
விவசாயி ராஜ்மோகன் சாகுபடி செய்திருக்கும் பூனா ரக அத்தி, பறிக்கப்பட்ட பழங்களாக விற்பனை செய்வதற்கு ஏற்றது. இது மற்ற ரகங்களைவிடச் சற்றுப் பெரியதாக இருப்பதாலும், பழங்கள் பார்ப்பதற்கு மினுமினுப்புடன் இருப்பதாலும் வணிக ரீதியாக விற்பனைக்கு ஏற்றது
50 சென்ட் பரப்பளவில் இயற்கை முறையில் அத்திச் சாகுபடி செய்தது குறித்து ராஜ்மோகன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...
``அத்திச்செடிகள் நடவு செய்ய எல்லா வகை மண்ணும் ஏற்றது. இதற்குப் பட்டம் ஏதும் கிடையாது. மழைக்காலத்துக்கு முன்பாக நடவு செய்வது நல்லது. தேர்வு செய்த நிலத்தில் ஒரு வார இடைவெளியில் இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். பிறகு, வரிசைக்கு வரிசை 12 அடி மற்றும் செடிக்குச்செடி 10 அடி இடைவெளியில், ஒரு அடிச் சுற்றளவில் இரண்டடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். 10 நாள்கள்வரை குழிகளை ஆறவிட வேண்டும். ஒவ்வொரு குழியிலும் 5 கிலோ தொழுவுரம், 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 50 கிராம் சூடோமோனஸ் கலந்து அடியுரமாக வைக்க வேண்டும்.
45 முதல் 50 நாள்கள் ஆன கன்றுகள் நடவுக்கு ஏற்றது. நடவு செய்த 10-ம் நாளிலிருந்து, 15 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும். அதே நேரத்தில் வாரம் ஒருமுறை 200 லிட்டருக்கு 6 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து சொட்டுநீர்க் குழாய் மூலம் விட வேண்டும்.

குளிர்காலத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் ஏற்படும். அந்த நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஞ்சி, பூண்டு-மிளகாய்க் கரைசல் மற்றும் மூலிகைப் பூச்சிவிரட்டியை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி என்ற கணக்கில் கலந்து சுழற்சி முறையில் கைத்தெளிப்பானால் வாரம் ஒருமுறை தெளித்து வர வேண்டும்.
இலைத்துரு நோய் தென்பட்டால் இலைகளை உதிர்த்துவிட வேண்டும். இல்லாவிட்டால், கிளைகள் முழுவதும் பரவும். அந்தத் துரு, மழைக்காலத்தில் காய்களிலும் பரவிப் புள்ளிகளை ஏற்படுத்தும். இதனால் பழங்கள் விலை போகாது. துருநோயைக் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் களை எடுக்கலாம். 6 மாதத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு கன்றின் தூரிலும் 10 கிலோ தொழுவுரத்துடன் 50 கிராம் பாஸ்போ பாக்டீரியா, 150 கிராம் மண்புழுவுரம், 25 கிராம் வேப்பம்பிண்ணாக்கு கலந்து அடியுரமாக வைக்க வேண்டும்.
கன்று நடவு செய்த 3-ம் மாதத்தில் பிஞ்சு பிடிக்கத் தொடங்கும். பிஞ்சு பிடிக்கத் தொடங்கியது முதல் 20 நாள்களுக்கு ஒருமுறை பாஸ்போ பாக்டீரியா 25 கிராம், வேப்பம்பிண்ணாக்கு 25 கிராம் மற்றும் மண்புழுவுரம் 100 கிராம் ஆகியவற்றைக் கலந்து ஒரு மரத்தின் தூரில் அடியுரமாக வைக்க வேண்டும். இதனால், காய்கள் அதிக எடையுடனும் சுவையுடனும் இருக்கும். 7-ம் மாதத்திலிருந்து அறுவடை செய்யலாம். 8-ம் மாதத்திலிருந்து மகசூல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கும்.
ஆண்டுக்கு ஒருமுறை மழைக்கு முன்பாகக் கவாத்துச் செய்ய வேண்டும். கவாத்துச் செய்தால்தான் மரம் அதிக உயரம் வளராது. அதிக கிளைகள்மூலம் மகசூல் அதிகரிக்கும். அதேநேரத்தில் பறிப்பிற்கும் எளிதாக இருக்கும். இரண்டாம் ஆண்டு முதல் நாள் ஒன்றுக்கு 20 முதல் 25 கிலோ வரை பழம் பறிக்கலாம். முறையாகக் கவாத்துச் செய்து பராமரித்து வந்தால் 15 ஆண்டுகள்வரை தொடர்ந்து மகசூல் எடுக்கலாம்.

அத்திச் சாகுபடி குறித்து தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சுந்தரராஜனிடம் பேசியபோது ``மரத்துக்கும் பெரிய புதர்செடிக்கும் இடைப்பட்ட வகையைச் சேர்ந்தது அத்தி. நாட்டு அத்தி, டிம்லா அத்தி, ஆப்கான் அத்தி, இஸ்ரேல் அத்தி, பூனா அத்தியெனப் பல ரகங்கள் உள்ளன. சில ரகங்களில் பழங்களைப் பறித்து அப்படியே விற்பனை செய்யலாம். சில ரகத்தின் பழங்களை, உலர் பழங்களாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்யலாம். இது அனைத்து வகை மண்ணிலும் வளரும். குறுமணல் கலந்த களிமண் நிலம் மிகவும் ஏற்றது. ஓரளவு வறட்சியைத் தாங்கும்.
விவசாயி ராஜ்மோகன் சாகுபடி செய்திருக்கும் பூனா ரக அத்தி, பறிக்கப்பட்ட பழங்களாக விற்பனை செய்வதற்கு ஏற்றது. இது மற்ற ரகங்களைவிடச் சற்றுப் பெரியதாக இருப்பதாலும், பழங்கள் பார்ப்பதற்கு மினுமினுப்புடன் இருப்பதாலும் வணிக ரீதியாக விற்பனைக்கு ஏற்றது" என்றார்.
- இயற்கை விவசாய முறையில் அத்திச் சாகுபடி செய்து வரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்மோகன் பகிர்ந்த அனுபவங்களையும் வழிகாட்டுதல்களையும் பசுமை விகடன் இதழில் முழுமையாக வாசிக்க
> 50 சென்ட்... ஆண்டுக்கு ரூ.2,80,000 அருமையான வருமானம் தரும் அத்தி! https://bit.ly/3mn7xrY
சிறப்புச் சலுகைகள்:
> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth
> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

இதுபோன்ற விவசாயம் தொடர்பான செய்திகள் மற்றும் பயனுள்ள வீடியோக்களைக் காண பசுமை விகடன் யூ-டியூப் சேனலுக்கு வாங்க. பசுமை விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய: bit.ly/pasumaiYoutube