஏற்றுமதி எனப் பெரிய அளவில் செய்பவர்களுக்கும் வழிகாட்டுகிறோம்.

இந்த நானோ திரவ பாட்டில், ஸ்டிக்கர், பெல்லட்ஸ் தேவைப்படுவோர் கோயம்புத்தூரிலுள்ள வேளாண் பல்கலைக் கழகத்தின் நானோ தொழில்நுட்பத் துறையை அணுகலாம். தற்போதைக்கு மாங்காய், வாழையில் மட்டுமே பரிசோதனை செய்திருக்கிறோம். இதோடு எலுமிச்சை, கொய்யா, காய்கறிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன” என்றார்.

தொடர்புக்கு, முனைவர் கே.எஸ்.சுப்பிரமணியன், செல்போன்: 98940 65449

நானோ ஸ்டிக்கர் தொழில்நுட்பம்!

நானோ ஸ்டிக்கர்
நானோ ஸ்டிக்கர்

“இந்த நானோ திரவம் விரைவில் ஆவியாகிவிடும். எனவே, அதை ஒரு நானோ தொழில்நுட்பம் மூலம் சிறிய அளவிலும் கொடுக்கிறோம். அதைச் சிறிய அளவில் பஞ்சுமிட்டாய் தயாரிப்பதைப்போலத் தயாரிக்கும்போது அதில் நாரிழைகள் வரும். அந்த நாரிழைகளில் இந்த எக்ஸ்டெர்னல் கலந்துவிடுவோம். அதைச் சிறிய ஸ்டிக்கர் வடிவத்தில் 5 சதுர செ.மீ அளவில் இருக்கும்படி உருவாக்கிவிடுவோம். வெளிநாடுகளுக்கோ, வெளிமாநிலங்களுக்கோ காய்களை அனுப்பும்போது ஒரு கிலோவுக்கு ஆறு முதல் ஒன்பது காய்கள் என்ற எண்ணிக்கையில்தான் இருக்கும். அதைக் கூடையிலோ, பெட்டியிலோ அடுக்கி அதன்மீது ஸ்டிக்கரை ஒட்டிவிட்டால் போதும். பழங்கள் எளிதில் கெடாது, பார்ப்பதற்குப் பளபளப்பாகவும் இருக்கும். இதை ஏழு மாவட்டங்களில் பரிசோதனை செய்திருக்கிறோம். தற்போதைக்கு வாழைப்பழத்தில்தான் பரிசோதனை முடிந்திருக்கிறது. மாங்காயில் இந்தப் பருவத்தில் செய்யவிருக்கிறோம். இந்த ஸ்டிக்கரின் விலை 2 ரூபாய்தான். இதை வாங்க நானோ தொழில்நுட்ப துறையை அணுகலாம்” என்றார் சுப்பிரமணியன்.

தள்ளி அறுவடை செய்தால் லாபம் அதிகரிக்கும்!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த சந்தூரைச் சேர்ந்த மா விவசாயி சாந்தகுமாரிடம் பேசினோம். “35 ஏக்கர்ல மா விவசாயம் செஞ்சுக்கிட்டு வர்றோம். பெங்களூரா, நீலம்னு பல ரகங்கள் இருக்கு. இந்த நானோ திரவத்தைப் பல தோட்டங்கள்ல பரிசோதனை பண்ணினாங்க. அந்த வகையில 2016-ம் வருஷம் என் தோட்டத்துல பரிசோதனை செஞ்சாங்க. நல்ல ரிசல்ட் கிடைச்சுது. பிறகு அடுத்த வருஷமும் பண்ணினாங்க. 2018-ம் வருஷம் மாங்காய் விளைச்சல் இருந்தது. ஆனா, விலை குறையுற மாதிரி இருந்தது.

பல்கலைக்கழகத்துக்குப் போய், ஒரு லிட்டர் 400 ரூபாய் விலையில பாட்டிலை வாங்கிட்டு வந்து, ஒரு லிட்டர் தண்ணிக்கு 20 மி.லி (2 சதவிகிதம்) என்ற கணக்குல கலந்து பெங்களூரா, நீலம் ரகங்கள்ல தெளிச்சேன். மரத்தோட வயசைப் பொறுத்து ஒரு மரத்துக்கு எப்படியும் 10-15 லிட்டர் தெளிக்கிற மாதிரி இருக்கும். ஒரு மரத்துக்கு சராசரியாக 80 ரூபாய் செலவாகிடும். அதேமாதிரி `21 நாள்கள் தாங்கும்’னு விஞ்ஞானிகள் சொல்றாங்க. நான் ஒரு மாசத்துக்குக் கணக்குப் போட்டு, மாசத்துக்கு ரெண்டு முறை தெளிச்சு விட்டுடுவேன். அதைத் தெளிச்ச வருஷம் மத்தவங்க மாம்பழம் டன் 15,000 ரூபாய்க்கு வித்தபோது, நான் 18,000 ரூபாய்க்கு வித்திருக்கேன். அந்த வருஷம் 400 டன் `மா’வைக் கூடுதல் விலைக்கு வித்தது மூலமா 1,20,000 ரூபாய் கிடைச்சுது. இதுல 20,000 ரூபாய் நானோ திரவம், தெளிப்புக் கூலி போக 1 லட்சம் ரூபாய் லாபமாக நின்னுது. இந்த ஹெக்சனல் ஃபார்முலேஷன் பாட்டிலை ஆய்வுக்காகப் பயன்படுத்த விரும்பும் விவசாயிகளுக்கு நானோ தொழில்நுட்பத்துறையில இலவசமாவே கொடுக்கிறாங்க” என்றார் உற்சாகமாக.

தொடர்புக்கு, சாந்தகுமார், செல்போன்: 99407 31212.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு