Published:Updated:

அரிசி கழுவுற தண்ணியில இருக்கு அத்தனை சத்து..! - வீட்டுக்குள் விவசாயம் - 3

வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் வாயிலாக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விவசாயி உருவாக வழிகாட்டும் தொடர்...! #VeetukkulVivasayam #DIYTerraceGarden - பாகம் 3

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மாடித்தோட்டம் அமைக்குற ஆர்வம் உங்கள்ல பல பேருக்கும் உருவாகியிருக்குது. தொடருக்கு நீங்கக் கொடுக்குற வரவேற்புலயே அது தெரியுது. இந்தத் தொடர் நிறைவு பெறும்போது நீங்களும் ஒரு வீட்டுத்தோட்ட விவசாயினு சொல்லிக்கிற அளவுக்கு முன்னேறியிருப்பீங்க. இது தொடர்பா உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தா பதிவு செய்யச்சொல்லி இருந்தோம். சிலர் சந்தேகங்களைக் கேட்டிருந்தாங்க.

நாட்டு விதைகள் எங்கே கிடைக்கும்? இதுதான் அதிகமானவங்க கேட்ட கேள்வி.

ஒவ்வொரு மாவட்டத்துலயும் இன்னிக்கு நாட்டு விதைங்க கிடைக்குது. உள்ளூர்ல இருக்க, இயற்கை விளைபொருள்களை விற்பனை செய்யுற கடைக்குப் போனா போதும். விதை கிடைக்கும். இல்லைன்னா விதை வெச்சிருக்க விவசாயியோட தொடர்பு எண் கிடைக்கும்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த சரவணக்குமார் நாட்டு ரக விதைகளை இலவசமா கொடுக்குறாரு. அவர்கிட்ட வாங்குற விதையைப் பயன்படுத்திக்கலாம். 8 மாசம் கழிச்சு, எவ்வளவு விதை வாங்குனீங்களோ, அதுபோல ரெண்டு மடங்கு விதைகளை அவருக்குத் திருப்பிக்கொடுக்கணும். அதாவது ஒரு கிலோ வாங்குனா, 2 கிலோவா திருப்பிக் கொடுக்கணும். அவரோட போன் நம்பர் 99949 64714. இவரைப் பற்றி இன்னும் தெரிஞ்சுக்கணும்னா நவம்பர் 25-ம் தேதி கடைக்கு வர்ற பசுமை விகடன் இதழ்ல பாருங்க.

`மெட்ரோ வாட்டர் கிடைக்கும் இடத்தில் மாடித்தோட்டம் வளர்க்க முடியுமா?'னு வாசகர் லோகநாதன் கேட்டிருக்காரு.

தாராளமா வளர்க்கலாம். தண்ணி வசதி குறைவா இருக்கவங்க, பாத்திரம் கழுவுற தண்ணி மாதிரியான கழிவுநீரையும் பயன்படுத்தி செடிகளை வளர்க்கலாம்.

சரி வாங்க ப்ரோ... நம்ம விஷயத்துக்குள்ள போகலாம்.

அருள் பரமசிவம்
அருள் பரமசிவம்

மாடித்தோட்டம் அமைக்குறவங்க எந்த ஊடகத்துல பயிர்களை வளர்க்கணும். என்னென்ன தவறுகளைச் செய்யக் கூடாதுனு போன தடவை கற்றுக்கொடுத்த சேலத்தைச் சேர்ந்த இயற்கை வாழ்வியல் பயிற்சியாளர் அருள் பரமசிவம், தொடர்ந்து முதன்முதல்ல மாடித்தோட்டத்தை ஆரம்பிக்குற விவசாயி, என்னென்ன பயிர்களை முதல்ல வளர்க்கணும், அதை எப்படிப் பராமரிக்கணும்னு இந்தத் தடவை சொல்லப் போறாரு.

``முதல் முதல்ல மாடித்தோட்டம் விவசாயத்துல விவசாயம் செய்ய ஆரம்பிக்கும்போது, எடுத்தவுடனே காய்கறிப் பயிர்கள் சாகுபடியில இறங்கக் கூடாதுங்க. கத்திரி, தக்காளியில ரிஸ்க் அதிகம். குறிப்பா கத்திரியில பூச்சி, நோய் தாக்குதல் அதிகமா இருக்கும்.எடுத்தவுடனே அதைப் பண்ணி, சோர்வு ஆகிடக் கூடாது. அதுனால, முதல்ல கீரை, வெண்டை, முள்ளங்கி, கொத்தவரை மாதிரியான குறுகிய காலப் பயிர்களை நடவு பண்ணணும். கீரை 25 முதல் 30 நாள்லயே அறுவடை முடிஞ்சிடும். மத்த காய்களும் 45 நாள்ல ஒட்டு மொத்த அறுவடையும் முடிஞ்சிடும். அதோட இந்தப் பயிர்கள்ல பூச்சி, நோய் தாக்குதல் பெருசா இருக்காது. வேலையை ஆரம்பிச்சு, உடனே பலன் பார்க்கும்போது மனசுக்குள்ள ஒரு மத்தாப்பு வெடிக்கும் பாருங்க. அதுதான் உந்துசக்தி. இன்னும்... இன்னும்னு உங்க ஆர்வத்தைத் தூண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல ரொம்ப கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், நாம எந்தப் பயிர் பண்ணாலும் சரி, ஒவ்வொரு தொட்டியையும் ஒரு சின்ன வெங்காயம் நடவு பண்ணணும். வெங்காயம் வளர்ந்து நமக்கு மகசூல் கொடுக்கலைன்னாலும் அதைப்பத்திக் கவலைப்படக் கூடாது. ஆனா, ஒவ்வொரு தொட்டியிலயும் ஒரு வெங்காயம் கட்டாயம் இருக்கணும். இது செடிக்கான வாட்ச்மேன். தொட்டியில இருக்கிற செடிக்குப் பாதுகாப்பா இந்தச் சின்ன வெங்காயம் இருக்கும். இதன் மூலமா நோய் தாக்குதல் குறையும்.

நாம முதல்ல விதைச்ச கீரை, முள்ளங்கி பயிர்கள் அறுவடை நடக்கும்போதே மற்ற பயிர்களையும் நடவு செய்ய ஆரம்பிக்கலாம். மாந்த்தோட்டத்தில இந்தப் பயிர்கள்தான் வளரும். இது வளராதுன்னு இல்லை. எல்லா பயிர்களும் வளரும். கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் மாதிரியான காய்களும் சிறப்பா வளரும்.

வீட்டுத்தோட்டம்
வீட்டுத்தோட்டம்

இந்த மாதிரி பயிர்களைச் சாகுபடி பண்ண மாடியில நிழல் வலைப் பந்தல் அமைக்கணும்னு சொல்லுவாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் அது தேவையில்லாத செலவு. அது இல்லாமலேயே நல்லபடியா வளர்த்துட்டு இருக்கோம். நிழல் வலை அமைக்குறதால 10 சதவிகிதம் மகசூல் அதிகமாகக் கிடைக்கும் அவ்வளவுதான். அதுக்காக அதிக செலவு பண்ண கூடாது. நாங்க நம்மாழ்வார் வழியில விவசாயம் செய்யறதுனால முடிஞ்ச வரைக்கும் செலவைக் குறைச்சு விவசாயம் செய்றோம்.

அதுபோல மாடித்தோட்டத்துல பப்பாளி, முருங்கை, வாழை, மாதுளை, கொய்யா வளர்க்கலாம். ஆணிவேர் இல்லாத எல்லா பயிர்களையும் மாடித்தோட்டத்துல வளர்க்கலாம். மரங்களை வளர்க்கும்போது, ஊடகம் பெருசா இருக்கணும். பழைய இரும்புக்கடைகள்ல பெரிய டிரம்கள் வாங்கிட்டு வந்து, அதுல மர வகைப் பயிர்களை நடவு செய்யணும். வீட்டுத்தோட்டத்துல காய்களை மட்டுமல்லீங்க... கனிகளையும் வளர்க்க முடியும். அதைப் பலபேர் பண்ணிகிட்டு இருக்காங்க.

கொய்யா
கொய்யா

இயற்கை விவசாயத்துல முக்கியமாகக் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், வருமுன் காப்போம். இதுதான் இயற்கை விவசாயத்தோட தாரக மந்திரம். பயிர்களுக்கு நோய் வந்த பிறகு, அதைக் காப்பாத்த போறாடுறதை விட, நோய் வராத அளவுக்குப் பாதுகாப்பை ஏற்படுத்திட்டாப் போதும். பிறகு, நோய் பயமே இருக்காது. அதுனால பூச்சி, நோய் தாக்குதல் வந்த பிறகு பார்த்துக்கலாம்னு அசால்டா இருக்கக் கூடாது. பூச்சி, நோய் தாக்குதல் இருக்கோ இல்லையோ அதைப் பற்றி யோசிக்கக் கூடாது. நாம தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையில ஈடுபட்டுக்கிட்டே இருக்கணும்.

பயிர்கள் பசுமையா இருந்தா கண்டிப்பா பூச்சி வரும். பூச்சி வந்தா தான் நம்ம தோட்டம் ஆரோக்கியமா இருக்குன்னு அர்த்தம். இந்தப் பூச்சிகளை எப்படி மேலாண்மை பண்றது? அது பெரிய சப்ஜெக்ட். அதைப் பின்னாடி பார்ப்போம். ஆனா, பூச்சி வந்துச்சுடுச்சேனு பயப்படத் தேவையில்லை. சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமா அதைச் சமாளிச்சுடலாம்.

விதை நடவு செய்தபிறகு, செடி வளர ஆரம்பிக்கும். நம்ம வீட்டுல தினமும் கிடைக்கிற காய்கறி கழிவுகளை ஒவ்வொரு தொட்டியிலும் போட்டுக்கிட்டே வரணும். அது ஒரு உரமாகிடும். அரிசி கழுவுற தண்ணியில பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் இருக்கு. அத செடிகளுக்கு ஊற்றலாம். அந்தத் தண்ணியை அப்படியே ஊத்தாம அதுல ஒரு லிட்டருக்கு 50 கிராம் மண்டை வெல்லத்தைப் போட்டு வேடு கட்டி வெச்சுடணும். ரெண்டு நாள் கழிச்சு அந்தத் தண்ணியை எடுத்து, செடிக்கு ஊத்துனா வளர்ச்சி அருமையா இருக்கும். அதேபோல வீடு கூட்டுற மண்ணு நல்ல வீரியமானது. அதையும் தொட்டியில பயன்படுத்தலாம். அதுல இருக்கிற சில நுண்ணுயிர்கள் பயிர் வளர்ச்சிக்கு உதவுறதா சொல்றாங்க.

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்

பொதுவா மாடித்தோட்டம் செய்றவங்க மண்புழு உரம் ஒண்ணு மட்டும் போட்டா போதும்னு நினைக்கிறாங்க. மண்புழு உரத்துல நல்ல சத்துகள் இருக்கு. அதுல மாற்றுக் கருத்து இல்லை. ஆனா, அது மட்டுமே பயிருக்குப் போதாது. நம்ம வீட்ல இருக்கிற குழந்தையைக் கொண்டு போய் ஹாஸ்டல்ல சேர்த்திருப்போம். அங்கேயும் சாப்பாடு தருவாங்க. ஆனா, அது நம்ம குழந்தைக்குப் போதுமானதாக இருக்கும்னு சொல்ல முடியாது. அதனால நாம என்ன பண்ணுவோம்? வாரவாரம் குழந்தையைப் பார்க்கப்போகும்போது வீட்ல ஏதாவது செஞ்சு எடுத்துட்டு போய்க் கொடுப்போம் இல்லையா... அப்படித்தாங்கப் பயிரையும் பார்த்துக்கணும்.

வாரம் ஒரு தடவை செடிக்கு ஊட்டச்சத்து கொடுத்தே ஆகணும். ஏன்னா மண்ணை அதோட பூர்வீகமான இடத்திலிருந்து எடுத்துட்டு வந்து நம்ம தனிமைப்படுத்தி பயன்படுத்திட்டு வர்றோம். அப்ப அதுல இருக்கிற சத்து மட்டும்தான் இருக்கும். பிள்ளைகள் ஹாஸ்டல்ல இருக்கிற மாதிரி. அதுக்குத் தேவையான சத்துகளை நாமதான கொடுக்கணும்? ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இதற்கு ஒதுக்கிடணும். ஒரு மாசத்துக்கு நாலு ஞாயிற்றுக்கிழமை வரும். அதுல 2 ஞாயிற்றுக்கிழமை பூச்சி மேலாண்மைக்கும், 2 ஞாயிற்றுக்கிழமை சத்துக்காகவும் வெச்சுக்கலாம்.

வீட்டுத்தோட்டம்
வீட்டுத்தோட்டம்
இதெல்லாம் தெரிஞ்சா நிச்சயம் நீங்களும் மாடித்தோட்டம் அமைப்பீங்க... வாங்க! - வீட்டுக்குள் விவசாயம் - 2

முதல் வாரம் மண்புழு உரம் கொடுக்கிறோம். ரெண்டாவது வாரம் வேப்ப எண்ணெய்யை காதி சோப் கலந்து செடிக மேல தெளிக்கணும். வேப்ப எண்ணெய் செடியில ஒட்டாமப் போயிடக் கூடாது. அதுக்காகத்தான் காதி சோப் கலக்குறோம். மூன்றாவது வாரம் பஞ்சகவ்யா கொடுக்கலாம். அதைத் தூர்லயும் கொடுக்கலாம். இலைவழியாகவும் தெளிக்கலாம். நாலாவது வாரம், மூலிகைப் பூச்சி விரட்டி அடிக்கலாம். இதைத் தொடர்ந்து சுழற்சி முறையில செய்யணும். பயிர்ல பூச்சி வரலை. நோய் இல்லைன்னு யோசிக்காம, இதைச் செஞ்சிகிட்டே இருந்தா பூச்சி, நோய் தாக்குதல் பெரும்பாலும் இருக்காது. இதைத்தான் வருமுன் காப்போம்னு சொல்றாங்க.

வேர்க் கறையான் வராம இருப்பதற்காக வேப்பம் பிண்ணாக்கைத் தூளாக்கி செடிகளுக்கு அவசியம் கொடுக்கணும். இது பயிர் வளர்ச்சிக்கும் ஊக்கமா இருக்கும். உரம் கொடுத்தா உடனே பாசனம் செய்யணும். செடிகள்ல காரம், கசப்பு தன்மையை ஏற்படுத்தணும். இஞ்சி, பூண்டு, மிளகாய்க் கரைசலை அடிக்கடி தெளிக்கணும். இப்படி பல நுணுக்கங்கள் இருக்கு. அதைக் கையாண்டாப் போதும். மாடித் தோட்டத்தில மகத்தான மகசூல் எடுக்கலாம். தினமும் அரை மணி நேரம், ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒரு மணி நேரம் செலவு பண்ணுனா போதும். செடிகளைக் குழந்தைகளைக் கவனிக்குற மாதிரி அக்கறையா கவனிக்கணும். அதுக்கு என்ன பிரச்னைனு தெரிஞ்சுகிட்டு, அதை நிவர்த்தி செய்யணும். இதை முறையா பன்ணுனா போதும். நீங்களும் மாடித்தோட்டத்துல சிறந்த விவசாயியா மாறிடுவீங்க'' என்று நம்பிக்கையூட்டினார்

அருள் பரமசிவம். அவரோட தொடர்பு எண்: 98426 39263

வீட்டுத்தோட்டம்
வீட்டுத்தோட்டம்
வீட்டுக்குள்ளயே விவசாயம் செய்யவேண்டிய நேரம் வந்தாச்சு... ஆரம்பிக்கலாங்களா? - புதிய தொடர் - 1

இந்த லாக்டௌன் காலம் பல்வேறு வீட்டுத்தோட்ட விவசாயிகளை உருவாக்கியிருக்கு. அதுல சிலர் அவங்களோட அனுபவங்களைப் பகிர்ந்துக்கப் போறாங்க. அதை வெள்ளிக்கிழமை வெளியாகும் அடுத்த பகுதியில பார்க்கலாம். தொடர்ந்து இணைந்திருங்க... `வீட்டுக்குள் விவசாயம்' தொடர்பான உங்க கேள்விகள் / சந்தேகங்களைக் கமென்ட்ல கேளுங்க!

- வளரும்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு