Published:Updated:

மாடித்தோட்ட சாகுபடியில ரொம்ப சுலபமான பயிர் கீரைதான்... ஏன் தெரியுமா? - வீட்டுக்குள் விவசாயம் - 8

வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் வாயிலாக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விவசாயி உருவாக வழிகாட்டும் தொடர்..! #VeetukkulVivasayam #DIYTerraceGarden - பாகம் - 8

கடந்த பகுதியில மாடித்தோட்டத்தில் பூச்சி மேலாண்மை தொடர்பா பேசியிருந்தோம். பல நண்பர்களுக்கு அது உதவியாக இருக்குன்னு சொன்னாங்க. மகிழ்ச்சி. `காய்கறி பயிர்கள்ல வெள்ளைப் பூச்சி (மாவுப்பூச்சி) தாக்குதல் அதிகமா இருக்கு. அதை எப்படித் தடுக்கிறது?'னு சிலர் கேட்டிருந்தாங்க.

மாவுப்பூச்சி
மாவுப்பூச்சி
மாடித்தோட்டத்துல பூச்சித் தொல்லையா... நீங்க செய்ய வேண்டியது இதுதான்! - வீட்டுக்குள் விவசாயம் - 7

வீட்டுத்தோட்டத்தைப் பொறுத்தவரைக்கும் மாவுப்பூச்சி பெரிய பிரச்னைதான். அதுக்கு பயந்துகிட்டே பலபேர் வீட்டுத்தோட்ட விவசாயத்தை விட்டு விலகிட்டாங்க. மழைக்காலத்துல இதோட தொல்லை அதிகம் இருக்காது. வெயில் காலத்துலதான் அதிகமா இருக்கும். ஏற்கெனவே சொன்ன மாதிரி முதல்ல இருந்தே வேப்பெண்ணெய் தெளிச்சுட்டு இருந்தா இந்தப் பிரச்னை இருக்காது. `ஆனா, அதை ஆரம்பத்துல செய்யாம விட்டுட்டோம். இப்ப மாவுப்பூச்சி அதிகமா இருக்கு'ன்னு சொல்றவங்களுக்கும் ஒரு வழி இருக்குது. பொதுவா, மாவுப்பூச்சி ஆரம்ப கட்டத்துல ஒண்ணு ரெண்டு இருந்தா, தண்ணியை வேகமா ஸ்பிரே செஞ்சாலே சரியாகிடும். ஆனா, தாக்குதல் அதிகமா இருந்தா, ஒரு பக்கெட்ல நிறைய தண்ணி (10 லி) எடுத்துக்குங்க. அதுல ரெண்டு ஷாம்பு பாக்கெட்ல இருக்க ஷாம்பை ஊத்தி கரைக்கணும். அந்தக் கரைசலை ஸ்பிரேயர்ல ஊத்தி, மாவுப்பூச்சி இருக்குற இடங்கள்ல தெளிக்கணும். இப்படிச் செஞ்சாவே மாவுப்பூச்சி கன்ட்ரோல் ஆகிடும். இது அவசர சிகிச்சை மட்டும்தான். வேப்பெண்ணெய் கரைசல்தான் நிரந்தரத் தீர்வு. 15 நாளைக்கு ஒருதடவை வேப்பெண்ணெய் கரைசல் தெளிக்குற தோட்டத்துல மாவுப்பூச்சி தாக்குதல் பெரும்பாலும் இருக்காதுங்கிறதைக் கவனத்துல வெச்சுக்கங்க.

சரிங்க ப்ரோ. இப்ப நாம விஷயத்துக்குள்ள போகலாம். வீட்டுத்தோட்டத்துல கீரை சாகுபடி செய்றதைப் பற்றி இந்தப் பகுதியில சில விஷயங்களைப் பகிர்ந்துக்கப்போறேன். மாடித்தோட்ட விவசாயத்துல ரொம்ப சுலபமா சாகுபடி செய்ற பயிர் கீரைகள்தான். தோட்டம் போட இடமே இல்லைன்னு சொல்றவங்க, பழைய சிமென்ட் சாக்கு ஒண்ணை எடுத்து, அதுல பாதியளவுக்குத் தென்னைநார் கழிவு உரத்துல நிரப்பணும். அதுல 10 கிராம் கீரை விதைகளைத் தூவி விட்டா, அடுத்த 20-வது நாள்ல கீரையை அறுவடை செய்யலாம். அத்தனை சுலபமானது கீரை விவசாயம்.

யோகநாதன்
யோகநாதன்

இதை வயலில் சாகுபடி செய்யும்போது கொஞ்சம் வேலை வைக்கும். ஆனா, வீட்டுத்தோட்டத்தில சாகுபடி எந்தச் சிரமமும் வைக்காது. பொதுவா ஒரு பயிர்ல 15 நாளைக்கு மேலதான் பூச்சித்தாக்குதல் தொடங்கும். கீரையைப் பொறுத்தவரைக்கும் பூச்சித் தாக்குதல் ஆரம்பிக்குற நேரத்தில அறுவடையையே முடிஞ்சிடும். அதனால நிறைய மெனக்கெடத் தேவையில்லை.

வீட்டுத்தோட்டத்துல கீரை சாகுபடி செய்றது பற்றித் திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த `விதைகள்' யோகநாதன் சில தகவல்களைச் சொல்லுறாரு.

``கீரை சாகுபடியில் மாடியில வளர்க்கிற கீரை, கீழே தரையில வளர்க்கிற கீரைனு ரெண்டு வகை இருக்கு.

அரைக்கீரை,

சிறுகீரை,

பாலக்கீரை,

சிவப்பு தண்டுக்கீரை,

பச்சைத் தண்டுக்கீரை,

பருப்புக் கீரை,

காசினிக்கீரை,

வெந்தயக்கீரை,

கொத்தமல்லி மாதிரியான கீரைகளை மாடியில சாகுபடி செய்யலாம்.

அகத்தி,

புளிச்சக்கீரை இது ரெண்டையும் கீழே தரைப்பகுதியில் சாகுபடி பண்ணலாம்.

புளிச்சக் கீரையிலேயே பச்சை புளிச்சக்கீரை, சிவப்பு புளிச்சகீரைனு இரண்டு இருக்குது. முருங்கைக்கீரையை மாடியிலும் வளர்க்கலாம். தரைப் பகுதியிலயும் வளர்க்கலாம். மாடியில வளர்க்கும்போது செடி முருங்கை வகையை மட்டும்தான் வளர்க்கணும். அங்க, மரம் முருங்கையை வளர்க்கக் கூடாது. பலபேர் மரம் முருங்கையை மாடி மேல வளர்க்கிறாங்க. கம்பளிப்பூச்சி தொந்தரவு மர முருங்கையில் அதிகமா இருக்கும். அது மற்ற பயிர்களையும் பாதிக்கும். அதனால மரம் முருங்கையை தரைப்பகுதியில் நடவு செய்றது ரொம்ப நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தவசிக் கீரையை மாடியில, தரையில எல்லா இடத்திலயும் வளர்க்கலாம். எல்லா சத்துகளும் இந்த ஒரு கீரையில இருக்குது. நாம மேலே சொன்ன எல்லா கீரைகளும் ஒரு வீட்டுல இருந்தா ஆஸ்பத்திரி செலவு பாதி குறைஞ்சுப் போயிடும். அந்த அளவுக்கு இந்தக் கீரைகளால் ஆரோக்கியம் மேம்படும். கீரைகள்லதான் எல்லா சத்துகளும் இருக்குனு சித்த மருத்துவம், ஆங்கில மருத்துவம்னு எல்லா மருத்துவமும் சொல்லுது. அதனால வீட்டு தோட்டத்துல காய்கறிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அந்த அளவுக்குக் கீரைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கணும்.

அகத்தி கீரை
அகத்தி கீரை
Photo: Vikatan / Sakthi Arunagiri.V
மாடித்தோட்டத்துல இந்த தப்பெல்லாம் நீங்களும் பண்றீங்களா?! - வீட்டுக்குள் விவசாயம் - 6

நிலத்துல கீரை விவசாயம் செய்யும்போது, தண்டுக்கீரையை அப்படியே வேரோட பிடுங்கி விற்பனை செய்வாங்க. ஆனா, வீட்டுத் தோட்டத்துல வேரோட பறிக்கத் தேவையில்லை. கீழே இருந்து நாலு இலையை விட்டுட்டு மத்த இலைகளை அப்படியே கட் பண்ணிக்கலாம். அங்க மறுபடியும் தழையும். அது மாதிரி பாலக்கீரை கிள்ளக் கிள்ள தொடர்ந்து வந்துகிட்டே இருக்கும். அடுத்தது வரும்போது கிளைகள் அதிகமாகி புதர் மாதிரி ஆகிடும். இந்தக் கீரை மாதிரி ஒரு அருமையான கீரையைப் பார்க்க முடியாது. இதுல பொரியல் வெச்சுக்கலாம். பஜ்ஜி போட்டும் சாப்பிடலாம். அதேபோல அரைக்கீரை, சிறுகீரை ரெண்டையும் அறுக்க அறுக்க வந்துகிட்டே இருக்கும். மணத்தக்காளிக் கீரையை வளர்க்குறப்போ மட்டும் கொஞ்சம் கவனமா இருக்கணும். அது நல்லா அடர்த்தியா வளரும் அதனால ஒரு பெரிய பையில ஒரு செடி வைச்சாலே போதும். ஒரு குடும்பத்துக்குத் தேவையான கீரைகளை அது கொடுக்கும். தொட்டிக்கு 2, 3 செடிகளா வெச்சா எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் கிடைக்காது.

கீரைகளைப் பொறுத்தவரைக்கும் தினமும் ஒரு கீரையைத் தனித்தனியா சமையல் பண்ணணும்னு இல்லை. நாலஞ்சு கீரைகளை ஒண்ணாப் போட்டுக்கூட சமையல் பண்ணலாம். ஆனால், அகத்திக்கீரை புளிச்சக்கீரை இது ரெண்டையும் மற்ற கீரைகளோடச் சேர்த்துச் சமைக்க முடியாது. இது ரெண்டையும் தனித்தனியாகத்தான் சமைக்கணும்.

விதைச்சதுல இருந்து 15 நாள் முதல் 30 நாளுக்குள்ள கீரைகள் அறுவடைக்கு வந்துடும். இந்த இடத்துல ஒரு விஷயத்தைக் கவனிக்கணும். காய்கறி பயிர்களுக்கு 15 நாளைக்கு ஒருதடவை வேப்பெண்ணெய் கரைசலைத் தெளிக்கணும்னு ஏற்கெனவே பார்த்தோம். ஆனா, கீரைகள்ல வேப்ப எண்ணெய் கரைசலை தெளிக்கக் கூடாது. அதை மொதநாள் தெளிச்சுட்டு அடுத்த ரெண்டு நாள்ல கீரையை அறுவடை செய்றாங்க. அப்படி செய்யும்போது கசப்பு சுவை கீரையில இருக்கும். அதனால மத்தப் பயிர்களுக்கு வேப்பெண்ணெய் கரைசல் பயன்படுத்துங்க.

கீரை
கீரை
Photo: Vikatan / Badhri Narayanan.S

கீரைகளுக்கு மட்டும் வேப்பம் கொட்டையை அரைச்சு, காடாத் துணியில கட்டி ஒரு நாள் முழுக்க தண்ணியில ஊற வைச்சு, அடுத்த நாள் காலையில அந்தக் கரைசலைத் தெளிக்கலாம். அதுக்கு வாய்ப்பு இல்லாதவங்க, வேப்பம் பிண்ணாக்கு வாங்கி அதைத் தண்ணியில கரைச்சு அந்தக் கரைசலைத் தெளிக்கலாம். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் பிண்ணாக்குப் போட்டா போதும். அது நல்லா கரைஞ்ச பிறகு, அதிலிருந்து கரைசல் எடுத்து 10 மடங்கு தண்ணியில கலந்து தெளிக்கணும். அதைச் செஞ்சா போதும். பூச்சி, நோய் பற்றிப் பயப்பட வேண்டியதே இல்லை. கடையில போய் அதை வாங்கிட்டு வர முடியாதுனு நினைக்குறவங்க, வீட்ல இருக்கிற பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் அரைச்சு அந்தக் கரைசலைத் தெளிக்கலாம். தலா 10 கிராம் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, 2 கிராம் மஞ்சள்தூள் எடுத்துக்கங்க. அதை நல்லா அரைச்சு, 5 லிட்டர் தண்ணியில கலந்து தெளிக்கலாம். இது ரொம்ப சுலபமான வழி.

கீரைகளை விதைக்கும்போது ரொம்பக் கவனமா இருக்கணும். காய்கறி மாதிரி விதைக்கக் கூடாது. கீரை விதைகள் ரொம்ப ரொம்ப சின்னது. எள் முனையளவுதான் இருக்கும். அதுனால அதை நேரடியா விதைக்கக் கூடாது. அப்படி விதைச்சா தண்ணி ஊற்றும்போது ஏதாவது ஒரு ஓரமா போய்த் தேங்கிடும். அதனால கீரைகளை விதைக்குறப்போ கொஞ்சம் மணலோடு சேர்த்து கலந்து விதைக்கணும். அதை விதைச்ச பிறகே பூவாளி மூலமா தண்ணி ஊத்தணும். வேற ஒண்ணும் தேவையேயில்ல. விதைப்பு, பாசனம், அறுவடை இது மூணும்தான் கீரை சாகுபடியில செய்ய வேண்டியது.

கீரை
கீரை
Photo: Vikatan / Devarajan
மாடித்தோட்டத்துல இந்த தப்பெல்லாம் நீங்களும் பண்றீங்களா?! - வீட்டுக்குள் விவசாயம் - 6

இப்ப கீரையை விளைய வைக்குறதுக்காகவே குரோபேக் விற்பனை செய்றாங்க. சிலபேர் காம்பவுண்டு சுவர்லகூட குரோபேக் வெச்சு, கீரை விளைய வைக்குறாங்க. ஆக, கீரை சாகுபடி செய்ய இடம் ஒரு பிரச்னையே இல்லை. மனசும் ஆர்வமும்தான் முக்கியம். விதை வாங்க ரொம்ப அலையத்தேவையில்லை. வெறும் 10 ரூபாய்க்கு விதைகள் கிடைக்குது. நாங்க 80-க்கும் மேற்பட்ட நாட்டு விதைகள் வெச்சிருக்கோம். கேக்குறவங்களுக்கு கூரியர்ல அனுப்பி வெக்கிறோம்'' என்றார்.

இவரிடம் பேச நினைக்குறவங்க 94428 16863 இந்த நம்பர்ல கூப்பிட்டுப் பேசலாம்.

வீட்டுத்தோட்ட விவசாயத்துல இருக்குற நுட்பங்கள் இன்னும் ரொம்ப இருக்கு... தொடர்ந்து பார்ப்போம். அடுத்து திங்கள் கிழமை சந்திப்போம். இந்த தொடர் குறித்த உங்கள் கருத்துகள் / கேள்விகளை கமென்ட் பகுதிகளை கேளுங்க!

- வளரும்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு