Published:Updated:

வீட்டிலேயே விளைவிக்கலாம் முள்ளங்கி, புதினா... வாங்க கத்துக்கலாம்! - வீட்டுக்குள் விவசாயம் - 5

வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் வாயிலாக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விவசாயி உருவாக வழிகாட்டும் தொடர்...! #VeetukkulVivasayam #DIYTerraceGarden - பாகம் 5

கடந்த முறை கட்டுரையைப் படிச்சுட்டு வாசகர் ஹரிஹரன் ஒரு ஆலோசனை கேட்டிருந்தார்.

`என் செடிகளில் எறும்புத் தாக்குதல் அதிகமா இருக்கு... பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் கரைசல் போட்டும் பயனில்லை... வேறு வழி சொல்லவும்' இதுதான் அவர் கேட்ட ஆலோசனை.

எறும்புகளுக்கு ஒரு குணம் இருக்கு. ஒரு வட்டம் இருந்தா அதை விட்டு வெளியே வராது. அதுனால செடிக்கு வெளியே தொட்டியைச் சுத்தி எறும்பு சாக்பீஸ்ல வட்டம் போட்டு வைக்கலாம். தொட்டிக்கு உள்ளே மஞ்சள் தூள், மிளகாய் பொடி கலந்து தூவி விடணும். மரமா இருந்தா தண்டு பகுதியில கொஞ்சம் கிரீஸ் தடவி வைக்கணும். இவற்றையெல்லாம் செஞ்சா போதும். எறும்பு பிரச்னையைச் சமாளிக்கலாம்.

சரிங்க ப்ரோ. இப்ப நாம விஷயத்துக்குள்ள போகலாம். கொத்தமல்லி சாகுபடி செய்யுறதைப் பற்றிப் போன தடவை பார்த்தோம். இந்தத் தடவை புதினா, முள்ளங்கி சாகுபடி செய்றதைப் பற்றித் தெரிஞ்சுக்கலாம்.

புதினா, பாலக்கீரைனு சில கீரைகளை வளர்க்குறது எப்படினு முதல்ல பார்க்கலாம். வீட்டுத்தோட்டம் அமைக்குறவங்களுக்கு ஆர்வம் கொடுக்குறதுல புதினா முக்கியமான பயிர். இதை வளர்க்குறது ரொம்ப சுலபம். வீட்டுத்தோட்டம் அமைக்க இடமில்லைன்னு சொல்றவங்ககூட புதினா வளர்க்கலாம். வீட்டு ஜன்னல்ல வெச்சுக்கூட இதை வளர்க்கலாம். இன்னிக்கு புதினா பயன்படுத்தாத வீடுகளே இல்லை. சமையலுக்காகக் கடைகள்ல வாங்கிட்டு வர்ற புதினாவுல இலையை எடுத்துகிட்டு, தண்டைத் தூக்கிப் போடுறோம். ஆனா, அந்தத் தண்டைத் தூக்கிப் போடாம வெச்சிக்கிட்டா போதும். அதுக்குப் பிறகு, கடையில புதினா வாங்கவே மாட்டீங்க. அது எப்படின்னு பார்க்கலாம்.

Mint
Mint
Photo by Maria Petersson on Unsplash
இதோ... இவ்வளவுதான் மாடித்தோட்டம்... முதல்ல கொத்தமல்லி சாகுபடி செய்வோமா? - வீட்டுக்குள் விவசாயம் - 4

புதினா வளர்க்க நினைக்குறவங்க, புதினாவுல நல்ல திரட்சியான தண்டுகளை எடுத்துக்கணும். அதுல மேல ரெண்டு இலையை மட்டும் வெச்சுகிட்டு மத்த இலைகளை உருவிடணும். ஒவ்வொரு தண்டுலயும் ரெண்டு, மூணு கணு இருக்க மாதிரி (இலை உருவாகும் இடம்) கொஞ்சம் நீளமா தண்டு இருக்கணும். அப்படிப்பட்ட தண்டுகளை எடுத்துகிட்டு, அதை நடவு பண்ணலாம். ரொம்ப பேர், தண்டுகளை அப்படியே நடவு பண்ணிடுறாங்க. அப்படி செய்யும்போது நாம எதிர்பார்த்த வளர்ச்சி இருக்காது. அதுக்கு பதிலா தண்டுல வேர் உருவாக்கி நடவு செய்யும்போது செடி தளதளனு நல்லா வளரும். இலைகளும் அகலமா இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேரை எப்படி உருவாக்குவது?

தரமான தடிமனான குறைந்தபட்சம் ரெண்டு கணு இருக்க தண்டை எடுத்துக்கணும். அதுல எல்லா இலைகளையும் எடுத்திடக் கூடாது. மேல ரெண்டு இலைகள் இருக்கலாம். ஒரு கண்ணாடி டம்ளர் எடுத்துக்கணும். அதுல தண்டு முழுக்க மூழ்கிடக் கூடாது. அதுனால சின்ன டம்ளரா இருகணும். இப்ப டம்ளர்ல பாதி அளவுக்குத் தண்ணி ஊத்திக்கணும். அதுல நம்ம தயாரா வெச்சிருக்க தண்டுகளை உள்ளே வைக்கணும். ரெண்டு நாளைக்கு ஒருதடவை தண்ணியை மட்டும் மாத்தணும். இதை வெயில்ல வெச்சிடக் கூடாது. நிழலான இடத்துல வைக்கணும். 5-வது நாள், தண்டுல வேர் உருவாகியிருக்கும். மேலே இருந்த இரண்டு இலைகளோட இன்னும் சில புது இலைகள் உருவாகியிருக்கும். இப்ப, வேர்கள் உருவான தண்டுகளை எடுத்து நடவு செய்யணும்.

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்

புதினா நல்லா படர்ந்து வளரும். மண்ணுல தண்டு பட்டு அதுலயும் வேர் உருவாகும். அதுனால குறுகலான தொட்டி, குரோபேக்ல இதை வளர்க்கக் கூடாது. அகலமான தொட்டி, குரோபேக்லதான் புதினாவை நடவு செய்யணும். நடவு செய்யுற ஊடகத்துல மண்கலவை (30% தேங்காய் நார் கழிவு, 30% சாண எரு அல்லது மண்புழு உரம், 40% செம்மண்) போடணும். அதுல, விரலை வெச்சி, குழியெடுத்து, அதுல தண்டோட வேர் முழுசா உள்ளே போற மாதிரி நடவு பண்ணி, குழியை மூடித் தண்ணி தெளிக்கணும். நேரடியா வெயில் படுறமாதிரி வைக்கக் கூடாது. அதே நேரம் சூரிய ஒளியும் தேவை. அதுக்கு ஏற்ற மாதிரி வைக்கணும். 10 நாள் கழிச்சு பார்த்தா புதினா புசுபுசுனு வளர்ந்து நிக்கும். செடி நல்லா வளரும்போது கவாத்து முக்கியம். மேலே மூன்று அடுக்கு இலைகளை மட்டும் கவாத்து பண்ணிக்கணும். அப்பதான் எல்லா இலைகளுக்கும் சூரிய ஒளி கிடைக்கும். அப்ப அப்பக் கவாத்து பண்ணி விட்டாதான் செடி செழிப்பா வளரும். இம்புட்டுதாங்க புதினா சாகுபடி. இன்னிக்கே இதை முயற்சி செஞ்சிப் பார்த்தா, 15 நாள்ல நீங்களும் புதினாவை வீட்டில் வளர்த்திடலாம்.

புதினா மாதிரியே இன்னொரு `பூஸ்ட் அப் கிராப்' முள்ளங்கி. இதையும் சுலபமா சாகுபடி செய்யலாம். இதுக்கும் அகலமான ஊடகம் வேணும். அதை மண்கலவை மூலமா நிரப்பி, முள்ளங்கியை நடவு செய்யலாம். முள்ளங்கி மண்ணுக்குள்ள விளையுற பயிர்ங்கிறதால, மண்கலவையோட ஒரு கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு கலந்துக்கணும். விதைகளை ரொம்ப ஆழத்துல நடவு செய்யக் கூடாது. அரை இன்ச் ஆழத்துல நடவு செஞ்சா போதும். நடவு பண்ணுன பிறகு, தண்ணியைத் தெளிக்கணும். 4 - 7 நாள்ல விதை முளைச்சு, ரெண்டு இலை விட்டுடும். இதுல பூச்சி, நோய்த் தாக்குதல் பெருசா இருக்காது.

Radish
Radish
Photo: Vikatan / Saravanakumar.P

45 நாள்ல அறுவடை செஞ்சிடலாம். முள்ளங்கி மண்ணை விட்டுக் கொஞ்சம் வெளிய தெரியத்தான் செய்யும். அதைப் பலரும் மண்ணைப் போட்டு மூடுறாங்க. அது தேவையில்லை. அதே போல முள்ளங்கி சில இடங்கள்ல வளராம போயிடும். அதுக்குக் காரணம் மண்கலவைதான். அது சரியா இருந்தா நல்லபடியா வளரும். முள்ளங்கி பருமனாகாம சின்னதா குச்சி மாதிரியே இருக்குன்னு சிலபேர் கவலைப்படுவாங்க. அதுக்காக உழைப்பை வீணாக்கக் கூடாது. முள்ளங்கி கீரையை சமையலுக்குப் பயன்படுத்திக்கலாம்.

இந்தத் தடவை ரெண்டு பயிர்களை வளர்க்குறதுக்கான டிப்ஸ் பார்த்திருக்கோம். இப்ப கொஞ்சம் பொதுவான விஷயங்கள் பற்றிப் பேசலாமா?

மாடித்தோட்டம் அமைக்குற ஆர்வம் இன்னிக்கு அதிகமாகிட்டு இருக்கு. ரொம்ப பேர் ஆர்வமா தொடங்குறாங்க. ஆனா, கொஞ்ச நாள்லயே விட்டுட்டுப் போயிடுறாங்க. அதுக்குக் காரணம் எடுத்தவுடனே காய்கறிகளைச் சாகுபடி பண்ணுறதுதான். குறிப்பா, கத்திரிக்காய் செடியில பூச்சி, நோய்த் தாக்குதல் அதிகமா இருக்கும். ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லயே செடிகள் சுருங்கி, இலைகள் மடங்கி இருக்குறதைப் பார்க்கும்போது மனசுக்குள்ள சோர்வு வந்திடும். அதுனால, ஆரம்பத்துல கீரைகள், முள்ளங்கி, கொத்தவரை சாகுபடி செஞ்சி பார்த்துட்டு பிறகு, கொஞ்சம் கொஞ்சமா காய்கறி சாகுபடிக்குள்ள போகணும். கீரைகள்லயும் சில கீரைகளை ஒரு தடவை நடவு செஞ்சா போதும். பிறகு, தொடர்ந்து அறுவடை செய்யலாம். உதாரணமா பாலக்கீரை, அரைக்கீரை இவையெல்லாம் ஒரு நடவு, தொடர் அறுவடைக் கீரைகள்.

அரிசி கழுவுற தண்ணியில இருக்கு அத்தனை சத்து..! - வீட்டுக்குள் விவசாயம் - 3

மாடித்தோட்டத்தை எல்லோராலும் ஆரம்பிக்க முடியும். ஆனால், ஆர்வம் மட்டும் போதாது. உழைக்கத் தயாராக இருக்கணும். முக்கியமா ரொம்ப பொறுமை தேவை. இவையெல்லாம் இருந்தா நீங்களும் விவசாயிதான்.

சின்னதா ஆரம்பிச்சு, இன்னிக்கு பெரிய அளவுல மாடித்தோட்டம் அமைச்சு, சிறப்பா காய்கறிகளைச் சாகுபடி செய்ற விவசாயிகளோட அனுபவங்களை வெள்ளிக்கிழமை வெளியாகும் அடுத்த பகுதியில பார்ப்போம்.

தொடர்ந்து இணைந்திருங்க...

`வீட்டுக்குள் விவசாயம்' தொடர்பான உங்க கேள்விகள் / சந்தேகங்களைக் கமென்ட்ல கேளுங்க!

- வளரும்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு