Published:Updated:

எடைக் குறைவு ஸ்டியரிங் இல்லை உழவுக்கு உதவும் சிறிய டிராக்டர்!

டிராக்டருடன் பச்சுபாய் சவாஜிபாய் தெஸியா
பிரீமியம் ஸ்டோரி
டிராக்டருடன் பச்சுபாய் சவாஜிபாய் தெஸியா

கழனிக்காட்டு விஞ்ஞானிகள்-5

எடைக் குறைவு ஸ்டியரிங் இல்லை உழவுக்கு உதவும் சிறிய டிராக்டர்!

கழனிக்காட்டு விஞ்ஞானிகள்-5

Published:Updated:
டிராக்டருடன் பச்சுபாய் சவாஜிபாய் தெஸியா
பிரீமியம் ஸ்டோரி
டிராக்டருடன் பச்சுபாய் சவாஜிபாய் தெஸியா

‘தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்’ என்று சொல்வார்கள். அதுவும் சவால்கள் நிறைந்த விவசாயத்தில் தினம் தினம் புதிய கண்டுபிடிப்புகளின் தேவை இருந்துகொண்டே இருக்கிறது. அந்தக் கண்டுபிடிப்புகளைப் பற்றிப் பேசுகிறது இந்தத் தொடர்.

டிராக்டர். அன்றாட வாழ்வில் விவசாயப் பெருமக்கள் பெரிதும் பயன்படுத்தக்கூடிய வாகனம். டிராக்டர் என்றவுடனே, அதன் அமைப்பு, பெரிய சக்கரங்கள் நம் மனக்கண்ணில் தோன்றும். அதே டிராக்டரை, ‘ஜாய் ஸ்டிக்’ என்று சொல்லப்படும் இரண்டு நீளமான கம்பிகளையும் ஒரு ‘லிவரை’யும் வைத்துக்கொண்டு ஒருவர் தயாரித்திருக்கிறார். கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?

குஜராத் மாநிலம், ஜாம் நகரைச் சேர்ந்த பச்சுபாய் சவாஜிபாய் தெஸியா (Bachubhai Savajibhai Thesia) என்பவர்தான் இதைக் கண்டுபிடித்திருக்கிறார். விவசாயத்துக்கு எந்தக் கருவி தேவை என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு நிறைய கருவிகளைக் கண்டுபிடித்து இருக்கிறார். இவருடைய கண்டுபிடிப்புகளில் மிகவும் பிரசித்திபெற்றது டிராக்டர். வட இந்தியாவில் பல விவசாயிகளிடம் இந்த டிராக்டர் இருக்கிறது. தற்போது ஒரு டிராக்டரின் விலை குதிரைத்திறனைப் பொறுத்து 5 லட்சத்திலிருந்து 8 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது. ஆனால், இவர் கண்டுபிடித்திருக்கும் டிராக்டர் 50,000 - 1,00,000 ரூபாய்க்குள் கிடைக்கிறது.

டிராக்டருடன் பச்சுபாய் சவாஜிபாய் தெஸியா
டிராக்டருடன் பச்சுபாய் சவாஜிபாய் தெஸியா

இவருடைய படிப்புப் பத்தாம் வகுப்பு வரைதான். பச்சுபாய்க்கு இரண்டு சகோதரர்கள். அவர்கள் இரண்டு பேரும் வேலைக்குச் சென்றுவிட்டார்கள். பச்சுபாய் மட்டும் முழுநேரமாக விவசாயம் செய்து வந்ததால், விவசாயத்தில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று சிந்தித்துக்கொண்டே இருந்தார். ‘எப்போது பார்த்தாலும் எதையாவது சிந்தித்துக்கொண்டு இருக்கிறானே’ என்று அவரின் அப்பா மிகவும் கவலைப்பட்டார். ஒருகட்டத்தில் அப்பா இறந்துவிட இவருக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் வந்து சேர்ந்தது. இவருடைய வீடு மிகவும் சிறியதுதான். அது வீடா அல்லது பட்டறையா என்று எண்ணும் அளவுக்கு இரும்புச் சாமான்கள் இருக்கும். ஏதாவது ஒரு இரும்பை இன்னொரு பொருளுடன் பொருத்தி மாட்டுவது, கழற்றுவது என்றவாறே இருந்திருக்கிறார்.

அந்த நேரத்தில், நாளிதழ் ஒன்றில் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி ஒருவர் சிறிய வகையான கலப்பை இணைத்து உழவு ஓட்டுகிறார். அதோடு, அந்தக் கலப்பையிலேயே பிளேடுகளைப் பொருத்திக் களையெடுப்பது, வேறுவிதமான பிளேடுகளைப் பொருத்தி அறுவடை செய்வது குறித்த கட்டுரை வெளியாகியிருந்தது.

அதைப் படித்தவுடன், ‘மோட்டார் சைக்கிள்கள் ஸ்டியரிங் இல்லாமல் இயங்குகின்றன. நாம் ஏன் ஸ்டியரிங் இல்லாமல் ஒரு டிராக்டரை உருவாக்கக் கூடாது’ என்று யோசித்திருக்கிறார். அப்படிப் பிறந்ததுதான் இந்த டிராக்டர். தனது டிராக்டர் கண்டுபிடிப்புபற்றிச் சொல்லும் பச்சுபாய், ‘அடிக்கடி பழைய இரும்பு சாமான்கள் விற்கும் கடைக்குச் செல்வேன். அங்கு கிடைக்கும் பொருள்களை வைத்து ஏதாவது செய்ய முடியுமா? என்று யோசித்துக்கொண்டிருப்பேன். இதோடு அதை இணைத்து, அதோடு இதை ஒருங்கிணைத்து என்று எதையாவது செய்துகொண்டே இருப்பேன். அப்படித்தான் இந்த டிராக்டரை உருவாக்கினேன். இது பார்ப்பதற்கு ‘மினி டிராக்டர்’ போல இருக்கும். ஆனால், மினி டிராக்டர்கூட டிராக்டருடைய சிறிய வடிவமாகத்தான் இருக்கும். டிராக்டர் விலையில் பாதியைக் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். ஆனால், இந்த டிராக்டர் அப்படியில்லை. எந்தக் கூடுதல் அம்சங்களும் இல்லாமல், எளிமையாக அதேசமயம் எடை குறைவானதாக இந்த டிராக்டரை உருவாக்கியிருக்கிறேன். மண் அள்ளும் இயந்திரம் (பொக்லிங்) போன்றே கைகளால் இயக்கினால் போதும்’’ என்கிறார்.

மழை அதிகமாகப் பெய்து, நிலத்தில் மண் சொதசொதவென இருந்தால் அதில் டிராக்டரின் சக்கரங்கள் உள்ளே பதிந்துகொண்டு, உழவு செய்யச் சிரமமாக இருக்கும். ஆனால் இவருடைய டிராக்டர், மண் சொதசொதவென இருந்தாலும் மிக எளிதாக வேலை செய்யும்.

கருவி
கருவி


வழக்கமாக மாடுகளைக் கொண்டு உழவு செய்யும்போது மாடுகளைக் கயிற்றால் கட்டி, அந்தக் கயிற்றை ஏர் கலப்பை பிடித்திருப்பவர் தன் வசம் வைத்திருப்பார். வலது கையை இழுத்தால் மாடுகள் வலது புறமாகவும், இடது கையில் இழுத்தால், மாடுகள் இடது புறமாகவும் திரும்பும். பொதுவாக ஏர் கலப்பை பெரிய எடை கொண்டவையல்ல. ஆனால், நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் டிராக்டரின் எடை 1,500 முதல் 2,500 கிலோ எடையைக் கொண்டது. சுமார் 150 கிலோ கலப்பையில் நிலத்தை உழுதுகொண்டு இருந்த நாம், தற்போது அதைவிட 15 மடங்கு எடை கொண்ட டிராக்டரைக் கொண்டு உழுதுகொண்டிருக்கிறோம். அதனால், வழக்கமான டிராக்டர் எடையைவிட மிகவும் எடைக்குறைந்த, சர்வசாதாரணமாகச் சேற்றில் ஓட்டக்கூடிய அளவில் டீசல் என்ஜினைப் பொருத்தி, இந்த டிராக்டரை உருவாக்கியிருக்கிறார்.

வழக்கமாக டிராக்டரைத் திருப்ப வேண்டுமென்றால் ‘ஸ்டியரிங்’கை வளைத்துத் திருப்ப வேண்டும். இவர் கண்டுபிடித்திருக்கும் டிராக்டரை திருப்ப வேண்டுமென்றால் அதில் இருக்கும் லிவரை லேசாகத் திருப்பினாலே போதும். இது மிகச் சரியாக 180 டிகிரி அளவில் திரும்பி நாம் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கிறது. குழந்தைகள் ‘ரிமோட் கார்’ வைத்துக்கொண்டு விளையாடும்போது லேசாக அசைத்து, அந்தக் காரின் திசைகளை மாற்றுவதுபோல் இந்த டிராக்டர் அவ்வளவு எளிதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இரண்டு ‘லிவரை’ வைத்துக்கொண்டு இந்த மனிதர் வித்தை காட்டியிருக்கிறார். 10 ‘ஹெச்.பி ஸ்டேஷனரி இன்ஜின்’, 5 லிட்டர் டீசல் இருந்தால் போதும் சுமார் 8 மணி நேரம் இந்த டிராக்டரை வைத்து உழவு செய்யலாம்.

இப்படிப்பட்ட ஒரு கருவியைக் கண்டுபிடித்த இவரால் இதைப் பரவலாக்க முடியவில்லை. காரணம், இதில் பெரிய அளவில் முதலீடு செய்யப் பணவசதி இல்லை. இந்த நேரத்தில்தான் ‘நேஷனல் இன்னோவேஷன் பவுண்டேஷன்’ தலைவர் அனில் குப்தா அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து, முதலில் இதற்கான காப்புரிமையை வாங்கிக் கொடுத்தார்.

ஒரு கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை வாங்க, பல ஆயிரங்களையும், பல அரசு படிக்கட்டுகளையும் ஏறி இறங்க வேண்டும். இதையெல்லாம், மிக எளிதாக இவருக்குச் செய்து தந்தார் அனில் குப்தா. ‘நேஷனல் இன்னோவேஷன் பவுண்டேஷன்’ இது போன்று கண்டுபிடிப்புகளுக்கு உதவி செய்வதையே தன் வேலையாக வைத்திருக்கிறது.

எம்.ஜே.பிரபு
எம்.ஜே.பிரபு

இவர் டிராக்டரை மட்டும் கண்டுபிடிக்கவில்லை. ஒரு ‘பல்பை’யும் கண்டுபிடித்து இருக்கிறார். வழக்கமாக நாம் வாங்கும் ‘பல்ப்’ ஓரிரண்டு ஆண்டுகளில் ‘பீஸ்’ போய்க் காலாவதியாகிவிடும். இவர், கண்டுபிடித்திருக்கும் பல்ப் பல ஆண்டுகளுக்கு உழைக்கக்கூடியது. ‘பல்பின் சர்க்யூட்’டில் ஒரு சிறு மாற்றத்தைச் செய்து, பல்ப் நீண்ட நாள்களுக்குப் பீஸ் போகாமலேயே எரியும்படி செய்திருக்கிறார். ‘இந்தப் பல்பை மோட்டார் பம்ப்செட் மற்றும் தோட்டத்தில் பொருத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும்’ என்கிறார்.

இவர், உழவுக்கு மட்டுமல்ல, அறுவடை செய்வதற்கும் டிராக்டரைத்தான் பயன்படுத்துகிறார். அறுவடை செய்த கோதுமை மற்றும் நெல்மணிகளைப் பிரித்து எடுப்பதற்கும் டிராக்டரைத்தான் பயன்படுத்துகிறார். வட மாநிலங்களில் மட்டுமே பிரபலமாக இருக்கும் இந்த டிராக்டரைத் தமிழகத்திலும் விவசாயிகள் பயன்படுத்தலாம். ஏனென்றால், தற்போது சந்தையில் இருக்கும் டிராக்டர்களை இயக்குவதற்கு டிரைவர் தேவை. டிரைவர் இல்லாமல் நாமே ஓட்ட முயற்சி செய்தாலும் கற்றுக்கொள்வதற்குப் பல நாள்கள் தேவைப்படும். அதேசமயம் வேலை இல்லாதபோது டிராக்டர் சும்மாதான் நிற்கும். அதற்கு ஏன் பெரிய தொகையைக் கொடுத்து டிராக்டரை வாங்கி வைக்க வேண்டும். இது போன்ற எளிமையான டிராக்டரே விவசாயிகளுக்கு உதவிக்கரமாக இருக்கும்.

தொடர்புக்கு,

Bachubhai Savjibhai Thesia, Cinema road, opposite Sisu Mandir, Digvijay plot, village: Kalavad (Sitala), Jamnagar, Gujarat.

Mobile: 93759 56870.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism